Published:Updated:

`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’

`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’
பிரீமியம் ஸ்டோரி
News
`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’

`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’

நான்மாடக்கூடலாம் மாமதுரை நகரில் மீனாட்சியின் ஆட்சி; அங்கு அம்பிகையின் ராஜாங்கம்தான் என்று சிலாகித்துச் சொல்வார்கள், நம் பெரியவர்கள். அதேபோல், சிதம்பரம் என்றால், அங்கே ஸ்ரீநடராஜரின் ஆட்சி என்று சொல்வதும் நமக்குத் தெரியும்.

தென்தமிழகத்தில் ஒரு சிவத்தலம் உண்டு. அங்கு நடப்பது அம்பிகை யின் அம்மை சிவகாமியின் ஆட்சி என்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்!

 ஒரு காலத்தில் உத்தம பாண்டிய புரம் என்ற பெயருடன் திகழ்ந்த அந்த ஊரின் தற்போதைய பெயர், பணகுடி. திருநெல்வேலி – கன்னியா குமரி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் அமைந்திருக் கிறது பணகுடி.

`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’

ராமன் வழிபட்ட ஈசன்!

ராமாயணக் காலத்தில் அனுமன் சஞ்சீவினி பர்வதத்தைச் சுமந்து சென்றார் அல்லவா? அப்போது, இந்தப் பகுதியிலுள்ள மகேந்திரகிரி மலைச் சிகரங்களில் அவரின் வால் உரசியதாம்.  அதன் விளைவாக அந்தச் சிகரத்திலிருந்து புதிய நதியொன்று தோன்றிப் பிரவாகித்ததாம். அனுமனால் உற்பத்தியான அந்த நதிக்கு `அனுமன் நதி’ என்றே திருப்பெயர்!

இந்த நதியின் கரையில்தான் மிக அழகுற அமைந்திருக்கிறது, பணகுடி சிவாலயம். இங்கே சந்நிதிகொண்டிருக்கும் ஸ்வாமியின் திருப்பெயர் அருள்மிகு ராமலிங்கேஸ்வரர். அம்பிகைக்குச் சிவகாமியம்மை என்று பெயர். அம்மை-அப்பன் இருவருமே சிறந்த வரப்பிரசாதி என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள். இந்த ராமலிங்கேஸ்வரர் ராமபிரானால் வழிபடப்பட்டவராம்.

ராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான், இந்தப் பகுதியில் அனுமன் நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் காரணமாகவே இங்குள்ள ஈஸ்வரனுக்கு ராமலிங்கேஸ்வரர் என்று திருப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள்.

கிணற்றில் கிடைத்த அம்பிகை!

முற்காலத்தில் சிவலிங்க மூர்த்தம் மட்டுமே வழிபடப்பட்டு வந்திருக்கிறது. அம்பாளுக்கென்று சந்நிதி இல்லை. பல வருடங்களுக்கு முன்பு பணகுடியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள `வடமியாபுரம்' என்ற ஊரில் கிணறு தோண்டினார்களாம்.

அப்போது, அந்தக் கிணற்றில் அழகிய அம்மன் சிலை கிடைத்தது. ஊர்மக்கள் அந்த அம்பாள் சிலையை, பணகுடி ராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை செய்து, அருள்மிகு சிவகாமி அம்மன் என்று திருப்பெயரும் சூட்டிவிட்டனர். அம்பாளின் சிலை கண்டெடுக்கப்பட்ட அந்த ஊரின் பெயரும் `சிவகாமிபுரம்' என்று மாறிவிட்டது.

ஆதியில் ராமபிரானால் வழிபடப்பட்ட ராமலிங்கேஸ்வரருக்கு, கி.பி.14-ம் நூற்றாண்டில் தென்காசிப் பகுதியை ஆட்சி செய்து வந்த உத்தம பாண்டியன் திருக்கோயில் நிர்மாணித்த தாகச் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்த ஊர் முற்காலத்தில், ‘உத்தமபாண்டியபுரம்’ என்று அழைக்கப் பட்டதாம். பாண்டிய மன்னன் கட்டியதற்கு சாட்சியாக, கோயிலின் வெளிப்புற கட்டுமானங் களில் கயற் சின்னங்களைக் காணமுடிகிறது.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனி விமானங்கள் இருந்தாலும், கோயிலுக்கென்று ராஜ கோபுரம் இல்லாமல் இருப்பதைக் கண்டு மனதில் வருத்தம் ஏற்படவே செய்கிறது.கோயிலில் பரிவார மூர்த்தங்களாக விநாயகர், கன்னி விநாயகர், சரஸ்வதி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சப்த கன்னியர், பைரவர், சனீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். புராணச் சிறப்போடு பிரார்த்தனைச் சிறப்புகளுடனும் திகழ் கிறது, பணகுடி சிவாலயம்.

அம்பாளே ஆட்சி செய்கிறாள்!

