Published:Updated:

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

காஞ்சி மாமுனிவர் தொடர்பான பக்தர்களின் பரவச அனுபவங்களைத் தொகுத்து ‘மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள்’ என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார் கார்த்திகேயன் என்ற தீவிர பெரியவா பக்தர். மொத்தம் பத்து பாகங்களாக இவற்றைத் தொகுத்திருக்கிறார். நூல் வடிவாக்கம்: காஷ்யபன்.

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’மகா பெரியவா கலவையில் முகாமிட்டிருந்த சமயம். தஞ்சைப் பகுதியிலிருந்து தரிசனத்துக்காக வந்திருந்தார் வழக்கறிஞர் ஒருவர். பெரிய தட்டில் பழங்கள், புஷ்பம், கல்கண்டு இத்தியாதிகள். திராட்சை, முந்திரி, தேன் பாட்டிலும் பரவியிருந்தன. காகித உறையில் ரூபாய் நோட்டுகள். சுவாமிகளுக்கு இவற்றைச் சமர்ப்பித்து, வந்தனத்தையும் தெரிவித்துக்கொண்டார் வழக்கறிஞர்.

“அது என்ன கவர்?” என்று சன்னமானக் குரலில் கேட்கிறார் பெரியவா.

“ஏதோ கொஞ்சம் பணம்...” என்கிறார் சட்டம் படித்தவர்.

“கொஞ்சம்னா பத்து ரூபாவா, பதினோரு ரூபாவா?”

“பதினைந்தாயிரம் ரூபாய்...” என்ற வழக்கறிஞரின் குரலில் தன் பெருமையை வெளிப்படுத்தும் தொனி புலப்பட்டது. தான் காரில் வந்திருப்பதையும் தெரிவிக்கிறார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

“அந்தக் கவரை எடுத்துண்டுபோய் கார்ல பத்திரமா வச்சுட்டு வா... நீ கொண்டு வந்த பழம், புஷ்பம் போதும்...” என்று பெரியவா சொன்னபோது வெலவெலத்துப் போனார் அட்வகேட். கர்வமெல்லாம் அடங்கி விட்டது போன்று ஒரு உணர்வு. பெரியவா சொன்னபடியே செய்து விட்டுத் திரும்பினார். அவருக்கு பிரசாதங்கள் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்தார் மகா பெரியவா. கார் புறப்பட்டுச் செல்லும் சப்தம் கேட்டது.

அந்த கால கட்டங்களில் ஶ்ரீமடத்துக்குப் பணம் மற்றும் பொருள் தட்டுப்பாடு ஏற்படுவது உண்டு. ‘பணம் இல்லையே’ என்று மேலாளர் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். அப்படியிருக்க, அத்தனைப் பெரிய தொகையைப் பெரியவா நிராகரித்தது ஏன்? ஒருவருக்கும் புரியவில்லை.

இதை உணர்ந்து விட்டவராய், “இந்தப் பதினைந்தாயிரம் ரூபாயை நான் ஏத்துக்கலையேன்னு நினைக்கறேளா? இது ஒரு பொய் வழக்கில் இவர் வாதாடி ஜெயித்த பணம்... அந்த ஃபீஸில் ஒரு பகுதிதான் இந்தப் பதினைந்தாயிரம்... அதான் வேண்டாம்னு சொன்னேன் என்றார் மகா பெரியவா.

அருகிலிருந்த தொண்டர்களுக்கு, தர்ம நெறியாளரை எந்த அதர்மவழிப் பொருள்களும் அண்ட வாய்ப்பில்லை என்பது புரிந்தது.

மகா பெரியவா குடி கொள்ளும் இடத்தைச் சுத்தம் செய்து கோலம் போடுவதும், விளக்கேற்றுவதும் தனக்குக் கிட்டிய பெரும் பாக்கியமாகக் கருதி சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார் அந்த மூதாட்டி. இரண்டு புடவைகளுக்கு மேல் அவரிடம் பொருள் எதுவுமில்லை.

ஒருமுறை தரிசனத்துக்காக வந்த பக்தர் ஒருவர் அரிசிக் குருணையையும், வெல்லத்தையும் மகானுக்குச் சமர்ப்பித்து விட்டுச் சென்று விட்டார். பொருளைப் பயனுள்ள வகையில் விநியோகம் செய்ய வேண்டுமே? மூதாட்டிக்கு உத்தரவாயிற்று.

“இந்தக் குருணையை எடுத்துண்டு போய்  காஞ்சிபுரத்துல உன் கண்ல படற எல்லா எறும்புப் புத்துகளிலும் கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு வா... அரை ஆழாக்கு வீதமா போடு...” என்றார் மாமுனிவர்.

எறும்புப் புற்று என்பது வீட்டில் எப்போதாவது திடீரென்று தோன்றி மறைந்து விடும். தேடிப் போனால் தென்படுமென்பது நிச்சயம் கிடையாது. மூதாட்டி பக்தி சிரத்தையுடன் காஞ்சிபுரம் முழுவதும் அலைந்து திரிந்து பல எறும்புப் புற்றுகளைக் கண்டுபிடித்து அரிசிக் குறுணையையும் வெல்லத்தையும் போட்டு விட்டு வந்தார்.

