தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

நாயகி... நர்த்தகி!

நாயகி... நர்த்தகி!
பிரீமியம் ஸ்டோரி
News
நாயகி... நர்த்தகி!

நாயகி... நர்த்தகி!

நாயகி... நர்த்தகி!

`திக திக தா தை தையும் தத்தாம்...’ - 

- ஜனவரி ஒன்று. மாலை ஏழு மணி. மார்கழி மாத இருளும் குளிரும் இரவை ஆக்ரமித்த நேரம். சென்னை  தமிழிசைச் சங்கத்தில், 10 வயது சிறுமிகள் முதல் 25 வயது பெண்கள் வரை மொத்தம் 45 பேர் ‘நாயகி’ என்கிற தீமில் பரதமாட ஆரம்பித்தார்கள். அம்பாளின் நவரசங்கள்தான் இந்த நாட்டியத்தின் கருப்பொருள்.

முதலில் 9 சிறுமிகள், பட்டுப் பாவாடைகளுடன் சின்னஞ்சிறு அம்மன்களாக அம்பிகையின்  நவரசங்களை அச்சு அசலாக தங்கள் முகபாவங்களிலும் அபிநயங்களிலும் வெளிப்படுத்த, ஒட்டுமொத்த அரங்கமும் பக்தியில் சிலிர்த்து திளைத்திருந்தது. அடுத்து, குரு பத்மலஷ்மி சுரேஷ், அம்பிகையாக மேடையில் அவதரித்து, தன் சிஷ்யைகளுடன் இணைந்து, அம்பாளின் நவரசங்களை வெளிப்படுத்தும் சில அவதாரங் களை தத்ரூபமாக தனது நடனத்தில் வெளிப்படுத்தினார்.

அதில், பத்மலஷ்மி மகிஷாசுரமர்த்தினியாகவும், சிஷ்யைகள் அம்பாளின் மற்ற திருக்கரங்களாகவும், மகிஷனாகவும் மேடையை நிறைத்த தருணத்தில், அரங்கில் இருந்த வயதானவர்களில் சிலர் தங்களையுமறியாமல் கையெடுத்துக் கும்பிட்டனர். தொடர் நிகழ்வுகளாக கோலாட்டம், கும்மியாட்டம், விளக்கு நடனம் என்று பெண்கள் ஆடி முடிக்க, திரை விழுந்தது.

‘நாயகி’ தீம் எப்படி உருவானது என்று தெரிந்துகொள்ள குரு பத்மலஷ்மியைச் சந்தித்தோம். ஆடி முடித்தக் களைப்பே தெரியாமல், வியர்வை அரும்புக்கட்டிய முகங்களில் புன்னகை மின்ன, அம்பாள்கள் நம்மைச் சுற்றி அமர்ந்தார்கள். குரு பத்மலக்ஷ்மி பேச ஆரம்பித்தார்.

`‘பதினேழு வருடங்களாக பத்மாலயா என்கிற நாட்டியப் பள்ளியை நடத்திக்கிட்டு வர்றேன். இதுவரைக்கும் 200 குழந்தைகளுக்கும் மேலே நாட்டியம் சொல்லிக் கொடுத்திருக்கேன். என் சிஷ்யைகளில் சிலரும் நாட்டியப் பள்ளி நடத்துகிறார்கள். அந்த வகையில் ஒரு குருவாக என் சிஷ்யைகளின் சிஷ்யைகளையும் பார்த்துவிட்டேன்’’ என்றவர், தன்னுடைய தீம் நடனங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

‘`நான் இதுவரைக்கும் ‘அனைத்தும் என் அன்னை’, ‘சிதம்பரக் குறவஞ்சி’, ‘பாரத ஸ்வதந்திரக் குறவஞ்சி’னு மூன்று தீம் டான்ஸ் புரோகிராம்களை என் சிஷ்யைகளோடு சேர்ந்து செய்திருக்கேன். இவற்றில், ‘அனைத்தும் என் அன்னை’யில், புராணக் காலத் துப் பெண்ணாக அம்பாளின் பெருமை யையும், வரலாற்றுக்கால பெண்களின் அடையாளமாக சத்ரபதி சிவாஜியின் அம்மாவுடைய பெருமையையும், இந்தக் காலத்து அம்மாக்களின் வீடு, குழந்தைகள், வேலை என மும்முனைப் போராட்டத்தையும் நடனமாக வெளிப் படுத்தி இருந்தோம்.

நாயகி... நர்த்தகி!

அடுத்தது ‘சிதம்பரக் குறவஞ்சி’. நமக்கெல்லாம் குற்றால குறவஞ்சிதானே தெரியும். குறவஞ்சிகளிலேயே சிதம்பரக் குறவஞ்சிதான் மிகப் பழைமை யானது. இதனுடைய ஸ்கிரிப்ட், காந்தி ஆசிரமத்தில்தான் கிடைத்தது. அதிலும் சில இடங்களில் வார்த்தைகள் அழிந்து போயிருந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஒரு கவிஞரை வைத்து, பொருத்தமான வார்த்தைகளைப் போட்டு நாட்டியம் ஆடினோம்.

இதற்குப் பிறகு, ‘பாரத ஸ்வதந்திரக் குறவஞ்சி’. குறவஞ்சிகளிலேயே கடைசியாக எழுதப்பட்டது. எழுதியது யார் தெரியுமா? பழைய சந்திரலேகா படத்தில் வில்லனாக நடித்திருப்பாரே ரஞ்சன்... அவரின் அக்கா பிருந்தா வரதன். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னாடியே எழுதப்பட்ட நூல் இது. இதையும் நாட்டியமாக்கினோம்’’ என்றவர், ‘நாயகி’ தீம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

‘`அம்பாளை வைத்து ஒரு தீம் நடனம் அரங்கேற்ற வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. அம்பாளே அழகு... அவள் அழகுக்கு அழகு சேர்க்கும்படி இருக்கவேண்டுமே என்று யோசித்த போதுதான், நவரசங்கள் ஐடியா கிடைத்தது.  ‘அபிராமி அந்தாதி’யில் ஆரம்பித்து ‘அயிகிரி நந்தினி’ வரை பாடல்களைக் கோத்து, அபிநயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, டான்ஸ் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தோம்’’ என்றவர், பரதத்தால் தன் சிஷ்யைகள் சிலருக்கு நிகழ்ந்த நன்மைகளையும் பகிர்ந்துகொண்டார்.

‘`ஒரு மாணவிக்குப் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருந்து வந்தது. அவளுக்குப் பகல் நேரங்களில் ஓரளவுக்குப் பார்வை தெரியும். ஆனால், இருட்டிய பிறகு நடப்பதற்கே கஷ்டப்படுவாள். ஸ்டேஜில் நடனமாட வேண்டி வரும்போது, அவளை மட்டும் ஆடப்போகிற அரங்கத்துக்கு முன்னரே ஒரு தடவை அழைத்துக்கொண்டு போய் பயிற்சி கொடுத்து விடுவேன். தற்போது ஹையர் ஸ்டடீஸ் செய்து கொண்டிருக்கிறாள். அவளை செக்கப் செய்த கண் மருத்துவர், அவள் அபிநயங்களை கூர்மையாகப் பார்த்து நாட்டியம் கற்றுக்கொண்டதால்தான், பார்வை வேகமாகக் குறையாமல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு மாணவிக்கு டிஸ்லெக்ஸியா பிராப்ளம். அதனால், அவளால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவாள்.

தொடர்ந்து சில வருடங்கள் பரதநாட்டியம் கற்றுக் கொண்ட பிறகு, அவளுக்கு கான்சன்ட்ரேஷன் அதிகமாகி, பட்டப்படிப்பு  வரை முடித்து விட்டு, தற்போது வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறாள்’’ என்றவர் குரலில் பெருமையும் மகிழ்வும்.

நர்த்தனங்கள் தொடரட்டும் நன்மைகளோடு!


- ஆ. சாந்தி கணேஷ்   - படங்கள்: வீ. நாகமணி

அம்பாளும் நவரசங்களும்!

நாயகி... நர்த்தகி!

சாந்த ரசம்:  மாங்காட்டில்  தவக் கோலத்தில் இருக்கும் காமாட்சியின் வதனத்தில் இருப்பது இந்த ரசம்தான். 

கருணை ரசம்: கிட்டத்தட்ட எல்லா ஆலயங்களிலுமே அம்பாள் கருணை ரசத்துடன்தான் வீற்றிருக்கிறாள்.

ஆனந்த ரசம்: ஈசன், ஆனை முகன், ஆறுமுகத்தானுடன் தாய்மைப் பொங்க அமர்ந்திருக்கையில் அம்மையின் முகத்தில் ஜொலிப்பது ஆனந்த ரசம்.

ரௌத்திரம்: மகிஷனை வதம் செய்துவிட்டு, மகிஷாசுர மர்த்தினியாக திகழும்போது அவள் திருமுகத்தில் ஜொலிப்பது ரௌத்திர ரசம்.

பயானகம் (அச்சம்): சிவனை அம்பாள், கயிலாயத்தில் கைப்பிடிக்கும் நேரத்தில் அவரைச் சுற்றியிருந்த பாம்பைக் கண்டு பயந்தபோதும், ராவணன் கயிலாயத்தைத் தூக்க முயலும்போது, சிவபெருமான் கால்விரலால் ராவணனின் கர்வத்தை அடக்கும்போதும் அம்பாளிடம் வெளிப்பட்டதும் அச்ச ரசம்.

பீபட்சம்(வெறுப்பு):
கஜாசுரனை வதம் செய்துவிட்டு, ரத்தம் தோய்ந்த அவன் தோலையெடுத்து தன் மேல் போர்த்திக் கொண்ட - தன்னில் பாதியைப் (அம்சத்தை) பார்க்கையில் உமையின் விழிகளில் தெறித்தது வெறுப்பு ரசம்.

ஹாஸ்யம்:  விஷ்ணு எடுத்த மோகினி ரூபத்தின் மேல் காதல் கொண்ட கணவனைப் பார்த்து அம்பாள் நகைக்கையில், அது ஹாஸ்ய ரசம்.

ஆச்சர்யம்: திரிபுர அசுரர்களை தனியொருவனாக வதம் செய்த பெருமானை நோக்கும்போது, அம்பாளில் முகத்தில் வழிவது ஆச்சர்ய ரசம்.

சிருங்காரம்:  பூலோகத்தில் பிறந்து, தவமிருந்து, சிவனைக் கரம்பிடிக்கும் போதெல்லாம் ஏற்படும் அம்பாளின் நாணுதல் நிலை, சிருங்கார ரசம்.