Published:Updated:

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

அம்பிகையைக் கொண்டாடுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பிகையைக் கொண்டாடுவோம்!

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

தத்துவம் உணர்த்தும் விஜய தசமி

சகல தேவர்களிடமும் ஆயுதங்கள் பெற்று அசுரர்களுடன் போரிட்ட மகாசக்தி, நவராத்திரி இறுதி நாளில் வெற்றி பெற்றாள். பத்தாவது நாளான விஜயதசமி நாளில் ஆதிபராசக்தியாக காட்சி தந்து சகலரையும் ஆசிர்வதித்தாள். தேவர்களிடம் தாம் பெற்ற ஆயுதங்களை அவர்களிடம் திருப்பி அளித்ததுடன், தானும் அமைதிகொண்டாள். ஆக, அம்பிகையின் பூரணத்துவமான அனுக்கிரகத்தைப் பெற்றுத் தரும் நாள் விஜய தசமி.

இதன் உண்மையான தத்துவம் என்னவென்றால், கடவுளால் படைக்கப்பட்ட நம்முடைய ஐம்புலன்களையும் அடக்கியாள வேண்டும். இல்லையெனில், அவற்றால் தொல்லைகள் ஏற்படும்; காம, குரோத, லோப மாச்சர்யங்களில் மூழ்கிக் கெட்டுப் போவோம். அதனால் உண்டாகும் பாவங்கள், நம்மை ஆண்டவனோடு அணுகாமல் செய்துவிடும். விளைவு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க நேரிடும்.

எனவே, கண், காது, மூக்கு, நாக்கு, தேகம் ஆகிய ஐம்புலன்களிடத்தும் கவனமாக இருக்கவேண்டும். அப்படி அவற்றை அடக்கியாள முடியாத நிலையில், மகாசக்தியின் திருவருளால் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும். இதுவே, நவராத்திரியும் விஜயதசமி திருநாளும் நமக்குப் போதிக்கும் பாடம்.

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

சிவனார் போற்றிய நவராத்திரி

ராமன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து, தான் இழந்த தன்னுடைய மனைவி சீதா தேவியையும், ராஜ்ஜியத்தையும் திரும்பப்பெற்று பெருவாழ்வு வாழ்ந்தார்.

இந்திரன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து தேவியின் அருள் பெற்று விருத்திராசுரனைக் கொன்றான். எந்நாட்டவர்க்கும் இறைவனான் சிவனாரும், நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார்.

கலைநியமம்!

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சந்நிதி `கலைநியமம்’ என்றே வழங்கப்படுகிறது. இங்கே சிந்தாதேவி என்ற திருநாமத்துடன் அருள்வழங்கும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அருள்பாலித்தவளாம்!

அன்னமும் அளித்தாள்...

பராசக்தியை அன்னபூரணியாக வணங்குவோம். லட்சுமிதேவியையும் அன்னலட்சுமி என்று சிறப்பிக்கிறோம். அதேபோல் அன்னை கலைவாணியும் அன்னம் அளித்து மகிழ்ந்திருக்கிறாள். அவள் `அமுதசுரபி’ எனும் அள்ளக்குறையாத உணவு தரும் பாத்திரத்தை ஆபுத்திரனுக்கு கொடுத்ததாகவும், அதைக் கொண்டு அவன் உலகமக்களின் பசிப்பிணி தீர்த்ததாகவும் மணிமேகலை கூறுகிறது.

கொலு... கோலாகலம்!

பிரபஞ்சத்தின் ஆதாரமாகத் திகழ்பவள் ஆதிசக்தி. உலகத்தில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்திலும் அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். ஒவ்வொரு ஜீவராசியையும் படிப்படியாக உயர்த்திப் பரிமளிக்கச் செய்கிறாள். இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலு வைக்கும்போது, ஏனோதானோவென்று நமது இஷ்டத்துக்கு பொம்மைகளை அடுக்கக் கூடாது.

ஒற்றைப்படை எண்ணிக்கையில்... 5, 7 அல்லது 9 படிகளுடன் கொலு அமைப்பார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே பொம்மைகள் செய்யச் சொல்லி வாங்கிவந்து, கொலுவில் வைத்து வழிபடுவார்கள். வருடாவருடம் புது பொம்மைகள் இடம்பெறும். அந்தக் காலத்தில், மரப்பாச்சி பொம்மைகளுடன் கொலு அமைப்பார்கள். செங்கல் வைத்து பலகைகள் போட்டு அதன்மேல் சலவை வேஷ்டியைப் போர்த்தி, படிக்கட்டாக செட் செய்து கொலு வைப்பது வழக்கம். சில இடங்களில், விழா நாளுக்கு முன்னதாகவே கொலு அமைக்கும் இடத்தைச் சுத்தப்படுத்தி, சுற்றிலும் மண்ணை கொட்டி, பாத்தி அமைத்து முளைப்பாரி விதைப்பார்கள். அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றிவர... விழா ஆரம்பிக்கும் தருணத்தில் கொலுப் படிக்கட்டைச் சுற்றி பசுமையாக வளர்ந்து நிற்கும் முளைப்பாரி பயிர்கள்.

கீழிருந்து மேலாக ஒவ்வொரு படியிலும் முறையே... புல் பூண்டு, செடி கொடிகளில் ஆரம் பித்து, ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள், எல்லோருக்கும் மேலாக தேவி சக்தியின் விக்கிரகம் திகழ... அனைத்தும் தேவி பராசக்தியின் சாந்நித்தியமே என்பதைச் சொல்லாமல் சொல்லும் கொலு காட்சி!

தொகுப்பு: நமசிவாயம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz