மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 12

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 12
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 12

வெ.நீலகண்டன் - படங்கள்: எஸ்.தேவராஜன்

கிராம தெய்வ வழிபாட்டில் ஏராளமான பெண் தெய்வங்கள் உண்டு. சிறுதெய்வ வழிபாடு என்று குறிப்பிடப்படும் நம் மரபு வழிபாட்டில், இத்தனை பெண் தெய்வங்கள் இருப்பதன் பின்னணி என்ன? 

ஒரு சமூகத்தின் பண்பாடு, வழிபாடெல்லாம் அந்தச் சமூகத்தின் வாழ்க்கைமுறைக்கு நெருக்கமானதாகவே இருக்கும். தாய்வழிச் சமூகப் பதியத்தில் துளிர்த்தவர்கள் நாம். ஆதிகாலத்தில், உணவீட்டுதல் தொடங்கி, பிற குழுக்களிடமிருந்து தம் மக்களை காக்கும் காவல் பணி வரை அனைத்தையும் சுமந்தது பெண்கள்தாம். வலிமையின் அடையாளமாக, செழுமையின் வடிவமாக தம் குழுக்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திய பெண்கள், மரணத்துக் குப் பிறகு வழிபாட்டுக்கு உரியவர்களானார்கள்.

இன்றும், நம்மை வாழவைக்கும் நதிகளையும், நிலத்தையும், பிரபஞ்சத்தின்  பெரும்பா லான சக்திகளையும் பெண்ணாகக் கருதி வழிபடுவது, நம் மூதாதை யர் நம் உடலில் விதைத்திருக்கும் ஆதி வாழ்க்கைமுறையின் எச்சமே!

கால மாற்றத்தில் நம் வழிபாட்டு முறையில் நிகழ்ந்த சிறு சிறு மாற்றங்களைக் கடந்து, இன்றும் கோயில்களில் நிறைந்திருக்கிறார்கள் பெண் தெய்வங்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தின் அடையாளமாக அவர்களின் வடிவம் இருக்கிறது. அவர்களைப் பற்றி ஏராளமான கதைகளும் பாடல்களும் நம் மண்ணில் விளைந்து நிற்கின்றன.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 12

பெண் தெய்வங்களை தாய் தெய்வம், கன்னி தெய்வம் என இரண்டாகப் பிரித்து வழிபடும் மரபு இருக்கிறது. தாய்மை குணங் களைப் பெற்ற, ஆளுமைமிக்க தலைவிகள் தாய் தெய்வங்கள். தம் மக்களைக் காக்க உயிர்த் தியாகம் செய்த, அநீதியாகக் கொல்லப்பட்ட பெண் தெய்வங்கள், கன்னி தெய்வங்கள். இந்தக் கன்னிகள் தம் குலத்தையோ, குழுவையோ காக்க தெய்வ வடிவெடுத்து நிற்கிறார்கள்.

தமிழ் மரபு வழிபாட்டில் ஏழு கன்னிமார் வழிபாடு புராதனமானது. தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனா லும், எங்கேனும் ஒரு திசையில் ஒரு கன்னிமார் கோயில் இருப்பதைக் காணலாம். பெரும்பாலான பழங்குடிகள் ஏழு கன்னிமாரையே தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள். அவர்களின் குலம் சார்ந்த தொன்மக் கதை கள் ஏழு கன்னிமாரைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. செங்கல்லாக, கருங்கற்களாக, சுதைப்படிமமாக வெவ்வேறு விதங்களில்  கன்னிமார்கள் கிராமங்களில் ஆட்சி செலுத்துகிறார்கள். சிற்பங்களாகவும், சுதைகளா கவும், ஓவியங்களாகவும், செப்புப் படிமங்களாகவும் வரலாற்றிலும் உலவுகிறார்கள், கன்னிமார் தெய்வங்கள்.

தமிழர் வழிபாடென்பது இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்கியது என்பர். தங்களை வாழ்விக்கும் மனிதர் களை மட்டுமின்றி, தங்கள் மண்ணைக் குளிரச்செய்து உணவுக்கு உயிர்நீராய் இருக்கும் நதிகள், மழை என இயற்கையையும் தெய்வமாக வணங்கினார்கள் ஆதித் தமிழர்கள். கன்னிமார் வழிபாடென்பது நதி வழிபாட் டின் நீட்சியாக உருவானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் எழுதுகிறார்கள். 

