ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

பொருநையைப் போற்றுவோம் - சென்ற இதழ் தொடர்ச்சிஓவியர்: பத்மவாசன்

‘‘அகத்தியரின் தயையினால் இந்தத் தரணிக்குக் கிடைத்த பொக்கிஷம் தாமிரபரணி. அவளை நினைப்பது, தரிசிப்பது, அந்தப் புண்ணிய நதியில் நீராடுவது, தீர்த்தத்தைத் பருகுவது... இதில் ஒன்றைச் செய்தாலே போதும் பெரும்பேறு வாய்க்கும் என்பது அகத்திய முனிவரின் திருவாக்கு’’

எனத் தொடங்கி, சிவ-பார்வதி திருக்கல்யாண மகிமையோடு தாமிரபணியின் மகத்துவத்தையும்  ஸெளனகாதி முனிவர்களுக்கு விவரித்தார் ஸூதமாமுனி.

அந்த அற்புத திருக்கதையை தொடர்ந்து பார்ப்போம்.

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

அம்பிகை சூட்டிய தாமரை மாலை!

சிவ சித்தப்படி அவரின் திருக்கல்யாண ஏற்பாடுகள் மிக அற்புதமாக நடந்தேறின. மகாவிஷ்ணு-மகாலட்சுமியுடன் எழுந்தருளினார். அவருக்குப் பின்னால் ஸுநந்தன், நந்தன், விஸ்வக் சேனன் ஆகிய பரிவாரங்களும் வந்தனர். நான்முகன், சரஸ்வதிதேவியோடு வந்தார். சனகர் போன்ற சித்தர்கள் ஐய கோஷமிட்டபடி கூடவே வந்தார்கள். இந்திரன், குபேரன், வருணன், அக்னி, வாயு, தர்மராஜன் போன்றோரும் வந்துசேர, துருவன், சோமன், அனிலன் போன்ற அட்ட வசுக்களும் சூழ்ந்துகொண்டார்கள்.

சித்தர்களும், ஆதித்தர்களும், ருத்திரர்களும், ஏழுலக வாசிகளும், அதல, விதல, சுதல, ரஸாதல, தராதல, மகாதல ஆகிய பாதாள லோகங்களைச் சேர்ந்த  நாகங்களும் (இவை இடுப்பு வரை மனித உருவம் கொண்டவை), கங்கை முதலான நதிகளும், நாரதர் முதலான தேவரிஷிகளும், வசிஷ்டர் முதலான பிரம்ம ரிஷிகளும் குவிந்தனர்.

ஜொலிஜொலிக்க வந்த பரம்பொருள், அனைவரையும் தன் கருணைக் கண்களால் பார்த்தார். முறுவல் பூத்தார். அனைவரும் அந்தச் சொக்கநாதனின் அழகில் சொக்கித்தான் போனார்கள்!

ஏகபோக சக்கரவர்த்தி போல் வெள்ளை ஏருதேறி வந்த சர்வேஸ்வரனைப் பார்த்த கண்களை இமைக்க மறந்தனர். திறந்த வாயை மூட மறந்தனர். சுதாரித்துக்கொண்டோர் எழுப்பிய `ஐய ஐய சங்கர... ஹரஹர சங்கர...’ கோஷம் வானைப் பிளந்தது. வாத்தியங்கள் முழங்கின. வாழ்த்தொலிகள் நிறைந்தன. ஊர்ந்து சென்ற ஊர்வலம் ஹிமாலய பர்வதம் நோக்கி மெள்ள நகர்ந்து, ஊர்ந்து சென்றது.

கோடி சூரியப் பிரகாசம் கண்களைக் கூச வைத்தது. கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி ஓடோடி வந்தார் இமவான். சற்று ஒளியைக் குறைத்துக்கொண்ட எம்பெருமான் சிரித்தார்; அதுகண்டு மயங்கிப்போனார் பர்வதராஜன். ‘மாப்பிள்ளை... மாப்பிள்ளை... வாருங்கள் வாருங்கள்...’ என்றார். கைகளை கூப்பியபடி இறைவனுக்கு முதுகைக் காட்டாமலேயே உள்ளே அழைத்துச் சென்றார்.

