Published:Updated:

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை
பிரீமியம் ஸ்டோரி
News
பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

ஓவியர்: பத்மவாசன்

திருநெல்வேலிச் சீமையின் பெருமை தாமிரபரணி. அவளுக்கு மகாபுஷ்கர உற்சவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஸ்ரீநெல்லையப்பரின் அன்பும் அருளும், ஸ்ரீகாந்திமதி அம்மையின் பரிவும், பாசமும் பொங்கிக் கலந்துகொள்ள பிரவாகமாய் ஓடுகிறாள் தாமிரபரணி.  சந்தோஷம், குதூகலம், மகிழ்ச்சி, புளகாங்கிதம்... என உற்சாகமாக ஓடிவரும் அவளுக்கு இணையாக இளமை வாய்ந்தவர்கள் அந்தச் சீமையிலே யாருமில்லை எனலாம்! பரமேஸ்வரன் பார்வதி கொடுத்து, அகத்திய மகரிஷியால் வளர்த்துவிட்ட தாமிரபரணிக்குக் குதூகலம் ஒன்றும் புதிதில்லைதான் என்றாலும், இப்போது அவளின் ஆர்ப்பரிப்பில் அதீத  ஆனந்தம்; பொங்கிப் பிரவாகம் செய்கிறாள். ஏன்?!

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

வேறொன்றுமில்லை... காலகாலமாய் ஓடி, ஓடி இந்த நெல்லைப் பகுதியை பொன்விளையும் பூமியாய் மாற்றியவள் அவள். இன்றுள்ளவர்களின் மூதாதையர்களுக்கும் சோறூட்டியவள் அவள். அவளை ‘நம் அம்மாதானே’ என்ற எண்ணத்தில் அதிகம் கண்டுகொள்ளாமல் விட்ட குழந்தைகள்
எல்லாம், இப்போது கொண்டாடத் தலைப்பட்டதை எண்ணிப் பெருமகிழ்வு கொண்டுவிட்டாள்போலும். அதனால்தான் வழக்கத்தைவிட அதீத ஆனந்தம் அவளிடம்.இந்தத் தருணத்திலும் அவளின் தாய்  மனது என்ன நினைக்கும் தெரியுமா?

அன்னைக்குப் பாதபூஜை பண்ணும் பெரும் புண்ணியம் இந்த மக்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் வந்து சேருமே... `இறைவா! எல்லா நலன்களையும் அவர்களுக்கு அள்ளிக்கொடு. என்னையும் என்றைக்கும் கொடுக்கும்படியாக வைத்திரு’ என்பதாகவே இருக்கும்.

அவள் ஜீவநதி அல்லவா...  எல்லா ஜீவன் களின் மீது கருணை பொழியும் அன்னையல்லவா... எல்லோர் வாழ்விலும் சுவை கூட்டும் பேரரசியல்லவா? அவளை வணங்குவோம்; வாயார வாழ்த்துவோம்; மனதாரக் கொண்டாடுவோம்.

சம்புவின் கொடையாம், இந்தச் செம்புநிறத்தாளை (தாமிரவர்ணி) உலகம் உற்று நோக்கும் நேரமிது. அவள் புஷ்கரம் கொண்டாடுகிறாள். அவளது பெருமையே என்ன தெரியுமா? `செம்பு நிறத்தாள்' என்ற பெயரோடு ஓடி ஓடி உழைத் தாலும் - ஊர், உலகத்தை பொன்போலுச் செழிக்கவைத்து விடுவதுதான். விவசாயிகள், குடிமக்கள் வாழ்வையும் பொன்மயமாக ஒளிரச் செய்துவிட்டு, எதுவும் செய்யாததுபோல் அமைதியாக இருப்பதுதான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

அவளைப் பெருமைப்படுத்தும் தருணமிது. அவள் பாதங்களை அள்ளியெடுத்துக் கண்களில் ஒற்றி, பொற்சரங்களையும், நவரத்தின இழைகளையும், மணிகளையும், முத்துக்களையும் சூட்டுகின்ற வேளை இது. தயாராகுங்கள்... அவள் கண்கள் ஆனந்தத்தில் பனிக்க அவளைப் போற்றவேண்டும்; அப்போது தான் உங்கள் வாழ்வு இனிக்கும்.

