
நிலப் பிரச்னைகள் தீரும் நிம்மதி பிறக்கும்! - மேல்பொதட்டூர் தரணி வராகர் தரிசனம்
இறைவனின் அவதாரங்களில் வராக அவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. மற்ற அவதாரங்கள், பூமியில் தர்மத்தை மீட்டெடுக்க நிகழ்ந்தவை எனில், வராக அவதாரமோ பூமியையே மீட்டெடுக்க நிகழ்ந்தது!
இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டெடுத்த வராகப் பெருமானிடம் அளப்பரிய பக்தி கொண்டிருந்தார் சாளுக்கிய மன்னர் இரண்டாம் நரசிம்மராயர். அவரது பக்தியை முன்னிட்டு வராகப் பெருமான் நிகழ்த்திய லீலையின் பலனாக, நாம் இந்த பூவுலகில் தரிசித்து வழிபட ஓர் அற்புதத் தலம் ஏற்பட்டது.
அதுதான், திருத்தணிக்கு அருகில் அமைந்திருக்கும் மேல்பொதட்டூர் பேட்டை எனும் திருத்தலம். இங்கே, அருள்மிகு பூமிதேவி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு தரணி வராக சுவாமி.

வராகப் பெருமான் நிகழ்த்திய லீலை
மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இரண்டாம் நரசிம்மராயரின் ஆட்சிக் காலம், தொண்டைமண்டலத்தில் சைவமும் வைணவமும் தழைத்துச் செழித்திருந்த காலம்.
மன்னருக்கு வேட்டையில் பிரியம் அதிகம். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்தார். வேட்டை மும்முரத்தில், மாலை மயங்கி இருள் படரத் தொடங்கியதை அரசர் கவனிக்கவில்லை. எனவே, அன்று இரவு காட்டிலேயே கூடாரம் அமைத்துக்கொண்டு மன்னரும் பரிவாரங்களும் தங்கினர்.
இயற்கை எழில் சூழ்ந்த காட்டுப் பகுதியில், நறுமண மலர்களின் வாசத்தில் தோய்ந்து வந்த தென்றலின் சுகமான ஸ்பரிசத்தில் லயித்திருந்தார் மன்னர். அப்போது அவரின் பார்வையில் ஒரு காட்சி தென்பட்டது.
வேட்டை நாய் ஒன்று ஒரு முயலைத் துரத்தியது. உயிர்ப்பிழைத்தால் போதும் என்று முயல் அதிவேகமாகப் பாய்ந்தோட, வேட்டை நாயும் வேகமாக முயலைத் துரத்திச் சென்றது. அதைப் பார்த்த மன்னரின் மனதில், என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. எனவே, தனது குதிரையில் ஏறி வேகமாகப் பின்தொடர்ந்தார்.

வேட்டைநாயின் வேகத்துக்கு முயலால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓர் இடத்தில் களைப்புற்று நின்றுவிட்டது. பின்னர் அது என்ன நினைத்ததோ தெரியவில்லை... அருகிலிருந்த புற்றினை மூன்று முறை வலம் வந்தது. பிறகு தனது முழு வலிமையையும் ஒன்று திரட்டி, வேட்டை நாயின் மீது பாய்ந்தது. முயலின் திடீர் ஆவேசத்தைக் கண்டு மிரண்ட வேட்டை நாய், வந்த வழியே ஓடிச் சென்றுவிட்டது.
இந்தக் காட்சியைக் கண்ட மன்னருக்கு வியப்பு தாளவில்லை. முயலின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் புரியாமல் திகைத்துப்போனவராகத் தன் குடிலுக்குத் திரும்பினார்.
அன்றிரவு அயர்ந்து உறங்கிய மன்னர், அர்த்த ஜாமத்தில் அதியற்புத கனவு ஒன்றைக் கண்டார். கனவில் மன்னருக்கு வராக மூர்த்தியாகக் காட்சியளித்த பகவான், ‘`மன்னனே, உன் வம்சத்தின் குலதெய்வமாக விளங்கும் எம்மை உனக்கு அடையாளம் காட்டவே இப்படி ஒரு லீலையை நிகழ்த்தினோம். முயல் வலம் வந்த புற்றினை அகற்றி, என்னுடைய திவ்யதரிசனம் காண்பாய்’’ என்று அருள்பாலித்தார்.
தன் இஷ்ட தெய்வமான வராகப்பெருமானின் கருணைத்திறம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த மன்னர், பொழுது புலர்ந்ததும் காவலர்களின் உதவியுடன் புற்று மண்ணைப் பயபக்தியுடன் அகற்றினார். தங்கள் பகுதியில் மன்னர் முகாமிட்டிருப்பதை அறிந்த அக்கம்பக்கத்து கிராம மக்களும் நடைபெறவிருக்கும் அதிசயத் தைக் காணத் திரண்டு வந்துவிட்டனர்.

