Published:Updated:

ஜகம் ஆள வைக்கும் மகம்!

ஜகம் ஆள வைக்கும் மகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜகம் ஆள வைக்கும் மகம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

ந்த நட்சத்திரத்தின் ஆதிக்க நாயகன், வேத, ஆகமங்களில் கரைகண்ட கேது கிரகம். இந்த நட்சத்திரத்துக்கு உரிய ராசி சூரியனின் சிம்ம ராசி. ஆகவே, ‘மகம் ஜகம் ஆளும்’ என்ற பழமொழி நடைமுறைக்கு வந்திருக்கலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி, ஜாதக அலங்காரம், ‘புலவன், முழுக்குப் பிரியன், சுகந்த பரிமளப் பிரியன், பொன்னும் உள்ளான்...’ என்கிறது. அதாவது, இசைத் தமிழில் வல்லவர்களாகவும், நீரில் மூழ்கிக் குளிப்பதை விரும்புபவர்களாகவும், செல்வம் உள்ளவர்களாகவும், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள் என்று பொருள். நட்சத்திர மாலை, ‘தனத்தைத் தேட வல்லன், நினைத்தது முடிக்க வல்லன்...’ என்கிறது. அதாவது, பெரும் பணம் சம்பாதிப்பவர்களாக, வசதியாக வாழ்பவர்களாக, கற்பனையில் மூழ்குபவர்களாக, நினைத்ததை முடிப்பவர்களாக இருப்பார்கள் என்று பொருள்.

யவன ஜாதகம், ‘க்ரூரஸ்...’ என்று தொடங்கும் பாடலில் இவர்கள் குரூர சுபாவமும் குருவுடன் விவாதிப்பவர்களாகவும் சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது. பிருகத் ஜாதகம், ‘ஸுர, பித்ரு பக்தோ...’, அதாவது, மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி வாழ்பவர்கள் என்று கூறுகிறது.

ஜகம் ஆள வைக்கும் மகம்!

மக நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், எதையாவது சாதிக்க வேண்டும் என்று சதா சர்வ காலமும் சிந்தனையில் மூழ்குவீர்கள். உறுதியான தெய்வ பக்தி உடையவர்கள் ஆதலால், சாஸ்திரம் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பரந்த ஞானமுடையவர்கள். நிர்வாகத் திறமை உடையவர்களாகவும் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் உண்மையே பேசுபவர்களாகவும் திகழ்வீர்கள்.

கோபமிருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதற்கு ஏற்ப, உங்களிடம் நியாயமான கோபமும், குணமும் ஒருங்கே இருக்கும். கோபப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் மறந்துவிடுவீர்கள். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். குறைவாகத் தூங்குவீர்கள்.

எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடியவர்கள் நீங்கள். கவர்ச்சியான மெலிந்த உடலழகைப் பெற்றிருப்பீர்கள். சிற்றின்ப வேட்கை மிக்கவர்கள். குரு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். இளமையிலேயே சுக்ர தசை வருவதால் சிறுவயதிலேயே சுகபோகங்களை அனுபவிப்பீர்கள். அனுபவ அறிவு அதிகம். சிலருக்குக் கலை ஆர்வத்தாலோ கூடா நட்பாலோ உயர் கல்வியில் தடை ஏற்படும்.

பிறரிடம் கைகட்டி வேலை செய்வதை விரும்ப மாட்டீர்கள். ஆகவே சுய தொழிலையே செய்வீர்கள். இருந்தாலும் மக நட்சத்திரக்காரர்களில் பலர் பேராசிரியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பாளர், விளம்பர மாடல் ஆகிய தொழில் புரிவார்கள். மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புராண, இதிகாசம் ஆகியவற்றில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் பழம்பெரும் கலைகளை ஆராய்ச்சி செய்வார்கள். வாழ்க்கை செல்வ வளங்களுடன் அமைந்திருந்தாலும் அவ்வப்போது ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே சிக்கி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். உளவியல் நிபுணர்களான ப்ளூ, கோல்மன் என்ற இரட்டையர் இதில் பிறந்தவர்கள்.