கங்காதேவி வந்த கதை தெரியும் - காவேரி அன்னை பிறந்த கதை தெரியும். எங்கள் தாமிரவர்ணி வந்த கதை தெரியுமா? தெரிந்துகொள்ள வேண்டாமா? கேட்டுக்கொண்டே அவளுக்கான விழா ஏற்பாடுகளுக்குத் தயாராகுங்கள்.

ஸ்ரீபிரம்மாவால் உருவாக்கி அளிக்கப்பட்ட புண்ணிய பூமியில், அநேக மாமுனிகள் கூடி தவம் பண்ணினார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ‘சௌனகர்’ என்ற முனிவரைத் தலைமை ஏற்கவைத்து, அவரின் வழிகாட்டுதலில் பெரும் யாகம் ஒன்று ஆரம்பமானது.

அப்போது, அங்கே வந்த பெரும் தபஸ்வியான ஸூதமாமுனி என்பவர் கண்ணுற்றார் - மகிழ்வு கொண்டார். உள்ளே வந்தார். யாகசாலையை வணங்கி மகிழ்ந்தார். மாமுனிகளைக் கருணையோடு பார்த்துப் புன்னகைத்தார். `சௌனகர்’ முதலான மற்ற முனிவர்களெல்லாம் எழுந்தோடி வந்து அவரை வணங்கினார்கள். ஸூதமா முனிவருக்கு ஆசனம் அளித்து, உண்ணப் பழங்கள் கொடுத்து, அருந்த நீர் கொடுத்து உபசரித்தார்கள். ஸூதமா முனிவருக்கோ, அப்போது தாமிர வர்ணியின் ஞாபகம் வந்து விட்டது. `எப்பேர்ப்பட்டவள்...' என்ற எண்ணம் தோன்ற, மெள்ளப் புன்னகைத்தார்.

இதைக் கண்ட சௌனகர், ``வியாச மாமுனியின் உத்தம சீடரே! தங்களின் இந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்ன. எங்களுக்குச் சொல்லலாகுமா’’ என்று கேட்டார்.

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

அனைவரும் ஆவலோடு பார்க்க, மெள்ள வாய் திறந்தார் ஸூதமாமுனி. ``தவசிகளே! தங்களின் சிரத்தையான தவம் மற்றும் யாகத்தின் பலனாலேயே, நான் இப்போது சொல்லப் போகும்  விஷயத்தைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள்'' என்று முன்னோட்டம் கொடுத்துவிட்டு தொடர்ந்து பேசினார்.

``நான் ஏராளமான இடங்களுக்குச் சென்றுவிட்டு, வழியில் மதுரையில் சுந்தரேஸ்வரரையும் `வேகவதி' எனப்படும் ‘வைகை’ யையும் தரிசித்தேன். அங்கிருந்து தென்திசை வந்தபோது, ‘ஸ்ரீஆதிபராசக்தி வீற்றிருக்கும் மலய மலையை கண்டு வணங்கினேன். அங்கே பிரம்மன், ருத்திரன் முதலான தேவர் களாலும் தேவதைகளாலும் ‘ஸ்ரீபுரம்’ என்ற திருநாமத்தோடு ஒரு நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே கும்பஸம்பவ முனியாம் அகத்தியப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

அவரின் தயையினால் இந்த மண் செழிக்க ‘தாமிரவர்ணி’ என்ற நாமத்தோடு அன்னை பிரவாகமாய் பொங்கி ஓடுகிறாள். அவளை நினைத்தல், காணுதல், குளித்தல், குடித்தல், அவள் அருகே அமர்ந்து தியானித்தல் ஆகிய காரியங் களில் ஒன்றைச் செய்தாலே மோட்சம் அருள்வாளாம் அந்த அன்னை. இது அகத்திய மகரிஷியின் வாக்கு. அவர் அருளால் நானும் மேற்சொன்ன எல்லாமும் வாய்க்கப்பெற்றேன். முனிவர்களே! உங்கள் தவத்தின் மகிமையை மெச்சி, நான் உங்களுக்குத் தாமிரவர்ணியின் பெருமையைக் கூறுகிறேன் கேளுங்கள்’’ என்றார்.

