Published:Updated:

ஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு!

ஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு!

ஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு!

பேரொளியின் பூரண மகத்துவம் இரவில் பளிச்சிடும்.

ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமான பராசக்தியை வழிபடுவது சிறப்பு. சூரியன், பகலில் ஒளி தருவான். இவள், இருளிலும் ஒளி தருபவள். மனதில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்ற ஆதவனால் இயலாது; தேவியால் இயலும்.

மக்கள் மனதிலிருந்து பயம் அகல வேண்டும். அவர்களை, ஏழ்மை தழுவக் கூடாது. அவர்களது அறியாமை அகன்று, அவர்களிடத்தில் அறிவொளி மிளிரவேண்டும். ஆக... மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பவள், அன்னை ஆதிபராசக்தி.

ஆகவே ஒன்பது நாள்களும் ஆதிசக்தியை கலைமகளாக, அலைமகளாக, மலைமகளாக தியானித்துப் போற்றி வழிபடவேண்டும். நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை `தேவி பாகவதம்’ நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி 9 நாள்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றைச் சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும்.

ஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு!

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம், மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்கவேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.

பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீள-அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும்.

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்கு-சக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை- ஆபரணம், மலர்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து, அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் தொடங்கவேண்டும்.

‘`தாயே! உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறோம். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்’’ என்று அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா  முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் அவசியம். 9 நாள்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ணவேண்டும்; தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

பயம் போக்கும் துர்கை வடிவத்துக்கு மூன்று நாள், ஏழ்மையை அகற்றும் லட்சுமி வடிவத்துக்கு மூன்று நாள், அறிவொளி தரும் சரஸ்வதி வடிவத்துக்கு மூன்று நாள்... இப்படி ஒன்பது நாட்கள் அம்பாளை வழிபடுவது சிறப்பு. முதல் மூன்று நாட்களில் பயம் அகன்றது. அடுத்த மூன்று நாட்களில் ஏழ்மை அகன்றது. கடைசி மூன்று நாட்களில் அறிவொளி நிலைத்தது. ஆகையால், அம்பாளுக்கு ஒன்பது நாள் பணிவிடை செய்வது விசேஷம்!

இப்படி, 9 நாள்கள் விரதம் இருக்க இயலாதவர்கள்... சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

தொகுப்பு: நமசிவாயம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரஸ்வதி பூஜை - பூஜிக்க உகந்த நேரம்!

ந்த வருடம், வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி, புதன் கிழமை அன்று நவராத்திரி ஆரம்பமாகிறது. அக்டோபர் மாதம் 18, வியாழக்கிழமையன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. நவமி திருநாளான அன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருள்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், மறுநாள் விஜயதசமியன்று அந்தப் பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்துதல் சிறப்பு. சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை 10:30 முதல் 12 மணிக்குள் ஏடு அடுக்கி, சரஸ்வதிதேவியைப் பூஜித்து வழிபடுவது உத்தமம்.