தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

‘வேலை யோகம்’ எப்போது?

‘வேலை யோகம்’ எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
News
‘வேலை யோகம்’ எப்போது?

‘வேலை யோகம்’ எப்போது?

‘வேலை யோகம்’ எப்போது?

? மாதம் இரண்டு முறை எனக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. ஜாதக ரீதியாக ஏதெனும் தோஷங்கள் உள்ளனவா, என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- என்.ரவி வெங்கடேஷ், சென்னை - 61

வலிப்பு நோய் ஏற்பட சாஸ்திரங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்து கேந்திரம், 5 மற்றும் 8-ல் இருந்து அசுபர் பார்வை பெற்றிருப்பது, சந்திரன் சனியுடன் இணைந்து செவ்வாயின் பார்வை பெற்றிருப்பது, பலவீன சனி ராகுவுடன் 8- ல் இருப்பது, 5 மற்றும் 9-ம் பாவங்களில் அசுபர் இருப்பது, பலவீனமான தேய்பிறைச் சந்திரன் ராகுவுடன் சேர்ந்து லக்னத்தில் இருப்பது, லக்னத்தில் அசுபர் பார்வையுடன் கேது இருப்பது, 6 மற்றும் 8-ம் வீடுகளுக்கு சனி, செவ்வாய் தொடர்பு ஏற்பட்டிருப்பது, கிரகண காலத்தில் பிறந்த குழந்தைக்கு லக்னம் அல்லது திரிகோணத்தில் குரு இருப்பது, செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து 6 அல்லது 8-ல் இருப்பது... இதுபோன்ற கிரக அமைப்புகள் வலிப்பு நோய்க்குக் காரணமாகின்றன. தங்களின் ஜாதகத்தில் 6-ல் சனி அமைந்துள்ளது.

மேலும், ஆசிரியருக்குச் செய்யும் கெடுதல், முதலாளிக்குச் செய்யும் துரோகம் போன்றவையும் வலிப்பு நோய் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன என்கின்றன சாஸ்திரங்கள். தர்ம நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்களை ஜபிப்பதும், சிவப்புநிற பசுவைக் கோயிலுக்கோ அல்லது அந்தணருக்கோ தானம் கொடுப்பதும் தங்களுடைய வலிப்பு நோயைத் தீர்க்கும் பரிகாரங்களாக அமையும்.

? என் மகளின் ஜாதகப்படி, அவளுக்கு நல்ல வேலை மற்றும் திருமண யோகம் எப்போது அமையும் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- எஸ்.ஹரிஹரசுப்பிரமணியன், மதுரை

திருமண நேரம் என்று ஒன்று உண்டு. பொதுவாக 18 வயதுக்கு மேல் 33 வயதுக்குள் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நியதி. அதற்கு மேலும் திருமணம் நடைபெறவில்லை என்றால்தான் நாம் உரிய காரணங்களை அலசி ஆராய்ந்து பரிகாரங்கள் செய்யவேண்டும். தங்கள் மகளின் ஜாதகத்தைப் பொறுத்தவரை நன்றாகவே உள்ளது.

அவரது ஜாதகத்தில் 3.8.21 வரை சனிதிசை நடைமுறையில் உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் பாவங்களுக்கு உரிய சனிபகவான், லாபவீட்டில் இருக்கிறார். மேலும் லாபஸ்தான அதிபதி குரு, பாக்கியஸ்தான அதிபதி சனி ஆகியோர் பரிவர்த்தனை பெற்றிருப்பது மிகவும் சிறப்பான அம்சம். 10-ல் கேதுவும் இருப்பதால், நல்ல வேலை அமையும். திருமணத்தைப் பொறுத்தவரை களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் எட்டில் உள்ளது செவ்வாய் தோஷத்தைக் குறிக்கிறது. 7-ல் புதன் இருப்பதால் அழகு, நல்ல பண்புகள், உயர்ந்த அந்தஸ்து போன்ற தகுதிகளுடன் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். செவ்வாய் தோஷத்தின் காரணமாக, அதற்கேற்ப வரன் பார்ப்பது அவசியம். 3.8.21-க்குப் பிறகு தங்கள் மகளுக்கு 7-ல் இருக்கும் புதனின் தசை நடைபெற இருப்பதால், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.

‘வேலை யோகம்’ எப்போது?

? என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்; பரிகாரம் செய்யவேண்டுமா?

- எஸ்.பூங்கோதை, திருப்பூர்

தாங்கள் அனுப்பிய குறிப்பின்படி கணித்துப் பார்த்ததில், தங்கள் மகனின் நட்சத்திரம் அவிட்டம் - மகர ராசி மற்றும் கடக லக்னம் என்று தெரிய வருகிறது. கடக லக்னத்துக்கு 7-ல் சந்திரனும், சனி 4-ல் உச்சம் பெற்றிருப்பதாலும் திருமணம் நடைபெறுவதில் தடை எதுவும் இல்லை.