சித்திரை மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று இரவு, பசும்பாலில் மிளகு சேர்த்து அரைத்து, சிவலிங்கத்துக்குச் சாற்றி, மறுநாள் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு அபிஷேகம் செய் தால், அந்த வருடம் நன்கு மழை பெய்து விளைச்சல் பெருகும் என்பது ஐதீகம். அதேபோல், தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு வடைமாலை சமர்ப்பித்து, வெண்பூசணியில் தீபம் ஏற்றினால், தீராத கடன் பிரச்னைகளும் தீருவதாக நம்பிக்கை யுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சிதம்பரத்தில்தான் நடராஜர் ஆட்சி; இந்தக் கோயிலில் அன்னை சிவகாமியின் ஆட்சிதான் நடப்பதாகச் சொல்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள். சுப காரியங்கள் எதைச் செய்வதாக இருந்தா லும், இந்த அம்மையை மனதில் நினைத்துக்கொண்டே தொடங்குகிறார்கள். அம்பிகையின் அருளால் தொட்டது துலங்கும்; எடுத்த காரியம் ஜயமாகும். சிவகாமியம்மைக்குப் பச்சை நிறத்தில் பட்டுச்சேலை, பொட்டுத் தாலி, மல்லிகைப்பூ மாலை ஆகியவற்றை அணிவித்து, வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தலைவாழையில் பச்சரிசி...

ந்தக் கோயிலில் அருளும் வாராஹிதேவியும் மிகவும் சாந்நித்தியத்துடன் அருள்பாலிக்கிறாள். தீவினைகள் நீங்கவும், தொடர்ந்து நல்லவை நடக்கவும் இந்தத் தேவியை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். மேலும், வாராஹிதேவிக்கு தலைவாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டால், தீராத பிணிகளும் தீருமாம்.

ராமலிங்க சுவாமிக்கு தை மாதம் 10 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாள் தேரோட்டமும் 10-ம் நாள் தெப்போற்சவமும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

இந்தக் கோயிலில் நம்பிசிங்க பெருமாளும் அருள்வது கூடுதல் சிறப்பு. அவருக்கு வைகாசி மாதம் 5 நாள்கள் வசந்தோற்சவமும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருடசேவையும், சித்ரா பௌர்ணமியன்று 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன.

பணி நிமித்தமாகவோ, சுற்றுலா போன்று வேறு காரணங் களுக்காகவோ நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள், அப்படியே இந்தப் பணகுடி திருத்தலத்துக்கும் சென்று, ராமலிங் கேஸ்வரரையும் சிவகாமி அம்மையையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும்; நடப்பது அனைத்தும் சிறப்பாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’

உங்கள் கவனத்துக்கு...

திருத்தலம்: பணகுடி

ஸ்வாமி:
ஸ்ரீராமலிங்கேஸ்வரர்.

அம்பாள்: சிவகாமியம்மை.

திருத்தலச் சிறப்புகள்: ராமபிரான் வழிபட்ட திருத்தலம்; சிவகாமி அம்மையின் ஆட்சி நடக்கும் க்ஷேத்திரம்.

சிறப்புப் பிரார்த்தனைகள்: மழை சிறக்கவும், விளைச்சல் பெருக வும் இந்தத் தலத்து ஈசனுக்கு  விசேஷ வழிபாடுகள் செய்யும் வழக்கம் உண்டு. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வடைமாலை அணிவித்து, வெண்பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டால், தீராத கடன் பிரச்னைகள் தீரும்; இங்கு அருளும் வாராஹிதேவியை வழிபட்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் கோயில் நடைதிறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?:

 திருநெல்வேலி–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் உள்ளது பணகுடி. திருநெல்வேலி மற்றும் வள்ளியூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

-  எல்.ராஜேந்திரன்

`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி!’

நரசிம்ம தரிசனம்!

அருள்மிகு நரசிம்ம மூர்த்தி விசேஷ திருநாமங்களுடன் அருளும் 12 தலங்களைத் தெரிந்துகொள்வோமா?!

1. யோக நரசிம்மர் - சோளிங்கர்

2. தெள்ளிய சிங்கர் - திருவல்லிக்கேணி,

3. சாந்த நரசிம்மர் - திருநீர்மலை.

4. படலாத்ரி நரசிம்மர் - சிங்கப்பெருமாள் கோவில்

5. ஸ்தாக நரசிம்மர் - யானைமலை மதுரை.

6. பாகை நரசிம்மர் - மங்களகிரி.

7. ஹிரண்ய சம்ஹார உக்ர நரசிம்மர - ஸ்ரீரங்கம்

8. ஸ்ரீதேவி பூதேவி சமேத நரசிம்மர் - மங்களகிரி.

9. லக்ஷ்மி நரசிம்மர் - அகோபிலம்

10. யோக நரசிம்மர் - சிந்தல பூடி,

11. சுதர்சன நரசிம்மர் - தாடிக்கொம்பு.

12. பிரகலாத வரத நரசிம்மர் - கீழ் அகோபிலம்.

- ஆர்.ஜெயா, மதுரை