Published:Updated:

கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?

கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?

கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?

? எனக்குச் சொந்த வீடு யோகம் உண்டா என்பதை அறிந்துகொள்ள ஜோதிடர் ஒருவரைச் சந்தித்தேன். எனது ஜாதகத்தில் 4-ம் இடம் சற்று பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார் அவர். 4-ம் இடத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்படி அமைந்திருந்தால் சொந்தவீடு யோகம் அமையும்?

- வே.பரமேஸ்வரன், கோவை-2

ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்குப் பிறகு வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு.

4-ம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப்பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும். ஜன்ம லக்னத்து நான்காம் வீட்டில் புதன் அமையப்பெற்றிருந்தால், கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும். ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் சிறப்பான வீடும் மனை யோகமும் கிடைக்கும்.

நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும்.

4-ம் வீட்டில் சனி இருப்பின், கல்வி கேள்விகளில் முழுமை அடையாமல் போவதாலோ, தகுதியற்றவர்களின் நட்புறவாலோ குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக் கூடும். ஆசாரம் குறைவுபடும். சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும்.ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது.

? முற்காலத்தில் நீண்டசிகிச்சை எடுத்துக்கொள்ளும் சூழலில், குறிப்பிட்ட நட்சத்திர தினத்தில் மருத்துவ சிகிச்சையைத் தொடங்குவார்கள் என்று கேள்விபட்டேன். இந்தத் தகவல் உண்மையா?

- எம்.வி.தாமோதரன், சென்னை-42

நவீன காலத்தில் பலவிதமான அறிவியல் இயந்திரங்களின் உதவியோடு நோய்களைப் பற்றி அறிந்து மருத்துவம் செய்கிறார்கள்.  ஆனால், இப்படியான எந்தவித வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் நம் ரிஷிகள் தவம் எனும் சீரிய சக்தியால் நவ கோள்களையும் சாட்சியாக்கி, மனிதனுக்கு உண்டாகும் நோய் முதலான அத்தனை பாதிப்புகளையும், அவற்றை குணமாக்குவதற்கான கால நேரத்தையும், வழிமுறைகளையும் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது வியப்புக்கு உரியது.

நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய 16 நட்சத்திரங்கள்.

? சில நாள்களுக்குமுன் கனவில் எருதுகளைக் கண்டேன். கனவில் பசு மாடு வந்தால் நல்லது என்பார்கள்; ஆனால், எருதுகளைக் காணலாமா? கெட்ட கனவுகள் தொடராமல் இருக்க என்ன செய்யலாம்?


- சி.வத்சலா சிதம்பரம், காரைக்கால்


பொதுவாக கனவுகள், உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் ஏற்படுகின்றன என்பது ஆயுர்வேதத்தின் தீர்ப்பு. நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படும் என்பது உலகத்தின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு. ப்ரச்ன மார்க்கமும் (31-வது அத்தியாயம்) கனவுகள் குறித்து விளக்குகிறது. அதன் அடிப்படையில் சில தகவல்களை அறிவோம்

கனவுகளின் வகைகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?

திரிஷ்டம், ஷ்ருதம், அனுபூதம், பிராதிதம், கல்பிதம், பாவிஜம், தோஷஜம் என்று கனவுகளை வகைப்படுத்துகின்றன ஞானநூல்கள். இவற்றில் முதல் 5 வகை கனவுகளும் பகல் நேரத்தில் காணும் கனவுகளும் முக்கியத்துவம் இல்லாதவை என்பார்கள் பெரியோர்கள். பகலில் தூங்கக்கூடாது என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை!

தெய்வங்கள், அந்தணர்கள், பசுக்கள், எருதுகள், உயிருடன் உள்ள உறவினர்கள், அரசர்கள், நல்ல மனிதர்கள், எரியும் நெருப்பு, நல்ல நீர் நிலைகள், கன்னிப் பெண்கள், வெண்ணிற ஆடையுடன் புன்னகை பூக்கும் அழகான சிறுவர்கள், உற்சாகமானவர்கள், புத்திமான்கள், குடைகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், வெண்ணிற மலர்கள், வெண்ணிற ஆடைகள் ஆகியவற்றைக் கனவில் காண்பது சுபம்.

கெட்ட கனவுகளைக் காண நேரிட்டால், உடன் எழுந்து கை, கால்கள் சுத்தம் செய்து, சமயச் சின்னங்கள் தரித்து, தெய்வ நாமத்தை 12 முறை உச்சரித்து வணங்கவேண்டும்.

? கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தரும் என்கிறார் என் தாத்தா? மச்சங்கள் வேறு நிறங்களிலும் அமையுமா?

- எம். கோகுலகிருஷ்ணன், மேலூர்

அங்க லட்சணம் குறித்த ஞானநூல்கள் பலவும் மச்சங்கள் குறித்து விவரிக்கின்றன. மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள். கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.

அபூர்வமாக சிலர் உடம்பில் வேறு வண்ணங்களிலும் மச்சம் தென்படும். மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிச்சயமான நிரந்தரமான வருமானம் இருக்கும்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருள்களோடு ஒட்டியதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான்களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம் இருப்பின் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர்களாகவும் இருப்பார்கள். சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றோர், பழைமை விரும்பிகளாக இருப்பார்கள். வணிகத்துறையில் ஆர்வம் இருக்கும்.

குங்கும நிறமாக மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவுடன் திகழ்வர். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகும் அன்பர்களாகத் திகழ்வார்கள்.

- பதில்கள் தொடரும்...

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

அன்பார்ந்த வாசகர்களே!

ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, பெயரியல் முதலானவை குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் பொதுவான கேள்வி- பதில்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும். மேலும், தனிப்பட்ட ஜாதகங்களுக்கான பலாபலன்கள், தோஷ பரிகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கும் பிரத்யேகமாக பதிலளிக்கவுள்ளார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் (அவை இதழில் இடம்பெறாது).

தனிப்பட்ட முறையில் ஜோதிட விளக்கங்கள் பெற விரும்பும் வாசகர்கள், கீழ்க்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்து தனியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும் (நகல் எடுத்தும் அனுப்பலாம்) படிவத்துடன் ஜாதக நகலையும் இணைத்து அனுப்பவும். உங்களின் தொலைபேசி எண் மற்றும் இ.மெயில் முகவரி விவரங்களையும் இணைப்பது மிக அவசியம். தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கான பதில்கள் - விளக்கங்கள், சம்பந்தப்பட்ட வாசகருக்கு தொலைபேசி அல்லது இ.மெயில் மூலம் அளிக்கப்படும். கேள்விகள் அனுப்பப்பட்டு 15 நாள்களுக்குள் பதில் கிடைக்கவில்லை எனில், தங்களின் கேள்விகள் தேர்வாகவில்லை என அறியவும். கேள்விகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

கறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா?