Published:Updated:

பலராமனை அண்ணனாக ஏற்றுப் பணிவிடை செய்த பரந்தாமன் புகழ் பாடி அருள் பெறுவோம்! திருப்பாவை -17

பலராமனை அண்ணனாக ஏற்றுப் பணிவிடை செய்த பரந்தாமன் புகழ் பாடி அருள் பெறுவோம்! திருப்பாவை -17
பலராமனை அண்ணனாக ஏற்றுப் பணிவிடை செய்த பரந்தாமன் புகழ் பாடி அருள் பெறுவோம்! திருப்பாவை -17

உயர்ந்த உள்ளம் படைத்தவனை, அனைத்துமாக விளங்கும் கண்ணனை முழு மனதுடன் வணங்கி, அவன் அருளைப் பெற வந்துள்ளோம் என்று பாடுகிறாள் கோதை.

``அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"

`அழகிய ஆடைகளும், தண்ணீரும், உணவும் எங்களுக்கு அருளாக அளித்திடும் எங்கள் தலைவனே... நந்தகோபாலா எழுந்திராய்; கொடி போன்ற மெல்லிய உறுதியான இடையுடைய  பெண்களான எங்களுக்கெல்லாம் தலைவியே, நந்தகோபர்தம் குல விளக்கே, யசோதை பிராட்டியே எழுந்திராய்; உன் திருவடிகளால் ஆகாயத்தை ஊடறுத்து ஓங்கி உலகளந்த கண்ணனே! தேவர்களின் தலைவனே! உறக்கம் விடுத்து விழித்துக்கொள்வாய்; மாசற்ற பொன்னினால் செய்த கழல்களை அணிந்த பலதேவனே நீயும் உன் தம்பியும் விழித்து எழுவீராக' என்று கண்ணனின் திருமாளிகை அடைந்த கோதை, அவர்கள் நால்வரையும் துயிலெழப் பாடுகிறாள்.

நந்தகோபரையும், யசோதையையும் துயிலெழச் சொல்லும் கோதை, அடுத்ததாக பலராமனை எழுப்பாமல், கண்ணனை எழுப்புகிறாள். ஆனால், கண்ணனோ தனக்கு மூத்தவனான பலராமனை எழுப்பாமல் தன்னை எழுப்புகிறாளே இந்தக் கோதை என்று பொய்க் கோபத்துடன் உறங்கியபடி இருக்கவே, கண்ணனின் நோக்கம் அறிந்த கோதை, அடுத்த வரியில் பலராமனை எழுப்புகிறாள். அதற்கு அடுத்த வரியில் நீயும் உன் தம்பி கண்ணனும் எழுந்திருக்கவேண்டும் என்று பலராமனிடம் கூறுகிறாள்.

`செம்பொற்க் கழலடிச் செல்வா பலதேவா' என்று கோதை அழைக்கும் பலராமனும், கண்ணனும் சகோதரர்கள். பலராமன் வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணிக்குப் பிறந்தவர்; கண்ணன் வசுதேவரின் இரண்டாவது மனைவியான தேவகிக்குப் பிறந்தவர். 
இருவருமே அவதார புருஷர்கள்தான் என்றாலும், இருவர் குணத்திலும் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்?!
வெண்ணிற அவதாரம் எடுத்து, நீலாம்பரனாக வளர்ந்தவன் பலராமன்; கருமை நிறம் கொண்டு மஞ்சள் பட்டாடைத் தரித்து வலம் வந்தவன் கண்ணன்.

கண்ணனின் கொடி கருடக் கொடி என்றால், பலராமன் பனைக் கொடியேந்தியவன்.

பலராமன் கையில் கலப்பையை ஏந்தியிருக்க, கண்ணனின் கரங்களில் தவழ்ந்ததோ கானமிசைக்கும் புல்லாங்குழல்.
கோபம் மிக்கவன் பலராமன்; சாந்த ஸ்வரூபி கண்ணன். பெயருக்கேற்ப பலராமன் வலிமை மிகுந்தவன். கண்ணனோ ஆகச் சிறந்த மதியூகி.
இப்படி இருவரிடையே வித்தியாசங்கள் இருந்தாலும்கூட, ஒரே ஓர் ஒற்றுமை மட்டும் இருவரிடமும் இருக்கவே செய்தது. அதுதான் ஒருவர் மற்றவரிடம் கொண்டிருந்த மாசற்ற அன்பு. 

பலராமன் கண்ணனுடன் சேர்ந்து எண்ணற்றவர்களை வதம் செய்ததுடன், தானே தனித்தும் பலரை வதம் செய்த வலிமை மிக்கவன். நரகாசுரனைக் கொன்று கண்ணன் கோகுலம் திரும்பிய வேளையில், கண்ணனைக் கொன்றுவிடுவதாக சபதம் செய்து, நரகாசுரனின் நண்பனும் வானரத் தலைவன் துவிவிதனின் சகோதரனுமான மயிந்தன் என்பவன், கோவர்த்தனகிரியில் தவமுனிவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்திக்கொண்டிருந்தான். அந்தச் சமயம் அங்கு வந்த பலராமனின் பட்டுப் பீதாம்பரத்தைப் பிடித்திழுத்து வம்பு செய்ய, அவனை ஒரே அடியால் வீழ்த்தியவன் பலராமன்.

அதற்கு முன்பே ஆயர் சிறுவன் போல் உருமாறி வந்த பிரலம்பாசுரன், கம்சனின் மாமனான ஜராசந்தன் என்று பலரை வீழ்த்திய பலராமன், கண்ணனுடன் சேர்ந்து தேனுகாசுரன், சங்கசூடன், அரிஷ்டகன் என்று கம்சன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் அழித்தொழித்தவன்.
கோபத்திலும் வீரத்திலும் நிகரற்ற முரட்டுப் போர்வீரனாக இருந்தாலும், தம்பி என்று வந்துவிட்டால், அப்படியே கனிந்து உருகிவிடுவான். தம்பி என்றால் அப்படி ஒரு பாசம் பலராமனுக்கு!

கண்ணன் ருக்மிணியை விரும்புவது தெரிந்தபோது முதலில் களத்தில் குதித்து கண்ணனின் காதலுக்கு ஆதரவு தெரிவித்தது பலராமன்தான். அவர்களுடைய காதலை எதிர்த்த ருக்மிணியின் சகோதரன் ருக்மியுடன் போரிட்டு, கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் மணம் முடித்து வைத்ததும் இதே பலராமன்தான்!

பாரதப் போரில் நடுநிலை வகித்தாலும்கூட, தன் கண்ணனின் வெற்றிக்காக எந்நேரமும் பிரார்த்தனை செய்தவன் பலராமன். 
கண்ணனுக்கும் பலராமனுக்கும் இடையிலான இந்தப் பாசப் பிணைப்பு எந்த ஜன்மத்து தொடர்போ..?

பாற்கடலில் பரந்தாமன் பள்ளி கொண்ட ஆதிசேஷன்தான், பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது, அவரைப் பிரிய மனமில்லாமல் பலராமனாகவும், அதற்கு முந்தைய ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும் பிறந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
நோய் எதிர்ப்பு, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கும் நம் மருத்துவச் சின்னமான கேடூஸியஸ் (caduceus) எப்படி ஒரு கைத்தடியில் சுற்றிப் பிணைந்த இரண்டு பாம்புகளும், அதற்கு மேல் சிறகுகள் விரித்த கருடனும் உள்ளதோ, அதேபோல் நம்மைக் காக்கும் கடவுளான திருமாலுடன் எப்போதும் உடனிருப்பது ஆதிசேஷனும் கருடனும்தான் என்ற ஒற்றுமை நம்மை வியக்க வைக்கிறது.
ஆதிசேஷனான லட்சுமணன்தான், ராமாவதாரத்தில் ராமன் வனவாசத்துக்குப் புறப்படத் தயாரானபோது, ராமனுக்கு முன்பே மரவுரி தரித்து நின்றவன் லட்சுமணன் என்கிறது ராமாயணம்.

ராமன்கூட தன் மனைவி சீதையுடன் வனம் சென்றான். ஆனால், லட்சுமணனோ தன் சகோதரனைப் பாதுகாக்க, தன் இளம் மனைவியைக் கூடப் பிரிந்து வந்தான்.

லட்சுமணன் ராமனிடம் கொண்டிருந்த பக்திக்கு உதாரணங்கள் பல இருந்தாலும்கூட, கேட்டவுடன் நம்மையெல்லாம் சிலிர்க்கச் செய்வது யுத்தகாண்ட நிகழ்வு ஒன்றுதான்.

ராமன் ராவணனைக் கொன்றாலும்கூட, அதற்கு முன்பாக இந்திரஜித்தை வெல்லவே முடியவில்லை. மந்திர தந்திரங்களால் எத்தனையோ முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் லட்சுமணன்தான் இந்திரஜித்தைப் போரில் கொன்றான். லட்சுமணன் இந்திரஜித்தை வீழ்த்தியதைக் கண்ட விபீஷணன், வியப்புற்றவனாக லட்சுமணனை இருகரம் கூப்பி வணங்கினான். அவன், லட்சுமணனைத் தனியே வணங்குவதைக் கண்ட ராமன், அதற்காக பொறாமை கொள்ளவில்லை. ஆனால், எப்போதும் தன்னுடன் சேர்த்தே லட்சுமணனை வணங்கும் விபீஷணனின் செயலுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினார். விபீஷணனிடம் கேட்கவும் செய்தார்.
அதற்கு விபீஷணன், ``பதினான்கு வருடங்கள் உணவின்றி உறக்கமும் கொள்ளாமல் இருக்கும் ஒருவனால்தான் தான் கொல்லப்படவேண்டும் என்ற வரத்தினைப் பெற்றவன் இந்திரஜித். அப்படி ஒரு வரம் வாங்கி வந்தவனைக் கொல்லவேண்டும் என்றால், பதினான்கு வருடங்கள் உண்ணாமல், உறங்காமல் என் எதிரே நிற்கும் லட்சுமணனை வணங்கத்தானே வேண்டும்?!'' என்று மரியாதையுடன் கூறினான் விபீஷணன்.

அதைக் கேட்டுப் பெரிதும் வியப்புற்ற ராமன், ``பதினான்கு வருடங்கள் என்னுடன் இருந்த நீ உறங்கி நான் பார்த்ததில்லைதான். ஆனாலும், உணவும் கொள்ளாமல் இருந்தாயா லட்சுமணா?'' என்று வியப்பு குரலிலும் பிரதிபலிக்கக் கேட்க...

``அண்ணலே, தங்களையும் பிராட்டியையும் காக்கவேண்டி நான் உறக்கம் கொள்ளவில்லை. உணவு கொள்ளாமல் இருந்ததற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. நாம் வனவாசம் புறப்பட்ட வேளையில் என் அன்னை சுமித்ராதேவி, `காட்டில் உணவு எப்படிக் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே, உன் அண்ணனும் அண்ணியும் உணவு அருந்திய பிறகு, இலையில் மிகுந்திருக்கும் உணவை மட்டுமே நீ உண்ணவேண்டும்' என்று அறிவுரை கூறி அனுப்பினார். ஆனால், எனக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, உணவு உண்ட பிறகு, இலைகளையும் தாங்களே எறிந்து சுத்தம் செய்துவிடுவீர்கள். ஆகவே, தாங்கள் உண்ட பிரசாதத்தை உண்ணும் பேறு எனக்குக் கிடைக்கவில்லை'' என்றான்.

நெகிழ்ச்சியுடன், கண்ணீர் மல்க லட்சுமணனைக் கட்டித் தழுவிக்கொண்டார் ராமன்!

இப்படி இரவு பகலாகக் கண்விழித்து, உணவும் உறக்கமும் இல்லாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் உதவி புரிவது சேஷத்வம் என்னும் தர்மமாகும். ராமாவதாரம் முழுவதும் தன்னுடன் இணைபிரியாமல் இருந்து, பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்த லட்சுமணனின் சேவைக்கு தனிச் சிறப்பு செய்யும் விதமாக, கிருஷ்ணாவதாரத்தில், அண்ணன் பலராமனாக ஏற்று, அவன் பாதம் தொழுது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டாராம் பகவான்!

தெய்வ வழிபாட்டை வேள்வி போல் பலன் கருதாமல் செய்து, தன்னையே இறைவனிடம் அர்ப்பணிப்பவனைத் தன்னுடன் சேர்த்து எளிதில் மோட்சம் அருளும் இறைவன், தன் வாக்கு, மனம், புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தன்னையே அர்ப்பணித்த ஆதிசேஷனாகிய லட்சுமணனுக்கு, தனது தசாவதாரங்களில் ஓர் அவதாரத்தையே பரிசாகத் தந்து, எட்டாவது அவதாரமாக பலராம அவதாரம் நிகழ்த்திய கருணையுள்ளம் கொண்டவன் நம் கண்ணன்!

தன்னைச் சரணடைந்து, தனக்குப் பணிசெய்வோரை மதிப்பதுடன், தானே அவர்களுக்குப் பணி செய்யும் உயர்ந்த உள்ளம் படைத்தவனை, அனைத்துமாக விளங்கும் கண்ணனை முழு மனதுடன் வணங்கி, அவன் அருளைப் பெற வந்துள்ளோம் என்று பாடுகிறாள் கோதை!
 

அடுத்த கட்டுரைக்கு