மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 23

சிவமகுடம் - பாகம் 2 - 23
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 23

சிவமகுடம் - பாகம் 2 - 23

சிவமகுடம் - பாகம் 2 - 23

ண்ணாந்து பார்த்தான் கோச்செங்கண். பொதிகை மலையின் முடியில் தவழ்ந்து, பருவத்தின் இழுப்புக்கெல்லாம் எளிதில் இசைப்பட்டுவிடும் இளங்காளையரின் மனதைப் போன்று, பருவக்காற்றின் விசைக்கு ஆட்பட்டு வடக்குநோக்கி நகர்ந்த மேகப்பொதிகள், பசுவைக் கண்ட கன்றுகளைப் போல், பசுபதியாம் சொக்கன் உறையும் ஆலவாய்க் கோயிலின் கோபுரத்தை நாலாபுறமும் சூழ்ந்துகிடந்தன!

தளர்நடையிட்டு வந்த அவனது புரவி வைகை யைத் தாண்டுவதற்கு  முன்னதாகவே, தூரத்தில் தெரியும் கோபுரத்தையும் அதைச் சூழ்ந்து திகழும் மேகப்பொதிகளையும் கண்டவனுக்கு உள்ளம் சிலிர்த்தது. அந்த அற்புதக் காட்சி, `நான்மாடக்கூடல்’ என்ற மாமதுரையின் சிறப்புப் பெயருக்குக் காரணமாகப் புராணங்கள் சொல்லும் திருக்கதைக்கு, நேரில் சாட்சிசொல்வதாகப் பட்டது அவன் உள்ளத்துக்கு.

கடிவாளத்தைக் கைவிட்டு சிரம்மேற் கரம் குவித்தான்... கண்கள் மூடினான்... கண்ணீர் வடித்தான்... ஆலவாய் மேவும் அந்தக் கயிலையானை மனக்கண்ணில் நிலைநிறுத்தி வணங்கினான். மீண்டும் பெரும் சிலிர்ப்புக்கு ஆளானான். அதற்குக் காரணம் இருந்தது!

ஆம்! அவன் மனக்கண்ணில் ஆலவாய் அண்ணலின் திருவுருவம் தீபஜோதியாய் எழுந்து ஒளிர, கூடவே... திருப்பாச்சிலாச்சிராமம் தலத்தில் தரிசித்த அந்தப் பால்வண்ண திருமுகமும் எழுந்து ஒளிர்ந்தது!

அந்தப் பால தெய்வம் சிரிக்க, கூடவே அதன் விழிமலர்களும் சிரிக்க... அதுகண்டு தான் சிலிர்த்ததையும் எண்ணிப்பார்த்த கோச்செங்கணுக்கு உள்ளம் பூரித்தது. மிதமிஞ்சிய பூரிப்பில் இப்போது மிகப்பெரிதாய் சிலிர்த்தது அவனின் மேனி.

ஆகிருதியான அவனின் மேனியைச் சுகமான சுமையாகக் கருதி சுமந்து வந்த அவனுடைய செல்லப் புரவியோ ஆகாயத்தையும் கவனிக்கவில்லை; ஆலவாய்க் கோபுரத்தையும் தரிசிக்கவில்லைபோலும். ஆகவே, கடமையே கண்ணாக வைகைக் கரையை நெருங்கி விட்டிருந்தது. பயணத்தை எளிதாக்கவே வைகைக் கரையில் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் கோச்செங்கண். இங்கு, வைகை விரிந்து பரந்து செல்லும்; ஆழம் மிகக்குறைவாக இருக்கும். புரவியிலிருந்தபடியே ஆற்றைக் கடந்துவிடலாம்.

சிவமகுடம் - பாகம் 2 - 23

கோச்செங்கண் யூகித்தபடியே நீர்ப்பரப்பில் சிரமமின்றி கால்பதித்து நடந்து கரையேறியது புரவி. ஆனால், அவன் மனப் புரவியோ கோபுர தரிசனம் ஏற்படுத்திய பரவசப் புனலில் சிக்கிக் கரையேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் காட்சி, ஒருபுறம் அவனுக்குள் பரவசத்தை அளித்ததென்றால், மறுபுறம் அச்சத்தை விளைவிப்பதாகவும் தோன்றியது.

சைவம் தாழ்ந்துகிடக்கும் சிவபுரத்தின் - ஆலவாயின் விடியலுக்கான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறான் அவன். ஆனால், வைகை நகரத்தின் வைகறை விடிந்துவிடாதபடி காலைச் சூரியனை மேகப்பொதிகள் சூழந்து கிடக்கும் காட்சி, விடியலுக்கான தடைகள் இந்தப் பேரரசில் மிக அதிகம் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல் பட்டது கோச்செங்கணுக்கு. அதன் விளைவு அச்சத்தை உண்டுபண்ணியது அவனுக்குள்.

