Published:Updated:

மாதவனை தரிசிக்க மணிக்கதவம் தாள் திறவாய்! - திருப்பாவை - 16

மாதவனை தரிசிக்க மணிக்கதவம் தாள் திறவாய்! - திருப்பாவை - 16
மாதவனை தரிசிக்க மணிக்கதவம் தாள் திறவாய்! - திருப்பாவை - 16

மாவிலைத் தோரணங்கள் நம்முடைய பண்பாட்டின் அடையாளம் மட்டுமல்ல; அது நமக்குப் பாதுகாப்பும்கூட. அந்தக் காப்புதான் துர்சக்திகள் நம்மை அண்டவிடாமல் தடுக்கும் சக்தி கொண்டவையாகும் என்பது நம்பிக்கை. 

``நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா நீ 
நேய நிலைக்கதவம் நீக்கலோ ரெம்பாவாய்.."

`நமக்கெல்லாம் தலைவனாக இருக்கும் நந்தகோபனுடைய மாளிகையைப் பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாயிலுக்குக் காவலாக நிற்பவனே! மணிகளோடு கூடிய கதவைத் திறப்பாயாக. மாயச் செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன், ஆயர்குலச் சிறுமியரான எங்களுக்கு, ஒலியெழுப்பும் பறையைத் தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதைப் பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். எங்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது என்று உன் வாயால் முதலிலேயே சொல்லிவிடாதே. மூடியுள்ள இந்த நிலைக் கதவை எங்களுக்குத் திறப்பாயாக' என்று வாயில் காப்பாளனிடம் சொல்கிறாள் கோதை.

ஒருவழியாக அனைத்துத் தோழியர்களையும் அழைத்துக்கொண்டு கண்ணனின் திருமாளிகையை அடைந்த கோதை, அங்கே வாயில் காப்பாளனாக இருக்கும் காவலனிடம் கதவு திறக்கும்படிக் கேட்கிறாள்.

நம்மை எல்லாம் காக்கும் கடவுள் கண்ணனுக்குமா காவலர்கள் தேவை..?
உண்மையில், வீட்டு வாயிலில் கட்டியிருக்கும் தோரணத்தையே காப்பு என்றுதான் சொல்வோம். ஆக, கண்ணனின் திருமாளிகையில் தோரணங்கள் காப்பாக இருப்பதுடன், மேலும், காவலன் என்று வேறு ஒரு பாதுகாப்பு - தேவைப்படுகிறதா என்ன?
கோயில்களிலும் வீடுகளிலும் மங்களகரமான நாள்களில் பயன்படுத்தப்படும் தோரணம் என்னும் காப்புக்கு நாம் மாவிலை அல்லது வேப்பிலையைப் பயன்படுத்துவோம். வாரணமாயிரத்தில்கூட, `பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் கட்ட கனாக் கண்டேன்' என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

மாவிலைத் தோரணங்கள் நம்முடைய பண்பாட்டின் அடையாளம் மட்டுமல்ல; அது நமக்குப் பாதுகாப்பும்கூட. அந்தக் காப்புதான் துர்சக்திகள் நம்மை அண்டவிடாமல் தடுக்கும் சக்தி கொண்டவையாகும் என்பது நம்பிக்கை. 
தோரணம் கட்டுவதற்கு மாவிலைகளைப் பயன்படுத்துவதிலும்கூட ஓர் தத்துவம் அடங்கியுள்ளது. மாவிலைகள் லக்ஷ்மிகரம் என்பதால் மட்டுமல்ல, இயற்கையில் மாவிலை எப்போதும் அழுகிப் போவதில்லை. முறையாக உலர்ந்து பிறகு சருகாகும். அதேபோல் வாழ்க்கையும் கெட்டுப் போகாமல், நீண்டகாலம் நல்வழி  வாழவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லவும் மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது.

மாவிலையும் சரி, வேப்பிலையும் சரி கிருமிநாசினியாக உள்ளன. காற்றின் மூலம் பரவும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. மாவிலையில் நிரம்பியுள்ள தாவரச் சத்துகளான  Flavanoids, Polyphenols போன்றவை நோய் எதிர்ப்புச் சக்திகளாகச் செயல்பட்டு, நுண்ணெதிர்ச் சக்தியை அளிப்பதோடு, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, வயிற்றுப்போக்கு மற்றும் சர்க்கரை நோய்க்கும் அருமருந்தாகிறது என்கிறது இயற்கை மருத்துவம்.

கண்ணனின் திருமாளிகையின் முதலடுக்குப் பாதுகாப்பான மாவிலைத் தோரணக் காப்பு கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகளைத் தடுக்கும். அடுத்த அடுக்கில் கண்ணுக்குத் தெரியும் எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் காத்து நிற்கும் இரு காவலர்களான துவாரபாலகர்கள். 
ஆலயத்தில்கூட இறைவனின் கருவறைக்குள் செல்வதற்கு முன்பாக, துவாரபாலகர்களை வணங்கி, அவர்களுடைய அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல வேண்டும் என்பது ஐதீகம். துவாரபாலகர்களுடைய சிலைகளில் ஒருவர் ஆள்காட்டி விரலை நீட்டியபடியும் மற்றொருவர் கையை விரித்துக் காட்டியபடியும் இருப்பார்கள். நீட்டிய ஆள்காட்டி விரல், 'இறைவன் ஒருவனே' என்பதையும், விரித்திருக்கும் கை, 'இறைவன் ஒருவரைத் தவிர வேறு இல்லை' என்பதையும் நமக்கு உணர்த்துவதாகும்.

இங்கே கோயில்களில் மட்டுமல்ல, பகவானின் வைகுண்டத்திலும் ஜயன், விஜயன் என்று இருவர் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள். வைகுண்டத்திலும் தங்களுடைய பகவானுக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பதுதான் இவர்களுடைய வேலை. 
இவர்கள்தான் பகவானை தரிசிக்க வைகுண்டம் வந்த சனகாதி முனிவர்களை உள்ளே அனுமதிக்காமல், அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகி, பின்னர் திருமாலின் அருளால் பூமியில் மூன்று பிறவிகள் அசுரர்களாகப் பிறந்தனர். முதலில் இரண்யாட்சன், இரண்யகசிபு என்ற அசுரர்களாகவும், அடுத்து ராவணன், கும்பகர்ணன் என்ற அசுரர்களாகவும், மூன்றாவதாக சிசுபாலன், தந்தவக்கிரனாகவும் பிறந்தனர். அவர்கள் முறையே திருமாலின் வராக, நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்களில் சம்ஹாரம் செய்யப்பட்டு இறுதியில் வைகுண்டம் திரும்பினர். தங்கள் காவல் பணியையும் தொடங்கினர். 

ஜய விஜயர்கள் தங்கள் பணியில் காட்டிய கண்டிப்பு, ஒருமுறை இறைவனின் வாகனமான கருடாழ்வாரையே இறைவனிடமிருந்து பிரிக்க முற்பட்டதாம்...

பாவம், கருடன் ஒருமுறை சனியால் பீடிக்கப்பட்டது. அந்நிலையில் வைகுண்டம் வந்த கருடனிடம், ``கருடரே, தங்களை இப்போது ஏழரைச் சனி பிடித்திருப்பதால், எம்பெருமான் தங்களைச் சற்று நேரம் பொறுத்து வரச்சொன்னார்'' என்று கூறினர். 

சனியின் பாதிப்பால் மனத் தடுமாற்றம் கொண்டிருந்த கருடன், ``ஓஹோ, அப்படியா சங்கதி? என்னையே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாரா? இனி நான் அவருக்கு வாகனமாக இருக்கமாட்டேன்'' என்று கூறிச் சென்றுவிட்டார் கருடாழ்வார்.
இதைத்தான் எதிர்பார்த்திருந்தார் சனிபகவான். உடனே கருடன் மீது தன் பிடியை இறுக்கத் தொடங்கினார். நடந்ததை அறிந்த ஆதிசேஷன், கருடனிடம் சென்று நல்ல வார்த்தைகள் சொல்லி, சமாதானம் செய்து வைகுண்டத்துக்கு அழைத்து வந்தார். 

கருடாழ்வாரும், 'எல்லாம் என் விதியாலும் சனியாலும் வந்தது. இனி நான் எப்படி எம்பெருமானை நேரில் காண்பேன்?' என்று மனதுக்குள் மறுகியபடி வைகுண்டம் திரும்புகிறார்.

ஆதிசேஷனும் கருடாழ்வாரும் ஒன்றாக வருவதைக் கண்ட ஜய விஜயர்கள், கருடனைத் தடுத்து நிறுத்தாமல் உள்ளே அனுமதித்தனர். பின் தொடர்ந்து வந்த சனிபகவானை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே தடுத்துத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
பகவானின் பக்தர்களை அவரை விட்டு விலகாமல் காப்பதும், ஆகாதவர்களை பகவானிடம் அனுமதிக்காமலும் காப்பதும்தான் துவாரபாலகர்களின் கடமையாகும்.

வைகுண்டத்திலேயே இப்படி என்றால், எந்நேரமும் கண்ணனைக் கொல்ல எண்ணற்ற அரக்கர்கள் வரும் ஆயர்பாடியில் எத்தனைக் கடுமையும் கண்டிப்புமாக இருந்திருப்பார்கள்?

கண்ணனை மட்டுமல்லாமல், அவனுடைய பக்தர்களையும் காப்பாற்ற வேண்டும் என்னும்போது, வாயில் காப்பாளர்களின் பொறுப்பு இன்னும் அதிகமாக அல்லவா இருக்கும்?

எனவேதான், கோதை, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழித்துவிடும் காப்புத் தோரணம் கட்டிய வாசலில் கண்ணுக்குத் தெரியும் எதிரிகளை உள்ளே அனுமதிக்காமல் காவல் புரியும் வாயில் காப்பாளரைப் பணிந்து, தாங்கள் கண்ணனுக்குப் பிரியமானவர்கள்தான் என்பதற்கான நியாயமான காரணங்களையும் கூறி, வாயிற் கதவுகளைத் திறக்கும்படி வேண்டுகிறாள் கோதை!

அடுத்த கட்டுரைக்கு