Published:Updated:

அன்பின் கண்ணனுக்கு எங்கிருந்து வந்தது பழிவாங்கும் எண்ணம்..?- திருப்பாவை-1

உண்மையில் தன்னைக் கொல்ல வந்த அரக்கர்களையெல்லாம் கொன்றொழித்தவன் கண்ணன். அவனை, நந்தகோபனின் கூரிய வேல்தான் காத்ததா என்ன?

அன்பின் கண்ணனுக்கு எங்கிருந்து வந்தது பழிவாங்கும் எண்ணம்..?- திருப்பாவை-1
அன்பின் கண்ணனுக்கு எங்கிருந்து வந்தது பழிவாங்கும் எண்ணம்..?- திருப்பாவை-1

மார்கழி உற்சவத்தின் முதல் நாள் இன்று.
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.."

-'இது குளிர் வீசும் மார்கழி மாதம்... நிறைந்த பௌர்ணமி மேலும் குளிர்விக்க, செல்வமும், செழிப்பும் நிறைந்த ஆயர்பாடிச் சிறுமிகளே... எழுந்து நீராடுங்கள். தனது கூர்மையான வேல் கொண்டு ஆயர்பாடியைப் பாதுகாப்பவன் நந்தகோபன். அவனுடைய அன்பு மனைவி யசோதை. இவர்கள் இருவரது மகனாகிய, இளஞ்சிங்கம் போன்ற கண்ணனைப் புகழ்ந்து பாடுவோம் வாருங்கள். அந்தக் கரிய நிறக் கண்ணனைப் புகழ்ந்து நாம் பாடப்பாட, நமது இசையைக் கேட்டு இவ்வுலகத்தினர் அனைவரும் வியக்கட்டும். சிவந்த கண்களையும், ஒளி வீசும் முகத்தையும் கொண்ட அந்த நாராயணனும், நமது இசையில் மயங்கி, பறை கொண்டு நம்முடன் ஆடிப் பாடட்டும்... வாருங்கள் தோழியரே..!"

கோதை, ஆயர்பாடிப் பெண்கள் அனைவரையும் பாட அழைப்பு விடுக்கும் மார்கழியின் முதல் நாள்! 
"கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்..”

மாடு மேய்க்கும் சிறுவன் கண்ணன். மாயக்காரன். அவனது தந்தை நந்தகோபனோ ஆயர்குலத் தலைவன்.  மாடு மேய்க்கும் அவனது கைகளில் மேய்க்கத் தடி இருக்கலாம். ஆனால், கூர்மையான வேல் என்கிறாளே கோதை... இங்கு வேல் எதற்கு..?
”தர்மம் அழிந்து, அதர்மம் எங்குத் தலை தூக்குகிறதோ, அங்கு மனித உருவில் அவதாரம் செய்வேன்” என்று பாடம் சொன்ன கண்ணன், கொடிய அரக்கனான கம்சனைக் கொல்ல தேவகியின் வயிற்றில் எட்டாவது குழந்தையாகப் பிறந்து, யசோதையிடம் வளர்கிறான். உலகனைத்தையும் காக்கும் கடவுளான கண்ணனுக்குத்தான் குழந்தைப் பருவத்தில், அரக்கனான கம்சனால் எத்தனை எத்தனை ஆபத்துகள்!

குழந்தை பசித்து அழுதால், "நான் பால் தருகிறேன்"  என்று தனது மார்பில் விஷம் தடவி வருகிறாள் பூதகி எனும் அரக்கி. குழந்தை தொட்டிலில் உறங்கினால், அவனைக் கொல்ல சகடாசுரன் என்ற அரக்கன் சக்கர வடிவில் காத்துக் கொண்டிருக்கிறான். குழந்தை தவழ்ந்தாலோ, புயல் வடிவில் புயலாசுரசன் குழந்தையை தூக்கிச் செல்கிறான். குழந்தை எழுந்து நடந்தாலோ பறவை வடிவில் பகாசூரனும், பாம்பு வடிவில் அகாசூரனும், கண்ணனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

’இன்னும் எத்தனை எத்தனை ஆபத்துகள் இந்தக் குழந்தைக்கு நேரிடுமோ?’ என்று மனம் பதைக்கும் தந்தை நந்தகோபன், தன் மகன் கண்ணனைக் காக்க வேண்டியே மேய்க்கும் தடியை விட்டெறிந்து, கூரிய வேலை ஏந்திக் காவல் காத்து நிற்கிறாராம்.

