Published:Updated:

குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே.. எம்மைச் சீறியருளாமல் காப்பாய் - திருப்பாவை - 28

குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே.. எம்மைச் சீறியருளாமல் காப்பாய் - திருப்பாவை - 28
குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே.. எம்மைச் சீறியருளாமல் காப்பாய் - திருப்பாவை - 28

"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.."

"குறையே இல்லாத கோவிந்தனே.. நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, காடுகளில் அவற்றை மேய்த்து, அங்கே எங்கள் உணவை உண்பவர்கள். நிரை மேய்ப்பதைத் தவிர வேறு அறிவென்பதே எங்களுக்கு இல்லை.  அத்தகைய இடைக் குலத்தில், உன்னைப் பெறுவதற்கு எத்தனைப் புண்ணியம் செய்துள்ளோம். இறைவனே... உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. அறியாத பிள்ளைகள் நாங்கள். உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்ததைப் பொறுத்தருள்வாயாக.. எங்கள் நோன்பை ஏற்று, எங்களுக்கு அருள் தருவாயாக..." என்று பாடுகிறாள் கோதை..!!

'ஆயர் குலத்தவர்களாகிய நாங்கள், கன்று பசுக்களுடன் காட்டிற்குள் சென்று அவற்றை மேய்ப்பவர்கள். அந்தத் தொழிலை மட்டுமே செய்து, அதில் மகிழும் அறிவற்றவர்கள்.' என்பதால்,  'அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து...' என்று பாடுகிறாள் கோதை.  எல்லோரும் தாங்கள் பிறந்த குலத்தின் அருமை பெருமையையும், வீர தீர பராக்கிரமங்களையும் அனைவருக்கும் சொல்லி, அதன் மீது கர்வம் கொள்வர். ஆனால், 'அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து..' என்று தங்களை அறிவற்றவர்கள் என்று அதில் யாரும் பெருமைகூட கொள்வார்களா என்ன..? இதன் காரணம்தான் என்ன..?

ஞானக்குழந்தையான கண்ணன் தங்கள் குலத்தில்தான் பிறந்தான் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும் இப்படிப் பெருமைகொள்வதற்கு..? 

அதிலும், தன்னை அழிக்க வந்த அசுரர்களை அழித்ததோடு, அவர்களது கர்வத்தையும் சேர்த்தே அழித்துக் காத்தவன்! அதர்மம் செய்த கௌரவர்களை வீழ்த்தி, தர்மம் வெல்லும் என்பதைப் பாண்டவர்களின் வாயிலாக உணர்த்தி மகாபாரத யுத்தத்தின் வெற்றியைத் தீர்மானித்தவன்!

அனைத்திற்கும் மகுடமாக, அஞ்ஞானக் கடலிலிருந்து அனைவரையும் மீட்டு, நிலையான மோட்சம் தரும் கீதையையும் உரைத்தவன், என, கண்ணன் செய்த செயல்கள் ஒவ்வொன்றும், ஆயர்களை மட்டுமா... மனிதக் குலத்தையே அல்லவா பெருமை கொள்ள வைத்தது?!
அது மட்டுமா..? இந்த ஈரேழு உலகத்திலும் ஞானத்திற்கு அதிபதியான குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவனும் இவனேதான். ஆனால் ஞானத்தை அருளும் ஹயக்ரீவருக்குக் குதிரை முகம் ஏன் வந்தது? அதற்கு அசரத்காசுரன் வதம் பற்றி அறிய வேண்டியுள்ளது. 
அசரத்காசுரன்...

தனக்கு மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டும் என்று பெருந்தவம் புரிந்தான் அசரத்காசுரன், கடவுள், தேவர், அசுரர், மனிதர், விலங்கு என்ற எதனாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்னும் வரத்தைப் பிரம்மனிடமிருந்து  வாங்கிய அசரத்காசுரனுக்கு, தனக்களிக்கப்பட்ட வரத்தின் மீது ஐயம் ஏற்பட்டது,  தன்னைத் தானே பரீட்சித்துக் கொள்ள முடிவு செய்தான். தனது தளபதியிடம் வாள் ஒன்றைத் தந்து, தனது தலையை வெட்டி, பிறகு மீண்டும் ஒட்டும்படி பணித்தான்.

வேறு வழியின்றி தலைவனது கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு, வாள் கொண்டு அவனது தலையை வெட்டி மீண்டும் ஒட்ட  முயன்றபோது, உள்ளே நுழைந்த அசுரர் குருவான சுக்ராச்சாரியார், 

"மூடர்களே.. தலையைப் பொருத்தாதீர்கள். வெட்டிய தலையை ஒட்ட வைத்தால் அது அவனுக்கு மறுபிறவி...  அவன் தவமிருந்து பெற்ற வரங்கள் எல்லாம் வீணாகும். மீண்டும் தவமிருந்து பெறக் காலங்கள் கழிந்துவிடும்." என்று கூறி அருகிலிருந்த ஒரு கறுப்பு நிறக் குதிரையின் முகத்தை வெட்டி ஒட்ட வைத்தார்.

குதிரை முகத்துடன் தோன்றியதால், அவனுக்கு, 'பரியாசுரன்' என்று பெயர் வந்தது. அனைத்து உலகங்களையும் தன்வசப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்தான்.  

ஒரு நள்ளிரவில் பரியாசுரன் தேவலோகத்திற்கு படையெடுத்து வருவதை அறிந்த தேவர்கள் பகவான் ஸ்ரீவிஷ்ணுவை துயிலெழுப்ப முயன்று தோற்றனர். வில்லில் இருந்து வரும் ஒலிக்குப் பகவான் விழித்தெழுந்து விடுவார் என்று எண்ணிய இந்திரன், தனது வாளால் வில்லின் நாணை வெட்ட, அது விபரீதமாகப் படுத்திருந்த பகவானின் தலையைக் கொய்து விட்டது.

அதே நேரத்தில், வெளியே பரியாசுரனின் போர் முரசு ஒலிக்கக் கேட்டு இந்திரனும் தேவர்களும் அதிர்ந்து போய்  நிற்க... அப்போது அங்கே தோன்றிய தன்வந்திரி பகவான், பரியாசுரன் பெற்ற வரங்களைக் கணக்கிட்டு, அவனைக் கொல்ல மிருகமும் அல்லாத தேவரும் அல்லாத சக்தியை உருவாக்க அங்கிருந்த ஒரு வெள்ளைக் குதிரையின் தலையைக் கொய்து, பகவானுக்குப் பொருத்தி உயிர்ப்பித்து விடுகிறார்.
பகவான் விஷ்ணு, பரியாசுரனை தனது குதிரை முகத்துடன் வீழ்த்தி தேவர்களைக் காத்தார். அதுமட்டுமின்றி மது, கைடபர் ஒளித்து வைத்த வேதங்கள் அனைத்தையும் கைப்பற்றி, பிரம்மனுக்கு ஞானத்தைப் புகட்டினார். கல்வி, ஞானம், வீரம். செல்வம் என அனைத்தும் பெற, குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரை வழிபட வேண்டும் என்பது நம்பிக்கை. 

அப்படிப்பட்ட ஞானத்தின் வடிவான பரம்பொருளே ஒரு சாதாரண மானுடனாக இடைக்குலத்தில் வந்து பிறந்தான்.  குறும்புகளும், பல லீலைகளும் புரிந்து, வாழ்க்கையில் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டி,  இயல்பான மனிதனாக இறைவன் வாழ்ந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதனால்தான் அவனுக்குத் தன் அவதாரங்களிலேயே மிகவும் பிடித்தது கிருஷ்ணாவதாரம். 

அவதாரத்தில் கிருஷ்ணாவாதாரமே பிடிக்கும் என்பதுபோல்,  நாமங்களில் 'கோவிந்தா...' என்ற நாமமே மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறான் மாயக்கண்ணன்..

அந்தப் பெயரில் அப்படி என்னதான் உள்ளது ? 

'கோவிந்தா' என்ற சொல் மட்டுமே அவனது பத்து அவதாரங்களையும் குறிக்கும்.   

'கோ' என்றால் உலகம், 'விந்தன்' என்றால் காப்பாற்றுபவன். இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன்  என்று பொருள். கோ என்பதற்கு வேதம் என்றும் பொருள். வேதத்தை மீட்டுத் தந்த மச்சாவதாரத்தையும் கோவிந்தம் குறிக்கிறது. கோ என்றால் பர்வதம் என்ற பொருளும் உண்டு. மலையைத் தாங்கிய கூர்மாவதாரத்தையும் கோவிந்தம் நினைவு ஊட்டுகிறது. 

பூமியையும் கோ எனலாம். கோவிந்தா எனும்போது  பூமியைத் தனது கொம்பினால் தூக்கிய வராக அவதாரமும் மனதில் தோன்றுகிறது. நரசிம்மனுக்கும், வாமனனுக்கும், பரசுராமனுக்கும் கோவிந்தன் என்பது மற்றுமொரு பெயரே. கோ என்றால் ஆயுதம். சமுத்திரத்து நீரைச் சரித்து பூமியைக் கலப்பையால் இழுத்ததால் பலராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயராயிற்று. 

கோ என்றால் பசு. பசுவை ரட்சித்தவன் என்பதால் கண்ணனுக்கும் கோவிந்தன் என்ற பெயராம். 

இப்படி, ஒவ்வொரு அவதாரத்திலும் கோவிந்த நாமம் ஒலிக்கிறது.  கோவர்த்தன மலையைத் தூக்கிய காரணத்தால்  கண்ணனுக்கு கோவர்த்தனன் என்று பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்தான் இந்திரன்.

அப்படிப்பட்ட, ஞானத்தின் தெய்வமான, குறையொன்றும் இல்லாத கோவிந்தனைத் தொழுது வணங்கினால், அவனது பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து வணங்கிய பலன் கிட்டும். இதையே 'குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான், பரன் ஒன்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே..'  என்று நம்மாழ்வார் பாடிட, அதனை நன்குணர்ந்த கோதை, குறைகள் அனைத்தையும் தீர்த்திடும், கோவிந்த நாமாவளியைப் பாடி மகிழ்ந்திட இருபத்து எட்டாம் நாளன்று அழைக்கிறாள் ..!!