Published:Updated:

களங்கம் போக்கும், கவலைகள் தீர்க்கும் பிள்ளையார் நோன்பு!

களங்கம் போக்கும், கவலைகள் தீர்க்கும் பிள்ளையார் நோன்பு!
களங்கம் போக்கும், கவலைகள் தீர்க்கும் பிள்ளையார் நோன்பு!

கார்த்திகை மாதம் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. பிள்ளையார் நோன்பு கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் தொடங்கி, சதய நட்சத்திரத்தன்று நிறைவு பெறும்.

ம்பிகையை வேண்டி நோன்பு இருப்பது நமக்குத் தெரியும். கேதார கௌரி நோன்பு, காரடையான் நோன்பு என்று பெண்கள் நோன்பு  இருந்து அம்பிகையை வழிபடுவதும் நமக்குத் தெரியும். ஆனால், ஆண்களும் நோன்பு இருந்து பிள்ளையாரை வழிபட்ட வரலாறு உண்டு. கார்த்திகை மாதம் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. பிள்ளையார் நோன்பு கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் தொடங்கி, சதய நட்சத்திரத்தன்று நிறைவு பெறும்.

இந்த நோன்பை நகரத்தார் சமூகத்தினர் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் பின்னணியில் அமைந்த ஒரு சம்பவம்...

முற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார், வியாபாரம் செய்வதற்காக காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கடற்பயணம் மேற்கொண்டனர். வழியில் அவர்கள் சென்ற கப்பல் புயலில் சிக்கிக் கொண்டது. அன்று கார்த்திகை தீபத் திருநாள். புயலில் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி தங்கள் கடவுளான மரகதப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டார்கள். கப்பல் திசை மாறிச் சென்றுவிட்டபோதும், கடலில் மூழ்கிவிடவில்லை. கப்பலில் தாங்கள் உயிருடன்  இருந்த ஒவ்வொரு நாளும் விநாயகர் தங்களுக்குத் தந்த பரிசு என்று போற்றி, தங்கள் ஆடையில் இருந்து ஒரு நூலிழை எடுத்துச் சேகரித்து வந்தனர். 21-வது நாள் அவர்கள் ஒரு தீவில் கரை சேர்ந்தனர். அந்த நாள் கார்த்திகை மாதம் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் அமைந்த நாள். 

தங்களைக் கரை சேர்த்த விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக, தங்கள் கைவசம் இருந்த கருப்பட்டி, பொரியரிசி மாவு ஆகியவற்றில் சிறிது எடுத்து பிள்ளையார் பிடித்து, அந்தத் தீவில் கிடைத்த ஆவாரம்பூக்களை பிள்ளையாருக்குச் சூட்டி, 21 நூல் இழைகளை வைத்து, கருப்பட்டி, பொரி அரிசி மாவுக் கலவையையும் நைவேத்தியம் செய்து வழிபட்டனர். சில நாள்களில் வானிலை சரியானதும் அவர்கள் ஊருக்குத் திரும்பி நடந்தவற்றை தங்கள் மக்களிடம் கூறினர். அப்போது முதல் வருடம்தோறும் பிள்ளையார் நோன்பை கடைப்பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிள்ளையார் நோன்பின் பின்னணியில் மற்றுமொரு சம்பவமும் சொல்லப்படுகிறது...

முற்காலத்தில் தெய்வானை என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய தாயார் காலமாகி விடவே. தந்தை மறுமணம் செய்துகொண்டார். சித்தியாக வந்தவள் மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நடந்துகொண்டாள். ஒருநாள் அவள் குளிக்கச் செல்வதற்கு முன்பாக தன்னுடைய வைரத் தோடைக் கழற்றி வைத்துவிட்டுச் சென்றாள். திரும்பி வந்து பார்த்தபோது வைரத் தோடு வைத்த இடத்தில் இல்லை. தெய்வானைதான் அதைத்  திருடியிருக்கவேண்டும் என்று குற்றம் சாட்டினாள். மனம் வருந்திய தெய்வானை வீட்டை விட்டு வெளியேறி ஒரு பிள்ளையார் கோயிலில் தஞ்சம் புகுந்தாள். அங்கு எதுவும் உண்ணாமல் பட்டினி இருந்தாள். 

