Published:Updated:

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் சொன்னோம் அரங்கனே எமக்கு அருள்தருவாய்! -திருப்பாவை-30

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் சொன்னோம் அரங்கனே எமக்கு அருள்தருவாய்! -திருப்பாவை-30
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் சொன்னோம் அரங்கனே எமக்கு அருள்தருவாய்! -திருப்பாவை-30

நாமும் கோதையைப் போலவே மார்கழியில் கோதையின் திருப்பாவையைத் தவறாமல் பாடி, நம்மை இறைவனது பாதங்களில் சமர்ப்பித்து, அவனது திருவருளைப் பெற்று இன்புற்றிருப்போம் வாருங்கள்..!

``வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..'

``அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்ட அணிகலன்கள் அணிந்த ஆயர்குலப் பெண்கள் தரிசித்து, பாவை விரத பலனாகிய மோட்சம் பெற்ற செய்தியை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல்களாகப் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்..

இதைத் தவறாமல் முப்பது நாள்களும் படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட செல்வத் திருமாலின் ஆசியுடன், எங்குச் சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்..
என்கிறாள் கோதை..!

திருப்பாவையை நிறைவு செய்யும் நாளான இன்றைய தினம் சாத்துமறை என்று அழைக்கப்படுகிறது.

இறைவனை அடையச் சாற்றிய மறையைப் பின்பற்றி, முப்பது நாள்களும் அவன் புகழ் பாடி, அவனை வணங்கி, அவன் பாதம் சேர விரதம் முடிக்கும் நாளையே சாத்துமறை என்று குறிப்பிடப்படுகிறது. 

மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருந்து பக்தியும், காதலும், வாழ்வியலும், அதன் உள்ளோடும் அறவியலும் அறிவியலும் என அனைத்தும் கலந்து, உற்சவமாக நிறைவேறிய பாவை நோன்பு இதோ இன்றுடன் நிறைவடையப் போகின்றது.

பாவை நோன்பு என்பது பொதுவாகக் கன்னிப் பெண்களுக்கானது. இந்த நோன்பை நோற்கும் பெண்கள் கண்ணனின் அருளால் கோதையைப் போலவே, தங்களது மனதுக்குப் பிடித்த காதல் மிகுந்த கணவனை அடைவார்கள், மனதிற்கேற்ற ஒரு மகிழ்வான ஒரு வாழ்க்கையும் அமையப் பெறுவார்கள், அவர்கள் இருக்கும் வீடும், நாடும் சுபிட்சமடையும்... என்பதுதான் இந்தப் பாவை நோன்பின் தனிப் பெருஞ்சிறப்பு.. 
கோதை இந்த முப்பது பாடல்களிலும், தனது விருப்பம்... தனது வாழ்க்கை... தனது நலன் என்று தனக்கான சுயநலத்தை மட்டுமே பாடாமல்... வீடும், நாடும் வளமுற வேண்டும் என்ற சமூகநலமும் சேர்ந்தே பாடியதால்தான் இந்தச் சங்கத்தமிழ் மாலையை, அவளது பெயருடன் சேர்த்து `கோதையின் திருப்பாவை 'என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறது. 

கோதைக்குக் கண்ணன் மீதான இவ்வளவு காதலும் எங்கிருந்து தொடங்கியது என்று அறிய முற்பட்டால், யுகங்கள் பலவற்றுக்கு முற்பட்ட வராக அவதாரத்திலிருந்து ஆரம்பமாகிறது இந்தப் பாவையின் காதல் என்கிறது புராணம். 
வராக அவதாரத்தில், வராக மூர்த்தியிடம் பூமாதேவி மோட்சத்துக்கான வழிகளை இறைவனிடம் கேட்டாள். 
அவரோ, ``இறைவனது திருவடிகளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்..! இறைவனது திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்..! இறைவனது திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்..!" என்னும் மூன்று நித்திய கட்டளைகளை மோட்சத்துக்கான வழிகளாகச் சொன்னார்.

பின்பொரு நாள்.. ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருந்த பரந்தாமனிடம் பூமாதேவி,
``வராக அவதாரத்தின் போது, இரண்யாட்சன் என்னைக் கடலுக்குள் ஆழ்த்திய போது, அழைத்ததும் வந்து காப்பாற்றினாயே கண்ணா... என்னைப் போலவே, பல கோடி பக்தர்கள் இன்று பூமியில் அவஸ்தைப்படுகிறார்களே.. அவர்கள் அழைத்தாலும் நீ வருவாயா..?" தன் மீது உய்யும் தன் மைந்தர்களான மானுடர்கள் மேலான பரிவோடு கேட்டாள்.

பரந்தாமன் சிரித்தபடி, ``நிச்சயமாக. ஆனால், என்னை அழைக்க மனிதர்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதற்கு நீ ஒருமுறை பூமியில் அவதரித்து, கீதையின் பொருளை மீண்டும் ஒருமுறை சொல்வாயாக!" என்று பூதேவியிடம் பணித்தாராம்.