நீங்கள் வெளிப்படையாகப் பேசுபவர்கள். எதிலும் தனித்தன்மை பெற்று காணப்படுவீர்கள். சுதந்திரத்தை விரும்புவீர்கள். உங்கள் விஷயங்களில் யாரும் தலையிடுவதை விரும்ப மாட்டீர்கள். காதலித்துத் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு ஆண் குழந்தை பாக்கியம் அதிகம். வாகனத்தை நீங்களே ஓட்டுவதில் அதிக விருப்பம் இருக்கும். 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் வீடு, மனை, வாகனம் எல்லாம் வாங்கக் கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. அதே போல் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் புகழ் பெற்று விளங்குவீர்கள். தீர்க்காயுளுடன் வாழ்வீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜகம் ஆள வைக்கும் மகம்!

முதல் பாதம்
(கேது + சூரியன் + செவ்வாய்)

முதற் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள் சிறந்த ராஜதந்திரிகள். எதிரியை வீழ்த்துவதில் அசகாய சூரர்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் தன்னைத்தானே சரி செய்துகொள்வார்கள். தாங்கள் சார்ந்திருக்கும் இனம், மொழி, நாட்டுக்காகக் கடைசி வரை உழைப்பார்கள். நாடாள்பவரின் நட்பு இவர்களுக்கு உண்டு. வீடு, மனை, சொத்துகள் தடையில்லாமல் அமையும். உடன்பிறந்தவர்கள் இவர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

சில நேரங்களில் அதிகம் ஆசைப்பட்டுத் தொல்லைப்படுவார்கள். வழக்குகளில் எப்போதும் வெற்றி பெறுவார்கள். சிலர், கடுமையான விரதம் அனுசரிப்பார்கள். குடும்பத்தின் மீது பாசம் வைத்திருப்பார்கள். மனைவி, பிள்ளைகளை அன்பால் கட்டுப்படுத்துவார்கள்.

ஆண் வாரிசு அதிகம் இருக்கும். அரசியலில் செல்வாக்கு அடைவார்கள். கெமிக்கல், நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகிய தொழில்களில் வெற்றி பெறுவார்கள். சண்டைப் பயிற்சி, நாட்டியப் பயிற்சிக்கூடங்கள் வைத்து நடத்துவார்கள். 18 வயதிலேயே புகழடைவார்கள். 31 வயதுக்குள் எதையாவது சாதிப்பார்கள். 48:55 வயதுக்குள் எல்லோராலும் மதிக்கப்படும் பதவி வகிப்பார்கள்.

பரிகாரம்: தென்னாற்காடு மாவட்டம் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரையும் ஸ்ரீவிபசித்து முனிவரையும் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்
(கேது + சூரியன் + சுக்கிரன்)


இந்தப் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். நாடி வந்தவர்களை ஆதரிப்பார்கள். கற்பனையில் மூழ்குவார்கள். ஆடை, ஆபரணங்கள் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள். ஆடல், பாடல், இசை இவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். ஓவியம், காவியம் தீட்டுவதிலும் இவர்கள் திறமை வெளிப்படும். பெற்றோரையும் பெரியோரையும் நேசிப்பார்கள். எதிரிகளையும் நேசிப்பார்கள். வாகனம் என்றால் இவர்களுக்குக் கொள்ளை பிரியம்.

ஊர், உலகத்தைச் சுற்ற விரும்புவார்கள். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகு கொண்டவர்கள். சிறு வயதில் அப்பாவியாக இருக்கும் இவர்கள் 23 வயதிலிருந்துதான் பல மனிதர்களின் மறுபக்கத்தை அறிந்துகொள்வார்கள். உடன் பிறந்தவர்களுக்காக சொத்துகளை விட்டுக் கொடுப்பார்கள். கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் அளவுக்கு பக்தி இருக்கும்.