கோயில் பூசாரி கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன் பேரில் விநாயகருக்குப் படைத்த தேன், திணை, நெய் இவற்றை மட்டும் சிறிது எடுத்துக்கொண்டு நோன்பிருந்தாள். 21-வது நாள் காலை பிள்ளையார் சந்நிதியிலிருந்து எறும்புகள் சாரை சாரையாக வெளியில் வந்தன. அவள் உள்ளுணர்வு அந்த எறும்புகளைப் பின்தொடரச் சொல்லவே எறும்புகளைப் பின் தொடர்ந்து சென்றாள்.  அது தெய்வானையின் வீட்டில் ஓர் அறையில் முடிந்தது. அந்த அறையில்தான் தெய்வானையின் சித்தி வைரத் தோடை வைத்துவிட்டுப் போனாள். எறும்புகள் அந்த அறையில் இருந்த ஒரு பொந்துக்குள் சென்றன. அந்தப் பொந்தினை இடித்துப் பார்த்தால் உள்ளே காணாமல் போன வைரத் தோடு இருந்தது. சித்தி தன் தவற்றை உணர்ந்து தெய்வானையிடம் மன்னிப்பு கேட்டாள். தெய்வானை விரதம் இருந்த நாள்கள்தான் பின்னால் பிள்ளையார் நோன்பாக மாறியதாகவும் கூறுவதுண்டு.

கார்த்திகை தீபத் திருநாள் முடிந்த மறுநாள், இந்த நோன்பு தொடங்கும். 21 நாளும் புதிய ஆடைகளில் இருந்து நூல் இழைகளை எடுப்பர். பின் அதைக் குடும்ப உறுப்பினர்களின்  எண்ணிக்கைக்கு ஏற்றவாறு துண்டுகளாக்கிக் கொள்வர். நோன்புக்குக் கருப்பட்டி அப்பம் செய்வது  மிகவும் முக்கியம். அப்பம் சுடுவதற்கு முன்பாக சங்கு ஊதுவர். அப்பம் தவிர எள்ளுப் பொரி, வடை முதலிய 21 வகை பலகாரங்களும் செய்வது உண்டு. ஆவாரம் பூ பூஜையில் முதன்மை பெற்றிருக்கும்.

நோன்பு அன்று பூஜையறையில் பெரிய கோலம் இடுவர். நோன்பின் பூஜைகளைக் குடும்பத்தின் ஆண்கள் செய்வர். குடும்பத்தலைவர் தலைப்பாகைக் கட்டிக்கொள்வார். கருப்பட்டிப் பாகும் அரிசி மாவும் கலந்து அதில் பிள்ளையார் பிடிப்பார்கள். குடும்பத்தின் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு  பிள்ளையார் பிடித்து வைக்கப்படும். அதன் மேல் எடுத்துவைத்திருக்கும் இழைகளைக்கொண்டு நெய் விளக்கேற்றுவர். விளக்கின் சுடர் தணிந்ததும், அதன் சூடு ஆறுவதற்கு முன்பே அந்தப் பிள்ளையாரை குடும்பத்தலைவர் வாயில் போட்டுக்கொள்வார். அதே போல் பிற குடும்ப ஆண்களும் அதை உட்கொள்வார்கள். பின்பு சங்கு ஊதி நோன்பினை நிறைவு செய்வர். 

இந்த நோன்பை நகரத்தார் எங்கு இருந்தாலும் தவறாது கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு விநாயகப் பெருமானின் ஆசி கிட்டி எல்லா வளங்களும் சூழ்வதாக நம்புகிறார்கள். இன்று பிள்ளையார் நோன்பு. நாமும் வேழமுகத்து விநாயகனைத் துதித்து நல்லருள் பெறுவோம். 

மேலும் ஒரு தகவல்:  தீபாவளி, கார்த்திகை மற்றும் பொங்கலுக்குச் சீர் செய்யும் வழக்கம் போல பிள்ளையார் நோன்பிற்கும் சீர் செய்யும் வழக்கம் உண்டு. சில குடும்பங்களில் தங்க, வெள்ளி விநாயகரைச் செய்து தங்கள் வீட்டுப் பெண்களுக்கு வழங்கும் வழக்கமும் உண்டாம். அந்தப் பிள்ளையாரின் முதுகில் தங்கள் பெயரினைப் பதித்துத் தருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு