மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 18

சிவமகுடம் - பாகம் 2 - 18
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 18

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

ல்லும்பகலும் ஓயாது விழித்துக்கிடப்பதால் `தூங்கா நகரம்' என்று பெருஞ்சிறப்புப்பெற்றுவிட்ட மாமதுரை, அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக தனது ஆரவாரத்தை ஒட்டுமொத்தமாக தொலைத்துவிட்டிருந்தது.

உதயகாலச் சூரியன் கீழ்த்திசையிலிருந்து நகர்ந்து முன்னேறி, சிறிது சிறிதாக தன் தகிப்பை அதிகப்படுத்தியவண்ணம் மெள்ள வான்பரப்பை வியாபிக்கத் தொடங்கியிருந்தான். எப்போதும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டுவிடும் மதுரையின் கோட்டைக் கதவங்களும் அந்நேரம் வரை திறக்கப்படாமல் மூடியே கிடந்தன.

வழக்கமாக இந்த நேரத்தில் அந்த மாநகரின் நாளங்காடி வீதிகள் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்.இப்போதும் அங்காடிகள் திறந்தே இருந்தன என்றாலும், பொருள்கொள்வாரின்றி அவையாவும் அரவமற்றுத் திகழ்ந்தன. உள்ளே வேலையில்லை என்பதால், அக்கம்பக்கத்து வணிகர்கள் ஆங்காங்கே ஒன்றுகூடி வீதியோரத்தில் நின்றபடியும், அங்காடித் திண்ணைகளில் அமர்ந்தபடியும், அதிகச் சத்தம் எழாமல் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

அவ்வப்போது... உயரமான புரவிகளில், அகலமான பட்டைப் பரப்பைக் கொண்ட பெரும் வாள்களையும் இருமுனைகளைக் கொண்ட வேல்களையும் ஏந்தியபடி, வெகுஆகிருதியான காவல் வீரர்கள் தங்களைக் கடந்துசெல்லும்போது மட்டும், அவசர அவசரமாகக் கலைந்து செல்வதும், வீரர்களின் தலை மறைந்ததும் மீண்டும் ஒன்றுகூடி விவாதத்தைத் தொடர்வதுமாக இருந்தார்கள் வணிகர்கள்.

சிவமகுடம் - பாகம் 2 - 18

அவர்களின் அந்தச் செய்கையைக் கவனித்து விட்ட ஒன்றிரண்டு வீரர்கள், புரவியைத் திருப்பிக் கொண்டு வந்தார்கள். புரவியை விட்டுக் கீழே இறங்காமல், அதன் முதுகில் ஆரோகணித்தபடியே, மிரட்டும் தொனியில் - கர்ணக்கொடூரமான குரலில், வீதியிலிருந்து விலகிச் செல்லும்படி வணிகர்களை அதட்டிவிட்டு சென்றார்கள்.

அந்த அதட்டலுக்குப் பயந்து விலகுவதுபோல் விலகி, தத்தமது அங்காடிகளுக்கு ஓடிய வணிகர்கள்,  மீண்டும் ஒன்றுகூடினார்கள்; விட்டதிலிருந்து விவாதத்தைத் தொடர்ந்தார்கள்.

‘‘நான் சொன்னதுபோல விரைவில் போர் நிச்சயம். அதில் எந்த மாறுதலும் இல்லை.’’

‘‘எதைவைத்து அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்?’’

‘‘வேறென்ன வேண்டும்... வழக்கத்துக்கு மாறாக பகலிலும் மதுரையின் கோட்டைக்கதவுகள் மூடிக்கிடக் கின்றன என்றால், அதற்கு என்ன அர்த்தம்? இப்படி, ஒருபோதும் முன்னறிவிப்பின்றி பகல்பொழுதில் கோட்டை வாயில்களை மூடிவைத்தது கிடையாது தெரியுமோ? அதுதான் அப்படியென்றால், காலையில் முற்றம் தெளிக்க வந்த பெண்டுகளைக்கூட அதட்டியிருக்கிறார்கள். இதோ, இங்கே நம்ம கதியைப் பாரும்... இன்றைய வணிகத்துக்கு வழிதெரியாமல் தவிக்கவில்லையா? கோட்டை திறக்கப்பட்டால்தானே வெளியிலிருந்து நமக்குப் பண்டங்கள் வந்துசேரும். சரக்குகள் வந்தால்தானே வணிகம் நடக்கும்...’’