இயற்கையை தெய்வமாகக் கருதி வழிபடும் மரபின் தொடர்ச்சி, இன்று வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக் கிறது. மதுரை, மேலூரை அடுத்துள்ள வெள்ளளூர் ஏழை காத்த அம்மனை, பெண் குழந்தைகள் வடிவிலேயே வணங்கும் மரபு இன்று வரை தொடர்கிறது.  இன்னும் மரபு வாழ்க்கையும், வழிபாடும் உறைந்து கிடக்கும் நிலப் பரப்பு மேலூர். உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கிய பகுதியை ‘வெள்ளளூர் நாடு’ என்று வரலாறு குறிப்பிடுகிறது.

ஆதியில், தமிழர்கள் இனக்குழு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் வெள்ளளூர் நாடு என்பது வலுவான வீரர் களைக் கொண்ட நிலப்பரப்பாக இருந்துள்ளது. ஜமீன், சமஸ்தானங்களெல்லாம் வழக்கொழிந்து போனாலும் இன்னும் இந்தப் பகுதிகளில் அம்பலக்காரர் நிர்வாக முறை இருக்கிறது. வம்பு, வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பதில் இருந்து கோயில் திருவிழாக்களில் முன்னுரிமை பெறுவது வரை, அம்பலக்காரர்களுக்கென்று தனி முக்கியத்துவம் உண்டு. கோயில் திருவிழாக் காலங்களில் அனைத்து அம்பலங்களையும் அழைத்து சரியாக மரியாதை செய்யவேண்டும்.

சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளை, ஏழை காத்த அம்மனாகப் பாவித்து வணங்கும் வழக்கம் இந்தப் பகுதியில் தொடர்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், ஏழைகாத்த அம்மனுக்குத் திருவிழா நடக்கும். திருவிழாவுக்கு நாள் குறித்துவிட்டால், வீடுக ளுக்கு வெள்ளையடிக்க மாட்டார்கள்.  மண் தோண்டி மரம் நடமாட்டார்கள். எண்ணெய் விட்டுத் தாளித்து சமையல் செய்யமாட்டார்கள். ஊரில் எவரும் அசைவம் சாப்பிடமாட்டார்கள். மரம் வெட்டக் கூடாது. மாவு பிசையக்கூடாது... இப்படி இயல்பு வாழ்க்கையின் பல நடவடிக்கைகள் தடை செய்யப்படும். 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 12

திருவிழாவுக்கு முன்பு, கோயிலின் பூசாரி தலைமையில் ஊர்க்கூட்டம் நடக்கும். பெண் குழந்தைகளோடு வெள்ளளூர் நாட்டைச் சேர்ந்த எல்லோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.  தனக்கு முன் நிற்கும் நூற்றுக்கணக்கான சிறுமி களில்,  மூண்டவாசி, வேங்கைபுலி, சமட்டி, நைக்கான், சாவடங்கி, வெக்காளி, சலிப்புலி என வெவ் வேறு உறவுமுறைகளில் இருந்து ஏழு சிறுமி களைத் தேர்வு செய்வார் பூசாரி.

அந்தச் சிறுமிகள் அடுத்த பதினைந்து நாள் களுக்கு ஏழை காத்த அம்மனின் உருவமாக வணங் கப்படுவார்கள். கழுத்து நிறைய நகைகள் அணிந்து, கூந்தலால் உடல் மறைத்து ஊர்சுற்றி வரும் பெண் களுக்கு கற்பூர ஆரத்தி காட்டி, அவர்கள் விரும்பும் பட்சணங்களைப் படைத்து வழிபடுவார்கள் மக்கள். இதே வெள்ளளூரில் ‘வெற்றிலைப் பிரி திருவிழா’ என்றொரு நிகழ்வு உண்டு. சுற்றுவட்டார அம்பலக்காரர்கள் அனைவரையும் அழைத்து, அவர்களுக்கு மரியாதை செய்து, எல்லோருக்கும்  அவரவர் வகையறாத் தலைக்கட்டுக்கு ஏற்றவாறு வெற்றிலை-பாக்கு வழங்குவார்கள். பெறும் வெற்றிலையை தத்தம் பூசையறைகளில் வைத்து வழிபடுவார்கள். அவ்வளவு சக்தி, அந்த வெற்றிலைக்கு.