உண்மையில் தன்னைக் கொல்ல வந்த அரக்கர்களையெல்லாம் கொன்றொழித்தவன் கண்ணன். அவனை, நந்தகோபனின் கூரிய வேல்தான் காத்ததா என்ன? உலகத்தையே காக்கப் பிறந்த கண்ணனை, தான் காப்பதாக நினைத்து தனது கைகளில் கூர்மையான வேலை ஏந்தி நிற்கிறான் கடமை மிகுந்த தந்தையான நந்தகோபன்.

உலகனைத்திற்கும் படியளந்து, பசியாற்றும் கண்ணன், தனது பக்தர்கள் மனமுவந்து படைப்பதை அவர்களின் மனம் கோணாமல் ஏற்றுக்கொள்வதைப் போலவே தனது தந்தையின் அன்பையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறான். பக்தர்களின் மனம்கூட கோண விரும்பாத கண்ணன், தனது தந்தையின் மனம் கோணவா விரும்புவான்? யோசித்துப் பார்த்தால், இதுபோல எத்தனைக் கேள்விகள் தோன்றுகின்றன?

தனது தங்கை தேவகியின் எட்டாவது குழந்தையால்தான் ஆபத்து என்றால், கம்சன் ஏன் மற்ற எல்லாக் குழந்தைகளையும் கொல்ல வேண்டும்? குழந்தைகளைக் கொல்வதற்கு பதிலாக தேவகியைக் கொன்றிருந்தாலே கம்சன் தப்பித்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை? 
கம்சன் கொல்கிறான் என்று தெரிந்தும் தேவகி ஏன் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை..? ஏன் அவதாரக் குழந்தை கண்ணனுக்கு அற்ப மனிதர்கள்போல பிறப்பிலிருந்தே பழிவாங்கும் எண்ணம் தோன்றியது..? கடவுளாக இருந்தும், கண்ணன் தனது தாய்மாமனான கம்சனை ஏன் கொல்ல வேண்டும்… திருந்தச் செய்திருக்கலாமே?

இப்படிப் பல கேள்விகள் இருந்தாலும், பதிலும் அங்கேயே கிடைக்கிறது. தன் தங்கை மேலிருந்த பாசத்தால் தேவகியைக் கொல்லாத கம்சன்தான், தனது உயிர் மேலிருந்த ஆசையால் தேவகியின் குழந்தைகள் ஒவ்வொன்றையும் பிறந்ததுமே சுவற்றில் அறைந்து கொன்றானாம்.

எட்டாவது குழந்தைதானே சாகவேண்டும், மற்ற குழந்தைகளை விட்டுவிடுவான் என்ற நம்பிக்கை ஒவ்வொரு முறையும் பொய்க்க, சிறையை விட்டு வெளியே செல்லவும் முடியாமல் தான் பெற்ற குழந்தைகள் அனைத்தையும் சுவற்றில் அறைந்து கொன்ற ரத்தக்கறைகளையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அண்ணனேயானாலும் பழிவாங்கும் எண்ணம் தவிர வேறென்ன மனதில் இருந்திருக்கக் கூடும்..?

அப்படி எண்ணமெல்லாம் பழி வாங்கும் உணர்வு உச்சத்தில் இருக்கும்போது தரித்த கருவான கண்ணனுக்கும், அதே பழிவாங்கும் எண்ணம்தானே இருந்திருக்கும்..?

'மரபணுக்களுக்கும் நினைவுத் திறன் உண்டு' என்று கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மரபணுக்கள் செய்யாத தந்திரத்தை வாழ்க்கைமுறை தனியாக மாற்றியமைக்கக் கூடும் என்றும், அதற்கு 'Epigenetics' என்றும் சமீபத்தில் பெயரிட்டுள்ளனர்.
சிறைக்குள் தனது பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த தேவகிக்கு, தனது அண்ணனைப் பழிவாங்கும் மரபணுக்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றாலும், 'Epigenetics' என்ற தனது வாழ்க்கைமுறை மரபணுக்கள், கருவில் உருவானதால்தானோ என்னவோ, தனது தாய்மாமனைப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவதரித்தான் கண்ணன்.

