Published:Updated:

மழையையும் கண்ணனாகவே பாவிக்கும் கோதையின் காதல்! - திருப்பாவை- 4

கண்ணன் மீது உண்மையான அன்பை, காதலை, பக்தியை காட்டினால், அவனது உள்ளத்தில் நமக்கும் நீங்காத இடம் கிட்டும் என்பதை நன்குணர்ந்த கோதையும், தான் காணும் அனைத்தும் கண்ணனாகவே காண்கிறாள்..

மழையையும் கண்ணனாகவே பாவிக்கும் கோதையின் காதல்! - திருப்பாவை- 4
மழையையும் கண்ணனாகவே பாவிக்கும் கோதையின் காதல்! - திருப்பாவை- 4

"ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைய பத்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.."

``கடல் போன்ற, கம்பீரமான மழை பகவானே.. உன்னிடம் எதையும் மறைத்து வைத்துக்கொள்ளாமல், கடல்நீரிலிருந்து ஆவியாகி வானத்தை அடைந்து, அங்கே எம்பெருமான் திருமேனி போல, மேகங்களாக உடல் கறுத்து, அவனது கையில் உள்ள சக்கரம் போல மின்னலென மின்னியும், வலம்புரிச் சங்கு போல இடியென இடித்தும், எம்பெருமானது சாரங்கம் என்ற வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல விடாது மழையைப் பெய்திடு... நாங்களும் மார்கழியில் நீராடி மகிழ்ச்சியுடன் எம்பெருமானை வணங்குவோம் என்று மழைக் கடவுளான வருண பகவானை அழைக்கிறாள் கோதை..!"

'ஆழிமழைக் கண்ணா..!'

என்று ஏன் மழை பகவானை கண்ணன் பெயரால் அழைக்கிறாள் கோதை..??

ஆயர்குலப் பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள். உலக ஞானம் தெரியாதவர்கள். அவர்களுக்கு வருணன் வேறு, கண்ணன் வேறு என்ற வித்தியாசம் தெரியாததால், மழைக் கடவுளையும்கூட அவர்கள் தாங்கள் நன்கறிந்த கண்ணன் பெயராலேயே அழைத்தனர் என்ற பதில் தோன்றுகிறதல்லவா.?

ஆனால், இப்பாசுரத்தில் வரும் அடுத்த வரிகளைப் படித்து, அதில் வரும் அறிவியல் உண்மைகளை உணரும்போது, நாம் நினைத்தது சரிதானா என்பதில் நமக்கு சந்தேகம்தான் வருகிறது..

`மழை எப்படிப் பெய்கிறது..?' என்று கேட்டால், அறிவியல் பாடப் புத்தகத்தில் படித்தது, நமக்கு நினைவுக்கு வரலாம்..

`கடலின் நீரானது, சூரிய ஒளியில் ஆவியாகி, மேலே சென்று மேகங்களாகத் திரண்டு, அடை மழையாகப் பொழிகிறது’ என்று பாடப் புத்தகங்களில் நாம் கற்றறிந்த நீர் சுழற்சியை..

``ஆழியுள் புக்கு முகுந்து கொடு ஆர்த்தேறி..

என்றும்..,

"சார்ங்க முதைத்த சரமழை.."

என்றும் மிகச் சாதாரணமாக,

தனது காதல் பாட்டில் விஞ்ஞானத்தையும் கலந்து எடுத்துச் சொன்னபடி செல்கிறாளே இந்தக் கோதை...!

சிறியதொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கோதைக்கு, என்ன அறிவியல் அறிவு இருக்கக்கூடும்..?

இதுகூட ஏதோ காக்கை - பனம்பழம் கதையாக இருக்குமோ என்றுகூட தோன்றுகிறதல்லவா..?

ஆனால், இந்தப் பாடலில் அடுத்தடுத்து வரும் விஞ்ஞான உண்மைகள் இன்னும் நம்மை வியப்புறவே வைக்கிறது..

'ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து..

எனும் வரியில் முதலில் மின்னல் மின்னி அடுத்து இடி இடிக்கும் என்கிறாள்.

'ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தைவிட அதிகம்..' என்ற அறிவியல் உண்மை, தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு அழகாக கையாளப்பட்டுள்ளது பாருங்கள்..!

பள்ளிப் பாடத்தில், மனப்பாடப்பகுதிக்கு மட்டுமே பயன்பட்ட தமிழ்ச் செய்யுளில், ஆழ்ந்த அறிவியலும் சேர்ந்தே இருந்திருக்கிறது என்பது நமக்கும் ஒரு ஆச்சர்யமல்லவா..?

