Published:Updated:

குணங்களையும் உணவுகளையும் மூன்றாகப் பகுக்கும் ஆண்டாள்! திருப்பாவை-2

குணங்களையும் உணவுகளையும் மூன்றாகப் பகுக்கும் ஆண்டாள்! திருப்பாவை-2
குணங்களையும் உணவுகளையும் மூன்றாகப் பகுக்கும் ஆண்டாள்! திருப்பாவை-2

மனிதன் தோன்றும்போதே அவனுடன் சத்வ (சாத்விகம்), ரஜோ (ராஜச) தமோ (தாமச) என்ற முக்குணங்களும் தோன்றியதாம். சாத்விகம் என்ற சத்வ குணம் பரிசுத்தமானது.

"வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்..!"

-"திருப்பாற்கடலில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடிகளைச் சென்றடைவதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய பாவை நோன்பின் வழிமுறைகளை எல்லாம் கேளுங்கள் ஆயர்பாடிப் பெண்களே!

நாம் அனைவரும் அதிகாலையில் எழுந்தவுடன் நீராடுவோம். கண்ணுக்கு மை, கூந்தலுக்கு மலர்கள் என எந்த அலங்காரமும் இந்த நோன்புக் காலத்தில் நமக்கு வேண்டாம். நெய், பால் ஆகிய உணவு வகைளையும் உண்ண வேண்டாம். தீய செயல்களையும், தீய சொற்களையும் மனதால் கூட நினைக்க வேண்டாம். அதோடு துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் நம்மால் இயன்றவரை தர்மம் அனைத்தும் செய்வோம். இப்படி புறத்தூய்மை, அகத்தூய்மையுடன் நோன்பு மேற்கொண்டு, பரந்தாமன் புகழைப் பாடினால் கடவுளின் திருவடியை அடைய முடியும், வாருங்கள்” என்று தோழியருக்கு அழைப்பு விடுக்கிறாள் கோதை..!

 "நாட்காலே நீராடி” 

என ஏன் அதிகாலையில் கோயிலுக்குச் செல்லத் தோழியரை அழைக்கிறாள் கோதை..?

இன்னும் சிறிது நேரம் உறங்கி, நன்கு விடிந்தபின் சென்றால் என்ன.. அல்லது முன்பகலில், கோயிலுக்குச் சென்றால்தான் என்ன..? போதாதற்கு, விரதம் என்றாலே பாலும், பழமும் மட்டும்தானே ஆகாரம் நமக்கு... ஆனால், கோதையோ 'நெய்யுண்ணோம்... பாலுண்ணோம்...' என்கிறாளே, எதற்காக..? 
"நாட்காலே நீராடி.." என நோன்பினை வரையறுக்கிறாள் கோதை.

மனிதன் தோன்றும்போதே அவனுடன் சத்வ (சாத்விகம்), ரஜோ (ராஜச) தமோ (தாமச) என்ற முக்குணங்களும் தோன்றியதாம். சாத்விகம் என்ற சத்வ குணம் பரிசுத்தமானது. இறைமை, ஒழுக்க நெறி, ஞானம், போன்றவற்றின் மீது பற்றுதலை உண்டாக்குவது. ரஜோகுணம் என்ற ராஜச குணம், இறுமாப்பு மற்றும் பேராசையால் ஏற்படும் நிலை. தமோகுணம் என்ற தாமச குணமோ, ஞானமில்லாத சூனிய நிலையாகும். 
இவற்றுக்குள் கோபதாபங்கள், காம மோகங்கள் இல்லாமல் நற்சிந்தனைகளுடன் இருக்கும்  சாத்விக நிலைதான், வீடுபேறு என்ற இறைவனை அடைவதற்கு ஏற்ற குணமாகும். இது எப்படி என்பதற்கும் அழகிய கதை ஒன்று இருக்கிறது நமது புராணங்களில்.
'ஒருமுறை, விஷ்ணு பகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதுகளி லிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். மது என்பவன் ரஜோ குணத்தின் மொத்த உருவம். கைடபன் என்ற அசுரன், தமோ குணத்தின் உருவகமாக விளங்குபவன். இவர்கள் இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். இவர்கள் இருவரின் அராஜகம் உச்சத்தில் இருந்த ஒரு சமயத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களையும் அபகரித்துக் கொண்டனர்.  

