Published:Updated:

கண்ணனின் புகழ்பாடலைக் கேட்டு மயங்க நம்மைத் துயிலெழுப்புகிறாள் கோதை! -திருப்பாவை-9

கண்ணனின் புகழ்பாடலைக் கேட்டு மயங்க நம்மைத் துயிலெழுப்புகிறாள் கோதை! -திருப்பாவை-9
கண்ணனின் புகழ்பாடலைக் கேட்டு மயங்க நம்மைத் துயிலெழுப்புகிறாள் கோதை! -திருப்பாவை-9

தூக்கம், பசி போன்ற மந்திரத்தால் நம் மனம் கட்டுப்படாமல், அடுத்தவருக்கு உதவி ஆண்டவனையும் திருப்திப்படுத்தி, அன்புடனும், ஆழ்ந்த பக்தியுடனும் மாமாயனாகிய வைகுந்தனைத் தொழுது அவனருள் பெற்றிட, தோழியரை ஒன்பதாம் நாளன்று அழைக்கிறாள் கோதை..!!

"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் 
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்..
மாமீர்! அவளை எழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்..”


``தூய்மையான மாணிக்கக் கற்களால் இழைக்கப்பட்ட மாளிகையைச் சுற்றி விளக்குகள் எரிகின்றன... மணம் வீசும் தூபம் கமழ்கிறது... அங்குள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் மாமன் மகளே... உன் வீட்டின் கதவுகளைத் திறந்திடு... மாமியே..! உன் மகளை எழுப்ப மனமில்லையா..? உன் மகள் எதுவும் பேசாத ஊமையா..? அல்லது எந்தச் சொல்லும் காதுகளில் கேட்காத அளவுக்குச் செவிடா..? இல்லை, நீண்ட தூக்கம் கொள்பவளா? அல்லது தூங்குவதற்கான மந்திரத்தால் கட்டுண்டவளா? அந்த மாயக் கண்ணனை, மாதவனை, வைகுண்டத்தில் வாழும் வேங்கடவனின் புகழை நாங்கள் பாடுகிறோம். இதைக் கேட்டும் உன் மகள் துயிலெழக்கூடாதா?'' 
என்று துயிலெழாமல் உறங்கும் ஆயர்குலப் பெண்ணை துயிலெழுப்பப் பாடுகிறாள் கோதை..

``ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ...!"
கண்ணன் மீது கொண்ட காதலால், அவனின் நினைவாகவே படுக்கையில் உறங்கியும் உறங்காமலும் இருக்கும் ஓர் ஆயர்குலப் பெண்ணைப் பார்த்து, அவளது தோழியர்,
``பஞ்சணையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே..! நீ மந்திரத்தால் கட்டுப்பட்டு, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறாயா..?" என விடியற்காலையில் அவளை எழுப்ப முயற்சி செய்யும்போதுதான்,
``ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ..!" என்று கேட்கிறாள் கோதை.

அப்படியானால், மந்திரத்தால் ஒருவரைத் தூங்க வைக்க முடியும் என்கிறாளா அவள்... மந்திரத்தால் ஒருவரைத் தூங்க வைப்பதோ எழ வைக்கவோ முடியுமா என்ன..?

ராமாயணத்தில் ஒரு காட்சியைப் படிக்கும்போது, இப்படித் தூங்க வைப்பது சாத்தியமென்றேதான் தோன்றுகிறது.

அசோகவனத்தில் சீதை அமர்ந்திருந்த மரத்தைச் சுற்றி நடந்தவற்றை எல்லாம், மரத்தின் மேல் ஒளிந்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறான் அனுமன்..

அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த ராவணன், நள்ளிரவில் கண்விழித்ததும் அசோகவனத்துக்கு வந்து சீதையிடம் தன்னை ஏற்கும்படி மன்றாடியதும், சீதை ராவணனை மறுத்து அறிவுரை கூறியதால் அவளை மிரட்டியதும்,  பின்னர் காவல் நின்ற அரக்கியரிடம் சீதையைப் படிய வைக்குமாறு உத்தரவிட்டுச் சென்றதும், அரக்கியர் சீதையை அச்சுறுத்தியதும், திரிசடை சீதையிடம் பேசியதும்… என அனைத்தையும் ஒரு மரக்கிளையில் மறைந்து அமர்ந்தபடி பிறர் கவனம் கவராத வண்ணம், கவனித்துக்கொண்டிருந்தான் அஞ்சனாபுத்திரன்..

நடந்தவற்றையெல்லாம் கவனித்த அனுமன், சீதாபிராட்டியிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ள, ஒரு சரியான தருணத்தை தேர்ந்தெடுத்ததும், ஒரு மந்திரத்தை உச்சரித்து, அன்னையைச் சுற்றிக் காவலிருந்த அரக்கியர் அனைவரையும் தூங்கச் செய்தான்..