புற்றைத் தோண்டியதும் அவர்கள் கண்ட காட்சி அதியற்புதம்!
அருள்மிகு பூமிதேவியை வாஞ்சையுடன் அணைத்திருக்கும் கோலத்தில், நான்கு திருக்கரங் களுடன் சங்கு சக்கரதாரியாக அர்ச்சா ரூபத்தில் திருக்காட்சி தந்தார் வராகப் பெருமான்! இரண்யாட்சனிடமிருந்து பூமியை மீட்டு வந்த வராகப் பெருமான், கலியுகத்தில் தங்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் அர்ச்சாரூபமாக வெளிப்பட்டதை எண்ணிச் சிலிர்த்தார்கள் மன்னனும் மக்களும். வராகப் பெருமானுக்கு, மனமுவந்து மிகப் பிரமாண்டமாக ஒரு திருக் கோயிலை நிர்மாணித்தார் மன்னர்.
சா்வமங்கள சொரூபன்!
இரண்யாட்சனை ஸ்வாமி வதம் செய்தார் அல்லவா. அதன்பிறகும் அவர் உக்கிரம் குறையாமல் இருப்பதைக் கண்ட தேவர்களும் மகரிஷிகளும் மனம் வருந்தினார்கள்.
பூவுலகம் காத்த பூமகள் காந்தனை சாந்த மூர்த்தியாய், சந்திர வதனத்துடன், சர்வமங்கள சொரூபனாக சேவை சாதிக்கவேண்டும் என்று பிரார்த்தித்து, பாரிஜாத மலர்களால் அவரை அர்ச்சித்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய வராகப் பெருமான், சாந்த சொரூபனாக, செந்தூரப் பொட்டும், கஸ்தூரித் திலகமும் தரித்து, பூமிதேவித் தாயாரை ஆலிங்கனம் செய்த கோலத்தில், சர்வாலங்கார, சர்வாபரண பூஷிதனாகக் காட்சி அருளினார்.
அன்று தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அருளிய அதே திருக்கோலத்தில்தான் அர்ச்சா மூர்த்தியாக மேல்பொதட்டூர்பேட்டையிலும் அருளாட்சி செலுத்தி வருகிறார் வராகமூர்த்தி.

அன்று கோகுலத்தில் கொவ்வைச் செவ்வாய் திறந்து, அன்னை யசோதைக்குக் குவலயத்தைக் காட்டிய கோபாலன், இன்று இந்த மேல்பொதட்டூர் தலத்தில், குவலயம் காக்க எடுத்த வராக மூர்த்தியாக, கோடி சூர்யபிரகாசத்துடன் அருளும் திருக்கோலத்தைத் தரிசித்தால், முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் யாவும் விலகி ஓடும் என்பது உறுதி.
தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் இந்தத் தலத்துக் குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வராக மூர்த்தியை வழிபட்டு வந்தால், பூமி தொடர்புடைய பிரச்னைகள் நீங்கும், சனி தசை மற்றும் சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
மேலும், குடும்பத்துடன் சென்று அருள்மிகு தரணி வராகரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், இல்லம் செழிக்கும்; உங்கள் சந்ததியின் எதிர்காலம் சிறக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
- முன்னூர் ரமேஷ்
படங்கள்: தி.குமரகுருபரன்
உமா மகேஸ்வர தரிசனம்
பிற்காலத்தில் சிதிலமடைந்துவிட்ட திருக்கோயில், எம்பெருமானிடம் பக்தி கொண்ட அன்பர்களால் புனரமைக்கப்பட்டு, கடந்த 2009-ம் வருடம் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. மேலும், திருவிழாக் காலங்களில் இறைவன் வீதியுலா வருவதற்கு சேஷ வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகியவையும் பக்தர்களால் இந்தத் திருக்கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் நரசிம்மராயர் வைணவத்தையும் சைவத்தையும்
இரு கண்களாகப் போற்றியவர். அதற்கு நிதர்சன சாட்சியாக, அவரால் நிர்மாணிக்கப்பட்ட வராகப்பெருமான் கோயிலில், சிருங்கேரி பீடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட, ‘உமா மகேஸ்வரம்’ எனும் சிவலிங்கத் திருமேனியையும் பிரதிஷ்டை செய்திருப்பதைக் காணலாம்.
உங்கள் கவனத்துக்கு...
தலத்தின் பெயர்: மேல்பொதட்டூர்பேட்டை
இறைவன்: பூமிதேவி சமேத ஸ்ரீதரணி வராகப் பெருமான்.
பூஜைகளும் ஹோமங்களும்: பௌர்ணமியன்று சத்யநாராயண பூஜையும் திருவிளக்கு பூஜை யும் நடைபெறுகின்றன. மேலும் அவ்வப்போது ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், திருக்கல்யாண உற்சவம் ஆகியனவும் நடைபெறுகின்றன.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 4.30 முதல் 8 மணி வரை.
எப்படிச் செல்வது..?: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது மேல்பொதட்டூர். திருத்தணி, சோளிங்கர், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
தொடர்புக்கு: ஜெயகிருஷ்ணன் (அர்ச்சகர்) 94440 90396.