பிரம்ம தேவனும், மற்ற தேவர்களும் பகவானிடம் முறையிட,  சாத்விக குணத்தின் தாயகமான நாராயணன், ரஜோ குணமான மதுவையும் தமோ குணமான கைடபனையும் அழித்து பிரம்ம தேவன் தொலைத்த வேதங்களையும் மீட்டுத் தந்தாராம்.

போரில் தோற்ற அசுர சகோதரர்கள் இருவரும் பகவானைச் சரணடைந்து, அவரிடம்,  'நாங்கள் தங்களின் சக்தியால் உருவானவர்கள். இனி, தங்கள் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத் திலேயே வாசம் செய்யும் வரத்தை தாங்கள் தரவேண்டும்..." என்று வேண்டிக்கொள்ள, அதனை ஏற்ற திருமால் மார்கழி வளர்பிறை ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்குவாயிலைத் திறந்து, அதன் வழியாக வைகுண்டத்திற்குள் மது கைடபரை அழைத்துக் கொண்டாராம்..

நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் இதுதான். மனிதனின் இவ்வாழ்வுக்கும், மறுவாழ்வுக்கும் அத்தியாவசியமான சத்வ குணம் உறங்க ஆரம்பித்தால், ரஜோ குணமும் தமோ குணமும் உச்சம் பெற்றுவிடும். அதே சத்வ குணம் விழிப்படைந்துவிட்டால் ரஜோ குணமும், தமோ குணமும் தாம் இருக்குமிடம் தெரியாமல் சத்வ குணத்துடன் ஐக்கியமாகிவிடும்.

அதேபோல, சத்வ, ரஜோ,  தமோ என்ற இந்த மூன்று குணங்களும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு பொழுதில் மட்டும் உச்சம் பெறுமாம். உதாரணமாக,  அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக (4 - 4:30 மணியளவில்) சாத்விக குணம் ஆதிக்கத்தில் இருக்கும். இந்தநேரத்தில் நாம் படிப்பது, பூஜை செய்வது ஆகிய நல்ல காரியங்களைச் செய்தால் அதற்கான பலன்களை முழுமையாக அடையலாம்.
பகல் பொழுதில், ரஜோ குணம் உச்சத்தில் இருக்கும். அந்த நேரங்களில் நம் மனதை வேலை, முயற்சி, உற்சாகம், வெற்றி என்று திருப்புவோமேயானால், நம் மனம் நம்முடைய இலக்குகளை நோக்கி நம்மைத் தொடர்ந்து ஓட வைக்கும். இரவில் தமோ குணம் தலைதூக்கும். சோம்பல், அசதி, ஓய்வு, மயக்கம் போன்ற தமோ குணங்கள் தூங்கும் நேரத்தில் நம்மை ஆட்கொள்ளும். 

மேலோட்டமாகப் பார்த்தால், இது ஏதோ அந்தக் காலத்தில் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்டது போல் இருந்தாலும், ஒருவிதத்தில் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடிகாரம் கொண்டு ஒருநாள் என்பதைப் பகல் - இரவு என்ற பொழுதுகளாகவும், காலை, மதியம், இரவு என்ற வேளைகளாகவும் நாம் பிரிப்பதைப் போலவே நமது உடலுக்குள் ஓடிக்கொண்டி ருக்கும் 'பயலாஜிக்கல் க்ளாக்' என்ற  உயிர்க் கடிகாரம், உடலின் அனைத்து இசைவுகளையும் ஹார்மோன்கள் மூலமாகக் கட்டுப்படுத்துகின்றது. 

