Published:Updated:

யசோதையை மகிழ்விக்க கோகுலம் வந்த மாதவா... எமக்கும் அருள்செய்து மகிழ்விப்பாயாக! திருப்பாவை - 25

யசோதையை மகிழ்விக்க கோகுலம் வந்த மாதவா... எமக்கும் அருள்செய்து மகிழ்விப்பாயாக! திருப்பாவை - 25
யசோதையை மகிழ்விக்க கோகுலம் வந்த மாதவா... எமக்கும் அருள்செய்து மகிழ்விப்பாயாக! திருப்பாவை - 25

``வசுதேவரே... உங்களது முற்பிறவிகளின் பலனால் நாராயணனே உங்களுடைய மகனாகப் பிறந்துள்ளார். இந்தக் குழந்தையைக் கோகுலத்துக்கு இப்போதே கொண்டு செல்லுங்கள்.

``ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்..."

``தேவகியின் மகனாக நள்ளிரவில் சிறையில் பிறந்தவனே... அன்றிரவே, யசோதையிடம் வளரச் சென்றவனே... இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உன்னை அழிக்க வேண்டும் என்று தீங்கு நினைத்த கம்சனது வயிற்றில் நெருப்பாக நின்ற திருமாலே... உனது அருளை யாசித்து நாங்கள் வந்துள்ளோம்... நீ எங்களுக்குப் புரியும் அருளால் கிடைக்கும் செல்வச் சிறப்பையும், எங்களுக்காகச் செய்யும் பணிகளையும் புகழ்ந்து நாங்கள் பாடிட, எங்களது துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ந்திருக்க அருள்புரிவாயாக...’’ என்று வேண்டுகிறாள் கோதை..!

``ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர...’’ என்று கண்ணனது பிறப்பைப் பாடுகிறாள் கோதை. 

தேவகி என்ற ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, யசோதை என்ற ஒருத்திக்கு மகனாக ஒளித்து வளர வேண்டிய நிலை ஏன் வந்தது கண்ணனுக்கு..?
கண்ணன் பிறப்பதற்கு முன்பாக நடந்ததுதான் என்ன..?
என்பதைக் கூறும் கண்ணன் மற்றும் பலராமனின் வரலாறு, கர்ப்ப கால அறிவியலைப் பற்றி சிறிது பேசவும் வாய்ப்பளிக்கிறது.

``உனது தங்கைக்குப் பிறக்கவிருக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து...’’ என்ற அசரீரி குரலைக் கேட்டவுடன், தான் மிகுந்த அன்பு செலுத்திய தன் தங்கை தேவகியைக் கொல்லும் முடிவுக்கே வந்துவிட்டான் கம்சன்...

ஆனால் வசுதேவரோ,
``கம்சா... எங்களுக்குப் பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு..? எங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகள் அனைவரையும் உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன்... தேவகியை மட்டும் உயிருடன் விட்டுவிடு’’ என்று கெஞ்ச, தங்கையின் மீதிருந்த பாசத்தால் தேவகியைக் கொல்லும் எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்ட கம்சன், அதற்குப் பதிலாக, பலத்த பாதுகாப்புடன்கூடிய சிறையில் வசுதேவரையும் தேவகியையும் அடைத்து, தனது கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்..

ஆனாலும், அவனது கொடூர எண்ணம் மட்டும் தொடர்ந்தவண்ணம் இருந்தது.
தனக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் தொடர்ச்சியாக, பிறந்த இடத்திலேயே, சிறைச் சுவரில், தன் தமையன் கம்சன் அறைந்து கொன்றதைப் பார்த்து மனம் கலங்கிய தேவகி, இதோ இப்போது ஏழாவது முறையாகக் கருவைத் தன் வயிற்றில் சுமந்து நிற்கிறாள்...
ஆறுமாதக்கரு, அவளது கருப்பைக்குள் உதைக்க, உதைக்க, 

இந்தக் குழந்தையையும் பிறந்தவுடன் தன் அண்ணன் கொன்று விடுவானே என்று எண்ணி, கண்ணீரில் கரைந்து, இறைவனிடம் தன் குழந்தையைக் காப்பாற்ற பிரார்த்தித்தபடி உறங்கிப்போகிறாள் கர்ப்பவதியான தேவகி.
ஆனால், அன்றைய நள்ளிரவில் நடந்ததோ வேறு...

பகவான் ஸ்ரீமன் நாராயணன், மாயையை அழைத்து, 
``இப்போது தேவகியின் கருவில் வளரும் ஆதிசேஷனை, கோகுலத்தில் வாழும் வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் கருவுக்கு மாற்றிவிடுவாயாக... பிறகு, நீயும் யசோதையின் வயிற்றில் பெண்ணாகப் பிறந்து, துர்கை, வைஷ்ணவி, மாயை என்று பல பெயர்களில் அழைக்கப்படுவாயாக... அதுமட்டுமன்றி ரோகிணியின் புதல்வனை, இந்த உலகமே பிரமிக்கும் பலசாலியாக, பலராமனாக உருவாக்குவாயாக...’’ என்று கூறி மறைந்தார்.

