Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்

ந்த மகான் மிக அற்புதமானவர். மனதால் கூட மற்றவருக்குக் கெடுதல் நினைக்காதவர். எந்நேரமும் சிவ சிந்தனைதான். வேள்விகள் செய்வதில் வல்லவர். அந்தக் காலத்தில் அவர் வேள்வி செய்ததன் காரணமாகவே, ‘வேள்விச் சேரி’ என்று பெயர் பெற்ற ஊர், தற்போது மருவி ‘வேளச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட அந்த மகானுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. `நாம் தெய்வ சிந்தனையுடன்,தெய்வ நாமங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறோமே... இதை ஆத்மார்த்தமாகத்தான் சொல்கிறோமா அல்லது இயந்திரகதியில் ஏதோ, சொல்லிக் கொண்டிருக்கிறோமா? இதைச் சோதனை செய்து பார்க்கவேண்டுமே' என எண்ணினார்.

 ‘பளிச்’சென்று ஓர் யோசனை தோன்றியது. `குழந்தைகளும்  பைத்தியம் பிடித்தவர்களும்தான், உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்வார்கள். நாமும், நமக்குப் பைத்தியம் பிடித்தால்... அந்த நிலையிலும் தெய்வ நாமாவைச் சொல்கிறோமா என்று பார்க்கவேண்டும்' எனத் தீர்மானித்தார்  மகான். ஆகவே, ஊமத்தங்காயை அரைத்து வைத்துக்கொண்டார்.

ஊமத்தங்காயைத் தின்றால் பைத்தியம் பிடிக்கும். இவ்வாறு தயாரித்துக்கொண்ட மகான், அதற்கு மாற்று மருந்தும் தயாரித்து வைத்துக் கொண்டார்; அதாவது பைத்தியம் தெளிய!

மாற்று மருந்து எதற்காக?

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்

காஞ்சி மகாசுவாமிகள் அற்புதமாக விளக்குவார் இதை. “பைத்தியம் பிடித்த நிலையில், ஸ்வாமி நாமாவைச் சொல்லவில்லையென்றால், இந்தப் பிறவி வீணாகப் போய்விடுமல்லவா. மறுபடியும் தெளிவுபெற்று, தெய்வநாமாவைச் சொல்லிக் கரையேறுவதற்காகத்தான்” என்பார்.

ஆக, பைத்தியம் பிடிப்பதற்கான மருந்தையும் மாற்று மருந்தையும் தயார் நிலையில் வைத்துக் கொண்ட மகான், சீடர்களை அழைத்து, ``பைத்தியம் பிடித்த நிலையில் நான் பேசுவதை யெல்லாம் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, மாற்று மருந்தைக் கொடுங்கள்” என்றார்.

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்அப்படியே நடந்தது. பைத்தியம் பிடித்தது. அந்த நேரத்தில் மகான் சொன்னவற்றை எல்லாம், எழுதி வைத்துக்கொண்டார்கள் சீடர்கள். பின்னர், மாற்று மருந்து தரப்பட்டு, மகான் பழைய நிலைக்குத் திரும்பினார்.

பைத்தியம் பிடித்த நிலையில்,அவர் சொன் னதை எல்லாம் எழுதி வைத்திருந்தார்கள் அல்லவா? அவற்றைப் பார்த்தால்... அனைத்தும் சிவபெருமானைத் துதிக்கும் அற்புதமான பாடல்களாக இருந்தன. அந்தப் பாடல்களே, மிகவும் பிரசித்தி பெற்ற ‘ஆத்மார்ப்பண  ஸ்துதி’. ‘உன்மத்த பஞ்சாசத்’ என்றும் அழைக்கப்படும். தன்னை மறந்த நிலையிலும் அவ்வாறு அரனைப் பற்றிப் பாடிய அந்த மகான்தான் ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் (நாம் ஸ்ரீதீட்சிதர் என்றே பார்க்கலாம்).

நல்லவர்களுக்கு ஆபத்து உண்டு; மிகமிக நல்லவர்களுக்கு, உயிருக்கே ஆபத்து உண்டு என்பது பழமொழி. ஸ்ரீதீட்சிதர் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? அவரைக் கொலை செய்ய முயன்ற நல்லவர்களும் உண்டு!

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்

அவர்களிடமிருந்து ஸ்ரீதீட்சிதர் எப்படி தப்பினார்? வாருங்கள்! ஸ்ரீதீட்சிதரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் ஒரு சிலவற்றை தரிசிக்கலாம்.

தமிழ்நாட்டில் வேலூருக்கு அருகில் உள்ள, ‘அடையபலம்’ எனும் ஊரில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவதரித்தவர் ஸ்ரீதீட்சிதர்.

ஆதிசங்கரரைப் போலவே இவரும் ஈஸ்வர அவதாரமாகவே மதிக்கப்பட்டவர். ‘அத்வைத வித்யாசார்யார்’ என்று பட்டம் பெற்ற ஸ்ரீரங்க ராஜாத்வரி என்பவரின் புதல்வராக அவதரித்தவர். இவர் பரம்பரையினர் விரிஞ்சிபுரம் ஸ்ரீமார்க்க பந்தீஸ்வரைக் குலதெய்வமாகவும்; சிதம்பரம் ஸ்ரீகனகசபேசரை இஷ்டதெய்வமாகவும் வணங்கி வந்திருக்கிறார்கள்.