மகாவிஷ்ணு, பிரம்மன், தேவர்கள், தேவதைகள், ரிஷிகள், முனிவர்கள் சகிதமாக மணிமயமான மண்டபத்துக்குள் நுழைந்தார் பரமசிவன். பர்வதராஜன் ஓடி ஓடி உபசரித்தான்; பாடிப் பாடிக் களித்தான். சாத்திரங்களில் சொன்னபடி, ஒன்றுவிடாமல் அப்படியே செய்தான்; அகமகிழ்ந்தான்.

அதேநேரம், மேனை என்பாள் உடன் வர, நாணம் மிகுதியாக, அன்ன நடையிட்டு மணவறை நோக்கி வந்தாள் பார்வதிதேவி. நவரத்தினங்கள் இழைத்ததும் பொன் உருக்கி வார்த்ததுமான அந்த மணவறையில் காத்திருந்தார், இந்த உலகை எல்லாம் கட்டிக் காக்கும் சர்வேஸ்வரன். மந்திரங்கள் ஒலிக்க, மேளங்கள் முழங்க, அக்னி மெள்ள ஒளிர்ந்து பின் ஓங்கி எழுந்தது; சுடர்கள் ஆனந்தக் கூத்தாடின.

பார்வதிதேவி தான் அணிந்திருந்த - ஸ்ரீபுரதேவி அளித்த தாமரை மாலையை எடுத்துப் பரமசிவனாரின் கழுத்தில் சூட்டினார். பரமசிவன், தன் கழுத்திலிருந்த மலர் மாலையை எடுத்து பார்வதியின் திருக்கழுத்தில் இட்டார். கந்தவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தேவதுந்துபிகளும், பேரிகைகளும், சங்குகளும் முழங்கின. `ஆஹா... ஆஹா...’ என்ற ஓசையும் அலை அலையாக ஒலித்தது. இந்தச் சந்தோஷத் தருணத்தில் - இந்த ஓசைகளையெல்லாம் மீறி ஆகாசவாணியின் குரல் கேட்டது.

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

ஆகாசவாணியின் வேண்டுகோள்

ஆரவாரம் அடங்க ஆகாசவாணி பேசினாள்.  ‘`இறைவா! அத்தனை பேரும் இங்கே கூடியிருப்பதால் தென் திசை, கனக் குறைவால் மேலே எழுந்திருக்கிறது. உயரே கிளம்பியதை உடனே சமப்படுத்தவேண்டும். துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் ஆபத்து. கருணைக் கடலான பரமேஸ்வரனே, அன்பின் உருவே, ஆவன செய்யவேண்டும் ஐயனே!’’ என்றது.

மகாதேவர் மலர்த்து சிரித்தார். அகத்திய முனிவரை அருகே அழைத்தார். ``கும்பஸம்பவ முனியே! இது, தாங்கள் சென்று முடிக்கவேண்டிய காரியம். தாங்கள், தங்களின் தர்மபத்தினியோடு தென்திசை நோக்கிப் புறப்படுங்கள். திருமணத்தைக் காண முடிய வில்லையே என்ற கவலை தங்களுக்கு வேண்டாம். திருக்கல்யாணம் தங்களுக்குத் தனியே காண்பிக்கப்படும். சென்று வாருங்கள்’’ என்று கூறியபடியே, பார்வதிதேவியால் தனக்குச் சூட்டப்பட்ட தாமரை மாலையை மெள்ள எடுத்தார்.

பின்னர், ``அகத்தியரே, இந்த மாலை சாதாரணமானது இல்லை. இது ஆதிபராசக்தியின் அருள் கடாட்சம் கொண்டது. பார்வதி தேவியின் திருக்கழுத்தையும், இப்போது என் கழுத்தையும் அலங்கரித்த இந்தத் தாமரை மாலையை தங்களிடம் அளிக்கிறேன். தங்களின் கரம்பட்டு அன்புப் பெருக்கில் நனைந்து, தென்னகத்துக்கே பெரும்பேறாக விளங்கப் போகிறது, இந்த மாலை. திருமணத்துக்கு மிக முக்கியமானது மாலையல்லவா! இந்த மாலை, என் திருமண மாலை. பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்று அந்தத் தாமரை மாலையை அகத்தியரிடம் நீட்ட, குறுமுனியும் இரு கைகளையும் ஏந்திப் பெற்றுக்கொண்டார். அருகில் இருந்த லோபாமுத்திரையும் கண்களில் ஆனந்தம் பொங்க பரமனை வணங்கினார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.

மலர் மாலை நதி மங்கையானது

அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே - அந்தத் தாமரை மாலையானது, ஓர் அழகிய சின்னப் பெண்ணாக உருக்கொண்டது. தாமிரம் போன்ற சிவந்த மேனி துலங்க, அதிலே தங்க, வைர, வைடூரிய நகைகளும் மின்னின. அவளது மங்கல அழகிலே அனைவரும் மயங்கினர். தவசிரேஷ்டர்கள் உண்மை புரிந்து மகிழ்ந்தனர்.

அவள் சிற்றோடை போல் தவழ்ந்து வந்து பரமசிவன், பார்வதியை வலம் வந்து வணங்கினாள்.

அலை போல் வந்து, அகத்தியரையும் லோபாமுத்திரா தேவியையும் வலம் வந்து வணங்கினாள். லோபா முத்திரையோ, அவளை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தாள்; ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்; ஆசிகளை அளித்தாள்.

பின்னர் சம்புவின் அருள்கொடையாம் அந்தச் செம்பு நிறத் தாளையும் சேர்த்துக்கொண்டு அரன் அருகே சென்றார் குறுமுனி. மூன்று முறை மகாதேவனையும் பார்வதிதேவியையும் வலம் வந்தார் - வணங்கினார். அகத்தியர் அட்டாங்க நமஸ்காரம் பண்ண, லோபாமுத்திரையும் செம்புநிறத்தாளும், பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணினார்கள். எழுந்து கரம் கூப்பியபடி நின்றார்கள். `ஆஹா - ஓஹோ’ என்ற ஆனந்த கோஷமும் `அரஹர மஹாதேவா’ என்ற பரமசிவ கோஷமும் அதிர்ந்து எழுந்து ஒலித்தன!

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

தேவலோகத்தின் தெய்வப் பரிசுகள்

பார்வதிதேவி வாஞ்சையோடு செம்பு நிறத்தாளின் அருகே வந்தாள். அவளின் தலைமேல் கைவைத்து ஆசிர்வதித்தாள். கன்னத்தைத் தடவி, `கண்ணே’ என்றாள். பின்னர், தேவலோக மலர்களாலான ஒரு மாலையை அவளுக்கு அணிவித்து அன்பொழுகப் பார்த்தாள்.

அடுத்து அம்பிகையின் அண்ணன் திருமால் வந்தார். தனது பீதாம்பரத்தை எடுத்து அவள் மேல் போர்த்தினார். பிரம்மன் வந்தார். மானஸ தடாகத்துத் தாமரை மலர் ஒன்றை அவளுக்கு அளித்தார். வருண பகவானோ வெண் சங்கு ஒன்றை, மூன்று கோடி புண்ணிய தீர்த்தங்களோடு கொடுத்தார். லட்சுமிதேவி பார்த்தாள்... தன் பங்குக்கு மணிமந்திர வீணை ஒன்றைக் கொடுத்தாள். சரஸ்வதிதேவி சாஸ்த்திர ரூபமான ஒரு பெண் கிளியை வழங்கினாள்.

