ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ராஜயோகம் அருளும் அய்யனார்!

ராஜயோகம் அருளும் அய்யனார்!

ராஜயோகம் அருளும் அய்யனார்!
ராஜயோகம் அருளும் அய்யனார்!
##~##
சுரர்கள் என்றாலே அவர்களின் சூரத்தனங்களை, எளியவர் களிடமும் இறைவனே கதியென்று இருப்பவர்களிடமும் காட்டி, அவர்களை அச்சுறுத்துவார்கள், இல்லையா? சிங்கமுகன், தாரகன், சூரபத்மன் எனும் மூன்று அசுரர்களின் வெறியாட்டம் தலைதூக்கியிருந்த காலம் அது!

போதாக்குறைக்கு, இவர்களின் சகோதரி வேறு, சிவனாரை நினைத்து கடும் தவம் புரிந்து, வரங்களை வாங்கி வைத்திருந்தாள். ஆகவே, தேவர்களாலும் முனிவர்களாலும் கூட, அசுரக் கூட்டத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை.

சிவபெருமானின் வரம் கிடைத்ததில், தலை - கால் புரியாமல் அட்டூழியம் செய்தார்கள் அசுரர்கள். இவர்களின் வெறியாட்டத்தை, தேவர்களும் முனிவர்களுமே தாங்க முடியாதபோது, மனிதர்கள் எம்மாத்திரம்?!

இதில், சூரபத்மன் ஒரு படையை அனுப்பி, தேவேந்திரனின் மனைவி இந்திராணியை தூக்கிக்கொண்டு வரும்படி உத்தரவிட்டான். இதனை முன்கூட்டியே உணர்ந்த இந்திரன், மனைவியை அழைத்துக் கொண்டு, பூலோகத்துக்கு வந்தான். அவன் அடைக்கலமான தலம் சீர்காழி என அந்தத் தலத்தின் புராணம் தெரிவிக்கிறது. அப்போது ஒரு மூங்கில் தோப்பாக உருவெடுத்து மறைந்து வாழ்ந்தானாம் இந்திரன்.

ராஜயோகம் அருளும் அய்யனார்!

அதேநேரம், தேவலோகத்தில் இந்திரனைக் காணாத அசுரப்படை, பூலோகத்துக்கு வந்து அவர்களைத் தேடியது. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், துவண்டு போனது. பிறகு, அசுரர்களின் சிந்தனை வேறுபக்கம் திரும்பவே, பழையபடி உருவெடுத்த இந்திரன், அசுரர்களை அழித்தொழிக்கும்படி, சிவனாரைப் பிரார்த்தித்து, கடும் தவம் புரிந்தான். இதையறிந்த தேவர்கள் கூட்டமும் முனிவர்களும் இந்திரனிடம் வந்தனர். அவர்களும் தவத்தில் மூழ்கினர்.

ராஜயோகம் அருளும் அய்யனார்!

அதேநேரம், தவம் முடியும் வரை, இந்திராணிக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, சிவ விஷ்ணு அம்சமான, அய்யனாரைப் பிரார்த்தித்தார். அங்கே... கோடி சூரியப் பிரகாசத்துடன், வெள்ளை யானையில், பூரணை - புஷ்கலை சமேதராக எழுந்தருளிய அய்யனாரை அனைவரும் வணங்கித் துதித்தனர்.

'சுவாமி, நாங்கள் திருக்கயிலாயம் சென்று, சிவபெருமானைத் தரிசித்து, அசுரர்களை அழித்தொழிக்க முறையிட உள்ளோம். நாங்கள் சென்று வரும் வரை, அரக்கர் களின் கைகளில் சிக்காமல், இந்திராணியைப் பாதுகாத்து அருளுங்கள்’ என வேண்டினான் இந்திரன். 'அப்படியே ஆகட்டும்’ எனச் சம்மதித்தார் அய்யனார் சுவாமி. இதையடுத்து தேவாதி பெருமக்கள் சூழ, திருக்கயிலாயம் புறப்பட்டான், இந்திரன்.