அத்தோடு நின்றதா ஆச்சர்யம்…

அடுத்து இவை அனைத்துக்கும் மேலாக..,

'ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்து..' என்று கண்ணனைப் பாடும்போது தமிழின் மெய்ஞ்ஞானத்தில் விஞ்ஞானம் தங்கக் குடத்துக்கு பொட்டும் வைத்தாற் போலல்லவா மிளிர்கிறது..

`இந்த பிரபஞ்சப் பால்வெளி மண்டலமே ஆதியில் ஒரு கருங்குழியான அச்சிலிருந்துதான் தோன்றியது..' என்று (Black Hole Theory) என ஐன்ஸ்டீன் உட்பட மேற்குலக விஞ்ஞானிகள் உரைத்த கோட்பாடுகள் அன்றே இந்த ஆண்டாளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்..?!!

ஊழிக்கு முன் கறுப்புதான் இருந்தது என்பதை

"ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்து.." என்று விஞ்ஞானத்தை தனது வரிகளில் உரைக்கும் அறிவு மிகுந்த பெரியாழ்வாரின் பெண் பிள்ளையான கோதைக்கு,

மழையின் கடவுள் வருணன் என்பது மட்டும் தெரியாமலா இருந்திருக்கும்..?

பிறகு ஏன் அவள் வருணனை,  'ஆழி மழைக் கண்ணா...'  என்று அழைக்கிறாள்..??

அதற்கு கண்ணன் மீது அவள் கொண்ட அதீத காதல்தான் காரணம். அது, அவள் பார்க்கும் அனைத்தையும் அந்தப் பரந்தாமனாகவே பார்க்க வைக்கிறது..

மழைக்கடவுளான வருண பகவானை, கண்ணன் பெயர் கொண்டு அழைப்பதோடு நிற்கவில்லை கோதையின் காதல்..

கடலின் மீதிருந்து மேலே போகும் மழை மேகங்களை, கண்ணனின் கறுத்த திருமேனியின் நிறத்தில் பார்க்கிறாள்..

மழைக்கால மின்னலின் ஒளியை பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னுவதாய் கற்பனை செய்கிறாள்..

மழையினூடே இடிக்கின்ற இடியை, திருமாலின் வலம்புரிச் சங்கின் நாதமாக உணர்கிறாள்..

விடாது பெய்யும் அடைமழையை, பெருமானின் கையில் உள்ள சாரங்கம் என்ற வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல சடசடவென்று கீழிறங்கியது என்று உருவகிக்கிறாள்..

இப்படி சரமழை பெய்திட, குளங்கள் அனைத்தும் நிரம்புமாம்.

அப்படி சரமழையின் விளைவாக ஏற்படும் குளங்களில் நீராடி, உன்னை நோன்பிருந்து நாங்கள் உன்னை வழிபட வேண்டும் என்று கண்ணனையே மழைக் கடவுளாகவும் பாவித்து, கண்ணனை வழிபட அந்தக் கண்ணனிடமே வேண்டுகிறாள் கோதை.

கண்ணனையே நினைத்து..

கண்ணனை ஜபித்து..

கண்ணனுக்காக உருகி..

கண்ணனாகவே வாழ்வதுதான்

ஆயர்குலப் பெண்களின் வாழ்க்கை முறை..

ஒருமுறை தன் மனமுழுவதும் கண்ணனின் நினைப்பிலேயே லயித்திருக்க, தயிர் கடைந்து கொண்டிருந்த ஒரு ஆய்ச்சிப் பெண்ணை, 'கடைந்த தயிரையும், நெய்யையும் விற்று வா' என்று அனுப்பினாராம் ஆயர்குலத் தலைவன்..

அந்தப் பெண்ணோ..

'கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்..

கண்ணன் வாங்கலையோ கண்ணன்..'

என்று அந்தக் கண்ணனின் நினைவாகவே, வீதியில் கூவி தயிரையும் நெய்யையும் விற்றாளாம்..

கண்ணன் மீதான இந்த ஆயர் பெண்களின் காதல் எப்படிப்பட்டதென்றால், அந்த இறைவனின் இதயத்தில் எப்போதும் குடியிருக்கும் இறைவியையே தங்களிடம் பொறாமை கொள்ளச் செய்துவிடுமாம். இது பற்றி ராதா - ருக்மிணியைத் தொடர்புபடுத்தி ஒரு கதையின் மூலமாகச் சொல்கிறார்கள்.

`கண்ணன் மீது, ராதைக்கு அபரிமிதமான அன்பு உண்டு.

