Published:Updated:

``எந்த வகையிலேனும் பக்தி செய் தோழி... அந்தக் கண்ணனின் அருள் ததும்பும்!"

``எந்த வகையிலேனும் பக்தி செய் தோழி... அந்தக் கண்ணனின் அருள் ததும்பும்!"
``எந்த வகையிலேனும் பக்தி செய் தோழி... அந்தக் கண்ணனின் அருள் ததும்பும்!"

பகைவர்களை தேடிச் சென்று போர் செய்து அழிக்கும் வல்லமை கொண்ட கோபாலனான கண்ணன் விரும்பும்படி பொன் போன்ற வடிவம் கொண்டவளே எனத் தோழியைத் துயிலெழுப்புகிறாள் கோதை.

``கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே 
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ 
எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.."

இந்தப் பாடலில் ஆண்டாள் துயிலெழுப்பச் செல்லும் தோழி, கோகுலத்திலேயே மிகுந்த செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்திருப்பவளாம். தன்னுடைய அழகுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடி பேரழகு படைத்தவளாம். அவளை ஆண்டாள் துயிலெழுப்பும் அழகைப் பார்க்கலாமே...

`அதிகப் பால் சுரக்கும் பசுக்களையும், கன்றுகளையும் உடையவனும், தன் செல்வ வளம் கண்டு பொறாமைப்படும் பகைவர்களை தேடிச் சென்று போர் செய்து அழிக்கும் வல்லமை கொண்டவனும், எந்தக் குறையும் இல்லாத கோபாலனான ஶ்ரீகிருஷ்ணன் விரும்பும்படி பொன் போன்ற வடிவம் கொண்டவளே, புற்றிலிருந்து வெளிப்பட்டுப் படமெடுக்கும் பாம்பின் கழுத்தைப் போன்று மெல்லிய இடை கொண்டவளே, காட்டில் திரியும் மயிலின் சாயலைக் கொண்டவளே! துயில் நீக்கி எழுந்து வா.கார்மேகவண்ணன் கண்ணனின் திருநாமங்களை நாங்கள் இவ்வளவு போற்றிப் பாடியும் நீ இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே..' என்று தன் தோழியைத் துயிலெழுப்புகிறாள் கோதை.


ஆண்டாள் எத்தனையோ சொல்லி அழைத்தும்கூட, தோழி உறக்கம் கலைந்து எழவில்லை. எனவே, ஆண்டாள், `பெண்ணே, உன் தந்தை எந்த கிருஷ்ணனிடம் பக்தி கொண்டிருக்கிறாரோ அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடி பேரின்பம் அடையவேண்டும் என்று விரும்பும் நாங்கள், அந்தப் பேரின்பம் உனக்கும் கிடைக்கும் என்பதற்காகவே உன்னை அழைக்க வந்திருக்கிறோம். நீ உயர்ந்த குலத்தில் பிறந்துவிட்டதால் மட்டும் உனக்கு அந்தப் பேரின்பம் கிடைத்துவிடும் என்று நினைக்காதே' என்கிறாள்.


இங்கே பேரின்பம் என்பது கண்ணனின் அருளால் பெறக்கூடிய மோட்சத்தைக் குறிப்பதாகும். மோட்சம் என்பது ஒருவரின் குலப்பெருமையாலோ, செல்வச் செழிப்பினாலோ மட்டும் அடைந்துவிட முடியாது. கிருஷ்ணனிடம் ஆழ்ந்த பக்தி இருக்கவேண்டும். எப்போதும் அவன் நினைவாகவே இருக்கவேண்டும்.
சத்வம், ரஜஸ், தமஸ் என்று அதாவது சாத்விக குணம், ராஜச குணம், ராட்சத குணம் என்று மூன்று வகையான குணங்கள் இருப்பதைப் போலவே, பக்தியிலும் ஞானபக்தி, மூடபக்தி, வித்வேஷ பக்தி என்று மூன்று வகையான பக்தியாக வகைப்படுத்துகின்றன வேதங்கள்...


இதில்,
ஞானபக்தி என்பது, ருக்மிணியின் பக்தியைப் போல.. 
அறிவாலும் அன்பாலும் கண்ணனிடம் ஈர்க்கப்பட்டு, அவனையே தியானித்திருப்பது...
மூடபக்தி என்பது கோபியர்களின் பக்தியைப் போல...

தங்களுடைய வேலைகள் அனைத்தையும் மறந்து தங்கள் மனதுக்கினியவனான கண்ணனிடம் அடைக்கலம் அடைவது..
வித்வேஷ பக்தி என்பது கம்சனின் பக்தியைப் போல...
பகவான் மீது வெறுப்பும் துவேஷமும் கொண்ட ஒருவன் இடைவிடாது பகவானையே நினைத்துக்கொண்டிருப்பது...
கம்சனின் குணாதிசயங்களால்அவன் தோற்றபோதிலும், அவனுடைய வித்வேஷ பக்தியினாலேயே லேயே பகவானிடம் ஐக்கியமானான் கம்சன்...

ஞானபக்திக்கு ருக்மிணியும், வித்வேஷ பக்திக்கு கம்சனையும் உதாரணமாகச் சொல்வதுபோல், கோபியரின் மூடபக்திக்கு ததிபாண்டனை உதாரணம் சொல்லலாம். 
ததிபாண்டன் என்பவன் கண்ணனின் நண்பன். கள்ளம் கபடம் அறியாதவன்.
அன்று கண்ணன் தன் நண்பன் ததிபாண்டனை விளையாட அழைப்பதற்காக அவனுடைய வீட்டுக்கு வந்தான். அப்போது ததிபாண்டன், தன் வீட்டுத் தொழுவத்தில் கன்றுக்குட்டிகளின் கயிற்றை இழுத்துப் பிடித்து, அவை பசுவின் அருகில் வராமல் பார்த்துக்கொண்டிருந்தான்... 

ததிபாண்டனின் தாய் வந்து பால் கறந்த பின்புதான் கன்றுகளைப் பசுவின் அருகில் விட வேண்டும். அதுதான் அவனுக்குத் தரப்பட்டிருந்த வேலை. 
கன்றுகள் ஒவ்வொன்றும் தாய்ப்பசுவின் பாலுக்காக ஏங்கி கதறுவதைக் கேட்ட கண்ணன், கன்றுகளுக்குப் பால் கிடைக்கச் செய்ய விரும்பினான். அதனால் ததிபாண்டனை விளையாட அழைத்தான்...
தன் தாய்க்கு பயந்த ததிபாண்டனோ, தான் விளையாட வரமுடியாது என்று மறுத்தான்..

யோசித்த கண்ணன், இனிப்புகளைப் பெரிதும் விரும்பும் தன் நண்பன் ததிபாண்டனிடம், வைக்கோல் போருக்குப் பின்புறம் நிறைய இனிப்புகள் இருப்பதாகக் கூற, அதைக் கேட்ட ததிபாண்டன் துள்ளிக் குதித்து ஓடினான்..  
இனிப்புகளை, ததிபாண்டன் சாப்பிட்ட அதேநேரத்தில் இந்தப் பக்கம் கன்றுகளை அவிழ்த்து விட்டான் கண்ணன்...
கன்றுகள் தாய்ப்பசுவிடம் பால் குடிப்பதைக் கண்ட கண்ணன், ஆனந்தமாகப் புல்லாங்குழல் ஊதியபடி சென்றுவிட்டான்...
பால்கறக்க வந்த ததிபாண்டனின் அன்னை, கன்றுகள் அனைத்தும் பாலைக் குடித்துத் தீர்த்துவிட்டதால், கோபம் கொண்டு மகனை நையப் புடைத்து விட்டாள். இதனால் ததிபாண்டனுக்கு கண்ணன் மேல் பெரும் வருத்தம் இருந்தது...
பிறிதொரு சமயத்தில், கோபியரின் பானையில் கண்ணன் வெண்ணெய் திருடும்போது, பானை உடைந்துவிட்டதால் கோபியர்கள் அனைவரும் அவனைப் பற்றி யசோதையிடம் புகார் சொல்ல, கோபம் கொண்ட யசோதை அவனைப் பிடிப்பதற்காகத் தேடி வந்தாள்...
அப்போது தப்பித்து ஓடி வந்த கண்ணன், ததிபாண்டனின் வீட்டுக்குள் நுழைந்து, ஆளுயரப் பானைகளில் ஒரு காலி பானைக்குள் ஒளிந்துகொள்ள, பானையை மூடி, அந்த மூடிமீது அமர்ந்து கொண்டான் ததிபாண்டன்.
தன்னை தனது அன்னையிடம் மாட்டிக் கொடுத்த கண்ணனைக் காட்டிக் கொடுக்க ததிபாண்டனுக்கு ஏனோ மனம் வரவில்லை... 
``கண்ணன் இங்கு வந்தானா..?" என்ற யசோதாவின் கேள்விக்கு, 
இல்லை என்று பொய்யைச் சொல்லி கண்ணனை அப்போதைக்குக் காப்பாற்றினான் ததிபாண்டன்...
அனைவரும் சென்றபின், பானையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்ட கண்ணனிடம் ததிபாண்டன், 
``கண்ணா... நீ விஷ்ணுவின் அவதாரம் என்பது எனக்குத் தெரியும். நான் இறக்கும்போது நீ எனக்கு மோட்சம் தருவதாக வாக்குத் தந்தால், பானையிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்..!" என்றான்.
கண்ணனும், ``தந்தேன் மோட்சம்..." என்றதும், சிறுவனான ததிபாண்டன்,
``உன்னைக் காப்பாற்றிய எனக்கு மட்டும் மோட்சம் அளித்தால் போதுமா.? நமக்கு உதவி செய்த இந்தப் பானைக்கும் சேர்த்தே மோட்சம் கொடு.!" என்று வெகுளியாகக் கேட்க, ``அப்படியே.!" என்று வரமளித்தானாம் கண்ணன்..
பகவானை தன்னுள் வைத்திருந்தால் மோட்சத்துக்கு உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு ஏது..?
ததிபாண்டனுடன், அந்தப் பானையும் வைகுண்டம் போனதாகவும், இன்றளவும் வைகுண்டத்தில் அந்தப் பானை இருப்பதாகவும் கூறப்படுகிறது...


விருப்பத்துடன் சேர்ந்த ததிபாண்டனுக்கும், விருப்புவெறுப்பு தெரியாத பானைக்கும்,  எந்நேரமும் தன்னை வெறுப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட கம்சனுக்கும், எந்தவித வேறுபாடும் இல்லாமல் மோட்சம் தருபவனான அந்த கேசவனின் புகழைப் பாடத்  துயிலெழுந்து வருவாயாக... என்று தோழியை பதினொன்றாம் நாளன்று அழைக்கிறாள் கோதை..!!

அடுத்த கட்டுரைக்கு