Published:Updated:

நல்லறம் உணர்த்திய கண்ணன் புகழ் பாட வந்துள்ளோம்... நப்பின்னாய் அருள்வாயே! திருப்பாவை - 18

நல்லறம் உணர்த்திய கண்ணன் புகழ் பாட வந்துள்ளோம்... நப்பின்னாய் அருள்வாயே!  திருப்பாவை - 18
நல்லறம் உணர்த்திய கண்ணன் புகழ் பாட வந்துள்ளோம்... நப்பின்னாய் அருள்வாயே! திருப்பாவை - 18

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் ஏறு தழுவிய தகவலைப் போலவே, நப்பின்னையின் பெயரும் நமக்குப் புதிதாகத் தெரிந்தாலும், நப்பின்னை திருமாலின் மூன்று மனைவியரில் ஒருவர் என்கின்றன முந்தைய அவதாரக் கதைகள்.

`உந்து மத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்...'

`மதம் கொண்ட யானையைப் போல் வலிமை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாதவருமான நந்தகோபரின் மருமகளே..! நப்பின்னையே..! நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே! எழுந்து வந்து உன் வாசற்கதவைத் திறப்பாயாக. பொழுது விடிவதற்கு அடையாளமாக, அனைத்து இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன. மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல் அமர்ந்தபடி குயில்கள் கூவுகின்றன. கிருஷ்ணனுடன் பந்து விளையாடும் கைகளில் மென்மையான விரல்களைப் பெற்றவளே! கண்ணனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்காக எழுந்து வந்து, அழகிய வளையல்கள் ஒலித்திடும் உன் செந்தாமரைக் கைகளால் கதவைத் திறந்து எங்களை மகிழ்விப்பாயாக' என்று பாடுகிறாள் கோதை.

தோழிகளுடன் கண்ணனைத் துயிலெழுப்ப வந்த கோதை, வாயிற்காப்பாளன் அனுமதி பெற்று உள்ளே செல்கிறாள். நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரைத் துயிலெழுப்பப் பாடுகிறாள். ஆனால், எவருமே எழுந்து கதவைத் திறப்பதாகக் காணோம். எனவே, நந்தகோபனின் மருமகளும், கண்ணனின் மனைவியுமான நப்பின்னையிடம் கதவு திறக்கும்படி வேண்டுகிறாள்.

யார் இந்த நப்பின்னை? கண்ணனின் மனைவி என்கிறாளே கோதை. நமக்கு ராதையும் ருக்மிணியும்தானே தெரியும்?

கண்ணன் நப்பின்னையை மணம் செய்துகொண்டது எப்போது... எப்படி..?

கிருஷ்ணாவதாரத்தில் இவள் நப்பின்னை என்றால், மற்ற அவதாரங்களில் இவள் யார்?

கோதையின் காதலைப் போலவே, நப்பின்னையைப் பற்றிய கேள்விகளும் அவள் இருக்கும் திசை நோக்கி நீள்கின்றன.

நப்பின்னை ஆயர்குடியில் பிறந்த பெண். அந்த வீட்டில் அவள் இளையவளாகப் பிறந்ததால், `நம் - பின்னை' என்று பெயர் பெற்று, நப்பின்னை என்று செல்லமாக அழைக்கப்பெற்றவள். அவளுடைய இயற்பெயர் என்னவோ உபகேசி என்பதுதான். ஆயர் மகளிர்க்குத் தங்கள் கூந்தல் பற்றிய முக்கியத்துவம் எப்போதும் உண்டு. நப்பின்னை பிறக்கும்போதே கூந்தல் அழகியாகப் பிறந்ததால் அவளுக்கு உபகேசி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கேசி என்றால் கூந்தலை உடையவள் என்று பொருள்.

நப்பின்னை, கண்ணனை வளர்க்கும் பாக்கியம் பெற்ற யசோதையின் உடன்பிறந்த கும்பகனின் மகள். எனவே, இவள் கண்ணனுக்கு மாமன் மகள். கண்ணனுடனும் பலராமனுடனும் சிறு வயதில் ஆடிப்பாடி விளையாடியவள். பிறகு கண்ணனைக் காதலித்து, கரம் பிடித்து மனைவியும் ஆனவள்.

மாமன் மகளே ஆனாலும், அவ்வளவு சுலபத்தில் கண்ணன் நப்பின்னையைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. 

நப்பின்னைக்குத் திருமணம் செய்ய முடிவு செய்த மிதிலையின் அரசனான கும்பகன், தனக்கு வரும் மருமகனின் வீரத்தையும், அழகையும் அறிய ஒரு நிபந்தனை விதித்திருந்தார். தனது முரட்டுக் காளைகளை அடக்கவும் வேண்டும்; தன் செல்வ மகளுக்குப் பிடித்தமானவனா கவும் இருக்கவேண்டும். அவனுடைய நிபந்தனை ஆயர்குல வழக்கமும்கூட.

அதன்படி மாமனுடைய ஏழு வலிமையான எருதுகளைத் தழுவி, தன் வீரத்தைக் காட்டி வெற்றி பெற்ற பிறகே நப்பின்னையின் கரம் பற்றினான் கண்ணன். இதைத்தான்,

`மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே...' என்கிறது இலக்கியம்.

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் ஏறு தழுவிய தகவலைப் போலவே, நப்பின்னையின் பெயரும் நமக்குப் புதிதாகத் தெரிந்தாலும், நப்பின்னை திருமாலின் மூன்று மனைவியரில் ஒருவர் என்கின்றன முந்தைய அவதாரக் கதைகள்.

திருமாலின் மனைவியர் நிலமகள், திருமகள், நீள்மகள் என்கிறது வைணவ மரபு. நிலமகளாம் பூமாதேவி, திருமகளாம் லட்சுமிதேவி, சமுத்திர அன்னையான நீளாதேவி ஆகிய மூவரும் திருமாலின் மனைவியர் ஆவர்.

கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணி திருமகளின் அம்சமாகவும், சத்யபாமா நிலமகளின் அம்சமாகவும், நப்பின்னை நீளாதேவியின் அம்சமாகவும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. 

எப்படிப் பொருளுக்கு அதிபதியான திருமகளையும், பொறுமைக்கு அதிபதியான பூமிதேவியையும் மணந்து, நமக்கு பொருள், உணவு, உடன் வாழ உயிரினங்களை அளித்தாரோ அப்படி இந்த உலகுக்கே ஆதாரமாக விளங்கும் நீரையும் நமக்கு அளித்து, நம்மைக் காத்து நிற்பதும் நாரணனே என்பதே இதன் சாராம்சம்.

`ரஸோவைசஹா' என்று நாராயணனைச் சொல்லும்போது, அவன்தான் நீருக்கு ஆதாரம் என்கின்றன வேதங்கள். நீர் என்ற நாரத்தில் சயனிப்பதால்தான், நாரணன் என்ற பெயர் ஏற்பட்டதாம் அவனுக்கு.

நீரின் அம்சமான நீளாதேவியின் கதை வராஹ அவதாரத்தில் நமக்குக் காணக் கிடைக்கிறது.

இரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் வரங்கள் பெற்று பலசாலியாகி, தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அதுமட்டுமல்லாமல், பூமியை அப்படியே தூக்கிச் சென்று கரை சேர்க்க இயலாத ஆழத்தில் சமுத்திரத்தில் மூழ்கடித்தான். பூமியைக் காப்பாற்றும்படி வேண்டி திருமாலைக் குறித்துத் தவமியற்றினார் பிரம்மதேவர். அப்போது திருமாலின் சுவாசத்திலிருந்து வெண்ணிறமாகச் சிறிய வராகம் ஒன்று தோன்றி, பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து பிரமாண்டமான வடிவம் எடுத்தது. இரண்யாட்சனைக் கொன்று பூமியை மீட்க ஆயுதபாணியாகக் கடலின் ஆழம் நோக்கிப் புறப்பட்டார். 

பூமியை மீட்கச் செல்லும் தன் பதியுடன் நீளாதேவியும், `வாராஹி' வடிவெடுத்து உடன் கடலுக்குள் சென்றாள். கடலுக்குள் சென்ற வராக மூர்த்தி பூமிப் பந்தை தம் கோரைப் பற்களால் தூக்கியபடி மேலே வந்துகொண்டிருந்தபோது, எதிர்த்து நின்ற இரண்யாட்சனை பகவான் வதம் செய்தார். அப்போது வாராஹி தேவிதான் தன் கணவரான திருமாலையும், பூமிதேவியையும் தாங்கி, காத்துக் நின்றிருந்தாளாம். 

வராஹ மூர்த்திக்குத் துணை நின்ற வாராஹியின் கரங்களில் இன்றும் சங்கும் சக்கரமும் இருப்பது, திருமாலைப் போலவே அனந்த கல்யாண குணங்கள் கொண்ட தேவியாக இவள் திகழ்வதை உணர்த்துகிறது.

வாராஹி தேவி என்ற நீளா தேவியின் அவதாரமே நப்பின்னை என்பதை,

`பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல்
கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன்' 
என்கிறார் நம்மாழ்வார்.

முந்தைய வாராஹ அவதாரத்தில் கணவனின் வெற்றிக்குத் துணை நின்று, அதற்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராத நீளாதேவியான வாராஹிக்குத் தனது சங்கு, சக்கரம் அளித்த திருமால், `கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நேசிப்பதாலும், பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பணிவிடை செய்வதாலும் உயர்ந்த நிலையை அடையலாம்' என்று கீதையில் கூறியிருப்பதைப் போல், கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியை நப்பின்னையாக அவதரிக்கச் செய்து, இல்லறத்தின் நல்லறத்தை நமக்கு போதிக்கிறானாம் கண்ணன். 

நீளாதேவியான நப்பின்னையின் கதையைக் கேட்ட கோதைக்கும், கண்ணன் மீதான தன் காதலில் பெரும் நம்பிக்கை எழ, நந்தகோபனின் மருமகளான நப்பின்னையைத் தொழுது, அவளுடைய அருளால் அவளுடைய மணவாளன் கண்ணனின் அன்பினைப் பெற்றிட தோழியருடன் சேர்ந்து நப்பின்னை துயிலெழப் பாடுகிறாள் கோதை!
 

பின் செல்ல