கண்ணனும் அந்த பக்தைக்கு, மனதில் அதிக இடம் கொடுத்ததால், ஒரு கட்டத்தில் ருக்மிணிக்குச் சற்று பொறாமையே வந்து விடுகிறது.

ராதையின் பக்திக்கு, தனது பக்தி சற்றும் குறைந்ததில்லை என்ற இறுமாப்புடன் அவள் இருந்தபோதும், ராதையின் அதீத கண்ணன் பக்தி ருக்மிணிக்கு ஒரு கட்டத்தில் மிகவும் எரிச்சலூட்டியது..

அந்தத் தருணத்தில், ருக்மிணியின் வீட்டுக்கு வருகை தருகிறாள் ராதை.

ஏற்கெனவே அவள்மீது கோபமும், பொறாமையும் கொண்டிருந்த ருக்மிணி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

அடுப்பில் இருந்து இறக்கிய பாலை, வேண்டுமென்றே கொதிக்க கொதிக்க ராதைக்கு குடிக்கத் தருகிறாள்..

ருக்மிணியின் கோபம் எதையும் அறியாத ராதையோ, ருக்மிணி தந்த பால் சூடு பொறுக்கவில்லை என்பதைச் சொன்னால் அவள் மனம் வருந்துமே என்று சூட்டைத் தாங்கியபடி, அதை அப்படியே குடித்துவிட்டுச் செல்கிறாள்..

இரவு வருகிறது..

இரவு உணவுக்குப் பிறகு, பகவான் கிருஷ்ணர் பஞ்சணையில் படுத்துக்கொள்ள, நித்திய வழக்கின்படி, ருக்மிணி பகவானின் பாதங்களை பிடித்துவிட உட்கார்கிறாள்.. அப்போது, கண்ணனின் உள்ளங்கால் முழுவதிலும் கொப்பளித்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டு..

`அய்யோ... இது எப்படி வந்தது பகவானே..!' என்று பதைபதைப்புடன், ருக்மணி கண்ணனிடம் கேட்க,

`ருக்மணி... ராதை எனது பாதங்களை அவளது இதயத்தில் வைத்து, இடைவிடாது அன்பு செலுத்துகிறாள்... இன்று நீ கொடுத்த சூடான பாலை, உன் மனம் வருந்தக்கூடாதே என்று அவள் அப்படியே குடித்தாள்... பாலின் சூடு தாங்காமல், அவளது இதயத்தில் இருந்த எனது பாதங்கள் கொப்பளித்து விட்டன..'  என்று கிருஷ்ணன் பதிலளிக்க,

ராதையின் உண்மையான பக்தியையும், கிருஷ்ணனின் காதலையும் நன்கு உணர்ந்த ருக்மிணி, மனதால் அவளிடம் மன்னிப்பும் கேட்டாளாம்..!

இவ்வளவு அன்பையும், காதலையும் கண்ணனிடம் காட்ட வேண்டுமென்றால், தானும் ஆயர்குலப் பெண்ணாக மாறினால்தான் உண்டு என்று நினைத்த கோதை, தான் பெரியாழ்வார் பெண்  என்பதையும் மறந்து தன்னையும் ஆயர்குலப் பெண்ணாகவே ஆக்கிக்கொண்டாளாம்..

கண்ணன் மீது உண்மையான அன்பை, காதலை, பக்தியைக் காட்டினால், அவனது உள்ளத்தில் நமக்கும் நீங்காத இடம் கிட்டும் என்பதை நன்குணர்ந்த கோதையும், தான் காணும் அனைத்தும் கண்ணனாகவே காண்கிறாள்..

கண்ணில் தோன்றுவதனைத்தும் கண்ணனாக அவளுக்கு காட்சியளித்தாலும், கண்ணனிடமே மாளாத காதல் கொண்டிருந்தாலும், அதே அளவிலான காதலை கோதை மண் மீதும், மண்ணில் வாழும் நம்மைப் போன்றவர்கள் மீதும் செலுத்துகிறாள் என்பதையே, ``வாழ உலகினில் பெய்திடாய்" என்ற வரி உணர்த்துகிறது..

மார்கழி நீராடி, பாவை நோன்பு இருந்து, இறைவனைப் பாடுவதற்காக மட்டுமே மழை பொழியும்படி வேண்டிக்கொள்ளாமல், உலகத்தினர் அனைவரும் உய்த்து வாழவும் மழை வேண்டும் என்ற பொதுநலத்துடன், வருண பகவானை வரவேற்று, கண்ணனைப் பிரார்த்திக்க வாருங்கள் என்று நான்காம் நாளன்று, தனது தோழிகளை அழைக்கிறாள் கோதை..!!