சிறு வயதிலேயே வேதங்களைப் பயின்று, சிவ பக்தியில் தலை சிறந்தவராக விளங்கிய ஸ்ரீதீட்சிதர், திருமண வயதை அடைந்ததும், காஞ்சியில் வாழ்ந்த ஸ்ரீநிவாச தீட்சிதர் என்பவரின் மகளான மங்களாம்பிகையை மணம் புரிந்தார்.

ஸ்ரீதீட்சிதர் காலத்தில், `வடஆற்காடு' பகுதி சின்ன பொம்மன் என்ற அரசரின் ஆளுகையில் இருந்தது. அந்த அரசரின் சபையில் ஸ்ரீதீட்சிதரும் தாதாசாரியார் என்பவரும் ஆஸ்தான வித்வான் களாக இருந்தார்கள். தெய்வ பேதம் இல்லாமல் அனைவரிடமும் சமரச மனப்பான்மையுடன் பழகி வந்த ஸ்ரீதீட்சிதரின் நற்குணங்கள் மன்னரைக் கவர்ந்தன; மிகுந்த அன்புடன் பழகி, ஸ்ரீதீட்சிதருக்கு தகுந்த மரியாதையும் அளித்து வந்தார். மற்றொரு வித்வானுக்கு இது பொறுக்கவில்லை. பல விதங் களிலும் ஸ்ரீதீட்சிதருக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தார் அவர். அரன் அருளால் அனைத்திலும் வென்றார் ஸ்ரீதீட்சிதர்.

ஒருமுறை, தஞ்சை அரசரின் (நரசிம்ம பூபாலன் என்கிறது ஒரு நூல்) வேண்டுகோள்படி, காளஹஸ் தியில் வேள்வி ஒன்றை நடத்தினார் ஸ்ரீதீட்சிதர்.

திருவருள் செல்வர்கள்! - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்

அந்த வேள்விக்குத் தஞ்சை அரசரும் வேலூர் அரசரும் வருகை புரிந்தார்கள். ஸ்ரீதீட்சிதர் முறைப் படி யாகத்தை நிறைவு செய்தார். பொறாமை கொண்ட வித்வான் அரசர்களிடம் சென்று, ``நீங்கள் அளித்த சன்மானங்களை எல்லாம் யாகத் தீயில் போட்டு அழிக்கிறார் தீட்சிதர்” என்று புகார் பத்திரம் வாசித்தார். அரசர்கள் ஸ்ரீதீட்சிதரைக் கேட்க எண்ணி அவரை நெருங்கிய நேரம்... நடந்ததை உணர்ந்த ஸ்ரீதீட்சிதர், அக்னி பகவானிடம் பிரார்த்தித்தார். “அக்னி பகவானே! பக்தர்கள் தந்த பொன் பொருள் அடியேனால் மனமுவந்து சிரத்தையுடன் உமக்கு அளிக்கப் பட்டிருக்குமானால், கருணைகூர்ந்து அவற்றைக் காட்டு” என வேண்டினார். அப்போதே அக்னி பகவான் வெளிப்பட்டு, தன்னிடம் சமர்ப்பிக்கப் பட்ட பட்டு முதலானவற்றைக் காட்டினார். புகார் படித்த வித்வான் தலைகுனிய, அரசர்கள் ஸ்ரீதீட்சிதரை வணங்கி விடைபெற்றார்கள். 

மற்றொருமுறை... சின்னபொம்ம அரசர், ஸ்ரீதீட்சிதரையும் சபையிலிருந்த மற்றொரு வித்வா னையும் அழைத்துக்கொண்டு, தஞ்சை அரசரைப் பார்க்கச் சென்றிருந்தார். அங்கே தஞ்சை அரசரும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள, நால்வருமாக ஆலய வழிபாட்டுக்குச் சென்றனர்.

ஆலயத்தில் சாஸ்தா விக்கிரகம் ஒன்று, மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்தபடி இருந்தது. காரணம் கேட்டதற்கு, “மகான் ஒருவர் வந்து இந்த விக்கிரகத்தின் ரகசியத்தைப் புலப்படுத்துவார். அப்போது, ஆள்காட்டி விரலை மூக்கிலிருந்து சாஸ்தா எடுத்துவிடுவார்” என்றார்கள்.

அரசர்கள், ஸ்ரீதீட்சிரையும் அடுத்த வித்வானை யும் நோக்கி, ``அந்த ரகசியத்தை உங்களில் ஒருவர் வெளிப்படுத்த முடியுமா?'' எனக் கேட்டார்கள்.

வித்வான் முந்திக்கொண்டார். “தாம், மகா விஷ்ணுவுக்குப் பிள்ளையாக, பிரம்மாவுக்குச் சமமானவனாக இருந்தும், சிவனுடைய பூத கணங் களுடன் சேர்ந்து இருக்க வேண்டியதாக இருக்கிறதே என்று சிந்திக்கிறது சாஸ்தாவின் விக்கிரகம்'' என்றார். ஊஹூம்! விக்கிரகத்தின் விரல் அப்படியேதான் இருந்தது.

அடுத்து ஸ்ரீதீட்சிதர் ஒரு விளக்கம் சொன்னதும் அந்த அற்புதம் நிகழ்ந்தது! அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

- திருவருள் பெருகும்...

- சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

படங்கள்: க.முரளி