``ஒரு தாய் உதிரத்தில் ஓராறு திங்கள் உறைந்த பின்னை...
ஒரு தாய் வயிற்றில் வந்துற்ற தெம்மாயம் உரைத்திருளே...’’ என்றது போலவே, தேவகியின் வயிற்றில் ஆறுமாதம் வசித்தபின்பு, மற்றொரு தாயான ரோகிணியின் வயிற்றில், கருவாகவே வந்து சேர்கிறான் பலராமனான சங்கர்ஷணன். சங்கர்ஷணன் என்றால் இழுத்து வைக்கப் பட்டவன் என்று பொருளாகும்.

இப்படி, ரோகிணியின் வயிற்றில் இழுத்து வைக்கப்பட்டுப் பிறந்த பலராமனும், யசோதையின் வீட்டில் வளர்ந்து, பெரும் பலசாலியாக நிற்கிறான்...

ஆனால் தேவகியின் ஏழாவது கர்ப்பம், ஆறு மாதங்களில் கலைந்துபோனதாகவே, தேவகியும் மற்ற அனைவரும் நம்பினர்...
அதற்கு, கம்சனே காரணம் என்றும் அவனைப் பழித்தனர். அதே தருணத்தில், எட்டாவது முறையாகத் தேவகி கர்ப்பம் தரித்தாள். அடுத்தடுத்து ஆறு குழந்தைகள், தன் கண்ணெதிரே கம்சனால் கொல்லப்பட, ஏழாவது முறையோ ஆறுமாதக் கரு அழிய, இந்தக் குழந்தையாவது மிஞ்ச வேண்டுமே என்ற பிரார்த்தனையுடனும் கண்ணீருடனும் நாள்களைக் கழித்தாள் தேவகி.
இறுதியில் அந்த நன்னாளும் வந்தது. 

ஆவணி மாதத்து அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில், நள்ளிரவு நேரத்தில் ஈசனும் பிரம்மனும் ஆசீர்வதிக்க, தேவர்களும் ரிஷிகளும் காத்திருக்க, கமல மலர்க் கண்களுடனும் மார்பிலே ஸ்ரீவத்ஸ மருவுடனும், கழுத்திலே துளசி மணிமாலையுடனும், தேவகியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தான் கண்ணன்.

பகவானே குழந்தையாக அவதரித்துள்ளார் என்பதை உணர்ந்த வசுதேவரும், தேவகியும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்..
ஆனால் அவர்களது மகிழ்ச்சி மறுகணமே மறைந்து போனது.. 
பொழுது விடிந்ததும் கம்சன் வந்து, இந்தக் குழந்தையையும் கொன்று விடுவான்..
அதற்கு முன்பாக குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் நிறைந்திருந்தது..
அப்போது அசரீரி ஒன்று, வசுதேவரை அழைத்து.

"வசுதேவரே...உங்களது முற்பிறவிகளின் பலனால் நாராயணனே உங்களுடைய மகனாகப் பிறந்துள்ளார். இந்தக் குழந்தையை கோகுலத்திற்கு இப்போதே கொண்டு செல்லுங்கள். அங்கு உங்கள் நண்பரான நந்தகோபருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். யசோதை  இந்தக் குழந்தையை அங்கு வளர்க்கட்டும்...உரிய நேரத்தில் நல்லன அனைத்தும் நடந்தேறும்.." என்று கூறி மறைந்தது.

அசரீரியின் வாக்கிற்குப் பிறகு, அந்த நள்ளிரவிலும், அடுத்தடுத்த காரியங்கள் தடையின்றி தொடர்ந்து நடந்தன. மாயையின் சக்தியால் சிறையின் வாயில்கள் தானாகவே திறந்து கொள்ள, காவலர்கள் மயக்கமடைய, வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு, சிறையிலிருந்து வெளியேறினார். 

வெளியே இடி முழக்கத்துடன், கடும் மழை பெய்யத் தொடங்கியபோதும், கோகுலத்திற்கு விரைந்து செல்வதற்காக யமுனை நதிக்கரையைச் சென்றடைந்தார் வசுதேவர். அந்த நள்ளிரவு நேரத்தில் இடியும் மின்னலுமாக மழை கொட்டித் தீர்க்க, யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓட, குழந்தை வைத்திருந்த கூடையை தலையில் வைத்துச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனை நதிக்கரையில் நின்று, இறைவனை உரக்க வேண்டினார்.