கங்காதேவி வந்தாள், கட்டியணைத்து முத்தம் கொடுத்தாள். முத்துமாலை ஒன்றை அளித்தாள். தொடர்ந்து, யமுனை நெய்தல் மாலையையும், சராவதி (சரஸ்வதி) சீமந்த ரேகையில் அணியும், சிந்தூரத்தையும், காவிரி குங்குமத்தையும், துங்கபத்திரா குளிர்ந்த மையையும் கொடுத்தார்கள். கோதாவரி கஸ்தூரியைத் தந்தாள்.

மகாமேருவின் புத்திரிகளோ, `நாங்கள்தான் இவளின் தோழிகள்’ என்றபடி ஓடிவந்தனர். முக்தா முதலில் வர... மணிவதி, பூர்ணா பூர்ணை, கோவை, குமுத்துவதி, சியாமாவதி, சந்திரசேனை, கடனை கடகை, அருணை என்போர் பின்னால் அணிவகுத்து வந்தனர். பத்துப்பேரும் பற்றோடும், பாசத்தோடும் பார்த்து முறுவலிக்க - அந்த அன்பில் பூரித்துப்போனாள் செம்பு நிறத்தாள்.

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

சிவந்து ஒளிர்ந்தாள் தாமிரவர்ணி!

`நாங்கள் எதைத்தான் கொடுப்பது’ என்று விழிபிதுங்கி நின்ற, மற்ற அத்தனை தேவதைகளும் தங்கள் சக்தியின் சாரத்தில் ஒருபகுதியை அவளின் உடம்பினுள் பாய்ச்சினார்கள். அவளின் சிவந்த மேனி மேலும் சிவந்து பிரகாசித்தது. சிவந்த ஒளியோடு மலர்ந்து சிரித்தாள், செம்பு நிறத்தாள்.

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லோரும் குதூகலம் கொண்டு கூவினார்கள். அவளது தாமிரம் போன்ற சிவந்த மேனியைக் கண்டு `இவள் தாமிர வர்ணி... தாமிர வர்ணி...’ என்று பாடினார்கள். சில குரல்கள் ‘தாமிரை’ என்றன; சில குரல்கள் ‘மணிகர்பிணி’ என்றன யாரோ சிலர் ‘பரா’ என்றார்கள். 

ஏகோபித்த ஆதரவோடு `தாமிரவர்ணி’ என்ற பெயர் ஓங்கி ஒலித்தது - எதிரொலித்தது. என்ன பொருத்தம்! தாமிரத்தை - சிவக்கச் சிவக்கக் கழுவிவைத்தால், மூன்றாவது நாளே பச்சை பூத்து இருக்கும். இவளோ தாமிரவர்ணி - திருநெல்வேலிச் சீமை சார்ந்த இடமெல்லாம் பச்சையாக்கி வைக்கிறாள் - பசுமை பூசி வைக்கிறாள். அதுமட்டுமா?! மக்கள் மனங்களையும் அல்லவா பசுமைப் பூக்கவைக்கிறாள்.

அன்புச்சுரங்கமான அரனார் கண்களை அசைத்தார். அகத்திய முனியும் புரிந்துகொண்டு, லோபாமுத்திரை - தாமிர வர்ணி சகிதமாக, அம்மை அப்பனை வலம் வந்தார்; வணங்கி விடை பெற்றார். அருள் ஊறிய கண்களால் சிவசக்தியர் விடைகொடுக்க, தாமிரவர்ணியும் கண்கள் பனிக்க விடைபெற்றாள்.

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

தென்னகம் வந்தாள் செம்பு நிறத்தாள்

கங்காதேவியானவள், பகீரதனுக்காக தனது தேவ ஸ்தானத்தை விட்டு பாரத பூமிக்கு வந்தது போல், இப்போது தென்னகத்துக்காக இந்தச் செம்பு நிறத்தாள், குறுமுனியோடு குறுநடை போட ஆரம்பித்தாள். பாரத பூமியின் தென்திசை வளம் கொழிக்கப் போகிறது.