திருமாலின் ஆணைப்படியே பூமாதேவி, பரந்தாமன் `வடபத்ர சாயி' என்ற பெயர் தாங்கி அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடித்திங்கள் வளர்பிறையில் பூர நட்சத்திர தினத்தில் பூமாதேவி, 

`துளஸிகான நோத்பவாம் பாண்டியே விஸ்வம்பராம் கோதாம் வந்தே..' 
என்று பகவானுக்காக விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் பராமரித்த மலர்வனத்தில் துளசி செடிகளுக்கு இடையில் அவதரித்தாளாம்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த குழந்தையை, அனந்தனின் அருள் கொடையாகவே பார்த்த பெரியாழ்வார். மனைவி விரஜையுடன் வடபத்ரசாயியின் திருவடியில் மகளை வைத்து, அவளுக்குக் கோதை என்ற பெயரைச் சூட்டி, அவளுக்கு ஞானத்தைப் போதிக்கவும் ஆரம்பித்தார்.

சிறுவயது முதலே கண்ணனின் பெருமைகளைத் தந்தை சொல்லக் கேட்டு வளர்ந்த கோதை, ஒரு கட்டத்தில் அந்த அனந்தனைத் தன் மணாளனாகவே மனதில் வரிந்துகொண்டாள். மற்ற அனைவரும், இறைவனுக்குச் சாற்றிட பூமாலைகளைக் கோத்துக்கொண்டிருக்கும் பொழுதில், கோதை மட்டும் அந்தத் திருமாலைக்கு பூமாலையுடன் பாமாலையையும் சேர்த்து இரு மாலைகளைத் தொடுத்துக் கொடுத்தாள்.  

`நானிலம் அளந்தவனுக்கு நாயகியாக வருவதற்கு நான் முழுவதும் ஏற்றவள்' என்ற பெருமையுடன் தான் கட்டிய மாலைகளைத் தானே முதலில் சூடிப் பிறகு அந்த மாலையை அவள் பகவானுக்குச் சாற்றக் கொடுத்தனுப்பினாள். இதைப்  பார்த்து வருத்தம் கொண்ட பெரியாழ்வார், மறுநாள் கோதை சூடாத மாலையை எடுத்துச்சென்றார்.
ஆனால் மாலவனோ அதை ஏற்க மறுத்து 
``கோதை சூடிய மாலைதான் எமக்கு ஏற்றது. அதைக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணையிட்டான். அன்றுமுதல் அவள் `சூடிக்கொடுத்த சுடர்க்கொடி'யும் ஆனாள். 

அந்த நந்தகோபன் குமரனை, பாற்கடலில் உறங்கும் பரமனை, ஓங்கி உலகளந்த உத்தமனை, ஆழிமழைக் கண்ணனை, தாமோதரனை, நாராயணனை, மாதவனை, மணிவண்ணனை, கேசவனை, குறைவொன்றும் இல்லாத கோவிந்தனை, மனதுக் கினிய கண்ணனைப் பாடிக் கொண்டிருந்த போதெல்லாம் அகமகிழ்ந்த பெரியாழ்வார், மகளை மணமுடித்துக் கொடுக்கவும் விளைகிறார்..
ஆனால், திருமணப் பேச்சை எடுத்தவுடனேயே ஆண்டாள் `மானிடவனை மணாளன் ஆக்கி வாழமாட்டேன். நான் நாரணன் நாயகியாகவே வாழ இருக்கிறேன்..!' என்று அரங்கன் மீதான தனது காதலைக் கோதை சொல்லக் கேட்டு மிகவும் மனம் வேதனையடைந்தார் தந்தை பெரியாழ்வார்.

ரங்கன் ஆண்டாளின் கனவில் வந்து கைப்பற்றி வாரணம் ஆயிரம் சூழவலம் வந்தான். அந்த நினைப்பே அவளைப் பேருவகை கொள்ளவைத்தது. அந்த உவகையே நாச்சியார் திருமொழியாக மலர்ந்தது. அவளுக்கென்ன அரங்கன் கனவில் மிதக்கலாம். ஆனால் தந்தையின் துயரம் அத்தனை எளிதானதா? நாள்கள் செல்லச் செல்ல, கோதையை எண்ணிக் கவலைகொண்ட பெரியாழ்வார், ஒருமுறை இறைவனிடம் தன் மனக்குறையை முறையிட்டார். 

அன்றிரவு பெரியாழ்வார் கனவில், சங்கு, சக்கரத்துடன் தோன்றிய பரந்தாமன்,
``நாளை கோதையை, திருவரங்கத்துக்கு அழைத்து வாருங்கள். அவளை நான் மணமுடிக்க விரும்புகிறேன்" என்று திருவாக்கு அருளினான். இதே போன்று திருவரங்கத்து கோயில் அர்ச்சகர் கனவிலும், மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றி, தான் ஆண்டாளை மணக்கவிருக்கும் செய்தியை தனித் தனியே சொல்லி மணவிழாவுக்குத் தயார் செய்யச் சொன்னான்.

இதெல்லாம் தெரியாமல், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து திருவரங்கம் செல்லத் தயாரான பெரியாழ்வாரையும் கோதையையும் மன்னரே எதிர்கொண்டு வந்து யானையில் ஏற்றித் திருவரங்கம் அழைத்துச் சென்றான். 

கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மறையோர்களின் வேத கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அத்தனை நாள்களும் அரங்கனையே நினைத்து வாழ்ந்த ஆண்டாளின் மனம் எத்துணை விரைவாய் அவனை அடையலாம் என்று ஏங்கிக்கொண்டிருந்தது. 

அரங்கனின் முன் அழைத்து வரப்பட்டாள் கோதை. வேதியர்கள், சங்குகள் முழங்கினர். அவள் மனதுள் கோபாலனின் உதடுகளை வருடிய பாஞ்சசன்யத்தை நினைத்துக்கொண்டாள். முரசுகளும் பறைகளும் வாழ்த்தொலிகளும் முழங்கின.

 ``மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்..! பாமாலை சாற்றினாள் கோதை  பூமாலை மாற்றினாள்..!" என்ற வாழ்த்தொலிகள் எங்கும் நிறைந்திருந்தது.  

கோதை மெள்ள நடந்தாள். அவள் மனம் மாதவன் மேல் பித்தம் கொண்டிருந்தது. விஷ்ணுசித்தரை ஏறெடுத்தாள். பூமிப் பிராட்டியையே மகளாக்கிக்கொண்ட அந்த மாமனிதரின் திருவடிகளைத் தொழுதுகொண்டாள். அடுத்து அவள் தொழ வேண்டியவர்கள் எவரும் இல்லை என்பதை அவள் அறிவாள். நேரே அரங்கனின் சந்நிதியை அடைந்தாள். பள்ளிகொண்ட பெருமாளாய் படுத்திருக்கும் அரங்கனையும் தொழுதாள். தனது கழுத்திலிருந்த மாலையை அவனுக்குச் சாற்றினாள். அடுத்த கணம் மன்னவனும் மற்றவரும் கண்டுகொண்டிருக்க அவள் ஜோதி வடிவமாகி அரங்கனோடு இரண்டறக் கலந்தாள்.

அதைக்கண்டவர்கள் மனமும் உடலும் சிலிர்த்தனர். ரங்கா! ரங்கா! என்ற கோஷம் எழுந்தது.  
கண்ணனாக அவதரித்து உபதேசித்த கீதாச்சாரத்தின் பொருளை எளியவர்களுக்கு எடுத்துரைக்க பூமாதேவி கோதை நாச்சியாராய் அவதரித்த கதை இது. 

``தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியும் தான் மிக விளங்கக் கூடியவன் பரந்தாமன்.." என்பதைக் காட்டியது கோதையின் வாழ்க்கை மட்டுமல்ல, அவள் அருளிய திருப்பாவையும்தான்.!

திருப்பாவைப் பாடல்களை உற்றுக் கவனித்தோமேயானால் ஒன்றை விளங்கிக்கொள்ளலாம். அதன் முதல் பத்து பாசுரங்கள் 'இறைவனது பெயரைப் பாடு’ என்று வலியுறுத்தும் இரண்டாவது பத்து பாசுரங்கள் `இறைவனின் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்..' என்று வழிகாட்டும்.                                                                                                                       

மூன்றாவது பத்து பாசுரங்கள் `அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்..' என்று வழிகாட்டும்.
``மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு 
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே..

(பகவத் கீதை 18:65)

``என்னை அடைய, என்னிடம் மனதை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபடு. என்னையே வணங்கு. இதைச் சத்தியம் செய்து உனக்குக் கூறுகிறேன்.." என்று பகவான் கீதையில் சாற்றிய மறையைத்தான், இந்த முப்பது பாடல்களில், எளிய, இனிய தமிழில் நமக்குக் எடுத்துக் கொடுத்துவிட்டாள் கோதை. 

``கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல்" சொல்லி மார்கழி நோன்பிருப்பவர்கள் திருமாலின் திருவருளையும், அனைத்துச் செல்வங்களையும் ஒருங்கே பெற்று இன்புறுவர் என்பதை,
``செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்..." என்ற சாத்துமறையின் இறுதி வரிகள் நமக்கு உறுதியளிக்கிறது..!

நாமும் கோதையைப் போலவே மார்கழியில் கோதையின் திருப்பாவையைத் தவறாமல் பாடி, நம்மை இறைவனது பாதங்களில் சமர்ப்பித்து, அவனது திருவருளைப் பெற்று இன்புற்றிருப்போம் வாருங்கள்..!
``பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு.."

`ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்'

அடுத்த கட்டுரைக்கு