ஆனால், குடும்ப ஸ்தானம் எனப்படும் 2-ம் வீட்டில் சுக்கிரன் பகை நிலையில் காணப்படுவது, ஒரு பெண்ணின் சாபம் இருப்பதைக் குறிப்பிடுகிறது. எனவே, அதற்கு உரிய பரிகாரம் செய்யவேண்டியது அவசியமாகிறது. ஏழைப் பெண்ணுக்கு உணவு, உடை ஆகியவற்றை தானம் கொடுப்பது, வீட்டில் சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை செய்வது போன்றவை பெண் சாபத்துக்கு சிறந்த பரிகாரங்களாகும்.எனவே, சாஸ்திரங்களில் சொல்லியுள்ளபடி மேற்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

7, 12 ஆகிய பாவாதிபதிகள் 1, 4, 7, 10 ஆகிய கேந்திரங்களிலோ அல்லது 1, 5, 9 ஆகிய திரிகோணங்களிலோ இருந்து, குருவின் பார்வை பெற்றிருந்தால் திருமண யோகம் உண்டு. தங்கள் மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி 7-ல் இருந்து லக்னத்தைப் பார்ப்பதாலும், குரு அனுகூலமாக இருப்பதாலும் நிச்சயம் திருமண யோகம் உண்டு.

? நான் அனுப்பிவைத்துள்ள ஜாதகப்படி, அந்த ஜாதகருக்கு திருமணயோகம் உண்டா? எப்போது திருமணம் நடைபெறும்?

- ஆர்.பாஸ்கர், பெங்களூர் - 60

40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் நடைபெறவில்லை என்ற நிலையில், அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு வரும்போது ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. குறிப்பிட்ட ஜாதகருக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஜாதகத்தில் 7-ல் சூரியன் வீட்டில் கேது இருப்பதாலும், சந்திரனும் சனியும் சேர்ந்திருப்பதாலும், 33 வயதைக் கடந்த பெண்ணை மணம் பேசி முடிக்கலாம். அத்துடன், கோயிலில் வைத்துத் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதக சாஸ்திரப்படி திருமணம் நடைபெறுவதில் சில தடைகள் ஏற்படவே செய்யும். எனினும், விநாயகரை வழிபடுவதம் மூலம் தங்கள் திருமணத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைக் களையலாம்.

? என் மகனின் ஜாதகம் இது. அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எந்த திசையிலிருந்து பெண் அமையும்?

- ராமச்சந்திரன், சென்னை - 17

தங்கள் மகனின் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் ‘காரகோ பாவ நாச:’ என்றபடி களத்திரபாவத்துக்கு தோஷம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோஷ நிவர்த்திக்காக சுக்கிர ப்ரீதியுடன் மகாலட்சுமி ஹோமமும் செய்வது சிறப்பான பரிகாரமாக இருக்கும். 7-ல் சுக்கிரன். ஆக, கணவன் - மனைவிக்கிடையே சதா சண்டை சச்சரவு ஏற்படக்கூடும். எனவே, ஒருவர் மற்றவரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

எந்த திசையிலிருந்து பெண் அமையும் என்பதெல்லாம் அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். அந்தக் காலத்தில், பெற்றோர் தங்களின் பெண்களை வெகுதூரத்தில் கல்யாணம் செய்துகொடுப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால், தற்போது அது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது! இருப்பினும் ஒரு தகவல்... 7-ம் வீட்டில் இருக்கும் கிரகம், அந்த இடத்தைப் பார்க்கும் கிரகம், அவை 7-ம் இடத்தில் இருக்கக்கூடிய ராசிக்கு உரிய திசை, அல்லது 7-ம் அதிபதியோ சுக்கிரனோ இவர்களைக் கணக்கில் வைத்து அவர்கள் இருக்கும் ராசி ஸ்திர ராசியா, உபய ராசியா அல்லது சர ராசியா என்று தெரிந்துகொண்டு, ஸ்திர ராசியானால் பக்கம் என்றும், உபயம் என்றால் கொஞ்சம் தொலைவில் என்றும், சரம் என்றால் தூரம் என்றும் கூறுகின்ற ஒரு கணக்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஜாதகத்தில் 7-ம் பாவம் என்பது கிழக்குத் திசையைக் குறிப்பிடுவதால், இவருக்கு இவர் பிறந்த இடத்திலிருந்து கிழக்குத் திசையிலிருந்து பெண் அமையும்.

 வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

‘வேலை யோகம்’ எப்போது?

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com