தேவ பூமியைத் தாண்டி பாரதபூமியின் பக்கம் வந்த அகத்திய மாமுனி, மலய பர்வதம் என்ற பொதிகை மாமலையில் ஆசிரமத்தை அமைத்தார். லோபாமுத்திரையும், தாமிர வர்ணியும் ஆசிரமத்தைச் சோலையாக்கி எழில் காட்டினார்கள். மலர்கள் மணம் பரப்ப, வண்டுகள் பாடல் இசைத்தன. குயில்கள் கூவிக் குரலெழுப்ப, மயில்கள் ஆடி மனம் களித்தன. மான்கள் ஓடின, தேன் கூடுகள் தேனைப் பொழிந்தன, பறவைகள் திரிந்தன, குருவிகள் குவிந்தன, மகிழ்ச்சி நிறைந்தது.

திருக்கல்யாணக் காட்சியைக் கண்ணாரக் கண்டு களித்தார்கள். உலகம் சமநிலை பெற்றது. செம்பு நிறத்தாள் மெள்ள செயலில் இறங்கினாள். அகத்திய முனியையும், லோபாமுத்திராதேவியையும் பணிந்தாள்.  அவர்களது பாதம் கழுவி சந்தன, குங்குமம் இட்டாள். தொட்டுத் தன் தலையில் இட்டாள். தூப, தீபம் காண்பித்தாள். மலர் சூட்டி மகிழ்ந்தாள்.

பின்னர் ஜலரூபம் கொண்டாள். குறுமுனியின் பாதம் வலம் வந்து சுழித்தாள்; தவழ்ந்தாள்; மெள்ள நடந்தாள்; துள்ளினாள்-துள்ளி விழுந்தாள்; எழுந்து ஓடினாள்; மலர்ந்தாள்; சிரித்தாள்; மாதவம் செய்தாள்; பரந்தாள் விரிந்தாள்; அள்ளிக்கொடுத்தாள்; அருளைக் கொடுத்தாள்; பொன்னைக் கொடுத்தாள், பொருளைக் கொடுத்தாள்; மண்ணில் வளம் கொடுத்தாள் - உள்ளம் இனிக்க எதையெதையோ கொடுத்தாள்!

அவள் ஜீவநதி. இந்த உலகின் ஜீவன் உள்ளவரை அவளும் ஜீவித்திருப்பாள்; அன்பைச் சுரந்திருப்பாள்; அருள்பாலித்திருப்பாள். செம்புநிறத்தாளின் தாள்பணிந்து மகிழ்வோம்!

கல்யாண வரம் தருவாள் தாமிரபரணி!

முன்னொரு நாள், காஞ்சிகாமகோடி மடத்தில் இருந்தபோது, பால பெரியவர்கள் என்று நாம் அன்போடு அழைக்கும் இன்றைய பீடாதிபதி - ஸ்ரீ ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்தப் புஷ்கரங்கள் கொண்டாடுவது பற்றிப் பேசி, அலசி ஆராய்ந்து கணக்குப்போட்டு, ``கிருஷ்ணா, காவிரி - தாமிரபரணி புஷ்கரங்களை விமர்சையாகக் கொண்டாடவேண்டும்’’ என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள்.

``ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை இருக்கு. விவசாயி போற்றணும், தொழிலாளியும் போற்றணும். அவர்களெல்லாம் இந்தத் தேவிகளைப் (நதிகள்) போற்றி வணங்கினால்தான், அந்த நதிகளும் வற்றாமல் ஓடும்; நாடு வளமாக இருக்கும். வெள்ளமும் வராது வறட்சியும் வராது. இது நம்ம கடமை’’ என்று அருளினார்கள்.

எவ்வளவு உண்மை. தண்ணீருக்கு மதிப்புக் கொடுத்துப் போற்றி ஏற்றுங்கள், வாழ்வில் ஏற்றம் பெறுவீர்கள். புஷ்கரம் கொண்டாடப் படுவதே அதற்காகத்தான். நாமும் தாமிரபரணியைப் போற்றுவோம். தாமிரபரணியின் பெருமையைப் படிப்பதும், கேட்பதும், சிலாகித்துப் பேசுவதும் மட்டும் போதாது. அவளைப் போற்றிக் கொண்டாடவேண்டும். அந்தப் புண்ணிய நதியைப் பாதுகாக்க உறுதியேற்கவேண்டும். அதுவே அவளுக்கு நாம் செய்யும் கைமாறு.