மூதாட்டி திரும்பி வந்ததும், பெரிய மாலை போல் இருந்த திரிநூலையும், ஒரு டின் நிறைய எண்ணெய்யையும் கொடுத்து, ‘’திரிநூலை நறுக்கி ஒவ்வொரு கோயிலா போய், எத்தனை விளக்குக்குப் போட முடியுமோ அத்தனை விளக்குக்கும் போடு... ஒவ்வொரு நாளும் ரெண்டு, மூணு கோயிலுக்குப் போய் விளக்கேத்தினாலும் போதும்...” என்று கட்டளையிட்டார் மகா பெரியவா. மூதாட்டியும் இந்தத் திருப்பணியை மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் நிறைவேற்றினார்.

பெரும் பணக்காரர் ஒருவர் ஒருநாள் மடத்துக்கு ஆடம்பரமாக வந்தார். தற்பெருமை மேலோங்க, ‘’நான் சகஸ்ர போஜனம் செஞ்சுட்டு வந்திருக்கேன்... அதோடு லட்சதீபமும் ஏத்தியிருக்கேன்...” என்றார் சுவாமிகளிடம்.

அகம்பாவமே மொத்த உருவமாக நின்ற அந்த தனவந்தரிடம், “அப்படியா.. இங்கேயும் ஒரு பாட்டி இருக்கா... அந்த அம்மாளும் லட்சபோஜனம் செய்திருக்கா... பல லட்ச தீபம் போட்டிருக்கா...” என்றார் பெரியவா.

அப்படிப்பட்ட பாட்டி யார் என்பதை அறியும் ஆவல் அந்தப் பணக்காரருக்கு. இதை உணர்ந்த  பெரியவா அந்த மூதாட்டியை அழைத்து வரப் பணித்தார்.

“இந்த அம்மாதான் அந்த உத்தமமான காரியத்தைச் செய்தவள்...” என்று ஏழை மூதாட்டியைப் பெரியவா காண்பித்த போது தனவந்தர் வியந்து போனார். அழுக்குப் படிந்த கிழிசல் புடவையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை சந்தேகக் கண்களுடன் அவர் பார்த்துக் கொண்டிருக்க, மகாபெரியவா பேசினார்:

“சர்வ ஜீவனிடத்திலும் பகவான் வியாபித்திருக் கிறார். பிரம்மாவில் ஆரம்பித்து பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் வாசம் செஞ்சுண்டிருக்கார்... மனுஷ்யாளிடத்தும் இருக்கார். நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கே.. இந்தப் பாட்டியோ பல லட்சம் ஜீவன்களுக்கு ஆகாரம் போட்டிருக்கா... ஏதோ ஒரு கோயில்ல லட்ச தீபம் போட நீ திரவியம் கொடுத்திருப்பே... லட்ச தீபத்துக்கும் நீயே எண்ணெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏத்த உன்னால முடிஞ்சிருக்காது... இந்தப் பாட்டி பல கோயில்களுக்குப் போய் பக்தி சிரத்தையோடு அகல் வாங்கி, எண்ணெய் ஊற்றி, திரி போட்டுத் தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்கா..”

பெரியவா சொல்லி முடிந்ததும் தனவந்தர் தன் தவறு உணர்ந்தார். அகந்தை விலகியது. அடக்கம் கற்றுக்கொண்ட ஆனந்தத்துடன் அந்தப் பிரமுகருக்கு எந்தக் கைங்கர்யத்திலும் தனக்கு ஏற்ற தகுதியில் செய்வதுடன், சிரத்தை எத்தனை முக்கியமென்பதான பாடமும் புரிந்தது.

மகா பெரியவாவிடம் மிகுந்த பக்தி கொண்டு மடத்தில் ஊழியம் புரிந்து வந்தவர் கோபால ஐயர். ஒரு முறை அவர் திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலை எனும் இடத்தில் மடத்துக்குச் சொந்தமான தோட்டத்துக்குச் சென்று திரும்பும்போது அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் வாழைப்பழங்கள் எடுத்து வந்து சுவாமிகளிடம் சமர்ப்பித்தார்.

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

“மடத்து தோட்டத்துல விளைஞ்ச பழம்... பெரியவாளுக்காக எடுத்து வந்தேன்...” என்றார்.

பழங்களைப் பார்வையிட்டார் பெரியவா... அவற்றிலிருந்து ஒரே ஒரு மலைப்பழத்தை மட்டும் எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டார். மீதிப் பழங்கள் தங்களுக்குப் பிரசாதமாக கிடைக்கு மென்று பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க, பெரியவா சித்தம் வேறாக இருந்தது. மடம் இருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் நரிக்குறவர்கள் நிறையபேர் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு வீடு, சாப்பாட்டு, தூக்கம் எல்லாம் மரத்தடியில்தான்.

