Published:Updated:

பழநியில் மயூர சிம்மாசனம்!

பழநியில் மயூர சிம்மாசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பழநியில் மயூர சிம்மாசனம்!

பழநியில் மயூர சிம்மாசனம்!

`வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை’ என்பார்கள் பெரியோர்கள். ஆம்! துன்பங்கள் துரத்தும் வேளையில் வேலும் மயிலுமே  தங்களுக்குக் காப்பு என்றெண்ணி சரண்புகுவார்கள் முருகபக்தர்கள்.

அவர்களைப் பொறுத்தவரையிலும் வேலும் மயிலும் முருகனின் அம்சங்களே. வேல் இருக்கும் இடத்தில் வேலவன் குடியிருப்பான்; மயூரமாம் மயிலிருக்கும் இடத்தில் மாயோன் மருகனின் சாந்நித்தியம் பூரணமாய் நிறைந்திருக்கும் என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை. அவ்வகையில்,  பார்போற்றும் பழநி திருத்தலத்தில், வரும் செப்டம்பர் 30-ம் தேதி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது, மயூர சிம்மாசனத் திருவிழா!

``இந்த மயூர சிம்மாசனம் இருக்கும் இடத்தில் முருகனும் இருப்பான். அவனது திருவருளும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்  என்பது நம்பிக்கை. விரைவில் உலகெங்கும் இந்த மயூர சிம்மாசனம் நிறுவப்பட வேண்டும் என்பது என் ஆசை’’ என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார், ரெஜித்குமார்.

பழநியில் மயூர சிம்மாசனம்!

முருகப்பெருமான் பெருமைகளை உலகமெங்கும் கொண்டு செல்லும் நோக்கில், ‘லயன் மயூரா ராயல் கிங்டம்’ என்ற அமைப்பை உருவாக்கி உலகம் முழுக்க இருக்கும் முருகப்பெருமான் பக்தர்களை ஒருங்கிணைத்துப் பல ஆன்மிகத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் இவர். அந்தப் பணிகளில் ஓர் அங்கமே பழநியில் மயூர சிம்மாசனத் திருவிழா!

குமரிகண்ட பெருமைகளையும், அங்குச்  சிறப்புறத் திகழ்ந்த முருகப் பெருமான் வழிபாடு குறித்தும் பலநாடுகளுக்குச் சென்று ஆய்வு மேற் கொண்டு வருகிறார் ரெஜித்குமார்.

தம்முடைய அந்த ஆய்வுகளே தனக்குள் முருகபக்தி ஆழப்பதிவதற்குக் காரணம் எனக் கூறும் ரெஜித் குமார், ஆய்வுப் பணிகள் குறித்தும், பழநி விழா குறித்தும் அற்புத மான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்...

‘‘கேரளாவின் திருச்சூரில் மின்வாரியத் துறையில் பணி புரிந்து வரும் நான், சிறுவயது முதலே முருகப்பெருமானின் மீது பக்தி கொண்டு வளர்ந்தேன். என் தந்தையும், தமையனும் அடுத்தடுத்து மறைந்த வேளையில் மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தேன். பிறகுதான் முருகப்பெருமான் அருளால் மீண்டும் ஆன்மிக வழிக்குத் திரும்பினேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பழநியில் மயூர சிம்மாசனம்!

2006-ம் ஆண்டு முதல் என் ஆன்மிக தேடல்கள் அதிகமாகின. அந்த வருடம் தொடங்கி, 2013-ம் ஆண்டு வரை உலகமெங்கும் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டேன். நான் சென்ற நாடுகளில் எல்லாம் முருகனின் அருள் நிறைந்திருக்கும் இடங்களைத் தரிசித் திருக்கிறேன்.

பண்டைய குமரிக்கண்ட வரலாற்றில் முருக வழிபாடு சிறப்பான இடத்தை அடைந்திருந்தது என்பது புராண, வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. உருவ வழிபாட்டில் தொன்மையானது முருகன் வழிபாடு. மக்கள் வாழ்ந்த முதல் நிலம் குறிஞ்சி.  குகையில் வாழத்தொடங்கிய மனிதன், இரை தேடுவதற்காக மேற் கொண்ட முதல் தொழில் வேட்டையாடுவது. குறிஞ்சியும், வேட்டுவத் தோற்றமும் முருகனின் அடையாளம் இல்லையா?

காலங்கள் கடந்தும் இன்றும் செழித்து நிற்கும் முருகப்பெருமானின் வழிபாடு கிழக்காசிய நாடுகளைத் தாண்டி உலகெங்கும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. இன்றும் முருகப் பெருமானின் அதிர்வுகளைக் கொண்டிருக்கும் பல பகுதிகள் உலகெங்கும் உள்ளது. அதைக் கண்டறியவே நான் பயணங்களை மே ற்கொண்டு வருகிறேன்’’ என்கிறார் ரெஜித்குமார்.