தாமிரபரணி, சகல தெய்வங்களின் சக்தியையும் தன்னகத்தே கொண்டவள். அதுமட்டுமா சிவனாரின் கல்யாண மாலையல்லவா அவள்? ஆகவே, கல்யாண வரம் வேண்டும் பிள்ளைகளும், பெண்களும் இந்தப் புண்ணிய நதியை வணங்கி ஒருமுறை அதில் மூழ்கி எழுந்தாலே போதும், தடைகள் யாவும் நீங்கும்; விரைவில் கல்யாணம் நடக்கும். வீட்டில் சகல நன்மைகளும் உண்டாகும்; சர்வமங்கலங்களும் பெருகும்.

தாமிரவர்ணித் தாயைப் போற்றித் தலைநிமிர்ந்து வாழ்வோம்.
செம்பு நிறத்தாளின் அன்பில் நனைந்து அகங்குளிர வாழ்வோம்

தாமிரபரணி புஷ்கரம்...

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மஹாபுஷ்கரம். பிரம்மனின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடுந்தவம் புரிந்து பிரம்மனிடமிருந்து ஓர் ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்ட வரமே இது.

நமது நாட்டின் 12 முக்கிய நதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராசிக்கு உரியவை. மேஷம் - கங்கைக்கும், ரிஷபம் - நர்மதைக்கும், மிதுனம் - சரஸ்வதிக்கும், கடகம் - யமுனைக்கும், சிம்மம் - கோதாவரிக்கும், கன்னி - கிருஷ்ணாவுக்கும், துலாம் - காவிரிக்கும், விருச்சிகம் - தாமிரவர்ணிக்கும், தனுசு - சிந்துவுக்கும், மகரம் - துங்கபத்ராவுக்கும், கும்பம் - பிரம்மந்திக்கும் (பிரம்மபுத்ரா), மீனம் - பிரணீதாவுக்கும் என அமைகின்றன.

குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் உறைந்திருக்கும். அந்த நேரத்தில் பிரம்மா, விஷ்ணு - சிவபெருமான் மற்றும் உமையுடன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் இந்திரன் உள்ளிட்ட முப்பது முக்கோடி தேவர்களும் - தேவதைகளும் தங்கியிருந்து அருள்வர் என்பது ஐதீகம் - நம்பிக்கை.

திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.10.18 வியாழனன்று (தாமிரபரணி - விருச்சிகம்) இரவு 7.20 மணிக்கு, விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார் குருபகவான். மறுநாள் 12.10.18 வெள்ளியன்று தாமிரவர்ணி புஷ்கரம் ஆரம்பமாகிறது. 23.10.18 அன்று புஷ்கரம் பூர்த்தியாகி செழுமை சேர்க்கிறது. மொத்தம் 12 நாள்கள் நடைபெறுகிறது இந்த விழா.

12 நாள்களும் - 12 ராசிகளைக் குறிக்கும். 12.10.18 வெள்ளி - விருச்சிகம்; 13.10.18 சனி - தனுசு; 14.10.18 ஞாயிறு - மகரம்; 15.10.18 திங்கள் - கும்பம்; 16.10.18 செவ்வாய் - மீனம்; 17.10.18 புதன் - மேஷம்; 18.10.18 வியாழன் - ரிஷபம்; 19.10.18 வெள்ளி - மிதுனம்; 20.10.18 சனி - கடகம்; 21.10.18 ஞாயிறு - சிம்மம்; 22.10.18 திங்கள் - கன்னி; 23.10.18 செவ்வாய் - துலாம். ஒவ்வொருவரும் தமது ஜன்ம ராசிக்குரிய நாளில் தாமிரபரணியில் நீராடி முழுப் பலனைப் பெறலாம். அல்லது குடும்பத் தலைவரின் ராசி தினத்தில் நீராடலாம்.