‘‘முதியவர்களைக்கூட வீதியில் நடமாட அனுமதி மறுக்கிறார்கள்!’’ - முதலாமவரை இடைமறித்து உள்ளே புகுந்து, அவர் பேச்சுக்கு வலுசேர்த்தார் மற்றொரு வணிகர். இதற்கிடையில், மூன்றாவதாக ஒருவர் பேச ஆரம்பித்தார்...

‘‘எனக்கொரு செய்தி கிடைத்தது...’’ என்றவர், மேற்கொண்டு பேசாமல், ஒரு கணம் மற்றவர்களின் முகங்களை உற்றுநோக்கினார்.  தான் சொல்லப்போவதை அவர்கள் நம்புவார்களா என்று நோட்டமிடும் தொனியிலிருந்தது அவரின் பார்வை. மற்றவர்களோ ஆர்வம் தாங்காமல் பரபரத்தார்கள்.

‘‘சொல்ல வந்ததைச் சொல்லிமுடியும். என்ன செய்தி கிடைத்தது?’’

‘‘சேர எல்லையில் சிறு போரே நடந்து முடிந்திருக் கிறதாம். அதுமட்டுமல்ல விஷயம்...’’

‘‘வெறு என்ன..?’’

‘‘அந்தப்போர் நடந்த தருணத்தில், நம் பாண்டிமா தேவியாரும் அங்கே இருந்திருக்கிறார். அவரைக் குறிவைத்தே சேரப்படை ஒன்று எல்லைப்புற கிராமத்துக்குள்  நுழைந்ததாகப் பேசிக்கொள்கிறார்கள்’’

``முடிவு என்னவானதாம்...?’’

சிவமகுடம் - பாகம் 2 - 18

‘‘வழக்கம்போல் வெற்றி நம் பக்கம்தான் என்றாலும், சேர எல்லையில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து கடும்கோபத்தில் இருக்கிறாராம் மன்னர்பிரான். அதேபோல், சேரனுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.’’

‘‘ஆக... நான் சொன்னதுபோல் விரைவில் போர் மூள்வது நிச்சயம். அதற்கேற்ப நாமும் தயாராகிக்கொள்ள வேண்டியதுதான்...’’

இங்கே இவர்கள் இப்படி பேசிக் கொண் டிருந்த அதேவேளையில், அந்த வீதியில் முனையிலிருந்த பிரமாண்டமான ஒரு கட்டடத் துக்குள் நுழைந்துகொண்டிருந்தான் புதியவன் ஒருவன்!

மகர அலங்காரத் தோரணங்களோடுகூடிய அழகிய முகப்பைப் பெற்றிருந்த அந்தக் கட்டடத்தின் தலைவாயிலின் உச்சியில் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது கயற்கொடி. அதுவே, அந்தக் கட்டடத்தின் சொந்தக்காரர் பாண்டிய அரசாங்கத்தில் பெரும் செல்வாக்கு பெற்றவர் என்பதை எடுத்துக்காட்டியது.

இதுபோன்ற கட்டடத்துக்குள் நுழையும் எவரும், முதற்கண் சிரம்தாழ்த்தி கயற்கொடிக்கு வீரவணக்கம் செலுத்துவது பாண்டிய தேசத்தின் வழக்கம். ஆனால் அந்தப் புதியவனோ கயற்கொடியை கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்லவேண்டும். அவசர அவசரமாக வந்தவன், முகப்பில் நின்றுகொண்டு இருபுறமும் முகத்தைத் திருப்பி நோட்டமிட்டான். அருகிலோ தூரத்திலோ எவரும் தன்னைக் கவனிக்க வில்லை என்பதை உறுதிசெய்து கொண்டபின், சட்டென்று உள்ளே நுழைந்தான்.

