ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 18

ரங்க ராஜ்ஜியம் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 18

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியம்: ம.செ

நீலிவனத்து மகரிஷி திருக்கதையைத் தொடர்ந்தார்.

‘‘அவிர்பாகம் அவ்வளவும் வாமன மூர்த்தி யைச் சென்று சேரத் தொடங்க, அவற்றைப் பெற வேண்டிய அசுராதியர் ஓலமிட்டார்கள்; மகாபலி அதிர்ந்தான். குருவான சுக்ராச்சார்யரிடம், ‘எதனால் இப்படி நடக்கிறது?’ என்று கேட்டான். 

ரங்க ராஜ்ஜியம் - 18

அவரும் கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்து, வாமனராய் ஸ்ரீமகாவிஷ்ணு வருவதை உணர்ந்தார், அதிர்ந்தார்!

‘மகாபலி! எல்லாம் அந்த பாம்பணையான் செயல். அவன் அம்சமே வாமனமாக உன் பரம்பரையில் தோன்றி, உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. உன் வேள்விக்கான உச்சக்கட்ட சோதனையும் தொடங்கிவிட்டது. நீ அந்த வாமனன் விஷயத்தில் கவனமாக இருந்தால் போதும்... வேறு ஏதும் செய்யத் தேவையில்லை..’ என்றார்.

‘என் பொருட்டு அந்த மகாவிஷ்ணுவேவா வருகிறார்..? அதிசயம், ஆச்சர்யம்! உலகமே அவரைத் தேடி அலைகையில், அவர் என்னைத் தேடி வருவதே எனக்குப் பெரிய பெருமை. வரட்டும்... வரட்டும்...’ என்று அச்சமின்றி அவர் வருகையைச் சிந்தித்தவன், அதை அகந்தையோடு உணர்ந்ததுதான் பிழை! ‘அடேய் பலி... மகிழாதே. விஷ்ணு பற்றி நீ அறியாய். மாமாயன் அவன். உன் நிமித்தம் பிரம்மசாரி பிராமணனாய் தானம் கொள்ள வருகிறான். எச்சரிக்கை!’

‘இதில் எச்சரிக்கைக்கொள்ள என்ன இருக்கிறது குருவே? இது எனக்கு எவ்வளவு பெருமை? சகல புவனங்களையும் சகல ஜீவராசிகளையும் படைத்ததாகப் பெருமை கொள்பவர், தான் படைத்த ஒருவனிடமே யாசகம் பெற வருகிறார் என்றால், இதில் யார் பெரியவர்... பெறுபவரா, தருபவரா?’

மகாபலிக்குள் இருந்த ஆணவமே அப்படிக் கேட்கச் செய்தது.

‘வேண்டாம் பலி... உன் ஆணவம் உன்னைக் கவிழ்த்துவிடும்.’

‘என்ன குருவே... என் தைரியத்தைப் புதிதாய் ஆணவம் என்கிறீர்? இவ்வளவு நாள்கள் இல்லாத ஆணவம் இப்போது வந்துவிட்டதா என்னிடம்?’

ரங்க ராஜ்ஜியம் - 18

‘அடேய் அறிவிலி! அது இப்படித்தான் வெளிப் படும். அதை ஆராய இப்போது காலமுமில்லை. உன் கவனமெல்லாம் வேள்வியில் மட்டும் இருக்கட்டும்.’

‘அதிலென்ன சந்தேகம்? அதேநேரம், அவர் என்னிடம் யாசிப்பது என்பதும் வேள்வியின் ஓர் அங்கம்தானே? நான் அதை மறுத்தால் வேள்வி பங்கப்படாதா?’

‘உண்மைதான்... இனி உன்னிடம் பேசிப் பயனில்லை. பொறுத்திருந்து பார்த்து அதற்கேற்பவே நடக்கவேண்டும். நீ உன் கடமையைச் செய்...’ என்று ஒதுங்கி நின்றார் சுக்கிராசார்யர்!

வாமனனும் யாகசாலைக்குள் நுழைந்தார்!

தாழங்குடை பிடித்து, கமண்டலம் ஏந்தி, பூ மண்டலம் மயங்க ஜோதிப்பிழம்பு போல வந்த அந்தப் பிள்ளையைக் கண்டு, அங்கிருந்த சகலரும் ஒரு வினாடி தங்களை மறந்தனர்.

காணக்கிடைக்காத காட்சி... காட்சிகளுக்கெல்லாமும் காட்சி!

“வாரும் அதிதி புத்ரரே... எம் வழித்தோன்றலே... சீரிய வேதகரே... உம் ஒருவர் வருகை ஆயிரமாயிரம் வேதியர்க்குச் சமமானது. என்ன ஒரு தேஜஸ்... என்ன ஒரு காந்தம்... என்ன ஒரு திவ்யம்... என்ன ஒரு பரிமளம்..! தாங்கள் என்னிடம் தாராளமாய் எதையும் வேண்டலாம். அதேநேரம், அது உமது தேவைக்கானதாக மட்டுமே இருக்கவேண்டும். என்னை குறைவுபடுத்துவதாக இருந்துவிடக் கூடாது.”

-சுக்கிராசார்யரின் எச்சரிக்கையை மனதில் கொண்டும் அதேநேரம் தான் ஒரு மாமன்னன் என்பதை மறந்துவிடாமலும் வேள்விக்கான நீதியோடு பேசி முடித்தான் மகாபலி.

புன்னகைத்தார் வாமனன்! சகல ஜீவராசிகளுக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு அதன் நிமித்தம் ஏற்பட்டது. மகாபலியும்கூட அதை உணர்ந்தான்.

‘மகாபலி... மிகுந்த எச்சரிக்கையோடு பேசியிருக்கிறாய். இந்த வேள்வியில் தானம் ஓர் அங்கம். இல்லாவிட்டால், நானும் இங்கு வந்திருக்கமாட்டேன்; நீயும் இப்படிப் பேசியிருக்கமாட்டாய்.’

‘உண்மைதான்... ஆயினும், வராது வந்த மாமணி தாங்கள். அந்த மாமணியே என்னிடம் யாசகம் பெறப்போகிறது என்றால், அதைவிட வேறு பெருமை எனக்கு இருக்க முடியுமா என்ன?’

‘யாசகம் தாழ்வல்ல மகாபலி... அதுவொரு கர்வபங்கம் - தன்னடக்கம்!’

‘ஆஹா... தாழ்வில்லாத உயர்ந்த ஒன்றுக்கு நான் ஆட்படப் போகிறேன் என்பது பெருமைக்கும் பெருமையல்லவா?’

‘உன்னை மையமாக வைத்தே சிந்திக்கிறாய். நான் கேட்கப் போவதைத் தர இயலாமல் போனால், நீ என்ன ஆவாய் என்று எண்ணிப் பார்க்கிறேன்.’

‘என்னிடம் இருப்பதைக் கேட்கும்பட்சத்தில் அதற்கெல்லாம் இடமே இல்லை அதிதி புத்ரரே...’

‘இல்லாத ஒன்றைக் கேட்பவன் நல்ல யாசகன் இல்லை மகாபலி.’

‘பிறகென்ன கேளுங்கள்... நாடு, நகரம், வீடு, வாசல், மாடு, மடுவு, காடு, கழனி... எது வேண்டும்? இந்தப் பூவுலகே என் சொத்துதான்...’

மகாபலி அப்படிக் கேட்கவும் அருகில் நின்றுகொண்டிருந்த சுக்கிராசார்யர் தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் கண் வழியே... ‘மகாபலி எனும் மகாகர்வியே... வாயை விடாதே. பாம்பைத் தேடி வந்த தவளை ஆகாதே...’ என்பது போல் பார்த்தார்.அதெல்லாம் மகாபலிக்குப் புரியவுமில்லை; வாமனனுக்குப் புரியாமலுமில்லை. ‘அப்படியா?’ என்று பலபொருள்பட கேட்டுவிட்டு, ‘சுக்ராசார்யர் ஏதோ சொல்ல விரும்புவது போல் தெரிகிறது. என்னவென்று கேள் மகாபலி...’ என்று அப்போதும் ஒரு வாய்ப்பை மகாபலிக்கு அளித்தார்.

‘எங்கே நீங்கள் நான் தர முடியாத தைக் கேட்டு... அதனால் வேள்விக்கு பங்கம் நேரிட்டுவிடுமோ என்று அவருக்குள் அச்சம்’ - என்றான் மகாபலி.

‘அதுதானே நல்ல குருவுக்கும் அழகு. போகட்டும்... உனக்கு அந்த அச்சம் இல்லையா?’

‘என்ன முனி புத்ரரே! என்னைச் சோதிக்கிறீரா?’

‘சோதனையா... நாராயணா! நான் சாதாரணமாகத்தான் கேட்டேன்.’

‘எப்படிக் கேட்டாலும் சரி, நீர் என்னிடம் கேட்பது எனக்குப் பெருமை. உம் கை தாழ்ந்திருக்க, என் கை உயர்ந்திருக்க... யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்?”

மகாபலி இப்படிச் சொல்லும் போது அவன் மார்பு விரிந்தது. முகத்தில் செருக்கு  தாண்டவமாடியது.

‘பிறகென்ன... உனக்கு பாக்கிய மான அந்த யாசகத்தை நானும் கேட்டுவிடுகிறேன். எனக்குத் தேவை மூன்றடி நிலம். அதுவும் என் காலின் அளவில் மூன்றே மூன்றடி. அவ்வளவுதான்!’

வாமனனின் அந்த ‘அவ்வளவு தான்’ என்ற முடிப்பு, மகாபலியை வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டது. சுக்கிராசார்யரோ ஒரு பெரும் வலைக்குள் மகாபலி அகப்படப்போவதை உணர்ந்தவர் போல் தவிக்கத் தொடங்கினார்!’’

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 18

சிறப்புக்குச் சிறப்பு...

மக்குத் தெரிந்த திருத்தலங்கள், நாம் வணங்கும் அடியார்களின் சிறப்புப் பெயர்களைத் தெரிந்துகொள்வோமா?

திருமங்கையாழ்வார்: நாலுகவிப் பொருமாள்

திருநாவுக்கரசர்: தாண்டகவேந்தர், வாகீசர்.

திருவாதவூரர்: மாணிக்கவாசகர்.

கங்கை: பாகீரதி

வைகை: வேகவதி

உத்திரபிரதேஷம்: பிரம்மரிஷி தேசம்

கேரளம்: கடவுளின் தேசம்

திருப்பதி: அஞ்சனகிரி

திருச்செந்தூர்: திருச்சீரலைவாய், செந்தில்.

மதுரை: திருஆலவாய், நான்மாடக்கூடல்.

திருநள்ளாறு: ஆதிபுரி

நாங்குநேரி: வானமாமலை

சிதம்பரம்: தில்லை, சிற்றம்பலம்.