வெற்றிலைக்கு  இங்கு இன்னொரு முகமும் உண்டு. அதுவொரு கௌரவச் சின்னம். ஒவ்வொரு அம்பலக்காரருக்கும் தரப்படும் வெற்றிலை முன்பின் ஆனால் பிரச்னை வெடிக்கும். தங்க ளைச் சரியாக உபசரிக்கவில்லை என்று உரிமைக் குரல் எழும். அதனால், பூசாரிகள் மிகவும் கவனத் தோடு வெற்றிலைகளைப் பிரித்துக் கொடுப்பார்கள்.

மேலூர் அருகேயுள்ள நரசிங்கம்பட்டி ஆண்டிச் சாமி கோயிலில் நடக்கும், ‘மண்ணை மலையாக்கும் திருவிழா’ இன்னும் விசித்திரமானது. ஆண்டிச்சாமி வழிபாடென்பது ஆதி முருக வழிபாட்டின் ஒரு கூறு. சிறுதெய்வத் தன்மை மிக்க இந்த வழிபாட்டில், மண்ணள்ளி போட்டு மலையாக்குவது ஒரு வேண்டுதலாக மாறியிருக்கிறது.

திருவிழா நாளன்று, கோயிலுக்கு வழிபட வரும் மக்கள், அருகிலிருக்கும் ஓடையிலிருந்து ஒரு பிடி மண்ணள்ளி வந்து கோயிலுக்கு முன்னுள்ள இடத்தில் போடுவார்கள். மறுநாள், அங்கொரு மண் மலையே உருவாகியிருக்கும்.

ஏதோவொரு வகையில், தங்கள் மனக்கருத்தை, வேண்டுதலை, மகிழ்ச்சியை, சோகத்தை, ஆவேசத்தை தங்கள் மூத்தோனிடம் வெளிக்காட்ட வேண்டுமென்ற உந்துதல்தான் இப்படியான வழிபாடுகள் உருவாகக் காரணம். வெவ்வேறு மனிதர்கள் கைபட்ட மணல், ஒற்றைக்குவியலாய் மலையாக மாறுவதைப் போல, எல்லோரின் வழிபாடும் ஒன்றாய் இறுகி தெய்வத்தின் ஆன்மாவை  ஒருசேர உயிர்ப்பிக்கின்றன. அந்த ஆன்மா, வீரியத்தோடு மக்களைச் சூழ்ந்து நின்று, அவர்களின் இயக்கத்துக்குத் துணை நிற்கிறது!

- மண் மணக்கும்...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 12

இறைவன் எங்கே இருக்கிறான்?

அரசர் ஒருவர் தன் பிறந்தநாள் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினார். விழாவுக்கு வந்திருந்த புலவர்களுக்கு வித்தியாசமான பரிசளிக்க விரும்பிய மன்னர், அவர்கள் எந்த ஊருக்குப் போக வேண்டுமோ அதற்கான பயணச் செலவை வழங்குமாறு அமைச்சரிடம் சொன்னார்.

பணத்தாசை மிகுந்த புலவர் ஒருவர், நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்று கூறினால் நிறைய பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், ‘‘மன்னா! நான் இறைவன் இருக்குமிடம் செல்ல வேண்டும்’’ என்று கூறினார். அதற்கு எவ்வளவு பணம் தருவது என்று குழம்பிய மன்னர், அமைச்சரிடம் யோசனை கேட்டார். புலவரின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அறிவாளியான அமைச்சர் சொன்னார்.

‘` ‘ஆதிமூலமே!’ என்று கஜேந்திரன் அழைத்ததும் இறைவன் வந்துவிட்டார். அதேபோல ‘கிருஷ்ணா!’ என்று திரௌபதி கூப்பிட்டதுமே உதவிக்கு வந்தான் கண்ணன். ஆகவே, நாம் அழைத்தால் கேட்கும் தூரத்தில்- கூப்பிடு தூரத்தில்தான் இறைவன் இருக்கிறான் என்பது இவற்றின் மூலம் தெரிகிறது. அதனால் புலவருக்குப் பயணச் செலவு ஏதும் ஆகாது’’ என்றார். மன்னர் புரிந்து கொண்டார்; புலவரின் திட்டம் தோற்றது!

- ஆர். ராஜலட்சுமி, கரூர்