தோரணவாயில், தாழ்வார முற்றம் ஆகியவற்றைக் கடந்து மேலும் முன்னேற முயன்றவனை, அங்கிருந்த பாதுகாவலர்களின் வேல்கள் மறித்தன. மறுகணம், ‘‘ம்... அவனை உள்ளே விடுங்கள்’’ என்று உள்ளிருந்து கேட்டது கம்பீரமான கட்டளைக்குரல் ஒன்று.  உடன் வேல்கள் விலக, தன்னை வழிமறித்த வீரர்களின்மீது ஓர் ஏளனப் பார்வையை வீசிவிட்டு,  அவர்களைக் கடந்து உள்ளே நடந்தான் புதியவன். ஏறக்குறைய அந்தக் கட்டடத்தின் மைய மண்டபத்தை வந்தடைந்தவன், அங்கு குவிந்திருந்த முத்தாபரண பொக்கிஷங்களைக் கண்டு மலைத்துநின்றான். ஆம்! வாழ்வில் இப்படியோர் ஆபரணக் கிடங்கை அவன் கண்டதே இல்லை!

அதுவொரு முத்துக்கூடம். பாண்டியதேசத் தின் முத்துக்குவியல்கள்  சேகரிக்கப்படுவதும், வணிகமாவதும் கொற்கையில்தான் என்றாலும், மிக மிக அபூர்வமாகக் கிடைக்கும் முத்துகளும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்கூடிய புதிய முத்தாபரணங்களும் தலைநகருக்கு - இந்த முத்துக்கூடத்துக்கு வந்துசேரும்.

மாமன்னரின் பார்வைக்குப் பிறகு அவரின் கட்டளைக்கிணங்க அவை கருவூலத்துக்கோ அல்லது மீண்டும் வணிகத்துக்கோ அனுப்பப் படும். சில தருணங்களில், மாமன்னரால் தேர்வு செய்யப்படும் முத்தாபரணங்கள், அயல்நாட்டு மன்னர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் பரிசுப் பொருளாகவும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இந்த வகையில், ராஜாங்க முக்கியத்துவம் வாய்ந்த தலமாகி விட்டது இந்த முத்துக்கூடம். இங்கு ஒரு தவறு நிகழ்ந்தால், அது பெரும் ராஜதுரோகத்துக்குச் சமம் என்று அரசாணையே பிறப்பித்திருக்கிறார் கூன்பாண்டியர்!

இப்படியான தலத்துக்குள் வெகு எளிதாகப் பிரவேசிக்கும் வாய்ப்பு அந்தப் புதியவனுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இந்தக் கூடத்தின் தலைவர்தான். முத்துக்கூடத்தைப் பொறுத்தவரையிலும் சர்வாதிகாரம் படைத்தவர் அவர்; மன்னர் பிரானின் ஆணை அப்படி!

‘‘அற்பனே! வந்த விஷயத்தை மறந்துவிட்டு இப்படிச் சிலைபோல் நின்றால் எப்படி?’’

சிவமகுடம் - பாகம் 2 - 18

சிம்ம கர்ஜனையாய் ஒலித்த தலைவரின் வார்த்தைகள் உசுப்ப, தன்னிலைக்கு வந்தான் புதியவன். அவசர அவசரமாக அவரை வணங்கிப் பணிந்தவன். அவர் அனுமதியுடன் அருகில் சென்று  செவியில் ஏதோ ரகசியம் உறைத்தான். மறுகணம் அவரின் முகம் மலர்ந்தது. தொடர்ந்து அந்த மண்டபம் அதிரச் சிரித்தார் முத்துக்கூடத்தின் தலைவர். பிறகு, ஓரிரு விநாடிகள் தனக்குள் ஏதோ யோசித்தவர், தலையை ஆட்டி திருப்தியை வெளிப்படுத்திக்கொண்டார்.

பின்னர், புதியவனை எதிரிலிருந்த ஆசனத்தில் அமரச் செய்தவர், தான் குறுக்கும்நெடுக்குமாக நடந்தபடி, அவனிடம் மிகமுக்கியமான  விஷயங்களைப் பகிரத் தொடங்கினார்.

ஆனால் அவன் கவனமோ, முத்துக்கூடத்துத் தலைவரின் பெருஞ்சிரிப்பினால் சலனப்பட்டு, அந்த மண்டபத்துக் கூரை விட்டத்தின் விளிம்பிலிருந்து சட்டென சிறகடித்துப் பறந்துசென்ற பச்சைக்கிளியின் மீது லயித்துவிட்டிருந்தது.

அழகான அந்தக் கிள்ளையை அவன் பார்ப்பது, இது மூன்றாவது முறை!

ங்கே, முத்துக்கூடத்தின் தலைவர் புதியவனுடன் உரையாடலைத் தொடங்கிய நேரத்தில், கோட்டையின் முகப்பு வாயிலில் பெரிதாக ஒலித்தன விஜய பேரிகைகள். அடுத்து எக்காளங்களும் ஒலிக்க, மிகப்பெரிய ஓசையுடன் கோட்டையின் பிரதான வாயில்கள் திறந்துகொண்டன.

முதலில், சிறு படையணி சூழ பேரமைச்சர் குலச்சிறையாரின் புரவி உள்ளே நுழைந்தது. அவரைத் தொடர்ந்து கரும்புரவியும் பிரவேசித்தது.

அதேநேரம் மீண்டும் பேரிகைகள் ஒலிக்க, அரண் மனைச் சதுக்கத்திலிருந்து கோட்டை முகப்புக்கு  வந்து சேர்ந்தது பாண்டியப் பேரரசரின் பட்டத்து யானை. கரும்புரவியை எதிர்கொண்ட அந்தக் களிறு, தன் எஜமானரின் கட்டளைக்கிணங்க, புரவியிலிருந்தவர் தரையில் குதிப்பதற்குமுன், அவரைத் தன் துதிக்கையில் ஏந்திக்கொண்டது. ஆம்! பாண்டிய தேசத்தின் பேரரசியைத் தூக்கிச்சுமப்பதில் அதற்கு அப்படியொரு பேரானந்தம்! அதேநேரம், அந்தப் பேரரசியின் தோளினை நாடி பறந்து வந்தது அந்தப் பச்சைக்கிளி!

- மகுடம் சூடுவோம்...

சிவமகுடம் - பாகம் 2 - 18

மனம் உள்ளவன்...

விலங்குகளும் உண்கின்றன; உலாவுகின்றன; வம்சத்தை வளர்க்கின்றன. நாமும் அதைப்போலவே செய்கிறோம். ஆனால் விலங்கிலிருந்து மனிதன் உயர்ந்து நிற்பது, பக்தி எனும் உயரியச் செய்கையால்தான்.

ஒரு காட்டில் விலங்குகள் மாநாடு நடந்தது. அதில் பேசிய சிங்கம் ``விலங்குத் தோழர்களே, உயிர் வாழ்க்கைக்கு ஆடைகள் அவசியமா? முட்டாள் மனிதர்கள் அவசியமின்றி ஆடைகளுக்காக அதிக பணத்தைச் செலவழிக்கிறார்கள். அது கண்டிக்கத்தக்கது; வருந்தத்தக்கது'' என்று முழங்கியதாம்!

அதுபோலத்தான் `மனித வாழ்க்கைக்குக் கடவுள் வழிபாடு தேவையா' என்று கேட்கிறார்கள், சிலர். மானம் உள்ளவன் ஆடை உடுத்துவான்; மனம் உள்ளவன் ஆண்டவனை வணங்குவான்.

(வாரியார் சுவாமிகள் அருளியது)

- ஆர்.சி.சம்பத்

சிவமகுடம் - பாகம் 2 - 18

கிருஷ்ணார்பணம்!

ஆடு, கோழி, மீன்கள் போன்றவை மட்டுமல்ல, நாம் உணவாக உட்கொள்ளும் தானியங்களுக்கும் உயிர் உள்ளது. அதனால்தான் அவை முளைக்கின்றன. அதனால், எல்லா உணவுகளும் ஒருவகையில் உயிர்க்கொலையால் விளைவதுதான்!

`அப்படியானால் நாம் உண்ணவே கூடாதா, உண்டால் அது பாவமா' எனும் கேள்வி எழலாம்.

பகவான் கிருஷ்ணர் நமக்கு ஓர் உபாயம் சொல்லி உய்விக்கிறார். தயாரிக்கப்படும் உணவுகளை ஆண்டவனுக்கு அர்ப்பணித்தால், அது பிரசாதமாகிவிடுகிறது. பிறகு அதில் சிறிதளவு சிறிய ஜீவன்களுக்கு பங்களித்து உண்டால், எந்தத் தோஷமும் அண்டுவதில்லை. எதையும் `கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்திடாது.

- மூதறிஞர் ராஜாஜி