Published:Updated:

கண்ணன் அருள் வேண்டி வந்துள்ளோம்... துயிலெழச் செய்வாய்! திருப்பாவை - 19

கண்ணன் அருள் வேண்டி வந்துள்ளோம்... துயிலெழச் செய்வாய்! திருப்பாவை - 19
கண்ணன் அருள் வேண்டி வந்துள்ளோம்... துயிலெழச் செய்வாய்! திருப்பாவை - 19

"குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்

மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.."

`நாற்புறமும் விளக்குகள் மெல்லிய ஒளி பரப்பும் அறையில், தந்தத்தினாலான கால்களைக் கொண்ட கட்டிலில், மென்மையான பஞ்சு மெத்தையின் மேல், நறுமணம் வீசும் மலர்களைச் சூட்டிய கூந்தலுடைய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து உறங்குபவனே, எழுந்து வாய் திறந்து பேசுவாயாக. மை தீட்டப்பட்ட அழகிய கண்களை உடைய நப்பின்னையே, நீ உன் கணவனை ஒரு கணமும் துயில் நீங்கவும் விடமாட்டாய்; அவனை விட்டுப் பிரிந்திருக்கவும் மாட்டாய். எங்களுக்கெல்லாம் கண்ணனின் அருளைப் பெற்றுத் தரும் நிலையில் இருக்கும் நீ, இப்படிக் கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல' என்று கண்ணனைத் துயிலெழவொட்டாமல் செய்யும் நப்பின்னையிடம் ஆதங்கத்துடன் கேட்கிறாள் கோதை!

`குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின்...' என்று பாடுகிறாள் கோதை.

கண்ணன் பயன்படுத்திய அத்தனையுமே பெருமைமிக்கதுதானே! அப்படி இருக்க, அவன் துயில் கொள்ளும் படுக்கையும் உயர்வானதாகத்தானே இருக்கும்?!

அதைத்தான் கோட்டுக் கால் கட்டில் என்கிறாள் கோதை. கோட்டுக் கால் என்பது வீரத்தின் அடையாளம். இலக்கியத்தில் பரணி என்றோர் இலக்கியம் உண்டு. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவது பரணி. அதுபோல் போரில் கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்களைக் கால்களாகக் கொண்டு செய்த கட்டிலைத்தான், 'கோட்டுக் கால் கட்டில்' என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தக் கோட்டுக் கால் கட்டிலில் படுத்து உறங்குபவர்களுக்கு வீர உணர்ச்சி பெருக்கெடுக்கும் என்பதும், அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் வீரம் உண்டாகும் என்பது அன்றைய நம்பிக்கை. கட்டில்தான் அப்படியெனில், அவன் படுத்து உறங்கும் மெத்தையை, `பஞ்ச சயனம்' என்கிறாள் கோதை. அழகு, குளிர்ச்சி, மென்மை, தூய்மை, வெண்மை ஆகிய ஐந்து தன்மைகள் கொண்டதாக விளங்குகிறதாம்! அத்தகைய சிறப்பு மிக்க படுக்கையில் கண்ணன் உறங்குகிறானா என்றால் அதுதான் இல்லை. கண்ணன் மட்டுமல்ல, அவனிடத்தே காதல் கொண்ட பெண்களும்கூட உறங்கவில்லையாம்!

அன்றும் அப்படித்தான் அரசவைப் பணிகளை முடித்து, இரவின் இரண்டாம் ஜாமத்தில் வீடு திரும்பிய கண்ணனின் கண்களில் கவலையின் ரேகைகள் இழையோடியிருப்பதைக் கண்ட நப்பின்னை, கண்ணன் உணவு உண்ணும்போது மெள்ள விசாரிக்கிறாள்.

அவளிடம், ``திருதராஷ்டிரன், பஞ்ச பாண்டவர்களைக் குந்தியுடன் புரோசனன் அமைத்திருந்த அரக்கு மாளிகைக்கு அனுப்பிவிட்டாராம். எனக்கு ஏனோ கலக்கமாக இருக்கிறது'' என்கிறான் கண்ணன்.

``சரி, காலையில் பார்த்துக்கொள்ளலாம். சற்று நேரம் உறங்குங்கள். ஏற்கெனவே நீங்கள் உறங்கி ஒரு வாரமாகிவிட்டது'' என்று நப்பின்னை கணவன் மீதான கரிசனத்துடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, 'பாண்டவர்கள் தங்கிய அரக்கு மாளிகை தீக்கிரையாகிவிட்டது' என்ற செய்தியுடன் பரபரப்பாக ஓடி வருகிறார் அக்ரூரர்.

அக்ரூரர் சொன்ன செய்தி கேட்டு, அப்படியே ஓடிய கண்ணன், மறுபடியும் மாளிகைக்குத் திரும்புவான் என்று காத்திருந்த நப்பின்னைக்கு, மறுநாள் இரவுதான் கண்ணனைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

`சரி, இன்றேனும் கண்ணன் சற்று ஓய்வெடுக்கட்டும்' என்று நப்பின்னை நினைத்திருக்க, பிரம்ம முகூர்த்த வேளையிலேயே இந்த  ஆயர்பாடிப் பெண்கள் வந்துவிட்டனர். இதில், `கண்ணனின் உறக்கத்தைக் கலைக்க மாட்டாயே...' என்று நப்பின்னை மீதே புகார் வேறு. 

கண்ணன் இன்னும் சற்று நேரம் உறங்கி ஓய்வு எடுக்கட்டுமே என்று எண்ணி, தானும் உறங்காமல், ஆயர்பாடிப் பெண்களையும் எழுப்ப விடாமல், கண்ணனின்  உறக்கத்தைக் காத்து நிற்கிறாள் நப்பின்னை.

கண்ணனுக்காக நப்பின்னை மட்டுமா உறக்கம் தொலைத்தாள்? இல்லை. கண்ணனுக்காக உறக்கம் தொலைத்த பெண்கள் மிகப் பலர். ருக்மிணி, ராதை, நப்பின்னை போன்றோர் மட்டுமல்லாமல், மதுராவில் வாழ்ந்திருந்த குப்ஜை என்பவளும் கிருஷ்ணனின் வரவுக்காகக் காத்திருந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்றும் இருக்கவே செய்கிறது.

கண்ணனை எப்படியும் கொன்றுவிட நினைத்த கம்சன், தான் நடத்தும் தனுர் யாகத்துக்குக் கண்ணனையும் பலராமனையும் அழைத்து வரும்படி அக்ரூரரை அனுப்பி வைத்தான்.

மதுராபுரிக்கு வருகை தந்த பலராமன், கண்ணன் இருவரையும் வழியெங்கும் மலர்கள் தூவி வரவேற்றனர் பெண்கள். அப்போது இடுப்புக்கு மேல் உடல் முழுவதும் குனிந்தபடி, மூன்று இடங்களில் கூன் விழுந்த குப்ஜையும், சந்தனம், வாசனை திரவியங்களுடன் கண்ணனை நோக்கி நடந்து வந்தாள்.

``கண்ணா, எல்லோரும் கூனி என்று அழைக்கும் என் பெயர் குப்ஜா. தினமும் கம்சனுக்கு சந்தனக் குழம்பு கொண்டு சேர்ப்பது என் தொழில். ஆனால், இன்றென்னவோ உங்கள் இருவருக்கும்  சந்தனக் குழம்பு பூசவேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. எனக்கு அனுமதி வேண்டும்'' என்றாள்.

கண்ணனும் குறுநகை புரிந்தபடி, ``அதற்கென்ன, பூசு அழகியே'' என்று கைகளை நீட்ட, கூனியும் கண்ணனின் மலர்க் கரங்களில் சந்தனக் குழம்பைப் பூசுகிறாள். அவ்வளவுதான்... அடுத்த நொடியே மதுராவின் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே, குப்ஜை மிகுந்த ஒளி பொருந்திய பேரழகியாக மாறி நின்றாள்.

தன்னை அழகியாக மாற்றிய கண்ணனிடம் நன்றியுணர்ச்சியுடன் காதலும் கொண்டாள். கண்ணனைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கவும் செய்தாள்.

பிறிதொரு நாளில் வருவதாகக் கூறினான் கண்ணன். 

வீடு திரும்பிய குப்ஜை, தினமும் 'கண்ணன் இன்று வருவான்' என்று நினைத்து, அவனுக்காக அறுசுவை உணவு தயாரித்து, நாளும் பொழுதும் கண்ணனின் வரவுக்காகக் காத்திருந்தாள். நாள்களும், மாதங்களும், வருடங்களும் ஓடியதே தவிர, கண்ணன் என்னவோ அவளுடைய வீட்டுக்கு வரவேயில்லை. குப்ஜையும் சலிக்காமல், சளைக்காமலும், உண்ணாமல், உறங்காமலும் கண்ணனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

கண்ணனிடம் குப்ஜை கொண்டிருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஆம்... குப்ஜையின் வாழ்க்கையில் அந்தத் திருநாளும் வரவே செய்தது.

ஒருநாள் குப்ஜையின் வீட்டுக்கு வருகை தந்த கண்ணன், அவளுடைய பொறுமையான காத்திருப்புக்கும், தன்னிடத்தே கொண்டிருந்த பிரேமைக்கும் பரிசாக, அவளுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தையே தந்துவிட்டான்! 

கோட்டுக்கால் கட்டில் இருந்தும், மெத்தென்ற பஞ்ச சயன படுக்கை இருந்தும் கண்ணன் உறங்கியதே இல்லை. அவன் காக்கும் இறைவனாயிற்றே! அவனால் உறங்க முடியுமா என்ன? உறங்குவதைத்தான் அவன் விரும்புவானா என்ன?

கண்ணன்தான் உறங்கவில்லை என்றால், அவன் உறங்குவதாக பாவனை செய்யும்போது, அந்தப் பொய்த் தூக்கத்தைக்கூட எவரும் கெடுத்துவிடக் கூடாதே என்று உறங்காமல் விழித்திருந்தவள் நப்பின்னை;

கண்ணன் எப்போது வருவான் என்று தெரியாத நிலையில், அவன் எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வரலாம் என்ற நம்பிக்கையில் உறக்கம் தொலைத்து நின்றவள் குப்ஜை;

தான்  உறங்கினால், கண்ணனைத் தொழுகின்ற நேரம் குறைந்துவிடுமே என்று தன் உறக்கத்தைத் தொலைத்து அதிகாலையில் கண்ணனைத் தேடி அவனுடைய மாளிகைக்கு ஓடி வருபவள் கோதை!

இப்படி ஆத்மார்த்தமான அன்புடன் தங்களை கிருஷ்ணனுக்கு அர்ப்பணித்துக்கொள்ளும் அனைவரையும் ஆட்கொண்டு அருள்புரிபவன் கண்ணன்!

கண்ணன் இப்படிப்பட்டவன்தான் என்று ஒருவராலும் அறிய முடியாதவன். ஆனாலும்கூட அவனிடம் பக்தி கொண்டவர்கள் அறிவதற்கு எளியவன் அவன். 

கண்ணனிடம் மாசற்ற பக்தி கொண்டவர்களால் மட்டுமே அவனுடைய திருவடியை அடைய முடியும் என்பதை நன்றாக உணர்ந்த கோதை, `கண்ணனின் திருவடிகளைத் தொழுது வணங்கினால், அவன் நம்மை ஆட்கொள்வான்' என்று தோழியரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் கோதை!