புரவி கரையேறும்போது உண்டான சலனத்தில், வைகையின் நீர்த் துளிகள் சில முகத்தில் தெறித்துவிழ, தன்னிலைக்குத் திரும்பிய கோச்செங்கண் தூரத்தில் அந்தக் கரும்புள்ளியைக் கண்டான். மறுகணம் வேறெதையும் யோசிக்கத் தலைப்படாதவனாக சட்டென்று புரவியிலிருந்து தரையில் குதித்தான். அப்படிக் குதித்தவன், தன்னுடைய வீர வாளை தரையில் ஊன்றியதுடன் அவனும் முழந்தாளிட்டுப் பணிந்த வேளையில், கரும்புள்ளி கரும்புரவியாய்ப் பரிணமித்து அவனிடத்தை அணுகியிருந்தது.

‘‘வீரவணக்கத்தை ஏற்கிறேன் கோச்செங்கணரே... எழுந்துகொள்ளும்’’

கனகம்பீரமான அந்தக் குரலைக் கேட்டபிறகு தான் தலைநிமிர்த்தினான் கோச்செங்கண். மேனியையும் நிமிர்த்தி எழுந்து நின்றான். மார்பின் மீது வலது உள்ளங்கையைப் பதித்து மீண்டும் சிரம் தாழ்த்தி வணங்கினான்... ‘‘பாண்டிமாதேவியாருக்கு எப்போதும் வெற்றியே’’ என்றபடியே!

வணக்கத் துதியைச் செவிமடுத்த தேவியார் மெள்ளப் புன்னகைத்தார். புரவியிலிருந்து தானும் தரையில் குதித்தவர், கோச்செங்கணை ஆதுரத்துடன் நோக்கினார்.

‘‘உம்மைப் போன்றவர்களுக்கு நான் என்றென்றும் இளவரசி மானிதான்’’ என்றார் இதழ்களில் புன்னகை தவழ!

‘‘அது எங்கள் பாக்கியம். ஆனாலும் தாயே... எங்கள் இளவரசியைப் பாண்டிமாதேவியாராகப் பார்ப்பதிலும் வணங்குவதிலும்தான் எங்களுக் குப் பெருமிதம்’’

உள்ள நெகிழ்ச்சியுடன்கூடிய கோச்செங்கண னின் கருத்தை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்ட பாண்டிமாதேவியார் கேட்டார்:

‘‘உபதளபதியாரே... சென்று மீண்ட காரியம் என்னவாயிற்று?’’

‘‘தங்கள் கட்டளைகளுக்கும் அவை சார்ந்த விளைவுகளுக்கும் தோல்விகள் ஏது தாயே? வெற்றியுடன்தான் வந்திருக்கிறேன்...’’ என்று தொடங்கிய கோச்செங்கண், தேவியார் ஏவிய பணிகுறித்த விஷயங்களைக் கோவையாகச் சொல்லி முடித்தான்; திருப்பாச்சிலாச்சிராமத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் உட்பட!

சீர்காழிப் பிள்ளையின் விஜயம், அவர் பாடிய பதிகம், பரமன் ஆடிய தாண்டவம், பதிகத்தால் பாவை குணம்பெற்று எழுந்த அற்புதம்... என ஒவ்வொன்றையும் கோச்செங்கண் சொல்லச் சொல்ல, பகலவனின் ஒளி தீண்டிய கமலமாய் மலர்ந்தது தேவியாரின் திருமுகம். ஆனால், அந்த மலர்ச்சியை மட்டுப்படுத்தியது, மாமதுரையின் கோட்டைக்குள் ஒலித்த சங்கநாதம்.

சிவமகுடம் - பாகம் 2 - 23

அதனால், தன் பேச்சுத் தடைப் படவே முகத்தில் கேள்விக்குறியோடு பாண்டிமாதேவியாரை நோக்கினான் கோச்செங்கண்.

‘‘தாயே அது...’’

‘‘பெருஞ்சைன்னியத்தின் துடிப்புக்கான முன்னறிவிப்பு’’

‘‘பெருஞ்சைன்னியமா?’’

வியப்பா... திகைப்பா... திகிலா... எனச் சட்டென அனுமானிக்க இயலாதபடி விநோத பாவனையை வெளிப்படுத்தியது,  கோச்செங்கணின் முகம். தொடர்ந்து கேட்டான்...

‘‘பெருஞ்சைன்னியம் எழுவதற்கு இப்போது என்ன அவசியம். மாமதுரையின் வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே அம்மா...’’

கோச்செங்கணின் கேள்விக்குப் பதிலாக, தேவியாரின் திருமுகம்  இதழோரப் புன்னகையை வெளிப்படுத்தியதென்றால், அவரின் உள்ளமோ `ஹூம்ம்..’ எனும் ஹூங்கார ஒலியை பெருமூச்சுடன் கலந்து அவரது வேதனையை வெளிப்படுத்தியது.