தூக்கம், விழிப்பு, ஓட்டம், ஓய்வு, வளர்ச்சி, வளர்சிதை மாற்றங்கள் போன்ற அதிமுக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நம் உடலின் 'சர்காடியன் ரிதம்' என்ற உடல் இசைவுக்கு ஏற்றபடிதான் அமைகின்றன. பகல் பொழுதின் பதற்ற ஓட்டங்களுக்கு உதவியாக நிற்பது 'கார்டிசால்' என்ற ரஜோகுண ஹார்மோன் என்றால், இரவின் தமோ குணமான தூக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது 'மெலடோனின்' என்ற ஹார்மோன்.  இவற்றை நிர்வகிக்கும் உடல் கடிகாரமானது, இரவில் மெலடோனினை சுரக்க வைத்து நம்மை ஆழ்ந்து உறங்க வைப்பதுபோலவே, விடியற்காலையில், அதே மெலடோனின் சுரப்பைக் குறைத்து, சாத்விகமான விழிப்புநிலை ஏற்பட உதவுகிறது. 

'காலை எழுந்தவுடன் படிப்பு,  மாலை முழுவதும் விளையாட்டு'  என்று பாரதி பாடியதும், 'நாட்காலே நீராடி..' என்று ஆண்டாள் அதிகாலையில் ஆண்டவனைத் தொழ அழைப்பதும் பார்க்க ஒன்றே போல் இருப்பதுடன், அவை அறிவியல்பூர்வமான உண்மை என்பதும் இப்போது உறுதியாகிறது. 

நாளுக்கும் பொழுதுக்கும் நம் குணத்துக்கும் எப்படித் தொடர்பிருக்கிறதோ, அதே போல நாம் உண்ணும் உணவுக்கும் நம் உணர்வுக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது அறிவியல்..

 "நெய்யுண்ணோம் பாலுண்ணோம்.." என்று நோன்பில் கோதை இவற்றைத் தவிர்க்கச் சொன்னதும் கூட இதே காரணத்தினால்தான். உணவு என்பது நம் உடலை வளர்ப்பதற்கு மட்டுமல்ல. நமது உள்ளத்தை வளர்த்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்க வேண்டும். நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளும் சுவைகளும் கூட நமது குணங்கள் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் வரையறுத்திருக்கிறார்கள். உணர்ச்சிகளைத் தூண்டும் உப்பு, இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு ஆகியனவும், பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் நெய் ஆகியனவற்றை ரஜோ உணவு வகைகளாய்ப் பிரிக்கிறார்கள். மாமிசம், முட்டை, மீன் ஆகியன தாமச உணவுகள் வகையறாவில் வருகின்றன.  பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பதப்படுத்தப்படாத பால், பயறு வகைகள் ஆகியன சாத்விக உணவு வகைகளாம்.
ஆகவே, ஆயர்பாடிச் சிறுமியரிடம் சாத்விக நிலையை அடைய அதிகாலையில் விழித்து, குளித்து, பால், நெய் போன்றவற்றைத் தவிர்த்து விரதத்தை மேற்கொள்வோம் என்று பாவை நோன்பை வரையறுக்கிறாள் கோதை. 

பாலும் நெய்யும் தவிர்த்து நாம் விரதம் இருப்பது சுலபம். ஆனால், பாலும் மோரும் விற்பதையே தொழிலாகக் கொண்ட ஆயர்களுக்கு அது எவ்வளவு கஷ்டம் என யோசித்துப் பாருங்கள். அப்படி ஒரு சுவையற்ற உணவு வேண்டாம் எனத் தோன்றவும் வாய்ப்பிருப்பதால்தான் 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்பதை அழுத்திக் கூறுகிறாள் கோதை.
 

அடுத்த கட்டுரைக்கு