கர்ப்ப காலத்தில் தாயின் உணர்வுகள் குழந்தையின் குணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு, கடவுளின் அவதாரமான கண்ணன் இப்படிப் பழிவாங்கும் எண்ணத்துடன் பிறந்ததைப் போலவே, அரக்கனின் மகன் அன்னையின் சாத்விக உணர்வுகளால் அஹிம்சாவாதியாய் பிறந்த கதையும் இருக்கிறது பாருங்கள்.

 தனது தமையன் இரண்யாட்சனைக் கொன்ற நாராயணனைப் பழிவாங்க பெருந்தவம் ஒன்றை மேற்கொண்டான் அரக்கன் இரண்யன். அவனது மனைவி கயாதுதேவி அந்தச் சமயத்தில் கருவுற்றிருந்தாள். அவளைக் கொன்றால், இரண்யனின் வம்சத்தை அழித்துவிடலாம் என்று இந்திரன், இரண்யனின் அரண்மனைக்கு வர, இந்திரனின் தந்திரத்தைத் தடுத்து கயாதுதேவிக்கு தனது குடிலில் அடைக்கலம் தந்தார் நாரத முனிவர்.

அவளுக்கு ஸ்ரீமன் நாராயணனின் மந்திரத்தையும், நாராயணனின் கதைகளையும் நாரத முனிவர் எடுத்துச் சொல்ல, கருவிலேயே அதைக் கேட்டு வளர்ந்த குழந்தையான பிரகலாதன், பிறந்தது முதலே, 'ஸ்ரீமன் நாராயணனே தனது கடவுள்' என்றும், 'தூணிலும், துரும்பிலும் இருக்கும் தனது கடவுள் தன்னைக் காப்பாற்றுவான்' என்றும் தீர்க்கமாக நம்பியதோடு, தனது தந்தையை எதிர்க்கத் துணிந்ததும் கருவறையில் கற்றுக்கொண்ட பாடத்தினால்தான்!

அதனால்தான், கர்ப்ப காலத்தில் 'நல்லதையே பார்,  நல்லதையே கேள், நல்லதையே பேசு, நல்லனவற்றை நினை' என்று சொல்கிறார்கள். தற்போதைய மருத்துவ ஆராய்ச்சிகளும், இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. மேலும் "கடவுள் தனது பக்தர்களை எப்பொழுதும் காப்பார்..! கொடியவர்கள் எப்படியும் தண்டிக்கப்படுவார்கள்..!" என்ற உண்மையை உறுதிப்படுத்தவே, கண்ணன் மனிதனாக அவதரித்து தனது பக்தர்களுக்குத் துன்பம் விளைவித்த அரக்கன் கம்சனை கொல்லவும், வினை விதைத்தவன் அதற்குண்டான விளைச்சலை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்று உலகுக்கு உணர்த்தவும் என்றே நினைக்கத் தோன்றுகிறது..!

"கம்சனைக் கொல்லும் நோக்கத்துடன் பிறந்திருந்தாலும் கருணையும் காதலுமாக வளர்ந்தவன் அல்லவா என் கண்ணன். அந்தக் கண்ணனை, கார்மேக வண்ணனை, அன்புடனும் பக்தியுடனும் காதலுட னும் சரணடைந்தால் 'மோட்சம்' என்ற பறையை நமக்குத் தருவான்..!

'மாதங்களில் நான் மார்கழி' என்றவனை, நாடிவந்தோர் அனைவரையும் மனம் குளிர வைத்திடும் நாராயணனை, காலம் கடக்குமுன்னே நாமும் கைகூப்பி வணங்குவோம் வாருங்கள் தோழியரே.."

என்று கூறி தனது முதல் நாள் நோன்பினை மார்கழி முழு நிலவன்று தொடங்குகிறாள் கோதை..!