‘‘மாமதுரை மாநகரம் தன் வழக்கத்திலிருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது கோச்செங்கணரே. அதை மீட்கும் பெரும் காரியத்தில்தான் நாம் இறங்கியிருக்கிறோம். அதில் தோல்வி என்றால்... அந்தத் தோல்வி நமக்கானதல்ல. அதோ, ஆலவாய்க்கோயிலில் அமர்ந்திருக்கிறாரே... மாமதுரையின் நிரந்தரக் காவலன் - சொக்கநாதர்... அவருக்கும், அவர் மனையாளாம் நம் பேரரசி மீனாளுக்கும்தான்!’’ என்று மதுரைக் கோயிலைச் சுட்டிக்காட்டி, ஏதோ சூளுரைப்பதுபோல் தீரமாகவும் தீர்க்கமாகவும் தேவியார் பேச, மிகுந்த தயக்கத்துடன் இடைமறித்தான் கோச்செங்கண்.

‘‘தாயே! ஏதேனும் பகை அணுக்கத்தில் இருந்தாலல்லவா மதுரையின் பெருஞ்சைன்னியம் எழும்... ஆனால் இப்போது...’’

‘‘நீர் சொல்ல முனைவது சரிதான். கண்ணுக்கெட்டும் தூரம் வரை தென்னவருக்குப் பகையில்லை தான். கண்ணில் பட்ட பகைவர் களில் சிலரை அன்பால் தடுத்தாட் கொண்டுவிட்டார் மாமன்னர். பணியாத பகைவரையும் பலத்தால் பணியவைத்துவிட்டார். ஆனால்...’’

‘‘ஆனால்... என்ன தாயே?’’

‘‘மாமன்னரின் தற்போதைய கவனம் எல்லாம் தன் கண்ணுக்குப் புலப்படாத பகைவரைப் பற்றியது தான். அவர்களை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்... அந்த ஆடல்வல்லானின் திருவிளை யாடல்களுக்கு இணையானவை.’’

‘‘புலப்படாத பகைவர்களா... ஏதேனும் சதிக் கூட்டமா அம்மா?’’

‘‘மிகச் சரியாகச் சொன்னீர் கோச்செங்கணரே. தேசத்துக்குள் மட்டுமின்றி அரண்மனைக்குள்ளும் சதிக்காரர்கள் இருப்பதாக நினைக்கிறார் மாமன்னர். அப்படியானவர் களில் சிலரை வளைக்கும் திட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளார். அவர்களில் ஒருவர் மிக முக்கியமானவர்.’’ என்று கூறிச் சிரித்தார் தேவியார்.

‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் தாயே... நம் குலச்சிறையாரையா?’’

‘‘இல்லை’’ என்று தலையசைத்து மறுத்த தேவியார் உரிய பதிலைச் சொல்லிவிட்டு, ``மற்றதை அரண்மனையில் மாமன்னரின் முன் பேசிக் கொள்ளலாம்’’ என்று ஆணையிட்ட படியே புரவியில் ஏறிப் புறப்பட்டு விட்டார்.

ஆனால், புயலெனப் பாய்ந்த அவரின் புரவி கண்ணைவிட்டு மறைந்தும், ஆடாமல் அசையாமல் கல்லாகச் சமைந்துபோனான் கோச்செங்கண். காரணம், தேவியார் சொன்ன அந்த நபரின் திருப்பெயர் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்ததுதான்!

ஆம், தேவியார் சொன்னது இதுதான்...

‘‘கோச்செங்கணரே மனதைத் திடப்படுத்திக் கொள்ளும். மாமன்னர்  பிரதானமாகச் சந்தேகிப்பது யாரைத் தெரியுமா? பாண்டிய தேசத்தின் பேரரசியான இந்த மங்கையர்க்கரசியாரைத்தான்!’’

கற்சிலையென நின்ற கோச்செங்கணை உசுப்பியது, அவன் வலத்தோளில் வந்தமர்ந்த பச்சைக்கிளி. சட்டென்று சுதாரித்துக் கொண்ட வன், கிளியை லாகவமாகப் பிடித்து அதன் சிறகுகளுக்கடியில் விரல்களால் கோதினான். சிறு வெண்பட்டுச் சுருளாகக் கிடைத்தது அவன் எதிர்பார்த்த செய்தி.

பாண்டிமாதேவியாரின் பணியைச் சிரமேற்கொண்டிருக்கும் பொங்கிதேவியின் பயணத்தை, இளங்குமரனால் சிறைப்பட்ட முரடனின் கதியை, மீண்டும் சிவதுர்கம் அடைந்துவிட்ட இளங்குமரனின் நிலையை, பாண்டியதேசத்தின் எதிர்கால விதியை மிகத் துல்லியமாகச் சொன்னது அந்தச் செய்தி!

அந்தச் செய்தியை அனுப்பிவைத்த இளங் குமரனுக்கோ சிவதுர்கத்தின் சிவப்பரம்பொருள் வேறொரு செய்தியைக் கொடுத்திருந்தது!

- மகுடம் சூடுவோம்...  

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்