Published:Updated:

பகைவரும் பணிந்தேத்தும் நின் திருவடி நாடி வந்துள்ளோம்... துயிலெழுவாய் மாதவா! - திருப்பாவை - 21

பகைவரும் பணிந்தேத்தும் நின் திருவடி நாடி வந்துள்ளோம்... துயிலெழுவாய் மாதவா! - திருப்பாவை - 21
பகைவரும் பணிந்தேத்தும் நின் திருவடி நாடி வந்துள்ளோம்... துயிலெழுவாய் மாதவா! - திருப்பாவை - 21

பகைவரும் பணிந்தேத்தும் நின் திருவடி நாடி வந்துள்ளோம்... துயிலெழுவாய் மாதவா! - திருப்பாவை - 21

``ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் 
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் 
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.."

`கன்றுகளுக்கு ஊட்டிய பிறகும்கூட, பாத்திரங்கள் பொங்கி வழியும்படி பால் சுரக்கும் வள்ளல் தன்மை உடைய அளவற்ற பசுக்களை வைத்திருக்கும் நந்தகோபரின் திருமகனே! துயில் நீங்குவாயாக. வலிமை மிக்கவனே, எல்லோருக்கும் தலைவனே, ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே! எழுந்திராய்! உன்னிடம் தங்கள் வலிமை அனைத்தையும் இழந்த பகைவர்கள், உன் வாசல் தேடி வந்து சரணடைவதுபோல், நாங்களும் உன்னைப் பணிந்து, உன் புகழ் பாட வந்துள்ளோம். மகிழ்ச்சியுடன் எழுந்து வந்து எங்களுக்கு அருள்வாயாக...' என்று பாடுகிறாள் கோதை.

`உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே...' என்கிறாள் கோதை. உலகின் தோற்றத்துக்கும், அதன் உயிர்ப்புத் தன்மைக்கும் அடிப்படையாக உள்ள ஒளியென்னும் சுடரின் வடிவமாம் பரந்தாமன்! இறைவனின் அந்தச் சுடர் தரும் வெம்மையானது பகைவர்களைத் தகிக்கச் செய்கிறதாம்; ஆனால், பக்தர்களுக்கோ அளவற்ற ஆற்றலைத் தருகிறதாம்! 

மனிதர்களுக்குச் சக்தியைத் தருவது உணவு. அதே தருணத்தில் உண்ண வேண்டும் என்ற உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்துவது பசிதான். அந்தப் பசி என்னும் உணர்வு மனிதர்களின் அடிவயிற்றில் நெருப்பாகத் தகிக்குமாம். இந்தப் பசி என்னும் உணர்வு மனிதர்களுக்கு எப்போது, ஏன் ஏற்பட்டது?

இது பற்றி ஒரு புராண நிகழ்ச்சி சொல்லப்படுகிறது...

தேவருலகில் ஒருநாள், தேவர்கள் அனைவரும் பரந்தாமனை பூஜித்துப் போற்றிப் பாடினர். கானம் வேறு, தாங்கள் வேறு என்று உணரமுடியாதபடி, தேவர்கள் மனம் உருகிப் பாடிய அந்த தெய்விக ராகத்தில் தன்னை மறந்து லயித்திருந்தார் மகாவிஷ்ணு. 
பூஜையை நிறைவு செய்யத் தேவையான மலர்கள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களுடன் அங்கே வந்து சேர்ந்த ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர், இசையில் தங்களை மறந்திருந்த தேவர்களை சுய உணர்வு பெறச் செய்ய நினைத்து, தேவர்கள் மீது மலர்களை வீசினர். மலர்களின் ஸ்பரிசத்தினால் உணர்வு பெற்ற தேவர்கள், தேவ மங்கையரின் அழகிலும் புன்னகையிலும் ஒரு கணம் தங்கள் மனதைப் பறிகொடுத்தனர். பின்னர் அவர்கள் இசைத்த கானம் பிசிறு தட்டியது. 

சுபஸ்வரம் அபஸ்வரம் ஆகிவிட்டதை உணர்ந்த மகாவிஷ்ணு, தேவர்களின் தடுமாற்றத்துக்கான காரணத்தையும் புரிந்துகொண்டார். கோபத்துடன் கண்விழித்தார். இறைவனின் கோபத்தின் விளைவாக ஒரு நெருப்புக் கோளம் ஏற்பட்டு, அந்த நெருப்புக் கோளமே ஓர் அசுரனாக உருவெடுத்தது. அந்த அசுரன்தான் அக்னியாசுரன். அவன் உடலில் இருந்த நெருப்பின் வெம்மை, தேவர்களுக்கும் தகிப்பை ஏற்படுத்தியது. எங்கு சென்றாலும் அவர்களை விடாமல் துரத்தினான் அக்னியாசுரன். இறுதியில் பகவானிடமே தஞ்சமடைந்தனர்.
அவர் தேவர்களிடம், ``பக்தி செய்யும்போது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தாத காரணத்தினால்தான், உங்கள் உடல் பற்றி எரிகிறது. அக்னியாசுரன் மறைந்தால்தான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும். ஆனால், அக்னியாசுரன் என்னால் தோன்றியவன். அவனுக்கு அழிவில்லை என்றாலும், உங்களைப் போலவே அவனுக்கும் எப்போது ஒரு பெண்ணின் மீது மோகம் ஏற்படுகிறதோ, அப்போதே அவன் என்னால் அழிக்கப்படுவான். அதுவரை நீங்கள் கடலுக்குள் பதுங்கி இருங்கள்'' என்று கூறிவிட்டார்.

அக்னியாசுரனின் வெம்மை தாங்காமல் அனைத்து உலகங்களும் தவித்தன. 
ஒருநாள் அக்னியாசுரன் தன் அழிவைத் தானே தேடிக்கொள்ளும் நாளும் வந்தது. 

அக்னியாசுரன் தான் பூமிதேவியிடம் கொண்ட மோகத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டி, பூமிதேவியை விரட்டிச் சென்றான். பூமிதேவி வைகுண்டம் சென்று பெருமாளைத் தஞ்சமடைந்தாள். பூமிதேவியைத் துரத்திக்கொண்டு வந்த அசுரனை, மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து, அவனை அப்படியே விழுங்கிவிட்டார். 

ஆத்திரத்துடன் திருமாலின் வயிற்றிலிருந்து வெளிவரத் துடித்தான் அசுரன். அப்போது அவனிடம், ``அசுரனே, உலகின் கடைசி உயிர் உள்ளவரை, அனைத்து உயிரினங்களின் அடிவயிற்று நெருப்பான பசியாக நீ இருப்பாய்'' என்று அவனை சாந்தப்படுத்தினார் பகவான். 
அசுரனின் கதை இப்படியென்றால், பகவானுடைய பக்தனின் கதையோ வேறு மாதிரி இருக்கிறது.
அந்தப் பக்தன் வேறு யாருமல்ல, சொல்லின் செல்வன் என்ற புகழுக்கு உரிய அனுமன்தான். 

ராமனின் தூதுவனாக இலங்கைக்கு வந்த அனுமனை ராவணன் அழிக்க நினைத்தான். `தூது வந்தவனைத் தண்டித்தல் தர்மம் அல்ல' என்று விபீஷணன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அதைப் பொருட்படுத்தாமல், ராவணன் கட்டளைப்படி அசுரர்கள் அவன் வாலில் தீ வைத்தனர். 

விஷயத்தை திரிசடையின் மூலம் கேள்விப்பட்ட சீதை, அக்னி பகவானிடம், `சத்தியத்தையும், நேர்மையையும் உன்னாலும் எதுவும் செய்ய முடியாது என்பதை ராவணனுக்கும் இந்த உலகத்துக்கும் உணர்த்துவாய்' என்று கட்டளையிட்டாள்.
அதேபோலவே, அனுமனின் வாலில் வைத்த நெருப்பு, அனுமனைச் சுட்டெரிப்பதற்குப் பதிலாக, அனுமன் தாவிச் சென்ற இடங்களெல்லாம் தீப்பற்றி எரிந்தது. எல்லாம் முடித்து அனுமன் ஒரு மலையின் மீது ஏறிப் பார்த்தபோது இலங்கையே தீக்குளித்ததுபோல் காட்சி அளித்ததாம்.

எனவேதான், `பகைவர்க்கு வெம்மையையும், பக்தர்களுக்குக் குளிர்ச்சியையும் அருளும், தோற்றமாய் நின்ற சுடரொளியான பகவானே, உன்னை வணங்கி, உன் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். விழித்தெழுவாயாக' என்று பாடுகிறாள் கோதை!

அடுத்த கட்டுரைக்கு