Published:Updated:

கண்ணனுக்கு ஏன் கேசவன் என்று பெயர் வந்தது தெரியுமா..? - திருப்பாவை - 8

கண்ணனுக்கு ஏன் கேசவன் என்று பெயர் வந்தது தெரியுமா..? - திருப்பாவை - 8
கண்ணனுக்கு ஏன் கேசவன் என்று பெயர் வந்தது தெரியுமா..? - திருப்பாவை - 8

தேவர்களுக்கெல்லாம் தலைவனாம் இறைவனைப் போற்றிப்பாடி, வழிபட்டால் நமது தடைகள் அனைத்தையும் நீக்கி,  நம் தேவைகளை ஆராய்ந்து அறிந்து அருள்புரிவான் கேசவன்.

"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்..!"

"கிழக்கு வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்து விட்டது. எருமைகள் பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதற்குக் கிளம்பிவிட்டன. ஆயர்குலப் பெண்களும், பாவை நோன்புக்குக் கிளம்பிவிட்டனர். உன்னையும் எங்களோடு அழைத்துச் செல்வதற்காக சில பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன் வாசலில் வந்து நிற்கின்றோம். குதூகலம் நிறைந்த பெண்ணே... இனியும் உறங்காது எழுந்திரு... கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்துக் கொன்றவனை, கம்சனால் ஏவி விடப்பட்ட மல்லர்களை அழித்தவனை, தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனை நமது மனம் கவர் கண்ணனைப்  போற்றிப் பாடிட  'ஆஹா...' என்று மனம் குளிர்ந்து, அவன் நமக்கு அருள் அனைத்தும் தருவான்... எனவே பாவை நோன்பிருக்க வாராய்.." என்று தோழியை அழைக்கிறாள் கோதை..!

"மாவாய் பிளந்தானை..."

- மிருக வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து கொன்றவன் கண்ணன். கண்ணனால் தனக்கு அழிவு என்று அசரீரியாகத் துர்க்கை சொல்லக் கேட்ட கம்சன், கண்ணனைக் கொல்லவும், அவன் வாழும் கோகுலத்தின் மக்களை அச்சுறுத்தவும் தொடர்ச்சியாக தனது பலமிக்க அரக்கர்கள் ஒவ்வொருவராகக் கோகுலத்திற்கு அனுப்பிக் கொண்டே இருந்தான். 

பூதகி, அவளது சகோதரர்களான பகாசூரன் மற்றும் அகாசூரன், கம்சனின் அரக்கர்குல நண்பர்களான சகடாசுரன், திருணாவர்த்தன் என, தான் அனுப்பிய அனைவரும் கண்ணனால் கொல்லப்பட்டதைக் கேட்டு, கவலையோடு அரண்மனையில் வீற்றிருந்தான் கம்சன்.
அப்போது, கம்சனின் கவலைக்கான காரணத்தைக் கேட்ட அவனது உயிர் நண்பனும், எடுத்த காரியங்கள் அனைத்தையும் இடையூறின்றி முடிப்பவனுமான அரக்கன் கேசி, "நான் கண்ணனை அழித்து வெற்றியுடன் திரும்பி வருகிறேன்..." என்று சபதமிட்டு கோகுலத்திற்குச் சென்றான்.

கோகுலத்திற்குள் நுழைந்தவுடன், குதிரை வடிவை எடுத்த அரக்கன் கேசி, பிடரியைச் சிலிர்த்து, உரக்கக் கனைத்தான். அந்த ஒலி கேட்டு கோகுலமே அதிர்ந்து நடுங்கியது.

தன்னைப் போருக்கு அழைக்கத்தான் குதிரை வடிவில் அசுரன் வந்துள்ளான் என்பதை உணர்ந்த கண்ணனும், கேசியை நேரெதிராக எதிர்கொண்டான். கண்ணனைக் கண்ட கேசி, சிங்கம் போல் கர்ஜித்தபடி தனது கடினமான கால்களால் கண்ணனை மிதிக்க முயற்சி செய்யவும், சட்டென விலகி போக்குக் காட்டி நின்றான் கண்ணன். வாயைப் பிளந்தபடி, கேசி கோபத்துடன் கண்ணனைத் தாக்க முற்பட, கண்ணன் தனது கையால் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து, கேசியை வதம் செய்தான்.

கேசியை வதம் செய்த காரணத்தால்தான், கேசவன் என்ற பெயரைப் பெற்றான் கண்ணன். இறைவன் எல்லோருக்கும் நண்பன்தானே... அசுரர்களிலும் இருப்பவன் அவன்தானே?

எல்லோருக்கும் சமமானவனும், சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களைக் கடந்தவனும், அவற்றுக்குச் சாட்சியாக இருப்பவனுமான கண்ணன், எல்லோரிடத்திலும் உள்ளுறைந்து, அவர்களுடைய தெய்வ குணத்தை உயர்த்தி, அசுர இயல்புகளைப் போக்குபவன். 

தன் பக்தர்கள் மட்டுமல்ல, தன் ஸ்பரிசத்துக்கு ஆட்படுபவர்கள் அசுரராக இருந்தாலும் அவர்களை அழிப்பதன் மூலம் ஆட்கொள்ளவே செய்கிறான் கண்ணன். தன்னையே பகவானிடம் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தேவராயினும், அசுரராயினும், மிருகமேயாயினும் அவர்களின் தடைகளை எல்லாம் நீக்கியவன் நமது கேசவன். கேசவன் என்ற பெயர், பன்னிரு திருமுறைகளில், முதற்பெயராகும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு முறை வரும் ஒரே பெயரும் இதுவே.

கேசியை வதம் செய்ததால் தோன்றிய பெயர் இது என்றாலும், கேசவனுக்குத் தடைகளை நீக்குபவன் என்றும், அழகிய கேசங்களை உடையவன் என்றும்கூட சொல்லலாம். கேசங்கள் நிறைந்தவன் என்றவுடன், திருமாலின் பத்து அவதாரத்திலும் பிரதானமாக நிற்பது நரசிம்ம அவதாரம்தானே?

பிடரி மயிர் நிறைந்து வழியும் நரசிம்மனின் முகம் மனதில் தோன்றும்போது, பிரகலாதனின் ஞாபகம் மட்டும் வராமலா இருக்கும்..?
கண்ணனுக்கு எந்த வகையிலும் குறையாமல் துன்பங்களை அனுபவித்தவன், ஹிரண்யகசிபுவின் பிள்ளையான பிரகலாதன்.
தனது சகோதரன் ஹிரண்யாக்ஷனைக் கொன்ற மஹாவிஷ்ணுவைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஹிரண்யன் கோரதவம் செய்வதற்காக நாட்டை விட்டுக் கிளம்பியபோது, அவனது மனைவி கயாதுதேவி பிரகலாதனைக் கருவில் சுமந்திருந்தாள். 

ஹிரண்யனின் பிள்ளை பிறந்தால் தேவர் குலத்துக்கு ஆபத்து என்று கருவிலேயே பிரகலாதனை அழிக்க வந்தான் இந்திரன். இந்திரனைத் தடுத்த நாரத முனிவர், ஹிரண்யனின் மனைவி கயாதுதேவி இயல்பிலேயே நல்லவள் என்றும், அவளது குழந்தையால் தேவர்களுக்கு ஆபத்து நேரிடாது என்றும் கூறி இந்திரனிடமிருந்து அவளைக் காப்பாற்றி தனது ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்ல, நாரதரின் ஆசிரமத்தில், நித்தமும் நாராயண மந்திரத்தைக் கேட்டு, கயாது தேவியின் கருவில் வளர்ந்ததால் பிறக்கும்போதே விஷ்ணு பக்தியுடன் பிறந்தான் பிரகலாதன்.

கோரத் தவம் புரிந்த ஹிரண்யன் பிரம்மதேவனிடம் சாகாவரம் பெற்று, மூவுலகங்களை வெற்றி கொண்டு, அனைவரையும் அடிமைப்படுத்தி கொடுங்கோலாட்சி நடத்தியதோடு அனைவரையும், "ஓம் ஹிரண்யாய நம.." என்று உச்சரிக்கவும் வைத்தான்..
ஆனால், அவனால் இரவும், பகலும், "ஓம் நமோ நாராயணாய.." என்று மஹாவிஷ்ணுவைப் போற்றிப் பாடி, இறையடியார்களுக்கு பணிவிடைகள் செய்து, இறை தியானத்தில் மூழ்கி, இறைவன் மகாவிஷ்ணுவின் நினைவாகவே வாழ்ந்து வந்த அவனது இளைய மகனான பிரகலாதனை மட்டும் மாற்ற முடியவில்லை.

தனது பரம எதிரியை நித்தமும் வணங்கும் மகனைத் தண்டிக்க, அவனைக் கூரிய ஆயுதங்களால் தாக்கியபோதும், விஷம் அருந்தச் செய்தபோதும், மதம் பிடித்த யானையின் கால்களில் கட்டப்பட்ட போதும், விஷப் பாம்புகள் நிறைந்த இடத்தில் சிறை வைக்கப்பட்ட போதும் ஸ்ரீமன் நாராயணனின் நாமங்களைச் சிரித்தபடி உச்சரித்துக் கொண்டே இருந்தான் பிரகலாதன்.

எவ்வளவு முயன்றும் மகனுடைய இறை பக்தியை மாற்ற முடியாததால், தனது தங்கை ஹோலிகாவை அழைத்து பிரகலாதனை தீயிலிட்டுக் கொல்லுமாறு வேண்டுகிறான் ஹிரண்யன். தவமிருந்து பெற்ற வரமான நெருப்பில் எரியாத வஸ்திரத்தை, தான் போர்த்தியபடி கைகளில் பிரகலாதனை ஏந்திக் கொண்டு ஹோலிகா தீயில் இறங்கி நடக்க, அப்போது, கண்ணன் பெருங்காற்றாக மாறி, வஸ்திரத்தைப் பிரகலாதன் மீது விழச்செய்து, பெருந்தீயிலிருந்து பிரகலாதனைக் காப்பாற்றி, ஹிரண்யனின் தங்கை ஹோலிகாவை தீயில் எரியும்படிச் செய்தாராம்.

இன்றும் ஹோலிகா நினைவாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையின் முந்தைய தினத்தன்று, அவளது உருவம் தீயிலிடப்படுகிறது.

"நம்பியவருக்கு நாரணன்..
நம்பாதவருக்கு நரசிம்மன்.." 

என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு முறையும் தடைகளை நீக்கி, பிரகலாதனது உயிரைக் காத்தவன் கேசவன்.

பக்தப் பிரகலாதனின் மனதை மாற்ற வேண்டி, ஹிரண்யன் மேற்கொண்ட சாம, பேத, தான, தண்டம் என்ற அனைத்து முயற்சிகளும் பொய்க்க, இறுதியில் தந்தையே மகனைக் கொல்ல வரும்போது, நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணிலிருந்து வெளிப்பட்டு, உக்கிரவடிவில் தனது கூரிய நகங்களால் ஹிரண்யனின் இருதயத்தைப் பிளந்து வதம் செய்தான் பிடரிமுடி கொண்ட நரசிங்கன்...

தேவர்களது எதிரியான அசுரர்களின் குலச்சிறுவனான பிரகலாதனைக் காக்க ஒரு அவதாரமே எடுத்ததைப் பார்க்கும்போது, அசுர குணத்திற்குத்தான், இறைவன் எதிரியாக இருந்தான் என்பது புரிகிறது.

"பிரஹலாத சம்பக்தானாம் ப்ரிய.."

பிரகலாதனுக்கு சமமான பக்தியுடைய அனைவரிடமும்,  அவன் மிருகமே ஆனாலும், அசுரனே ஆனாலும் பேரன்பைக் காட்டுபவன் ஸ்ரீமன் நாராயணன்...

இப்படிப்பட்ட தேவர்களுக்கெல்லாம் தலைவனாம் இறைவனைப் போற்றிப்பாடி, வழிபட்டால் நமது தடைகள் அனைத்தையும் நீக்கி, நம் தேவைகளை ஆராய்ந்து அறிந்து அருள்புரிவான் கேசவன்  என்று உறங்கும் பெண்ணை, எட்டாவது நாளன்று துயிலெழுப்புகிறாள் கோதை..!

அடுத்த கட்டுரைக்கு