Published:Updated:

கண்ணா... என்றும் உமக்கு யாம் உற்றோமே யாகும் வரமருள்வாய்! திருப்பாவை - 29

"துருவா, நீ சென்று உன் தந்தையின் ராஜ்ஜியத்தை ஆள்வாயாக. பின்பு, ஒளி பொருந்திய ஒரு நட்சத்திரமாய் 'துருவ நட்சத்திரம்' என்ற பெயருடன் வானில் நீ என்றென்றும் பிரகாசிப்பாயாக!" என்று இறைவன் வரம் அருளினார். 

கண்ணா... என்றும் உமக்கு யாம் உற்றோமே யாகும் வரமருள்வாய்! திருப்பாவை - 29
கண்ணா... என்றும் உமக்கு யாம் உற்றோமே யாகும் வரமருள்வாய்! திருப்பாவை - 29

"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேற் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.."

"கோவிந்தா... நாங்கள் அதிகாலையில் உனது பொன்போன்ற தாமரைப் பாதங்களை வணங்க வந்திருக்கும் காரணத்தைக் கேட்பாயாக. பசுக்களை மேய்த்து, அதிலிருந்து வரும் பொருட்களை வைத்துப் பிழைக்கும் ஆயர் குலத்தில் பிறந்த நீ எங்களது இந்த சிறு பணிவிடைகளை ஏற்றுக் கொள்ளாமல் விட்டுவிடாதே. நீ தரும் மோட்சத்திற்காக மட்டும் இந்த விரதத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஏழேழ் பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறந்து, எங்களை உனது உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தையும் தரவேண்டும். இவற்றைத் தவிர மற்ற தீய எண்ணங்களை எல்லாம் நீக்கி எங்களுக்கு அருள் புரிவாயாக..." என்கிறாள் கோதை..

"உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்..." - எப்போதும் உன் அருகிலேயே இருந்து, உனக்கு மட்டுமே அடிமையாகத் தொண்டு செய்வோம், என்கிறாள் கோதை..!

கண்ணன் நம்முடனும், நாம் கண்ணனுடனும் வாழும் வாழ்க்கைதான் எத்தனை அழகானது...? அதிலும் எப்போதும் கண்ணனுடன் இணைந்திருக்கும் மயிலிறகு, புல்லாங்குழல், துளசி மற்றும் தாமரைப்பூ என ஒவ்வொன்றும் அவன்மீது எத்தனை அன்பும், பக்தியும் கொண்டிருந்தால், இந்தப் பிறப்பில் மட்டுமன்றி, ஏழேழு பிறவிகளிலும் அவனுடனேயே இருக்கும் பாக்கியத்தை அடைந்திருக்கும்...
கேசவனைப் பாடும்போதெல்லாம், "மனதுள்ளான் மா கடல் ஆழ் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்: தண்துழாய் மார்பன்" என கேசவனுக்குப் பிரியமான துளசியின் புகழையும் சேர்த்தே பாடுகிறார் பேயாழ்வார். துளசியைப் போல, கூடவே இருப்பது மட்டும்தான் உண்மையான காதலா... இல்லை அதுதான் உண்மையான பக்தியா..?  

தூரத்தில் இருந்து பக்தி செய்தாலும், பகவான் அதை ஏற்பான் என்று துருவன் கதை சொல்கிறது. மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். முதலாவது மனைவி சுரூசியின் மகன் உத்தமன்.  இரண்டாவது மனைவி சுநீதியின் பிள்ளை துருவன்.

இரண்டாவது மனைவி மற்றும் மகனை எப்போதும் உதாசீனம் செய்தான் உத்தானபாதன்.  ஒரு நாள் உத்தானபாதன் அரசவையில் வீற்றிருக்கும் போது, ஓடிவந்த குழந்தை துருவன் தனது தந்தையின் மடியில் அமர்ந்தான். ஆனால் , நான்கு வயதுக் குழந்தையான துருவனைத் தந்தையின் மடியில் உட்கார விடாமல் தடுத்துத் துரத்தினாள் அவன் பெரியம்மா சுரூசி. உத்தானபாதனும் அதை எதிர்த்துக் கேட்காததால் துருவன் வருந்தினான்.

துருவன் தன் தாய் சுநீதியிடம் சென்று,  " அம்மா, அரசனை விடப் பெரியவர் யார்? அவரிடம்  இதை முறையிட வேண்டும்" என்று அழுதபடி சொன்னான். 

அதற்கு சுநீதியோ, "உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஒரே அரசர், கடவுளான அந்த விஷ்ணுதான். நீ, அவரது திருவடிகளை தியானம் செய்து உன்னையே அவருக்கு அர்ப்பணித்தால் நேரில் தரிசனமும் தருவார்" என்று சொன்னாள். 

துருவன் சிறுவனாய் இருந்தபோதும் மன வைராக்கியம் கொண்டவனாய் இருந்தான். கடவுளை எப்படியும் சந்தித்தே தீருவது என்று முடிவு செய்தான். தன் தாயிடம் கூடச் சொல்லாமல் கடவுளைத் தேடி அன்றிரவே காட்டிற்குப் புறப்பட்டு விட்டான். பல நாள்கள், காடு மேடெல்லாம் அலைந்தான். ஆனால் அவனால் கடவுளை அடையமுடியவில்லை. ஒரு நாள் வழியில் நாரத முனிவரைச் சந்தித்தான். அவர் குழந்தை துருவனிடம் இரக்கம் கொண்டார். துருவனும் நாரத மகரிஷியிடம், "மகரிஷி நான் பகவான் விஷ்ணுவைக் காணவேண்டும். அதற்குத் தாங்கள் தான் உதவ வேண்டும்" என்று விண்ணப்பித்துக்கொண்டான். நாரதரும் அவனை அரவணைத்து ஆற்றுப்படுத்தினார். 

கடவுளைச் சந்திக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தைக் கூற, அதற்கு நாரதர், "துருவா, உனது மனவுறுதியைக் கண்டு மனமகிழ்ந்தேன். யமுனை நதிக்கரையில் உள்ள மதுவனத்திற்குச் செல். அங்கு இருந்து பகவான் ஸ்ரீஹரியை 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய...' என்று விடாமல் தியானம் செய்" என்று அவனுக்கு உபதேசித்து விடைபெற்றார்.

துருவன் மதுவனத்துக்குச் சென்றான். கடவுளே வந்து பேசும்வரை கண்களைத் திறப்பதில்லை என்ற முடிவுடன் யமுனை நதிக்கரையில் கடுந்தவம் செய்ய ஆரம்பித்தான். எதையுமே உட்கொள்ளாத கடுந்தவம். தொடர்ந்து, இறைவனின் நாமத்தை உச்சரித்த துருவனது தவக் கனல் இறைவனை அவனிடத்தில் கொண்டுவந்து சேர்த்தது. பகவானைத் துருவன் தரிசித்துவிட்டான். அவன் தரிசனம் கண்டபோது அவனுக்கு வயது  நான்கரை.

"துருவா, நீ சென்று உன் தந்தையின் ராஜ்ஜியத்தை ஆள்வாயாக. பின்பு, ஒளி பொருந்திய ஒரு நட்சத்திரமாய் 'துருவ நட்சத்திரம்' என்ற பெயருடன் வானில் நீ என்றென்றும் பிரகாசிப்பாயாக!" என்று இறைவன் வரம் அருளினார். 

துருவன் இறைவனின் அருளோடு பலநூறு ஆண்டுகள் பாகவதோத்தமனாய் வாழ்ந்து, வானில் சுடர் விடும் நட்சத்திரமாகி இன்றும் தூரத்தில் இருந்து சதாசர்வ காலமும் பகவானைத் தரிசிக்கும்  நட்சத்திரமாய் ஒளிர்கிறான். துருவனுக்குப் பக்கத்திலேயே சிறிய நட்சத்திரமாக அவன் தாய் சுநீதியும் ஒளிர்கிறாள். 

நம்பிக்கையுடன் பகவானைப் பிரார்த்தனை செய்தால் இந்த உலகில் வாழ்வதற்கான ஆரோக்கியம், ஐஸ்வர்யம், நல்ல குடும்பம் எல்லாம் தந்து இறுதியில் மோட்சத்தையும் சேர்த்தே அளிக்கிறான் கண்ணன். இம்மையில் மட்டுமன்றி ஏழேழு பிறவிகளிலும் அவனுக்கும், நமக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு தான் நிலையானது என்றுணர்ந்த கோதை, "இம்மைக்கும் ஏழேற் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன்" என்று பாடி இறைவனின் அருளை 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' வேண்டி இருபத்து ஒன்பதாம் நாளன்று பாடுகிறாள்!