Published:Updated:

தாமரை போன்ற கண்களையுடைய கண்ணனின் புகழ் பாடுவோம் தோழி! - திருப்பாவை - 14

சக்கரம் வட்ட வடிவிலானது. உலகத்திலேயே அதியற்புதமான கண்டுபிடிப்பு என்று சக்கரத்தையே குறிப்பிடுகிறது அறிவியல். திருமாலின் ஆயுதங்களில் வேறு எந்த ஆயுதத்துக்கும் இல்லாத தனிச் சிறப்பு சக்கரத்துக்கு உண்டு.

தாமரை போன்ற கண்களையுடைய கண்ணனின் புகழ் பாடுவோம் தோழி! - திருப்பாவை - 14
தாமரை போன்ற கண்களையுடைய கண்ணனின் புகழ் பாடுவோம் தோழி! - திருப்பாவை - 14

``உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் 
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் 
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.."

`உங்கள் வீட்டுப் பின்புறத் தோட்டத்தில் உள்ள குளத்தில் குவளை மலர்கள் இதழ் விரிந்து விட்டன. கருநெய்தல் மலர்களோ இதழ் குவிந்து கூம்பி நிற்கின்றன. காவி நிறமுடைய ஆடையை உடுத்திய, வெண்மையான பற்களையுடைய துறவிகள் சங்கை முழங்கியவாறு தங்கள் திருக்கோயில்களைத் திறக்கச் செல்கின்றனர். எங்களை முன்பே வந்து எழுப்புவதாகச் சொல்லிய நீ, அப்படிச் செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா? கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தியவனும் தாமரை போன்ற கண்களை உடையவனுமான கிருஷ்ணனைப் பாட நீ துயிலெழுந்து வருவாயாக...' என்று தோழியை அழைக்கிறாள் கோதை. 

ஆண்டாள், `சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று பாடுகிறாள். திருமால் ஏன் சங்கையும் சக்கரத்தையும் தனது கைகளில் ஏந்தி நிற்கிறார்? அப்படி என்ன அவற்றுக்குப் பெருமை? அறியலாமே...

குணங்களை சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்றாகப் பகுத்திருப்பதுபோல், இந்தப் பிரபஞ்ச வாழ்வுக்கும் அடிப்படையாக  விளங்குவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று செயல்கள்தான். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய இந்த மூன்று செயல்களே உலகத்திலுள்ள உயிர்கள் ஒரே சீராக வாழக் காரணமாகின்றன. இதைத்தான் 'எகாலஜி' (Ecology) என்கிறது அறிவியல்.

இவற்றுக்கெல்லாம் மூலமாகத் திகழும் பரம்பொருள்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்தியராக விளங்குகிறார்.
'சத சத்பதி அத்புதம்' என்று சொல்லியபடி சாந்த வடிவினராகத் திகழும் திருமாலின்  கரங்களில் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்று ஐந்து ஆயுதங்கள் எதற்காக என்று கேட்டால், இவையனைத்தும் பக்தர்களைக் காக்கும் கருவிகள் என்கிறது ஆன்மிகம்.
பெருமாளுக்கே பல்லாண்டு பாடும் பேறு பெற்ற பெரியாழ்வார், 

வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே' என்று சக்கரத்துக்கும் சங்குக்கும் சேர்த்தே பல்லாண்டு பாடியிருக்கிறார். பெருமாளின் ஆயுதங்களில் சங்கும், சக்கரமும்தான் பிரதானம் என்று இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

'Conch' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தச் சங்குகள் கடல்வாழ் நத்தை, சிப்பி, ஆயிஸ்டர் போன்ற உயிரினங்களைப் பாதுகாக்க இயற்கையே உருவாக்கிய கவசங்களாகும். இவற்றில் கால்சியம் கார்பனேட் மற்றும் புரதம் இருப்பதாகக் கூறுகிறது அறிவியல்.
திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது.

திருமாலின் கரத்தில் உள்ள சங்கு பாஞ்ச சன்யம் என்று அழைக்கப்படும். சப்தப்ரம்ம வடிவம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சங்கானது, கடலில் கிடைக்கும் சங்குகளில் சிறப்பு வகையான வலம்புரி வகையைச் சேர்ந்தது.  

ஒரு பாஞ்ச சன்யம் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பது இந்தச் சங்கின் தனிச் சிறப்பாம். 
கடலில் ஆயிரக்கணக்கான சிப்பிகளின் தோன்றிய பிறகு ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். ஆயிரம் இடம்புரிச் சங்குகள் தோன்றியதும் எப்போதாவது ஒருமுறைதான் வலம்புரிச் சங்கு தோன்றும். இப்படி ஆயிரக்கணக்கான வலம்புரிகளுக்கு மத்தியில் அபூர்வமாக ஒருமுறைதான் `சலஞ்சலம்' என்னும் அபூர்வ வகை சங்கு உதயமாகும். இப்படி ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரேயொரு பாஞ்ச சன்யம் என்ற சக்தி மிக்க அபூர்வ சங்கு தோன்றுமாம்.

அப்படி உருவான சங்குதான் திருமாலின் திருக்கரத்தில் திகழும் பாஞ்ச சன்யம். 
கண்ணன் மற்றும் பலராமனின் குருவான சாந்தீபனி முனிவரின் மகன் தத்தனை பாஞ்சஜனன் என்ற அசுரன் கவர்ந்து சென்றுவிட்டதாகவும், தன் குருவின் மகனை மீட்கவேண்டி, கண்ணன் அசுரனுடன் போரிட்டு வென்றதாகவும், அந்த அசுரன் எரிந்த சாம்பல் ஒன்று சேர்ந்து பாஞ்ச சன்யம் சங்காக உருவானதாகவும் ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.

அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமியுடன் வெளியில் வந்த பொருள்களில் பாஞ்ச சன்யமும் ஒன்று என்றும்கூடச் சொல்லப்படுகிறது. அப்படி மகாலட்சுமியுடன் வெளிப்பட்ட சங்கை திருமால் தன் இடக் கரத்தில் ஏந்திக்கொண்டாராம். 
இந்தச் சங்கிலிருந்து எழும் 'ஓம்' என்னும் ஒலி பஞ்ச இந்திரியங்களை அடக்குவதால் பாஞ்ச சன்யம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குருக்ஷேத்திரக் களத்தில் ஶ்ரீகிருஷ்ணர் பாஞ்ச சன்யத்தை எடுத்து முழக்கியபோது, கௌரவர்களின் இதயங்களை நொறுங்கச் செய்ததாம்.

சங்கின் வரலாறு இதுவென்றால், சக்கரத்தின் சரித்திரம்..?

சக்கரம் வட்ட வடிவிலானது. உலகத்திலேயே அதியற்புதமான கண்டுபிடிப்பு என்று சக்கரத்தையே குறிப்பிடுகிறது அறிவியல். திருமாலின் ஆயுதங்களில் வேறு எந்த ஆயுதத்துக்கும் இல்லாத தனிச் சிறப்பு சக்கரத்துக்கு உண்டு. சுதர்சனர், திருவாழியாழ்வான், திகிரி என்றெல்லாம் அழைக்கப்படும்  இந்தச் சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்று பக்தர்கள் போற்றி வழிபடுகிறார்கள்.
இந்த சுதர்சன சக்கரத்தின் மகிமை அளவிடற்கரியது. திருமாலின் அவதாரக் காலங்களில் இந்தச் சக்கரம் பல்வேறு வகைகளில் ஆயுதமாகப் பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திரனைக் காப்பாற்றிய சுதர்சன சக்கரம், வராக அவதாரத்தில் கோரைப் பற்களாக மாறி பூமியைக் கடலுக்கடியிலிருந்து தூக்கி வருவதற்கும்;

வாமன அவதாரத்தில், மஹாபலி தானம் தர முன்வந்த வேளையில், சுக்கிராசாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக்கொண்டு தண்ணீர் வரவொட்டாமல் தடுத்தபோது தர்ப்பையின் வடிவில் அவருடைய ஒரு கண்ணைப் பறிப்பதற்கும்;
நரசிம்ம அவதாரத்தில் பெருமானின் கை நகங்களாக மாறி இரணியனின் வயிற்றைக் கிழித்து வதம் செய்வதற்கும்;
கிருஷ்ணாவதாரத்தின்போது சிசுபாலனை வதம் செய்வதற்கும் சுதர்சன சக்கரம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மட்டுமல்ல, பாரதப் போரில் சூரியனை மறைத்து ஜெயத்ரதனை அர்ஜுனன் மூலம் வதம் செய்வதற்கும்கூட சுதர்சன சக்கரம்தான் காரணம்.
அப்படியானால் ராமாவதாரத்தில்..?

ராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும்தான் பரத, சத்ருக்கணனாகத் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.
இப்படியாக சொல்லச் சொல்ல முடிவே இல்லாத மகிமைகள் நிறைந்த சங்கையும் சக்கரத்தையும் ஏந்தி, பகைவர்களை அழித்து நம்மை - பக்தர்களைக் காப்பாற்றும் கண்ணனின் புகழைப் பாடத் துயிலெழுந்து வரும்படித் தன் தோழியை அழைக்கிறாள் கோதை!