Published:Updated:

உண்மை அன்புக்குக் கட்டுப்படுவான் குறும்புக் கண்ணன்! - திருப்பாவை - 5

உண்மை அன்புக்குக் கட்டுப்படுவான் குறும்புக் கண்ணன்! - திருப்பாவை - 5
உண்மை அன்புக்குக் கட்டுப்படுவான் குறும்புக் கண்ணன்! - திருப்பாவை - 5

கண்ணன், கண்கொள்ளவோ, கைகொள்ளவோ முடியாத விஸ்வரூபி. என்றாலும், அவனை இதுபோல கட்டிப்போட்ட கதைகள் இன்னும் இருக்கின்றன.

"மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.."

``மாயச் செயல்களைச் செய்தவன்... வடமதுரையில் (மதுரா) பிறந்தவன்... தூய்மையான யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன்... தனது புகழால் தன் தாயை, உலகம் முழுவதும் அறியச் செய்தவன்... இப்படிப்பட்ட கண்ணனை மனதார வணங்கி, தூய்மையான மலர்களால் தொழுது... அவனை மனதார பாடினோமேயானால்,  நாம் செய்த பிழைகள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சு போலப் பொசுங்கிவிடும்... அவனை வாழ்த்திப் பாடுவோம் வாருங்கள் பெண்களே..!'' என்று மாயவனைப் பாட, தனது தோழிகளை அழைக்கிறாள் கோதை...

``தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை..!" திருப்பாவை 5-வது பாசுரத்தில் பகவானைத் தாமோதரன் என்ற பெயரில் அழைக்கிறாளே கோதை. 

தாமோதரன் என்ற பெயருக்குப் பொருள் என்ன? கோகுலத்துக் கண்ணனுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டதன் பின்னணிதான் என்ன?
தாமோதரன் என்ற திருப்பெயர் மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் 367-வது திருநாமமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பகவானின் இந்தத் திருப்பெயர் அவருடைய எளிமையை, அன்புக்குக் கட்டுப்படும் கல்யாண குணத்தை எடுத்துக் காட்டுகிறது.
'தாமம்' என்றால் கயிறு என்றும், 'உதரன்' என்றால் வயிற்றை உடையவன்... என்றும் பொருள்படுமாம்...
அதாவது, கண்ணனின் மென்மையான ஆலிலை போன்ற வயிறு, கயிறு கொண்டு கட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை உடையதாகக் காணப்படுகிறதாம். 

கடவுளின் வயிற்றில் கயிற்றால் கட்டிய தழும்பா..?

பகவானின் அவதாரமாகத் தோன்றிய கண்ணனை, சாதாரண மனிதர்களால் கட்ட முடியுமா என்ற கேள்வி நமக்குள் எழும்போதே, கண்ணன் கட்டுண்ட கதைகள் அநேகம் கிடைக்கிறது நமக்கு! 

கடவுளரில் கண்ணனை மட்டுமே எல்லோருக்கும் பிடிக்கிறது. காரணம், பகவான் தமது அவதாரங்களில் வாமனன், பரசுராமர், ராமன், கண்ணன் என்று நான்கு அவதாரங்களில்தான் மனிதக் குலத்தில் தோன்றினார்.

அதில் வாமனன் வந்த வேலை முடிந்ததும் திரும்பி விடுகிறார். நற்குணங்களும், மிகுந்த பண்புகளும் நிறைந்த மனிதனாக, ராஜகுமாரனாக அவதரித்த ராமனோ, தந்தையின் வார்த்தைக்குப் பணிந்து, வனவாசம் மேற்கொண்டு, பல துன்பங்களை அனுபவித்த போதிலும், க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்து ராஜ குணங்களோடு வாழ்ந்தவன்.

ஆனால், அரச குலத்தில் பிறந்தாலும், பசுக்களை மேய்க்கும் ஆயர்கள் குலத்தில் வளர்க்கப் பெற்ற கண்ணன் அப்படியல்ல... மிக மிக எளிமையானவன்; குறும்புத்தனங்கள் செய்பவன்; நம்மைப் போலவே சிரித்து, விளையாடி, நம்மைப் போலவே அனைத்து இன்ப துன்பங்களையும் அனுபவித்து, நம்முடனே நம்மில் ஒருவனாக வாழ்ந்தவன். 

அப்படிப்பட்ட கண்ணன், ஒரு குழந்தையாக,  தான் செய்த குறும்புகளுக்காக, தன் தாயிடம் தாம்புக் கயிற்றால் வயிற்றைச் சுற்றிக் கட்டப்பட்டவன்...உலகனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்த ஒருவனை, எப்படி ஒரு சிறு கயிற்றால் கட்ட முடிந்தது..? அப்படியே கட்டினாலும் வயிற்றில் தழும்புகள் தோன்றும் அளவுக்கா கட்டுவாள் ஒரு தாய் என்ற கேள்விகளுக்கு, கண்ணனின் குழந்தைப் பருவம் பதில் தருகிறது..

குழந்தையாக இருக்கும்போது, கண்ணன் ஒருமுறை யசோதை கடைந்து வைத்த தயிர்ப் பானையை உடைத்து, அதிலிருந்த வெண்ணெய்யை எடுத்து உண்டானாம்..

சமையலறையிலிருந்து, திரும்பி வந்த யசோதா, பானை உடைந்து, வீடெங்கும் தயிர் சிதறியிருந்ததைக் கண்டு கோபத்துடன், அவனை ஒரு கயிறு கொண்டு வாசலில் கிடந்த உரலில் கட்டிப் போட முயற்சி செய்தாள். ஆனால், எத்தனை பெரிய கயிறு கொண்டு கட்டினாலும் கண்ணன் கட்டுப்படவில்லை. யசோதை திணறினாள். அவளுடைய திணறலை சற்றே ரசித்த குறும்புக் கண்ணன், பின்னர் அவளுடைய அன்புக்குக் கட்டுப்பட்டவனாக கயிற்றில் கட்டுண்டான்.

கயிற்றுக்குக் கட்டுப்பட்டவன், யசோதா அங்கிருந்து நகர்ந்ததும், வயிற்றில் கட்டிய கயிற்றுடன் உரலையும் சேர்த்து இழுத்துக்கொண்டு, வாசலுக்கு ஓடினான்...

வீட்டு வாசலில் இருந்த இரண்டு மருத மரங்களைக் கண்டவுடன், அந்த மருத மரங்களுக்கு இடையில் புகுந்தால், உரல் வெளிவர முடியாமல், கயிறு தானே அறுந்துவிடும் என்று எண்ணி, உள்ளே புகுந்து தனது பலம் கொண்ட மட்டும் உரலை இழுத்தும், கயிறு அறுந்து விழவில்லை... மாறாக, அந்த மருத மரங்கள் இரண்டும் முறிந்து விழுந்து, அம்மரங்களிலிருந்து, இரு தேவ குமாரர்கள்தான் வந்தார்களாம்...

முன்பு, குபேரனின் பிள்ளைகளான நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் பெருஞ்செல்வம் தந்த தைரியத்திலும், மிதமிஞ்சிய மது மயக்கத்திலும் நாரதர் வந்ததைக் கூட கவனியாமல் கந்தர்வப் பெண்களுடன் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருக்க...
அதைக் கண்டு கோபமுற்ற நாரதர், மரம் போல உணர்வற்றுக் கிடக்கும் அவர்கள் இருவரையும் பூவுலகில், இரு மருத மரங்களாக மாற சாபமளித்தார். 

அதன்பிறகு, தங்களது நிலையறிந்த இருவரும் நாரதரிடம் மன்னிப்புக் கேட்க.. ஸ்ரீமன் நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று கூறிச் சென்றார் நாரதர்... இதனால்தான், கண்ணன் குறும்பு செய்து, யசோதையால் கட்டப்படும் நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான் போலும்! 

அந்த மரங்களுக்கு விமோசனம் அளிக்க முயன்றதில் பச்சிளம் குழந்தையான கண்ணனுக்கு அப்போது வயிற்றில் தோன்றிய தழும்புகள், வாழ்நாள் முழுவதும் அவனைவிட்டு அகலாமல் இருந்ததாம்.

இதனால்தான் 'தாமோதரன்'. அதாவது வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்ட தழும்புகளைக் கொண்டவன் என்ற பெயர் கண்ணனுக்கு வந்தது.. 

கண்ணன், கண்கொள்ளவோ, கைகொள்ளவோ முடியாத விஸ்வரூபி. என்றாலும், அவனை இதுபோல கட்டிப்போட்ட கதைகள் இன்னும் இருக்கின்றன.

பின்னாளில் பாரதப் போரை தடுப்பதற்கான முயற்சியில், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்துக்குப் புறப்படும் முன்பாக, பாண்டவர்களுள் ஒருவனான சகாதேவனைச் சந்தித்து,

``சகாதேவா.. உனக்குத்தான் ஜோதிட சாஸ்திரம் நன்கு தெரியுமே.. இந்த பாரதப் போரைத் தடுத்து, அமைதி நிலவிட வழியேதும் உள்ளதா என்பதைக் கொஞ்சம் பார்த்துச் சொல்..!" என்று கேட்க, அதற்கு சகாதேவன் சிரித்துக்கொண்டே, ``போர் வராமல் தடுக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது கண்ணா.. உன்னை எங்கும் நகரவிடாமல் இங்கேயே கட்டிப் போடுவதுதான் அந்த வழி..." என்று பதிலளிக்கிறான்..

``எங்கே உன்னால் முடிந்தால் என்னைக் கட்டிப் போடு பார்க்கலாம்..!" 

என்று சகாதேவனைச் சீண்டினாராம் கண்ணன்.. கண்ணனைக் கட்ட கயிற்றை எடுத்த சகாதேவனை ஏமாற்றப் பல்லாயிரக்கணக்கான கண்ணனாக வடிவெடுத்து அந்த மண்டப அறை முழுவதும் நிரம்பி நின்றிருக்கிறான் கண்ணன்...

மற்றவர்களாக இருந்தால் பார்த்த காட்சியில் பிரமித்துப் போயிருப்பார்கள்..

ஆனால் சகாதேவனோ, சிறிதும் கலங்காமல், தியானத்தில் அமர்ந்து, `ஸ்ரீகிருஷ்ண மந்திரத்தை' உச்சரிக்க, கண்ணனது மாய உருவங்கள் ஒவ்வொன்றாக மறைந்து, ஒற்றைக் கண்ணனாகி, சகாதேவனின் அன்பில் கட்டுண்டு நின்றானாம் அந்த தாமோதரன்...
உண்மையான அன்பினால், கண்ணனை உரலில் கட்டவும் முடியும். உள்ளமெனும் அறையில் அடைத்து வைக்கவும் முடியும் என்பது மட்டுமல்ல... அவனை நமக்காகக் காத்திருக்க வைக்கவும் முடியும் என்கிறது மற்றுமொரு கதை. 

அவனுக்கு நாம் கட்டுப்பட்டுக் கிடந்தால், அவனும் நம்மிடத்தில் கட்டுண்டு கிடப்பான் என்பதையே இந்தக் கதைகள் நமக்குச் சொல்கின்றன.

இப்படி நம் அன்புக்குக் கட்டுப்படும் அந்த அற்புதக் கண்ணனை, தாமோதரனை அன்புடன், பக்தியுடன், தூய மலர்களுடன் வாழ்த்திப் பாடுவோம் வாருங்கள் தோழியரே... என்று ஐந்தாம் நாளில் தன் தோழியரை அழைக்கிறாள் கோதை..!

அடுத்த கட்டுரைக்கு