பிறகு கண்களை மூடி அகத்திய முனிவரை வணங்கி, பின்னர் தன் குருவான வியாசரை வணங்கி, தாமிரபரணித் தாயை வணங்கி, ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க பேச ஆரம்பித்தார்.

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

``தவ சிரேஷ்டர்களே! தாமிரவர்ணிதேவியின் சரித்திரத்தைக் கேட்பதால், உங்களுக்கு அந்தப் பரமேஸ்வரன் பாதம் அடையும் புண்ணியம் கிட்டும். வருங்காலத்தில், மாந்தர்கள் யாரெல்லாம் இதைக் கேட்கிறார்களோ, அவர்கள் சகல பாவங்களும் தொலைந்து பிறவிப் பயனை அடைந்துவிடுவார்கள். சகலத்துக்கும் காரணமான பரமேஸ்வரன் - பார்வதியையும் அகத்திய மாமுனியையும் எண்ணி மகிழ்ந்து. இதோ செம்பு நிறத்தாளைக் குறித்துக் கூறுகிறேன்.

முன்னொரு காலத்தில் தக்ஷப்  பிரஜாபதியின் மகளாக தாக்ஷாயினியாக வந்த பராசக்தி, பரமேஸ்வரனை மணந்தாள். பின்னர், தக்ஷனின் யாகத்துக்கு தன் பதியை அழைக்கவில்லை என்று கோபம் கொண்டு, அந்த யாக குண்டத்திலேயே ஆஹுதி யாகி மறைந்தாள். பின் பர்வதராஜனான கிழவானின் மனைவி ‘மேனை’ என்பவளுக்கு, மகளாக அவதாரம் செய்தாள்.

பதினெட்டுக் கரங்களோடும், சர்வ அலங்காரியாகவும் தோன்றி ஒளிவீசினாள் அன்னை. பயந்து போன பர்வதராஜன் பணிந்து, வணங்கினான். ‘தாயே! உனது இந்த ரூபத்தைக் கண்ணுற்ற நான் பாக்கியவானே. ஆனாலும் என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னை நான் குழந்தையாகக் கொண்டாடவேண்டும். தயைகூர்ந்து அவ்வாறு நீ வந்தருள வேண்டுமம்மா!’ என்று மன்றாடினான்.

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

அன்னையும் அவ்விதமே வந்தாள்; மலர்ந்து சிரித்தாள். பர்வதத்துக்குப் புத்திரியானதால்,  பார்வதி என்ற பெயர் சூடிக்கொண்டாள். வளர்ந்தாள், ஓடினாள், ஆடினாள். இமவானும், மேனையும் பூரித்து நின்றார்கள். கூடிய சீக்கிரமே. பார்வதிக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுமே என்ற கவலைகொண்டார்கள். அதேநேரம், தேவர்கள் முனிவர்கள் உதவியோடு, பரமேஸ்வரனுக்கு மணமுடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். 

மகேஸ்வரனும் சப்த ரிஷிகளான அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காஷ்யபர் ஆகியோரை அழைத்து, இமவானிடம் சென்று தனது விருப்பத்தைத் தெரிவிக்கும்படி அனுப்பினார். எழுவரும் ஒரு சேர வந்து விஷயத்தைக் கூறியதும் இமவான் இன்பப்பெருக்கில் மூழ்கினான். மகிழ்ச்சியின் எல்லையில் நின்று  ‘அவ்வாறே ஆகட்டும்’ என்றான்.

