Published:Updated:

கால்பட்டு அகலிகை... தோள்பட்டு குகன்... வாள்பட்டு கபந்தன்... இறைவா உன் திருவடியை அருளாயோ... திருப்பாவை - 26

ஆல மரத்தின் இளந்தளிர் மேலே படுத்துக்கொண்டிருக்கும் அழகிய கண்ணனே... அந்த இளந்தளிரிலே, ஆதேயமாகப் படுத்தபடி, இந்த வானகமும், வையகமும், கடலேழையும் காப்பவனே... கண்ணனே! - திருப்பாவை

கால்பட்டு அகலிகை... தோள்பட்டு குகன்... வாள்பட்டு கபந்தன்... இறைவா உன் திருவடியை அருளாயோ... திருப்பாவை - 26
கால்பட்டு அகலிகை... தோள்பட்டு குகன்... வாள்பட்டு கபந்தன்... இறைவா உன் திருவடியை அருளாயோ... திருப்பாவை - 26

``மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு டையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டி சைப்பாரே
கோலவிளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.."
                                                           

``திருமாலே... நீலநிறத்தவனே... பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே... மார்கழி நோன்பு நோற்கும் முறையைப் பற்றி எம் முன்னோர்கள் சொன்னவற்றைக் கூறுகிறோம்... கேட்பாயாக... உலகங்களையெல்லாம் நடுங்க வைக்கும் ஒலியையும், பாலின் நிறத்தையும் கொண்ட உனது பாஞ்ச சன்னியத்தைப் போன்ற வலம்புரிச் சங்குகளையும், பெரிய முரசுகளையும், திருப்பல்லாண்டு பாடுபவர்களையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும், விதானத்தையும் எங்களுக்கு அளித்து அருள் செய்ய வேண்டும்.." என்று பாடுகிறாள் கோதை.

`ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் 
ஞாலம் ஏழும் உண்டானாகிய கண்ணன்.."

ஆல மரத்தின் இளந்தளிர் மேலே படுத்துக்கொண்டிருக்கும் அழகிய கண்ணனே... அந்த இளந்தளிரிலே, ஆதேயமாகப் படுத்தபடி, இந்த வானகமும், வையகமும், கடலேழையும் காப்பவனே... கண்ணனே... எங்களுக்கு மோட்சத்தை அருள்வாயாக... என்பதையே, இன்று 
``ஆலினிலையாய் அருளேலோரெம்பாவாய்.." என்று யாசிக்கிறாள் கோதை..!

கண்ணன் மிகவும் புனிதமானவன்... தன்னை எதிர்ப்பவருக்கும் மோட்சத்தை வழங்கிய பெரும் அருள்வள்ளல் அவன். அப்படிப்பட்டவன், தன்னைத் துதிப்பவருக்கா நற்கதியை வழங்காமல் விடுவான்..?

கண்ணனின் கால்களைப் பற்றிக்கொண்டால், அவன் இரு விழிகளின் பார்வை பட்டால், அவன் மலர்க்கரங்கள் நம்மைத் தொட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவன் அறியாமலே அவனது அவயங்கள் பட்டால்கூட அவை நமக்கு மோட்சம் கிட்டும் என்கின்றன புராணங்கள். 

விஸ்வாமித்திரருடன் மிதிலைக்குப் போகும் வழியில் ஒரு வெட்டவெளியில் கிடந்த ஒற்றைக் கல்லில் ஒரு துளசிச்செடி முளைத்திருப்பதைக் காண்கிறான் ஶ்ரீராமன்...

``இது என்ன...  இப்படி ஓர் அதிசயம்... கல்லுக்குள் எப்படி இத்தனை ஈரம்.." என்று ராமன் அதிசயித்துக் கேட்டபோது, `ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு இன்னொரு ஆணால் சபிக்கப்பட்ட பத்தினிப் பெண், இங்குக் கல்லாக உறைகிறாள். ஓர்  உத்தமன் கால்பட அவளுக்கு விமோசனம் உண்டு என்று காலங்காலமாய் அவன் வரவுக்காகக் காத்திருக்கிறாள் அந்தப் பெண்!" என்கிறார் விஸ்வாமித்திரர்.

அங்கே கல்லாய்க் காத்திருந்தவள் பெயர் அகலிகை! பஞ்ச கன்னியருள் ஒருத்தியும், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினியுமான அகலிகை, இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்டு, பின் கணவனால் சபிக்கப்பட்டு, கற்பாறையாக மாறிய பாவையவள்.

கல்லான போதும், தன் கணவனையே தொழுதவள். தன் கணவனைத் தவிர மற்றோர் ஆணைக் கனவிலும் கருதாத பத்தினி. உடையவளைத் தவிர, வேறொருத்தியை உள்ளத்தாலும் தீண்டாத ராமனின் கால் யதேச்சையாகப் பட, சாப விமோசனம் அடைகிறாள்.
கல்லாய்க் கிடந்தாலும் கடவுளுக்கு உகந்த துளசியைத் தாங்கியபடி, காலமெல்லாம் காத்துக் கிடந்தவள் அகலிகை. ராமனின் கால் பட்டதால் மோட்சம் பெற்றாள். 

இவள் இப்படி என்றால், காட்டுக்குள் வாழ்ந்து வந்த குகன் எப்படிப்பட்டவன்...?
தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, சீதையுடனும், லட்சுமணனுடனும் வனவாசம் மேற்கொள்கிறான் ராமன். அயோத்தியிலிருந்து, தனது தமையனுடனும், மனைவியுடனும் கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தபோது கங்கையைக் கடக்க, ராமனுக்கு உதவியவன் குகன். ராமனைக் குகன் பார்த்ததில்லையென்றாலும், அவனது கல்யாண குணங்களைக் காதுகளால் கேட்டறிந்து, அதன் காரணமாக ராமன் மீது பேரன்பு கொண்டு வாழ்ந்தவன் குகன். முதன்முறையாக ராமனைக் கண்டவுடன், அவன் சாப்பிடுவானா, மாட்டானா என்று கூட அறியாமல்தான் சாப்பிட வைத்திருந்த மீனையும், தேனையும் ராமனின் பசியாறத் தந்த தாயுள்ளம் கொண்டவன் அவன்.

`உள்ளம் தூயவன் தாயின் நல்லான்' எனப் புகழப்படும் குகன், பில் எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவன். முரட்டுக்குணமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவமும் கொண்டவன். அப்படிப்பட்ட ஒருவனை, `எனதருமை நண்பனே..!' என்று ஸ்ரீராமபிரான் தோளோடு தோள் இணைத்து `அன்புள, இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்.. .' என்று தழுவிக் கொள்கிறான். வேட்டையாடி மிருகங்களைக் கொன்று காட்டிலே வாழ்ந்த வேடுவன் அவன். தனது தூய பக்தியினாலும், மாறாத அன்பினாலும் ராமனின் சகோதரனாக ஏற்கப்பட்ட பெருமைக்கு உரியவன் குகன்.

குகனின் கதை இப்படியென்றால், கபந்தனின் கதை இன்னொரு வகை. வனவாசத்தின்போது, ராவணன் சீதையைக் கவர்ந்து செல்ல... உயிர் பிரியும் தருணத்தில் ராம லட்சுமணரிடம் ராவணன் தென்திசை நோக்கி வானில் சென்றதைச் சொல்லிவிட்டு ஜடாயு இறந்து விடுகிறார். அந்தக் கானகத்தில், ஜடாயுவின் உடலைத் தகனம் செய்துவிட்டு, தென்திசை நோக்கிப் பயணிக்கின்றனர் ராம, லட்சுமணர்.
வழியெங்கும் சீதையின் தடயங்களை இருவரும் தேடியபடிச் செல்லும்போது, அவர்கள் எதிரே, பெரும் சப்தத்துடன் தோன்றியது ஒரு ராட்சச சதைப்பிண்டம். அந்த விசித்திர உருவத்திற்குத் தலையோ, கழுத்தோ காணவே இல்லை. வாய் நேரடியாக வயிற்றிலேயே இருந்தது. தனது இரு கரங்களை நீட்டி, ராமனையும், லட்சுமணனையும் இறுகப் பிடித்துக் கொண்ட அந்த உருவம். `நான் கபந்தன்' என்றும், `தீராத பசியுடன் இருப்பதால் ராம, லட்சுமணர்களை விழுங்கப் போகிறேன்' என்றும் சொல்ல, சகோதரர்கள் இருவரும், கண்ணிமைக்கும் நேரத்தில், வாளை எடுத்து, அந்த அரக்கனின் கைகளை வெட்டித் தள்ளினர்.

கீழே விழுந்த அரக்கன், வந்திருப்பது ராம லட்சுமணன் என்பதை அறிந்துகொண்டு, ``நீங்கள் என்னைக் கொல்ல வரவில்லை. உம்முடைய வாளால் எனக்குச் சாபவிமோசனம் அளிக்கவே வந்துள்ளீர்கள்!" என்றபடி தனது கதையைக் கூறினான் கபந்தன்.

``என் பெயர் கபந்தன். கந்தர்வனும் கூட. அழகான தோற்றம் கொண்ட நான், ஒருமுறை, எனது மமதையால் ஸ்தூலசிரஸ் என்ற அஷ்டாவக்ர முனிவரின் உருவத்தை ஏளனம் செய்ய, அவரது சாபத்தால் நானும் அவலட்சணம் பொருந்திய அசுரனானேன். 
பிறகு, நான் என் தவற்றை உணர்ந்து, அந்த முனிவரிடம் சாபவிமோசனம் வேண்டியபோது, `விஷ்ணுவின் அவதாரமான ராமன் வந்து தனது வாளால் உனக்கு விமோசனம் தருவார்!' என்று கூறினார்.

அதன்படி இன்று உங்கள் வாளால் நான் மோட்சம் பெற்றேன்'' என்றபடி, ராமனின் வாள்பட்டு, சுந்தர புருஷனாக உருவெடுத்த கபந்தன், ராமன் காலடியில் வீழ்ந்து வணங்கி, சுக்ரீவன் மற்றும் அனுமன் பற்றிய தகவல்களைத் தந்து விடைபெற்றான்.'

ஆக...
இறைவனின் கால்பட்டு சாபவிமோசனம் அடைந்தவள் அகலிகை!
இறைவனின் தோள்பட்டு, தகுதி உயரப் பெற்றவன் குகன்!
இறைவனுடைய வாள்பட்டு சுய உருவம் அடைந்த கந்தர்வன் கபந்தன்!

ஆனால், கண்ணனின் ஸ்பரிசமே தேவையில்லாதபடி, அவனுடைய தரிசனமும், அவன் திருவடிகளைப் பணிவதுமே நமக்கு, கஷ்டங்களிலிருந்து விமோசனம் மட்டுமல்ல, மோட்சம் என்னும் பேற்றினையே அருளவல்லது. பாண்டவர்களுக்காகத் தூது சென்ற கண்ணனின் மலர்ப் பாதங்களைப் பணிந்து, மோட்சம் என்னும் நிலையான செல்வத்தை வேண்டுகிறாள் கோதை!