என்ன அதிசயம்..!
எதிரே யமுனையின் வெள்ளம் இவருக்கு வழிவிட்டு இரு பிரிவாகப் பிரிந்து கொண்டது. தலையில் குழந்தையை வைத்துள்ள கூடையுடன் வசுதேவர் யமுனையில் இறங்கி நடக்க, அவர் தலையில் இருந்த குழந்தைக்கு வாசுகி எனும் பாம்பு (ஆதிசேஷன் என்றும் சொல்வதுண்டு) குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் பாதுகாத்துக் கொண்டே வந்தது.

ஆற்றைக் கடந்த வசுதேவர், குழந்தையுடன் கோகுலத்தில் நந்கோபனின் வீட்டை அடைந்து,  அங்கு மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்த யசோதை அருகில் கண்ணனைக் கிடத்திவிட்டு, அவளருகில் இருந்த பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, வந்த வழியே திரும்பினார்.
காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் குழப்பமடைந்தான். ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்துவிடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை கொல்ல முற்பட்ட போது, அந்தக் குழந்தை துர்கையாக வடிவெடுத்து,
'கம்சனே...உன்னைக் கொல்லப் போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவனே வந்து உன்னை அழிப்பான்..' என்று கூறி மறைந்தது.

"ஒருத்தி மகனாய்ப் பிறந்து...ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன், பிறகு தனது தாய்மாமனான கம்சனை அழித்தது, நமக்கெல்லாம் தெரிந்த வரலாறு என்றாலும், கண்ணன் ஓரிடத்தில் பிறந்து, மற்றோரிடத்தில் மாறியதையாவது நம்ப முடிகிறது. 
ஆனால் அதற்குமுன் தேவகியின் ஏழாவது குழந்தையான பலராமனை, அவளது கர்ப்பத்திலிருந்து, ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது என்பது நடைமுறையில் சாத்தியம்தானா..?

இப்படி நடக்க ஏதேனும் வாய்ப்புண்டா..? என்ற நமது கேள்விகளுக்கு முடியும் என்கிறது மகப்பேறு மருத்துவம்..!!
இப்படி கர்ப்பத்தை எடுத்து கருப்பைக்குள் வைக்கும் முறையை, டெஸ்ட் ட்யூப் பேபி எனப்படும்  In Vitro Fertilization என்று அழைக்கின்றனர் மகப்பேறின்மை சிறப்பு மருத்துவர்கள்.

கருக்குழாய் அடைப்பு அல்லது விந்தணு குறைபாடு உள்ளவர்களுக்கு, அவர்களது கருமுட்டை மற்றும் விந்தணுக்களைத் தனியே எடுத்து, தகுந்த ஆய்வகத்தில் கருவாக உருவாக்கி, அதனை எடுத்து அந்தத் தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவதுதான், இந்த டெஸ்ட் டியூப் பேபி என்ற செயற்கை கருத்தரிப்பு முறையாகும்.

அதுவே, தாயின் கர்ப்பப்பை வலுவிழந்த காரணத்தாலும், மற்ற பிற காரணங்களாலும் உருவான கருவை, வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்கு மாற்றுவது வாடகைத்தாய் என்ற Surrogacy முறையாகும்.
பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமலோ, அல்லது கர்ப்பப்பை முற்றிலும் செயல்படாமல் இருந்தாலோ, மேற்கொள்ளப்படுவது கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்ற Uterine Transplantation ஆகும்.

இந்த மூன்று முறைகளிலும், கருவை எடுத்து வைப்பது சாத்தியம் என்கிறது இந்த மருத்துவ அறிவியல். 
Robert Edwards மற்றும் Patrick Steptoe ஆகிய ஆங்கிலேய மருத்துவர்களின் கண்டுபிடிப்பான டெஸ்ட் டியூப் பேபி என்ற IVF முறையில், 1978 ஆம் ஆண்டில் Louise Brown என்ற பெண் குழந்தைதான், உலகின் முதல் செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த குழந்தையாவாள்.
இருபதாம் நூற்றாண்டில் முதன்முறையாக நடைமுறைக்கு வந்த இந்த அதிசய அறிவியல், புராணங்களில் அன்றே கூறப்பட்டுள்ளது என்பதுதான் பெரும் வியப்பு.

இன்று உலகெங்கும், பல்லாயிரக்கணக்கான செயற்கை கருத்தரிப்பு மையங்களின் வாயிலாக லட்சக்கணக்கான பெண்கள் குழந்தைப்பேறு பாக்கியத்தை அடைந்த போதிலும், மூன்றிலிருந்து நான்கு நாட்களான கருவை மாற்றம் செய்யும் Embryo Transfer வழிமுறைகள் மட்டுமே இப்போது வழக்கில் உள்ளன.

அன்று சங்கர்ஷணன் உருவான நன்கு வளர்ந்த, ஆறு மாதக் கருவை கருமாற்றம் செய்யும் அறிவியல்முறை இன்றளவும் நடைமுறையில் வரவில்லை என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை நம்புவோம்...!
தேவகியின் ஏழாவது கர்ப்பமான சங்கர்ஷணன் இழுத்து வைக்கப்பட்ட செயற்கை கர்ப்பம் என்றால், எட்டாவது கர்ப்பமான கண்ணன் பிறந்த கதையோ, மற்றுமொரு மருத்துவ அறிவியலை உள்ளடக்கியுள்ளது..
நள்ளிரவில் கொட்டும் மழையில், கண்ணனைக் கூடையில் வைத்து, வசுதேவர் கோகுலத்திற்குக் கொண்டு செல்ல, வழியெங்கும் இதமான குடையாக வந்ததாம் வாசுகி என்ற பாம்பு. கூடையும், அதன் மேல் விரிந்த ஒரு குடையும் என அந்தக் காட்சி, பிறந்த குழந்தையைப் பராமரிக்கும் Incubator மற்றும் Warmerருடன் அழகாக ஒத்துப் போகிறதல்லவா..??

எவ்வளவு இதமான பயணத்தை அந்தக் குளிரிலும் மேற்கொண்டிருக்கிறான் அந்த மாயக்கண்ணன்..!
மேலும் அனைத்து கர்ப்பம் தழுவிய விஷயங்களும் ஏன் நள்ளிரவிலேயே நடந்தேறி உள்ளன என்றால், நள்ளிரவுதான் சாத்வீக ஹார்மோனான மெலட்டோனினை சுரக்கச் செய்து கரு உருவாவதற்கும், கரு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது என்கின்றன ஆய்வுகள். மேலும், அதிலிருந்து கிடைக்கப்பெறும் Antioxidants தான் கருச்சிதைவு மற்றும் கர்ப்பகால இரத்தக் கொதிப்பை தடுக்கவும் செய்கின்றன என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஓரிரவில் ஒளித்து, இதமாகப் பயணித்து, வளர வந்த கண்ணனைப் பற்றிப் பேசும்போதும், அவன் வாழ்ந்த ஆயர்பாடியைப் பற்றிப் பேசும்போதும் அந்த வரலாறெங்கும் பேசாத சாட்சியாய், ஊடே ஓடிக்கொண்டே இருக்கிறது யமுனை நதி..
நள்ளிரவில் கூடையில் குழந்தையை வைத்துக் கொண்டு, கொட்டும் மழையில் யமுனை நதிக்கரையில் வசுதேவர் செய்வதறியாது நின்று இறைவனிடம் வேண்டியபோது, நதி எப்படி வழிவிட்டாள் என்றால், வசுதேவரின் தலைக்கு மேலிருந்தபடி தனது பிஞ்சுக் கால்களால் யமுனையைத் தொட்டானாம் அந்த மாயக்கண்ணன்.

உடனே, கரைபுரண்டு ஓடிய யமுனை இரண்டாகப் பிரிந்து, வழிவிட்டாளாம்.
அதனால்தான் இன்றுவரை கண்ணனின் நிறமான சியாமள வண்ணத்திலேயே மிளிர்கிறாள் யமுனை...!
கண்ணனின் பாதம் பட்டு புனிதம் பெற்றவள் என்பதாலும், தானே இரண்டாகப் பிரிந்து கண்ணனுக்கு வழிவிட்டதாலும், கண்ணனிடம் ஆழ்ந்த காதலைக் கொண்டவள் என்பதாலும், அவளது கரையில் கள்ளமற்ற இனிய லீலைகளைப் புரிந்த கண்ணனின் நினைவுகளாலும் புனிதமடைந்தாள் யமுனை..

அதன் காரணமாகவே அவளைப் போற்றி... 'தூயப் பெருநீர் யமுனை..' என்று பாடுகிறாள் கோதை..
இவ்வாறு, கிருஷ்ணவதாரம் நமக்கு உணர்த்துவது ஆன்மிகமும், அரசியலும், வாழ்வியலும் மட்டுமல்ல... அதனூடே ஓர் அற்புதமான அறிவியலையும் சேர்த்தேதான்..!!

"உன்னை அருத்தித்து வந்தோம்.. பறை தருதியாகில்.." என, அந்த யமுனையைப் போலவே...எந்தவித பற்றும், விருப்பு வெறுப்பும் இல்லாமல்,  சாத்வீகமாக...உண்மையாக.. தொழுதிட வந்துள்ளேன்...என்னை ஆட்கொள்வாயாக.." என்று இறைவனிடம்  வேண்டுகிறாள் கோதை..!!

அடுத்த கட்டுரைக்கு