நாளும், கிழமையுமாக பார்வதி தேவி சகலவிதமான ஆடை ஆபர ணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, கையில் காப்பு கட்டிக்கொண்டு ஆதிமாதாவான ஸ்ரீபுரதேவியை வணங்கச் சென்றாள். தூப தீப ஆராதனை முடித்து நிவேதனம் செய்தாள். ஆதிமாதாவும் எழுந்தருளி, பார்வதிதேவியைக் கனிவோடு பர்த்தாள். பின்னர், மதுரக் குரலெடுத்து மெள்ளக் கூறினாள் ‘குழந்தையே! உன்னிடத் தில் ஈரேழு பதினான்கு லோகங்களும் அடங்கியிருக்கின்றன. நீயே சம்புவின் பத்தினி. நீதான் இந்த லோகத்தைக் காப்பாற்றி அருள வேண்டும். இதோ, நான் அணிந்துள்ள இந்தத் தாமரை மலர் மாலை உனக்கானது. இதை உனக்கு அணிவிக்கிறேன். உன்னிடமிருந்து சென்று இது நடத்தவிருக்கும் செயல், அதிஅற்புதமானது. எல்லாம் நல்லவிதமே நடக்கும்’ என்றபடி, மாலையைக் கொடுத்ததுடன், தனது சிவந்தக் கரத்தை பார்வதி தேவியின் சிரசில் வைத்து ஆசியும் அளித்தாள். பார்வதிதேவி, அந்தத் தாமரை மாலையுடன் அரண்மனைக்குத் திரும்பினாள்.

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

‘இந்த மாலையானது உலக நன்மைக்கானது. இந்த மாலையால், மக்கள் எக்காலத்திலும் சுகம்பெற்று வாழ்வர். இது, சகல தேவதைகளும் பூஜித்து உனக்களித்தது. நானும் என் பரிபூரண ஆசிகளோடு உனக்குக் கொடுக்கிறேன்’ என்று ஆதிசக்தி சொன்னதை மீண்டும் மீண்டும் எண்ணி வியந்தபடியே வந்த தோழிகளுக்கு, பார்வதிதேவியின் திருவிளையாடல் எப்படிப் புரியும்?

இந்நிலையில், சப்த ரிஷிகள் மூலம் இமவான் சம்மதம் சொன்னதைத் தெரிந்துகொண்ட பரமசிவன் திருமணக் காப்புக் கட்டிக் கொண்டார். மூவுலக மக்களையும் திருமணத்துக்கு அழைத்து வரும்படி முனிவர்களைப் பணித்தார். பின்னர், அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் காளையில் ஏறி அமர்ந்துகொண்டார். பொற்கிரீடமும், நவரத்தினம் இழைத்த ஆபரணங்களும், பட்டு வஸ்திரங்களும் ஜொலிக்க புறப்பட்டார்!  அவரின் திருமேனி ஜொலித்தது; முறுவல் ஜொலித்தது; கண்களும் ஜொலித்தன!

பொருநையின் பிரவாகம் அடுத்த இதழிலும்...

பொருநையைப் போற்றுவோம்! - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை

இறைவன் எளியவன்!

அப்பைய்ய தீட்சிதர் சிறந்த பக்திமான். அவர் கூறுகிறார்: ``அன்றாட பூஜையைச் செய்ய விரும்பும் யாரும் தடபுடலான ஏற்பாடுகள் செய்யத் தேவையில்லை. ஒரு துளசி இலை அல்லது ஒரு வில்வ இலை இறைவனுக்குப் போதும்.''

``ஓர் இலை, பூ, ஒரு பழம்... இவை எதுவுமே இல்லாவிடினும், சிறிதளவு தண்ணீர் போதும். இவற்றில் ஏதாவது ஒன்றை, யார் பக்தியோடு சமர்ப்பித்தாலும், அதனை நான் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்'' என்று கண்ணனே கூறுகிறார். ஆம்! ஆண்டவன் மிக எளிமையானவர்.

இதை விளக்கும் சுலோகம் இங்கே...

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்பா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்யுப ஹ்ருதம்
அஸ்னாமி ப்ரயதாத் மன:


- ராம், சென்னை-44