பூட்டான், இந்தோனேஷியா, தாய்லாந்து, இங்கிலாந்தின் டிராகன் மலை, ஜப்பானின்  ஹோன்ஷூ தீவு என உலகின் பல எல்லைகளைத் தொட்டு நீள்கிறது இவரது ஆய்வும் பயணமும். இதுபற்றி இவர் கூறும் தகவல்கள் நம்மை வியக்கவைக்கின்றன!

பழநியில் மயூர சிம்மாசனம்!

‘‘பூட்டான் நாட்டின் டைகர் மலையானது, திபெத்திய மதத்தின் முதல் ரிம்போச்சே (மதகுரு) பத்ம சம்பவர் வாழ்ந்த இடம். அந்த இடத்திலும் முருகவழிபாடு நடைபெற்றுள்ளது என்பதை அவரது கதையிலிருந்து அறிய முடிகிறது.

அதேபோல், இந்தோனேஷியா - பாலித் தீவில் உள்ள பிரசித்தி பெற்ற புரா பெசாகி (PURA BESAKIH) எனும் தலம், 86-க்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்டது. இந்த  ஆலயத்தில் வாசுகி என்ற நாகம் முருகனை வழிபட்டுள்ளது என்று புராணத் தகவல்கள் கூறுகின்றன.

தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள தி ட்ரூத் (Sanctuary of Truth) ஆலயம் சென்றபோது, அங்கிருந்த பழைமையான ஓர் ஓவியத்தில் இருந்த திருவுருவம் முருகப் பெருமானின் ஆதிவடிவை ஒத்திருந்தது. அங்கிருந்த வழிகாட்டியும், அதை கணேசரின் தம்பி என்றே கூறினார்.

இங்கிலாந்தின் டிராகன் மலை மிகவும் வித்தியாசமானது. இங்குள்ள மண்ணும் இலங்கையின் கதிர்காம மண்ணும் இயல்பில் ஒன்றாகத் திகழ்வது ஆச்சர்யம்தான்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள நீல மலைத்தொடர்களில் (Blue Mountains) பல இடங்களில் ஆய்வுகள் மேற் கொண்டேன். அங்குக் குமரிகண்ட காலத்தில் பெரும் யுத்தம் நடைபெற்ற சான்றுகள் கிடைத் தன. ஒருவேளை அவை, சூரசம்ஹார நிகழ்வாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்.

அங்கு ஜெலோவின் கேவ்ஸ் எனப்படும் குகையில் முருகப்பெருமான் திருப் பாதம் பதிந்திருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்’’  என்று பரவசத்தோடு விவரிக்கிறார் ரெஜித் குமார். இவர் சேகரித்திருக்கும் தகவல்களில், இங்கு அவர் குறிப்பிட்டிருப்பது சில துளிகள் மட்டுமே!

பழநியில் மயூர சிம்மாசனம்!

‘‘தென் கொரியா, வடகொரியா, மலேசியா, சிங்கப்பூர் எனத் தென்கிழக்கு ஆசியா வெங்கிலும் முருகப்பெருமானின் வழிபாடும் பல சித்த பெருமக்களின் நடமாட்டமும் அதிகம்’’ என்று உறுதிபட கூறும் அன்பர் ரெஜித்குமார், உலகின் பல நாடுகளில் சுற்றி முருகப்பெருமானின் அற்புதங்களை அறிந்து வந்தாலும், தனக்குப் பிடித்த இடம் பழநி மலையே என்கிறார்.

அத்துடன், ``ஆதியில் குமரிக்கண்டத்தில் தொடங்கிய குமர வழிபாடு, உலகெங்கும்  மீண்டும் தழைத்தோங்கும். அப்போது உலகில் சத்தியமும் தர்மமும் ஓங்கி நிற்கும். இது நிச்சயம் நடக்கும். அதற்கான சிறு முயற்சியே எனது ஆய்வும் பணிகளும். அவற்றின் ஓர் அங்கம் மயூர சிம்மாசனத் திருவிழா’’ என்று நம்பிக்கை யோடு சொல்கிறார் ரெஜித்குமார்.

வேலவன் அருளால் அவரின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். இதோ, வரும் செப்டம்பர் 30-ம் நடைபெறவுள்ள விழாவில், முருகப் பெருமானின் திருவடி களைத் தாங்கிய மயூர சிம்மாசனத்துக்கு,   ஐவர் மலையில் சிறப்பு வழிபாடு நடைபெற வுள்ளது. பின்னர், பழநி மலையில் கிரிவலமாகக் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன.

இதைத் தொடர்ந்து, நவம்பர் 14 அன்று இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ஸ்ரீதான்தோன்றி ஆஞ்ச நேயர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப் பட உள்ளது. அன்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, மயூர சிம்மாசனத்தைத் தரிசிப்பதுடன், முருகப்பெருமானின் திருவருளையும் பெற்று வரலாம்.

- மு.ஹரிகாமராஜ்