Published:Updated:

`கோகுலத்து ஆயர்களுக்கு அருளியவனே... கோவிந்தா..! எமக்கும் அருள்வாய்’ திருப்பாவை - 24

`கோகுலத்து ஆயர்களுக்கு அருளியவனே... கோவிந்தா..! எமக்கும் அருள்வாய்’ திருப்பாவை - 24
`கோகுலத்து ஆயர்களுக்கு அருளியவனே... கோவிந்தா..! எமக்கும் அருள்வாய்’ திருப்பாவை - 24

`கோகுலத்து ஆயர்களுக்கு அருளியவனே... கோவிந்தா..! எமக்கும் அருள்வாய்’ திருப்பாவை - 24

``அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்..."

`மகாபலி இவ்வுலகத்தைக் கைப்பற்றியபோது, உனது திருவடிகளால் உலகை அளந்தவனே... நீ வாழ்க. 
சீதையை மீட்கத் தெற்கிலுள்ள இலங்கைக்குச் சென்று ராவணனை வெற்றி கொண்டவனே... உனது வீரம் வாழ்க. 
சக்கர வடிவில் வந்த சகடகாசுரனை காலால் உதைத்து வீழ்த்தியவனே... உனது புகழ் வாழ்க.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக்கொண்டு, அவனை கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழல் வாழ்க!

கோவர்த்தனகிரியைக் குடையாக்கி ஆயர் குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து காத்தவனே! உனது குணம் வாழ்க! பகைவர்களை வெல்லும் உனது கையிலுள்ள வேல் வாழ்க. இவ்வாறான, உன்னுடைய வீரச் செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக" என்று பாடுகிறாள் கோதை.

திருப்பாவையில் வேறு எந்தப் பாடலுக்கும் இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு. திருப்பாவையிலேயே இந்தப் பாடலைத்தான் தனிச் சிறப்பாக `போற்றிப் பாசுரம்’ என்றும், `பல்லாண்டு’ என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

அதே போல், இன்னொரு சிறப்பும் இன்றைய பாடலுக்கு உண்டு. இதற்கு முன்பே, `ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்றும், `அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே...' என்றும் வாமனனைப் பாடிய கோதை, வேறு எந்த அவதாரத்தையும்விடச் சிறப்பாக மூன்றாவது முறையாக இப்போது  `அன்று இவ்வுலகம் அளந்தாய்...’ என இந்தப் பாசுரத்தை ஆரம்பித்து மூன்று அடியில் உலகை அளந்த வாமன அவதாரத்தை மூன்றாவது முறையாகப் போற்றிப்பாடுகிறாள்.

அப்படி என்னதான் சிறப்பு இந்த வாமன அவதாரத்தில்..?

பக்தப் பிரகலாதனின் பேரன் அசுரகுலச் சக்கரவர்த்தி மகாபலி. சிறந்த சிவபக்தன். நற்குணங்களால் தேவர்களுக்கும் மேலானவனாகக் கருதப்பட்டவன். ஆனால், அதுவே அவனது கர்வத்தை அதிகப்படுத்தி, தனக்கு இந்திர பதவி வேண்டி யாகம் ஒன்றைத் தொடங்குகிறான் மகாபலி. மகாபலியிடமிருந்து தேவர்களை ரட்சிக்க வேண்டி, ஸ்ரீமன் நாராயணன் வாமனனாக உருவெடுத்து, மகாபலியின் யாகசாலைக்கு யாசகம் கேட்டு வருகிறார்.

யாசகம் தர ஒப்புக்கொண்ட மகாபலியிடம், மூன்று அடி நிலம் கேட்ட வாமனனைப் பார்த்து மகாபலி, `இந்த உலகையே கேட்டாலும் தர இயலும் என்னிடம், இப்படி மூன்றடி மட்டும் யாசிப்பது சரியா?' என்று அகந்தை தொனிக்கக் கூறினான்.

ஆனால், மாதவனோ புன்னகை மாறாமல் நின்றார். இது கண்டு வியப்புற்ற மகாபலி, வாமனனிடம், ``நீ கேட்டபடியே மூன்றடி நிலத்தை நீயே அளந்து எடுத்துக்கொள்...’’ என்று சொல்ல, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.

`உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...' என்கிறது வள்ளுவம். இறைவனின் திருவடி மகிமையை அடியார்கள் போற்றிப் புகழ்வதை நாம் அறிவோம். காரணம் அது இந்தப் பிரபஞ்சத்தையே அளக்க வல்லது. அத்தகைய திருவடி சம்பந்தம் விசேஷமானது. திருவடியோடு சம்பந்தம் கொள்கிற உயிரற்ற வஸ்துகூடப் பூஜிக்கத் தகுந்ததாகிவிடும். இதற்குச் சரியான உதாரணம் ராமாயணத்தில் வரும் மித்ரபந்துவின் கதையில் உள்ளது. 

சீதா - ராமரின் திருமணம் முடிந்து, அயோத்தியில், திருமண வரவேற்பு நடந்துகொண்டிருக்கிறது.

விருந்தில் கலந்துகொண்டு தம்பதிகளுக்குப் பரிசளிக்கும் கூட்டத்தில், மித்ரபந்து என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியும் காத்திருந்தான். ராமனுக்கு அவன் கைகளாலேயே செய்த புதிய ஒரு ஜோடி செருப்புகளை, கையில் வைத்துக்கொண்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னும் பின்னும் உயர்ந்த பரிசுப் பொருள்களை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். எல்லோரும் அவனை ஏளனமாகப் பார்த்தனர். அவனது பரிசுப் பொருளான பாதுகைகளைப் பார்த்து கேலி பேசினர். மித்ரபந்து மிகவும் மனம் குறுகி நின்றான். பேசாமல் திரும்பிப் போய்விடலாமா என்றுகூட எண்ணினான். ஆனால், ராமனோ ஒரு துளசி இலைக்கே இரங்கி அருள்பவனாயிற்றே.

மித்ரபந்துவை வரவேற்பு மேடைக்கு அன்போடு வரவேற்றான். மித்ரபந்துவோ நாணத்துடன் தன் பரிசைத் தயங்கித் தயங்கி நீட்டினான்.
``ராமச்சந்திரமூர்த்தி, நானே தயாரித்த இந்தப் பாதுகைகளைத் தவிர, உனக்குப் பரிசாகத் தர என்னிடம் வேறு எதுவுமில்லையே..!’’ என்று கண்ணீர் மல்க நின்றான் மித்ரபந்து. ராமபிரான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டார். 

``நீ தரும் பாதுகைகள் எனக்கு மிகவும் ஏற்புடையவை...’’ என்று மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டாராம்.  
காலச் சுழற்சியில், ராமர் வனவாசம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. மரவுரி தரித்து அவர் அயோத்தியிலிருந்து புறப்பட்டபோது அவரோடு,  பெரிய பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் பரிசளித்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் எவையும் உடன் செல்லவில்லை. ஏழை மித்ரபந்து அளித்த பாதுகைகளே அவருடைய திருவடிகளைத் தாங்கிச் சென்றது. வனவாசத்திலிருந்து திரும்ப வருமாறு, அண்ணலைப் பரதன் அழைத்தபோது, அவர் வர மறுத்தார். பரதனோ தமையனின் பாதுகைகளையாவது தருமாறு யாசித்துப் பெற்றான். 

அடுத்த பதினான்கு ஆண்டுகள் சிம்மாசனத்தில் இருந்து ராமராஜ்யத்தை ஆண்டது, மித்ரபந்து பரிசளித்த அதே பாதுகைகள்தான். எந்தப் பாதுகைகளைப் பார்த்து மக்கள் சிரித்தனரோ அந்தப் பாதுகையின் ஆட்சியின் கீழ்தான் அவர்கள் வாழ வேண்டியதாயிற்று.

அதேபோல, உருவில் சிறியவர் என்று யாரை மகாபலி நினைத்தானோ அவரின் திருவடிதான் மூவுலகங்களையும் அளந்தது. திரிவிக்கிரமர் ஓங்கி உலகளந்து, மூன்றாவது அடியில் மகாபலியின் தலையில் அழுத்தி, அவன் ஆணவத்தை அழித்து அவனை ஆட்கொண்டார்.

வாமனனைப் பாடும் போதெல்லாம், வெறுமனே பாடாமல் உத்தமன் என்றும் உம்பர் கோமான் என்றும் கோதை போற்றியும் ஏற்றியும் சொல்கிறாள். வாமனனை ஏன் உத்தமன் என்கிறாள்..?

மனிதர்களை எல்லாம், அவர்கள் குணங்களை வைத்து அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்.

தான் அழிந்தாலும் பரவாயில்லை, பிறர் வாழ்ந்துவிடக் கூடாது என்று மற்றவர்களை அழிப்பவன் அதமாதமன்.

பிறரை அழித்து, தன்னைக் காத்துக் கொள்பவன் அதமன். 

பிறர் வாழ வழிவிட்டு தானும் வாழ்பவன் மத்யமன். 

தான் அவமானப்பட்டாலும், அழிந்தாலும் பிறரை வாழ வைப்பவன் உத்தமன்.

வாமன அவதாரத்தில், மகாபலியை அழிக்கவில்லை. மாறாக, அவனது செருக்கைத் திருத்தி, அவனை ஆட்கொள்கிறார் திரிவிக்கிரமப் பெருமாள். அது மட்டுமன்றி, இந்த அவதாரத்தில் தன்னைக் காக்கும்படி கேட்ட இந்திரனுக்காக, தனது அழகு ரூபத்தை விட்டொழித்து, தன்னை உருவத்தில் சிறியவனாகக் குறுக்கிக்கொள்கிறார் திருமால்.

மகாபலியிடம் யாசகம் கேட்டுப் பெற்ற வாமனன், விஸ்வரூபம் எடுத்து, தன் திருவடிகளால் மூவுலகையும் அளந்தபோது, அவருடைய திருவடிகளானது, நல்லவர் - கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அருள் வழங்கியதாம்.

உருவு கண்டு எள்ளாதே என்பது மட்டுமல்ல, மனிதனோ... மகேசனோ... யாரானாலும், தன்னலம் பாராது, பிறர் நலம் பேணும்போது மட்டுமே அவருக்கு உத்தமன் என்ற பெயரைப் பெற முடியும் என்பதே வாமன அவதாரம் நமக்குச் சொல்லும் பாடம். அதனால்தான் வாமனனை, உத்தமன்  என்றும், கோமான் என்றும் முன்னர் அழைத்த கோதை இன்று, `அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி...’ என்று மீண்டும் அவனது பாதம் பணிந்து, `உனக்கு எப்போதும் சேவை செய்யவே, நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்குப் பறையாகிய மோட்சத்தை அருள்வாயாக’ என்று இறைவனை வேண்டிப்பாடுகிறாள் கோதை..!

அடுத்த கட்டுரைக்கு