அசுர குணம் கொண்டவர்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? இந்திராணி இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட அசுரர்கள், ஆட்டுத்தலை முகம் கொண்ட தங்கள் தங்கை அஜமுகியை இந்திராணி இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தனர். அஜமுகி, ஆவேசத்துடன் வந்து இந்திராணியைத் தூக்கிச் செல்ல முயன்றாள். அப்போது தன் படையில் உள்ள வீரமாகாளருடன் வந்த அய்யனார், இந்திராணியைக் காத்தருளினார்.

ராஜயோகம் அருளும் அய்யனார்!

சீர்காழி தலத்துக்கு வந்து மூங்கில் வனத்தில் இந்திராணியையும் தேவர்களையும் காத்தருளிய அய்யனார், அதையடுத்து காவிரி நதியின் கிளையாகப் பிரிந்துள்ள ஆற்றங்கரை ஒன்றில், சிவனாரை நினைத்து தவம் செய்தார். பிற்காலத்தில், அந்தப் பகுதி ராஜகேசரி சதுர்வேத மங்கலம் எனும் ஊரானது.

அய்யனாரின் பேரருளை அறிந்த மன்னர், அந்த ஊர்மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தவம் செய்த இடத்தில் அழகிய கோயிலை எழுப்பித் தர... அன்று முதல் ராஜகேசரி சதுர்வேதமங்கலம் கிராமம் செழிக்கத் துவங்கியது. அத்துடன், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், மக்கள் இங்கு வந்து அய்யனாரை வணங்கி, வரம் பெற்றனர் என்கிறது ஸ்தல வரலாறு.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜகேசரி சதுர்வேதமங்கலம். இன்றைக்கு ராஜகிரி என மருவிவிட்டது. ராஜகிரியில்... குடமுருட்டி ஆற்றங்கரைக்கு அருகில் அமைந்துள்ளது அய்யனார் கோயில். ஆற்றங்கரைக்கு அருகில் அழகு ததும்பக் காட்சி தருவதால், இவருக்கு கரைமேல் அழகர் அய்யனார் எனும் திருநாமம் உண்டானது.

பிரமாண்டமான, அழகான இரண்டு யானைச் சிலைகளுடன் அற்புதமாகத் திகழ்கிறது, அய்யனார் ஆலயம். ஸ்ரீபூரணை - புஷ்கலை சமேதராக மூலவர் காட்சி தர... இந்தக் கோயிலில், கரைமேல் அழகர் அய்யனார் மற்றும் யானைமேல் அழகர் அய்யனார் ஆகியோரையும் சேர்த்து மூன்று அய்யனாரின் திருக் காட்சிகளைத் தரிசிக்க முடிகிறது.

ராஜயோகம் அருளும் அய்யனார்!

இந்திரனின் மனைவியைக் காப்பாற்றி அருளிய அய்யனார் என்பதால், தஞ்சைப் பகுதிகளில் உள்ள பெண்கள், இங்கு வந்து, தங்கள் மனக்குறைகளையும் மனப் பாரங்களையும் அய்யனாரிடம் சொல்லி முறையிட்டு, நிம்மதியுடன் செல்கின்றனர்.

தை மாதம் துவங்கிவிட்டாலே, அய்யனார் கோயிலில் எப்போதும் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் தான்! அய்யனாரை குலதெய்வமாகக் கொண்டவர் களும் விவசாயப் பெருங்குடி மக்களும் அய்யனாருக்குப் பொங்கல் வைத்து வேண்டிச் செல்கின்றனர்.

வைகாசியில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெறும்.

செய்வினைக் கோளாறுகளால் சிக்கித் தவிப்பவர்கள், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட முடியாமல் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து அய்யனாரின் யானைக்கு மாலை அணிவித்து, பொங்கல் படையலிட்டு, அய்யனாரை வணங்கி வழிபட்டால், தீய சக்திகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் எளிதில் தப்பிவிடலாம் என்பது ஐதீகம்!

வருகிற பங்குனி மாதத்தில், கோயிலின் குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி பாய்ந்தோடும் தஞ்சைத் தரணியில், விவசாயத்தை சிறக்கச் செய்து, ஊரையே செழிக்கச் செய்யும் ராஜகிரி அய்யனாரை வணங்கினால், இனி ராஜயோகம்தான் நமக்கு என்பதில் சந்தேகமே இல்லை!

  படங்கள்: ர.அருண்பாண்டியன்