கற்ற கல்வி இவர்களுக்கு உதவாது. பிறமொழித் திறனாலும் பேச்சாலும் கலையாலும் பணம் சம்பாதிப்பார்கள். 33, 34 வயதில் சொத்து சேரும். 37 வயதிலிருந்து குடும்பத்தில் நிம்மதி கிட்டும். இவர்களில் பலர் சிறந்த கட்டடக் கலை, மேஜிக் நிபுணர்களாகவும் நவீன வாகனங்களை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். நீண்ட ஆயுளுடன் உறவினர், நண்பர் கூட்டத்துடனும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

பரிகாரம்: கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆடுதுறையில் அருள்பாலிக்கும்  ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்
(கேது + சூரியன் + புதன்)


மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் அண்டமே சிதறினாலும் அஞ்சாத மனநிலை கொண்டவர்கள். எப்போதும் யோசித்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே இவர்கள் எல்லாம் அறிந்தவர்களாக இருந்தாலும் மற்றவர்கள் இவர்களை ஒன்றும் அறியாதவர்கள் என்று நினைப்பார்கள். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். மனம் திறந்து பேசினால் மதிப்பார்களோ மாட்டார்களோ என்று மனதை மூடி மறைத்து விடுவார்கள். இவர்களை ஆழம் பார்க்க முடியாது.

குடும்பத்தில் ஈடுபாடு குறைவாக இருக்கும். மனைவி, மக்களைவிட உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர் மீது அதிக நேசத்துடன் இருப்பார்கள். சிலர், தங்கள் வீட்டில் சின்ன நூலகமே வைத்திருப்பார்கள். காமத்தில் ஈடுபாடு குறைவு. கூச்ச சுபாவம் மிக்கவர்கள். நேர்மையும், நாணயமும் இவர்களின் இரு பக்கங்கள். தர்க்கம் என வந்தால் தடுமாற மாட்டார்கள். பிய்த்து உதறுவார்கள். 20 வயது முதல் இவர்களிடம் பல மாற்றங்கள் வரும்.

நண்பர்களால் இவர்கள் வாழ்க்கை மாறும். 36 வயதிலிருந்து செல்வம் சேரும். பலருடைய வெற்றிக்கு இவர்கள் காரணமாக இருப்பார்கள். சுயசரிதை எழுதுவார்கள். இவர்களில் பலர் விரிவுரையாளர், பிரசங்கம் செய்பவர், கமிஷன் வியாபாரம் செய்பவர், விவாத மேடை நடுவர் ஆகியவர்களாக இருப்பார்கள்.

பரிகாரம்: கன்னியாகுமரிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே உள்ள சுசீந்திரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாணுமாலயனை வணங்குதல் நலம்.

நான்காம் பாதம்
(கேது + சூரியன் + சந்திரன்)


நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் குலப் பெருமையைப் பேசுபவர்களாக இருப்பார்கள். மொழியறிவு அதிகம் இருக்கும். கடந்த காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொள்வார்கள். இவர்களுடைய மனம் மாறிக் கொண்டேயிருக்கும். சிலருக்கு, சிறு வயதிலேயே பெற்றோரைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். படிப்பைக் காட்டிலும் கலை, இலக்கியங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.

24 வயதில் சரியான பாதைக்குத் திரும்பி வருவார்கள். இன்னும் உயர முடியவில்லையே என்று வருந்துவார்கள். திறமைகள் கொட்டிக் கிடந்தாலும் முன்னேற்றத் தடைகள் ஏற்படும். பிறருடைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்வார்கள். மனைவி, பிள்ளைகளின் மேல் பாசம் இருந்தும் அவர்களுடன் விவாதம் செய்துகொண்டே இருப்பார்கள்.

விபத்துகள், நரம்புத் தளர்ச்சி, கனவுத் தொல்லை, தாழ்வு மனப்பான்மை வந்து பிறகு நீங்கும். அலைபாய்ந்த மனம் 39 வயதிலிருந்து கட்டுப்படும். ஹோமியோபதி, யுனானி, வாஸ்து, கைரேகை, தையல் கலை ஆகியவற்றில் புகழடைவார்கள். மேலும், உணவு விடுதி, மருந்துக் கடை ஆகியவற்றால் ஆதாயமடைவார்கள். நீண்ட ஆயுள் உண்டு.

பரிகாரம்: புதுக்கோட்டை : பொன்னமராவதி வழித் தடத்தில் உள்ள பேரையூரில் எழுந்தருளியிருக்கும் நாகராஜன் வணங்கி பூஜித்த ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமியை வணங்குதல் நலம்.

 ‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்

ஜகம் ஆள வைக்கும் மகம்!

மக நட்சத்திரத்தில்...

திருமணம், தாலிக்குப் பொன் உருக்குதல், வாஸ்துப்படி வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், மந்திர உச்சாடனம், ஆயுதம் பயிற்றுவித்தல், களஞ்சியத்தில் தானியம் சேகரித்தல், விவசாயத் துவக்கம், வேத, விரத பூர்த்தி, முடி சூட்டுதல், புதையல் எடுத்தல் ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் உண்டாகும்.

மக நட்சத்திர பரிகார ஹோம மந்திரம்

உபஹூதா: பிதரோ யே மகாஸு |
மனோஜவ: ஸுக்ருத: ஸுக்ருத்யா:|
தே நோ நக்ஷத்ரே ஹவமாக மிஷ்ட்டா:|
ஸ்வதாபிர்யஜ்ஞம் ப்ரயதஞ்ஜுஷந்தாம்||
 யே அக்னிதக்தா யேஅனக்னி தக்தா:|
யேஅமுல்லோகம் பிதர: க்ஷியந்தி|
யாஹும்ச்ச வித்மயாஹும் உ ச ந ப்ரவித்ம|
மகாஸு யஜ்ஞஹும் ஸுக்ருதஞ்ஜுஸந்தாம்|

ஹோமங்கள் தரும் நன்மைகள்

வாழ்க்கையில் உண்டாகும் சவால்களை வேதத்தின் துணை கொண்டு வெற்றிகொள்ள என்னும் அனைவரும் நாடுவது ஹோமங்களைத்தான். உலக வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நோக்கம் நிறைவேற நடத்தப்படும் ஹோமங்கள் காம்ய கர்மாக்கள் எனப்படும். உலக நன்மைக்காக, மன்னர்களின் நன்மைக்காக நடத்தப்படும் ஹோமங்கள் நைமித்த கர்மாக்கள் எனப்படும். நியாயமான மனித விருப்பங்களை நம் வேதங்கள் அனுமதிக்கின்றன. திருமணம், சந்தான பாக்கியம், நோய்கள் நிவர்த்தி போன்றவை நடைபெற ஹோமங்கள் பெரிதும் உதவுகின்றன. வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் பெரும்பாலான பிரச்னைகள் கர்மவினையின் அடிப்படையில் அமைவதுதான் என்கின்றன ஆன்மிக நூல்கள். கர்மவினைகளில் இருந்து மீண்டு வெற்றிகொள்ள உதவுபவை ஹோமங்கள் என்கின்றன வேதங்கள். ஹோமங்களை எந்த அளவு சிரத்தையாக நடத்துகிறோமோ அந்த அளவுக்கு அனுக்கிரகம் செய்வார் பகவான். பகவத் கீதையில் “நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன்’ என்கிறார் கிருஷ்ணர். எந்தவித இடையூறும் இல்லாமல் இறைவன் சிந்தனையோடு ஹோமங்கள் நடைபெறவேண்டும். அப்போதுதான் அக்னியில் பகவான் பிரசன்னமாகி நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பார்கள். மனம் லயித்த அந்தக்  கணத்திலேயே பகவான் யாகத்தீயில் தோன்றுவார். ப்ரஜேதஸ் என்பவன் பத்தாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து ஹோமம் செய்தும் ஆண்டவன் வரவே இல்லையாம். அவன் மனம் ஒன்றிய வேளையில்தான் இறைவன் காட்சி தந்தான் என்கின்றன புராணங்கள்.

- பலித ஜோதிஷம்