ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

குறை தீர்ப்பார் கோச்சடை சாமி!

குறை தீர்ப்பார் கோச்சடை சாமி!

குறை தீர்ப்பார் கோச்சடை சாமி!
##~##
'அ
ருள்மிகு கோச்சடை முத்தையா சுவாமி துணை’ என்கிற வாசகத்துடன் வாகனங்களைப் பார்த்தால், பந்தயம் கட்டிச் சொல்லலாம்... 'இது மதுரைக்காரரோட வண்டி’ என்று! காலங்காலமாக, மதுரைவாழ் மக்களை வழித் துணையாக இருந்து வழிநடத்தி வருகிறார் ஸ்ரீமுத்தையா சுவாமி!

மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது கோச்சடை. மதுரையின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான இந்தப் பகுதியில் இருந்தபடி, ஊரையே காபந்து செய்து வருகிறார் ஸ்ரீமுத்தையா சுவாமி. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், கோயில் கொண்டிருப்பதென்னவோ அய்யனார்தான். ஆனால், முத்தையா சுவாமி என்றால்தான் மக்களுக்குத் தெரிகிறது.

பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே இங்கு கோயில் அமைந்திருந்ததாம். கையில் வில்லேந்தி, பூரணை - புஷ்கலை சமேதராக, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிற அய்யனார் கோயில்தான் இது. ஆனாலும், ஸ்ரீமுத்தையா சுவாமியே முக்கியமான தெய்வமாகப் போற்றப்படுகிறார். குதிரை, ரிஷபம் மற்றும் இந்திரன் அய்யனாருக்கு வழங்கிய வெள்ளை யானை ஆகிய வாகனங்கள் சிலைகளாகக் காட்சி தருகின்றன. முத்தையா சுவாமிதான், மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்குக் கண்கண்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே! தங்கள் வீட்டு விசேஷமானாலும் சரி... தங்கள் மனத்தை வாட்டி வதைக்கிற பிரச்னையாக இருந்தாலும் சரி... முத்தையா சுவாமியிடம் வந்து முறையிட்டுச் செல்கின்றனர்.

குறை தீர்ப்பார் கோச்சடை சாமி!

கோயிலின் ஸ்தல விருட்சம் புளியமரம். இந்த மரத்தடியில் அமர்ந்து, பதஞ்சலி முனிவர் தவம் இருந்தார் என்கிறது ஸ்தல புராணம். மரத்தின் அடியில் உள்ள புற்றில் நாகம்மன் குடியிருக்கிறாள் என்றும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாகம்மனுக்குப் பாலூற்றி வழிபட்டால், நாக தோஷம் நீங்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

குறை தீர்ப்பார் கோச்சடை சாமி!

கோயிலுக்கு முன்னே வில்லாயுதத்துடன் அய்யனாரும் முத்தையா சுவாமியும் குதிரைகளில் அமர்ந்து பூதகணங்கள் சூழ, காட்சி தரும் அழகே அழகு! ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் வடிவமான ஸ்ரீஅய்யனார் சந்நிதிக்கு வந்து, கார்த்திகை மாதம் துவங்கியதும் ஐயப்ப மலைக்கு மாலை அணிந்து விரதத்தைத் துவக்குகின்றனர் பக்தர்கள். அதேபோல், கார்த்திகை துவங்கி விட்டாலே இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டுகிற வைபவமும் நடைபெற்றுக்கொண்டே இருக்குமாம்!   இங்கே, மாசி சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்திச் செல்கின்றனர். அதேபோல் வருடந்தோறும் முத்தையா சுவாமிக்கு பாவாடை சார்த்தும் வைபவமும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீகருப்பசாமி, அக்னிவீரபத்திரர், நாகப்ப சுவாமி, சங்கிலி கருப்பர், கலுவடி கருப்பு, சன்னாசி, ஆதிபூசாரி, இருளப்பசுவாமி, வீரணன், சப்பாணி, சோனை, முத்துகருப்புசாமி, முனியாண்டி, பத்திரகாளி அம்மன், ராக்காயி அம்மன், கருப்பாயி அம்மன், பேச்சியம்மன், இருளாயி அம்மன், மெய்யாண்டி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களும் தரிசனம் தருகின்றன.

புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையன்று பொங்கல் படையல், நேர்த்திக்கடன், திருவீதியுலா என விழாவும் நடைபெறுகிறது. முன்னதாக, கோச்சடையில் உள்ள பனைமரம் ஒன்றில் இருந்து பல்லி சத்தமிட்டால்தான் இந்த விழா நடைபெறுமாம்; இல்லையெனில், முத்தையா சுவாமி உத்தரவு தரவில்லைஎன விழாவைத்  தள்ளிப்போட்டு விடுவார்களாம்!

'குடும்பத்திலும் வியாபாரத்திலும் என்ன பிரச்னை வந்தாலும், ஒரு சூடம் ஏற்றி வழிபட்டால் போதும்... கோச்சடை முத்தையா சுவாமி தீர்த்து வைப்பார்’ என்று பெருமைபடத் தெரிவிக்கின்றனர் மதுரை மக்கள்.

- ஆர்.கே.சஞ்சீவ்குமார்
படங்கள்: ச.லட்சுமிகாந்த்