மடத்து சிப்பந்தியை அழைத்தார் பெரியவா. “இதோ எல்லா மலை வாழைப்பழத்தையும் எடுத்துக்கோ... அதோட பக்தகோடிகள் கொண்டு வந்து கொடுத்த கல்கண்டு, திராட்சை, தேங்காய், சாத்துக்குடி, கமலா எல்லாத்தையும் எடுத்துண்டு அங்கே இருக்கற நரிக்குறவாகிட்ட கொடுத்துட்டு வா...” என்றார்.

அந்த சமயத்தில் மடத்தில் தங்கியிருந்த துறவி ஒருவர், “மன்னிக்கணும்... இத்தனை பழங்களையும் குறவாகிட்ட கொடுத்துடணுமா?” என்று பெரியவாவிடம் கேட்டார். நிதானமாகவும், தெளிவாகவும் பதில் வந்தது சுவாமிகளிடமிருந்து:

“நாம எல்லோரும் நம்ம கலாசாரத்தை மாத்திண்டுட்டோம்... கிராப்பு, டிராயர், ஷர்ட்னு எல்லாம் மாறிடுத்து... டீக்கடை, ஹோட்டல்னு போக ஆரம்பிச்சுட்டோம்... சீமைக்குப் போறதும்வர்றதும் ஜாஸ்தியாயிடுச்சு... பாரத கலாசாரமே மறைஞ்சு போயிட்ட மாதிரி நடந்துக்கறோம்... ஆனா, ஏழையா இருந்தாலும் நரிக்குறவர்கள் தங்களை மாத்திக்கல... சிகை, உடுப்பு, பழக்கவழக்கமெல்லாம் அவாகிட்ட கொஞ்சமும் மாறலே... பரம்பரையா வந்த பாசிமணி மாலை, ஊசி விக்கறது இதையெல்லாம் அவா விட்டுடல... கூடிய மட்டும் திருடற வேலையை அவா செய்யறதே கிடையாது... தங்க ஜாதிக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கறா... அடுத்த நாளைப்பத்தி கவலைப்படாத வாழ்க்கை. வெட்ட வெளியில் சமையல், சாப்பாடு,தூக்கம் சகலமும்.. இதுவரைக்கும் அவா அரசியல் பக்கம் தலைக்காட்டல... சுயநலம், கெட்டபுத்தி எதுவும் வரலே... பாவம்னு குடும்பக் கட்டுப்பாடு அவா செஞ்சுக்கறதில்லை... அன்னன்னிக்கு சாமான் வாங்கிதான் சமையல்.. நாளைக்குன்னு எதையும் சேர்த்து வச்சுக்க மாட்டா... இன்னிக்கு வரைக்கும் ஒரிஜினல் ஹிந்து கல்சரை கடைப்பிடிச்சுண்டு வர்றா!” என்று மகா பெரியவா விளக்க, கேள்வி எழுப்பிய சந்நியாசியும், கேட்டுக் கொண்டிருந்த பக்தர்களும் பரவசப்பட்டார்கள். ஒரு பக்கம், ஹிந்து தர்மங்கள் சீரழிந்து வருவதையும், இன்னொரு பக்கம் எளியவர்களின் அற்புதமான குணநலன்களையும் எடுத்துச் சொல்வதில் நிகரற்றவர் பெரியவா என்பதை மீண்டும் உணர்ந்தார்கள்.

மகா பெரியவா அந்த கிராமத்தை விட்டுப் புறப்பட்ட போது நூற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் திரண்டு வந்து ‘கும்பிடறோமுங்க சாமீ!’ என்று ஒரே குரலில் வணங்கியதும் அவர்களுக்குப் பெரியவா புன்னகையோடு ஆசி வழங்கியதும் இப்போது கற்பனை செய்து பார்த்தாலும் சிலிர்க்கிறது!

-வளரும்

 வீயெஸ்வி

தட்சணை தருவதன் பலன்கள்!

மகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்!’

குருநாதர்களுக்கும் குருக்களுக்கும் வழங்குவதே தட்சணை. இதை நமது திருப்திக்காகவே வழங்குகிறோம். தட்சணையை வெற்றிலை பாக்குடன் சேர்த்துதான் வழங்க வேண்டும். ஒரு கையில் இருந்து மறு கைக்குக் கொடுக்கக் கூடாது. லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும்; நன்மைகள் அடைய வேண்டும் என்பதற்காகவே வெற்றிலை பாக்கில் வைத்து தட்சணை கொடுக்கிறோம். இந்து தர்ம ஆசாரங்களில், தட்சணை வழங்குவது மிக முக்கியமானதாக மதிக்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியமும் தட்சணை வழங்குவதன் மூலமே பூர்ணமடைகிறது.

பூஜை செய்பவர்கள் முழு திருப்தி அடையும் அளவுக்கு வழங்குவதே தட்சணை. அப்படி வழங்கினால்தான் செய்த நற்காரியத்துக்கு உரிய பலன் கிடைக்கும். `என்னால் முடிந்த அளவு, தட்சணை வழங்குகிறேன்' என்று சொல்லிக் கொண்டு, குருக்கள் அல்லது குருநாதர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களது ஆசிர்வாதத்தை பெறும்போது, செய்த கர்மங்களின் பலனும் புண்ணியமும் நமக்கு பூர்ணமாகக் கிடைக்கும்.

- எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism