Published:Updated:

பாவை நோன்பு... மருத்துவமும் ஆன்மிகமும் சொல்வது என்ன?

பாவை நோன்பு... மருத்துவமும் ஆன்மிகமும் சொல்வது என்ன?
பாவை நோன்பு... மருத்துவமும் ஆன்மிகமும் சொல்வது என்ன?

ஓசோன் உலகைப் பாதுகாப்பது மட்டுமன்றி, மருத்துவத்தில் காயங்களை ஆற்றவும், இருதய, நுரையீரல், கண், தோல் மற்றும் மூட்டு நோய்களைக் குணப்படுத்தவும், வயோதிகத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

``மாஸானாம் மார்கசீர்ஷோ(அ)ஹம்..
ருதூனாம் குஸூமாகர..!"
(பகவத்கீதை 10:35)

`மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ 
என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணனால் முன்மொழியப்பட்ட மாதம் மார்கழி..!

நமது ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்...

அதில், ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவுப் பொழுதாகவும், அடுத்த ஆறு மாதங்கள் பகல் பொழுதாகவும் அமைந்திட, இந்தப் பகல் மற்றும் இரவுப் பொழுதுகளுக்குள் அதிகாலை வேளையான பிரம்ம முகூர்த்தமே இந்த மார்கழி மாதம்.

மார்கழி என்றவுடன், விடியலிலேயே விழித்தெழுந்து, வாசல் தெளித்து, பூக்கோலமிட்டு, உடலை ஊடுருவும் குளிரில் குளித்து, சில்லென்ற பனிக்காற்றில் வேகநடை நடந்து, வழி முழுவதும் மனனமாக உள்ள திருப்பாவை பாசுரங்களைப் பாடி, திருக்கோயிலுக்குச் சென்று, பரந்தாமனைத் தரிசித்த பிறகு,  தீர்த்தப் பிரசாதத்துடன் இனிதே தொடங்கும் காலை வேளைகள் நினைவில் வருகிறதல்லவா?
பெண்களுக்கு இதனோடு பாவை நோன்பும் சேர்த்தே அல்லவா நினைவில் வரும்.!

பாவை நோன்பு என்பது உண்மையில் கன்னிப் பெண்களுக்கானது. தனக்கு ஏற்றார்போல் வாழ்க்கைத் துணையை அடையவும், தனது மனதிற்கேற்றார் போல் ஒரு வாழ்க்கை அமையவும், கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.

பக்தியின் மிகுதியால், தன்னையும் ஆயர்பாடியில் பிறந்த ஒரு பெண்ணாக பாவித்து, தான் மிகவும் நேசித்த கடவுளான கண்ணனையே தன்னுடைய கணவனாக அடையவேண்டி, பாவை நோன்பு மேற்கொண்டு ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை. 
பன்னிரண்டு ஆழ்வார்களில், ஆண்டாள் மட்டுமே பெண் என்பதால், மற்ற ஆழ்வார்களுக்கில்லாத சிறப்பாக, கண்ணன் மீது கொண்ட பக்தியை அவளால் காதலாகவும் வழங்க முடிந்தது.

யாரிந்த ஆண்டாள்..?

இவள், யாரை ஆண்டாள்..?

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானுக்கு மாலை தொடுக்க வேண்டி, தான் வளர்த்து வந்த மலர்த்தோட்டத்தில், பெரியாழ்வார் பூப்பறிக்கச் சென்றபோது துளசிச்செடியின் கீழே கிடைத்த குழந்தைதான் ஆண்டாள்.

பெரியாழ்வார் அந்தக் குழந்தையை எடுத்து `கோதை’ எனப் பெயரிட்டு வளர்க்க, குழந்தைப் பருவத்தில் தந்தையிடம் கண்ணனின் கதைகளைக் கேட்டுக்கேட்டு வளர்ந்த கோதையோ, கண்ணன் மீது அபரிமிதமான அன்பும், காதலும் கொண்டு அவனையே தனது கணவனாகவும் நெஞ்சில் ஏற்கிறாள்.

தினந்தோறும் பெரியாழ்வார், பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சூடி, ``இந்த மாலைக் கண்ணனுக்கு அழகாக இருக்குமா... இதைத் தானும் சூடி, அவனருகே நின்றால் இருவருக்கும் பொருத்தமாக இருக்குமா...' என்று அழகுபார்த்த பின்னரே ஒவ்வொரு நாளும் மாலையைக் கடவுளுக்கு கொடுத்தனுப்புகிறாள்.

ஒருமுறை அதனை நேரில் கண்ட பெரியாழ்வார், மகளைக் கோபித்துக்கொண்டு மறுநாள் கோதை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு செல்கிறார். ஆனால், கடவுளோ அந்த வெறும் மாலையை மறுத்து, ``அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு ஏற்றது. அதை எடுத்து வாருங்கள்..” என்று பெரியாழ்வாரின் கனவில் தோன்றி கட்டளையிட, அன்று முதல் `சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும்’ ஆகிறாள் கோதை.

ஆம், அவள்தான் இந்தக் கோதை ஆண்டாள். அந்த திருவரங்கனையே அவள் தனது பக்தியால் ஆண்டாள். அவள் அருளிச்சென்ற திருப்பாவை முப்பதும், வாழும் வாழ்க்கைக்கு ஒரு தனி அர்த்தத்தை ஏற்படுத்துவதோடு, ஆங்காங்கே அழகிய அறிவியலையும், அறம் சார்ந்த நெறிமுறைகளையும் தாங்கியிருக்கிறது.

திருப்பாவைப் பாடல்களை பெண்கள் அதிகாலையில் பாடியபடி பரந்தாமனை வழிபட்டு பாவை நோன்பு மேற்கொண்டு வந்தனர் என்றாலும் `ஏன் குளிர் காலத்தில், மார்கழி மாதத்தில் தொடங்கப்பட்டது இந்தப் பாவை நோன்பு' என்பதற்குக் காரணம் இருக்க வேண்டுமல்லவா?

இந்தக் கேள்விக்கு ஓசோனைக் கைகாட்டுகிறது அறிவியல்.

O2 என்ற ஆக்சிஜனைக் காட்டிலும் அதிக சக்தி மிகுந்த O3 என்ற ஓசோன், காற்று மண்டலத்தின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் stratosphere என்ற ஓசோன் வளியில் காணப்படுகிறது. இந்த ஓசோன், உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை, வராமல் வடிகட்டி ஒளியை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது.

காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும் இந்த மாசுகளற்ற ஓசோன், சூரியனுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதுடன், விடியற்காலை வேளையில் வேக நடைபயிலும்போது, நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியும், சரும நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது.

ஓசோன் உலகைப் பாதுகாப்பது மட்டுமன்றி, மருத்துவத்தில் காயங்களை ஆற்றவும், இருதய, நுரையீரல், கண், தோல் மற்றும் மூட்டு நோய்களைக் குணப்படுத்தவும், வயோதிகத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஓசோன், புற ஊதாக் கதிர்களை வடிகட்டி அனுப்புவது பற்றி ஓர் அழகிய புராணக் கதையும் உள்ளது. பாற்கடலின் அமுதத்தைக் கடைந்த பின், அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பங்கிடும்போது ஏற்பட்ட பிணக்கில் சூரியன் கோபம் கொண்டு, ``நான் ஓரிடத்தில் மட்டும் நின்று, இந்த உலகைச் சுட்டெரிப்பேன்.." என்கிறான். சூரியனைச் சமாதானப்படுத்த வேண்டி, பிரம்மா கருடனின் அண்ணனான அருணனை அழைத்து, ``சூரியனை ரதத்தில் உட்கார வைத்து, நீ முன்னால் நின்று ரதத்தை ஓட்டுவாயாக..!" என்று பணிக்கிறார். அன்று முதல், சூரியனின் வெப்பம் அருணனால் மட்டுப்பட வைக்கப்பட்டு உலகைச் சுட்டெரிக்காமல் ஒளியாக வெளிப்படலாயிற்று.

சூரிய ஒளி நேரடியாகப்படும்போது, நமது கண்ணுக்குத் தெரியாத புற ஊதாக் கதிர்கள் பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தீமை விளைவிக்கும் என்பதும், மனிதனுக்கு சருமநோய் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும் என்பதும் அவற்றை ஓசோன் மண்டலம் தடுத்துக் காக்கிறது என்பதும் இன்று நாம் அறிந்த விஞ்ஞான உண்மை.

அதை அன்றே உணர்ந்த நம் முன்னோர்கள், அழகியதொரு கதையின் மூலமாக ஓசோன் படலத்தை அருணன் என்ற பாதுகாவலனாக உருவகப்படுத்தி அனைவருக்கும் எளிதில் விளங்கும்படி எடுத்துக் கூறியுள்ளனர்.

இது மட்டுமல்ல… 

குளிர் காலத்தில், நமக்கு இயற்கையாகவே தூக்கமும், சோர்வும் சற்று அதிகமாகவும், வளர்சிதை மாற்றங்கள் (Basal Metabolic Rate) குறைவாகவும் உடலில் மாறும் என்பது அறிவியல் உண்மை. மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வைகறையில் நோன்பு நோற்கும்போது, மனித உடலுடன் இயைந்து விடுகிறது மார்கழி மாதக் குளிர்.

ஆக, உடலிலும், உள்ளத்திலும் சுறுசுறுப்பை அளித்து, வளர்சிதை மாற்றங்களை சீரமைத்திட நமது முன்னோர்கள் தொடங்கிய ஏற்பாடுதான், விடியலுக்கு முன்பே வேக நடையுடன் கூடிய மார்கழி நோன்பாகும்.

Jeremy Dean எழுதிய, `Making Habits Breaking Habits' என்ற நூலில் கூறப்பட்டுள்ளதுபோல, `எந்த ஒரு புதிய செயலையும், முழு மனதுடன் தொடர்ச்சியாக 21 நாள்கள் செய்யும்போது, அது முழுமையாகப் பழகிவிடுகிறது' என்பதையே பாவை நோன்பும் உறுதி செய்கிறது.

அடுத்த கட்டுரைக்கு