எப்படி ஒரே நேரத்தில் அத்தனை அரக்கியரும் தூங்குகிறார்கள் என்று ஆச்சர்யத்துடன் சீதாபிராட்டி பார்த்துக்கொண்டிருக்கும்போது, அனுமன் அன்னையின் முன் குதித்து,
``அடைந்தனென் அடியனேன் 
இராமன் ஆணையால்,
குடைந்து உலகனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பிலர் தவத்தை மேவலான்
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன்.." 
என்று அடிதொழுதான்.

ஆக…. இப்படி மந்திரத்தால் எவரையும் தூங்க வைக்க முடியுமென்றால், மந்திரத்தால் ஒருவரை விழிப்படைய வைக்கவும் முடியும்தானே..?

அதிலும், பஞ்சணையில் மந்திரத்தால் கட்டுப்பட்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஆயர்குலப் பெண்ணை எழுப்புவது மிகவும் சுலபமானது...

தேசாந்திரம் சென்ற கணவன், குதிரையில் வரும் குளம்படி ஊரின் எல்லையில் கேட்கும்போதே உறக்கம் விழிப்பாளாம் காதல் மனைவி...
அதுபோல உறங்கிக் கிடக்கும் ஆயர்குல பெண்ணுக்கு,
``மாமாயன்..
மாதவன்..
வைகுந்தன்.."
என்ற திருமாலின் திருப்பெயர்கள்தான், உறக்கத்திலிருந்து அவளை எழுப்பிவிடும் திருப்பள்ளியெழுச்சி மந்திரச் சொற்களாம்..!

இந்தப் பெண்ணுக்கு
உறங்கும் மந்திரமும், 
விழிக்கும் மந்திரமும் 
கண்ணனாகவே இருப்பதால் இவளுக்கு
உறக்கமும், விழிப்பும் வெவ்வேறு நிலைகளல்ல..
இரண்டும் ஒன்றுதான்..
இரண்டிலும் கண்ணனே நிறைந்து நிற்கின்றான்..

மற்ற ஆயர்குலப் பெண்கள் அனைவரும், தங்களது உணர்வுகளைத் திருப்தி செய்துகொள்ள இறைவனை வழிபட்டபோது, இவள் மட்டும் தனது கடவுளையே திருப்திப்படுத்த கண்ணனை வழிபடுகிறாள்..

இதுதான் பக்திக்கும் கர்மாவுக்கும் இடையில் உள்ள வேறுபாடு..
கர்மா என்பது நமது உணர்வுகளின் திருப்திநிலை..
ஆனால், பக்தி என்பது இறைவனையே திருப்திப் படுத்தல்..

எப்படி இறைவனைத் திருப்திப்படுத்துவது என்றால், எப்போதெல்லாம் நாம் நமக்காக இல்லாமல் அடுத்தவருக்கான காரியங்கள் செய்கிறோமோ அப்போதெல்லாம் ஆண்டவன் திருப்திப்படுகிறாராம்.

அப்படி ஆண்டவனைத் திருப்திபடுத்தும் பக்தனுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சுகிர்தன் கதை உணர்த்துகிறது...

ஒருமுறை, ஆதிகேசவன் மீது சயனித்திருந்த பரந்தாமனுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது...
மகாலக்ஷ்மியிடம், 'பசிக்கிறது தேவி..' என்று பகவான் கூறியதைக் கேட்டவுடன் தேவர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்..

தேவலோகத்தில், பசி என்ற வார்த்தைக்கு இடமே இல்லை..
உணர்வுகளை வென்றவர்கள் தேவர்கள்..
ஆயினும், இறைவன் தனக்கு பசிக்கிறது என்று கூறக்கேட்ட தேவர்கள், இறைவனின் பசியைப் போக்க பால், பழங்கள், நவதானியங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு பரந்தாமனிடம் ஓடோடி வந்தனர்.
அனைத்தையும் உண்ட பகவானுக்கு மேன்மேலும் பசி அதிகரித்ததே தவிர குறையவில்லை..
பரந்தாமன் உணவினை கேட்டுக் கேட்டு வாங்கி உண்டுகொண்டே இருந்தார்...
இறைவனின் கோரப்பசிக்கான காரணத்தைத் தேடிய பிரம்மன், 
``பகவானே.. உமது உண்மையான பக்தன் ஒருவன் பூமியில் பசியால் வாடுகிறான்... அவன் பெயர் சுகிர்தன்.  அவனது பசியுணர்வுதான், உம்மை வாட்டுகிறது.." என்றான்.

சுகிர்தன் என்ற விஷ்ணு பக்தன் பூலோகத்தில், சமீபத்தில் உடல் சுகவீனமான தனது வயதான தந்தைக்கும், கண்பார்வையற்ற தாய்க்குமான பணிவிடைகளில், ஒருவார காலமாக தன்னையே மறந்திருந்தான்.. பெற்றோருக்காக உழைத்ததில் தான் பட்டினியாக இருப்பதே அவன் நினைவை விட்டுப் போயிருந்தது. 

சுகிர்தன், தன் தாய் தந்தைக்குப் பக்தியுடன் பணிவிடை செய்ததால், இறைவன் அவனின் பசியை, தான் ஏற்றுக்கொள்ள, சுகிர்தனுக்கும் பசி என்ற உணர்வே தோன்றாமல் போயிருந்து. 

உயிர்களுக்குள் உணர்வாக உறைந்து நிற்கும் பரந்தாமன், அவனது உடல்சார்ந்த பசியுணர்வை உணர்ந்து, தான் ஏற்றுக்கொண்டதோடு… இப்போது அவனது பசியைப் போக்கவும் தானே துணிந்தார்..

தனது தேவியுடன் பூலோகம் சென்று, சுகிர்தனுக்குப் பிடித்தமான உணவினை சமைத்து, சுகிர்தனின் கண்பார்வையற்ற அன்னை, வயதான தந்தை மற்றும் சுகிர்தனுக்குப் பரிமாறி அவனது பசியை ஆற்றி, தனது பசியையும் சேர்த்து போக்கிக் கொண்டாராம் நமது பரந்தாமன்..

இங்கு ஓர் அறிவியல் உண்மையும் வெளிப்படுகிறது..
லெப்டின், க்ரேலின் (Leptin, Grelin) ஆகிய ஹார்மோன் சுரப்பிகள், உயிரினத்தை உணவு உட்கொள்வதைக் கட்டுப்படுத்துகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது..

உடல் சார்ந்த பசியுணர்வை அதிகரிக்கச் செய்யும் க்ரெலின், உணவு உட்கொள்ளப்படும் இரைப்பையில் சுரக்கிறது... ஆனால் மனம் சார்ந்த, Satiety என்ற திருப்தியுணர்வை அளிக்கும் லெப்டின் சுரப்பதோ, நம் உணர்வுகளை எல்லாம் கட்டுப்படுத்தும் மூளையிலிருந்து...

சுகிர்தனுக்கு நிகழ்ந்ததுபோல, எப்போதெல்லாம், இறைநிலை என்ற பக்திநிலை நம்மிடம் அதிகரிக்கின்றதோ, அப்போதெல்லாம் உடல் சார்ந்த பசி, தூக்கம் போன்ற உணர்வுகளும், அவற்றிற்கான சுரப்பிகளும் கட்டுப்பட்டு, மனம் சார்ந்த லெப்டின் போன்ற சுரப்பிகளும், அவற்றினூடே திருப்தி என்ற யோகநிலையும் ஏற்படுகின்றது...

அதுமட்டுமன்றி, தமிழர் வாழ்வில்  உணவு பரிமாறும் வரிசையும் இங்கு அழகாக உணர்த்தப்படுகிறது... ஒரு வீட்டில் உணவு சமைக்கப்படும்போது, அதை முதலில் குழந்தைகள் பிறகு வயதானவர்களுக்கு எனப் பரிமாறிய பிறகுதான், மற்றவர்கள் உண்ண வேண்டும் என்பதும், அதேபோல, வீட்டின் முன் வழிப்போக்கன் யாரேனும் உணவுக்குக் காத்திருந்தால் அவனுக்கு முதலில் உணவு வழங்கிய பின்னரே விட்டிலுள்ளோருக்கு பரிமாற வேண்டும் என்பதும், அந்த வழிப்போக்கரில் சந்நியாசி, ஊனமுற்றோர் இருந்தால்.. ஊனமுற்றோருக்கு முதலிலும், சந்நியாசிக்கு அடுத்தும் உணவு படைத்து விட்டுத்தான் வீட்டிலிருப்போர் உணவை உட்கொள்ள வேண்டுமென்பதும்தான்  உணவு பரிமாறும் வரிசை என்கிறது சங்க இலக்கியம்..

அப்படி அடுத்தவருக்குப் பசியாற்றி தான் உண்டால்தான் ஆண்டவனுக்கே பசி ஆறும் என்பதைத்தான், சுகிர்தன் என்ற பக்தனுக்குப் பரிமாறி தன் பசியாற்றிக்கொண்ட பரந்தாமனின் இந்த அருளாடல் நமக்குச் சொல்கிறது.

ஆம்.. 
நமது உணர்வுகள் திருப்தியடைவது கர்மநிலை.. நம் உணர்வுகளையும், உணர்வுகளின் உரிமையாளரான இறைவனையும் ஒன்றாக திருப்திப்படுத்துவது பக்திநிலை..

கர்மாவை அடுத்தவருக்காகச் செய்யும்போது, அதாவது அடுத்தவருக்கு உதவி அவர் திருப்தி அடைகையில் நாமும் திருப்தி அடையும்போது அந்த ஆண்டவரும் திருப்தி அடைகிறார்..!

ஆகவே, தூக்கம், பசி போன்ற மந்திரத்தால் நம் மனம் கட்டுப்படாமல், அடுத்தவருக்கு உதவி ஆண்டவனையும் திருப்திப்படுத்தி, அன்புடனும், ஆழ்ந்த பக்தியுடனும் மாயனாகிய வைகுந்தனைத் தொழுது அவனருள் பெற்றிட, தோழியரை ஒன்பதாம் நாளன்று அழைக்கிறாள் கோதை..!!

அடுத்த கட்டுரைக்கு