மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 24

சிவமகுடம் - பாகம் 2 - 24
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 24

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

பெருங்குகை முழக்கம்

சிவமகுடம் - பாகம் 2 - 24

ன்றைய அந்திப்பொழுதின் எச்சம் இவ்வளவு அற்புதமாய் அமையும் என்பதை இளங்குமரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும். ஆகவேதான், தான் சுமந்து வந்திருக்கும் பொறுப்புச் சுமையின் கடினத்தன்மை குறித்த சிந்தனை சிறிதுமின்றி, இயற்கை நிகழ்த்திய வர்ணஜாலத்தைப் பெரும் பிரமிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான்.

ரசிப்பதுடன் நிற்காமல், அவன் மனம் இலக்கிய ஆராய்ச்சியிலும் இறங்கிவிட்டிருந்தது. குறிப்பாக... கற்பனையளவில் ராட்சத நாணற் புற்களாகவே இளங்குமரன் கண்ட அடர்த்தியான அந்த வேணு விருட்சங்கள், அவன் சிந்தைக்குப் பழைய பாடல்களையும் நினைவுபடுத்தின.

வாய்விட்டு பாடவில்லைதான் என்றாலும் மனதுக்குள் பரவசத்தோடு பாடி மகிழ்ந்தான் அந்த வாலிபன். ஒரு பாடலின் சுவை அவனை அதிகம் உந்தித் தள்ளவே, அதன் அர்த்தத்தை அந்த இடத்தின் சூழலோடு பொருத்திப்பார்த்தவன், அதன் விளைவாக எழுந்த உவகையால் புன்னகைத்துக்கொண்டான்.

பாடலின் அர்த்தம் இதுதான்... `பெரும் மூங்கில் காடு வழியில் உள்ளது. மூங்கில் மரங்களும் அதன் தோகைகளும் உண்டாக்கும் நிழல் வனப்புலிகள் மறைந்துறைய ஏதுவாக அமையும். ஆகவே, இத்தகைய  ஆபத்தைத் தாண்டி தலைவன் வரமுடியுமா? முடியாதுதான். ஆனால்,  இக்காரணத்தைச் சொல்லி தலைவனால் தன் வருகையைத் தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில், இது வெயில் காலம்.

வரிப் புலிகள் தங்கள் மேனியை மறைத்துக்கொள்ள ஏதுவான நிழலை மூங்கில்களால் தர இயலாது. ஆகவே வனம், வேங்கை என்று எவ்விதத் தடைகளையும் காரணம் சொல்ல முடியாது; தலைவன் நிச்சயம் வருவான்’ என்று, தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் சொல்வதாய் விரியும் அந்தப் பாடல் வரிகள்!

அவற்றை மனதில் அசைபோட்ட இளங்குமரன், பாடலோடு சூழலை மட்டுமல்ல, தன்னையும் பொருத்திப்பார்த்த வேளையில்தான் அவன் புத்தி சுதாரித்துக்கொண்டது. ஆம்! இங்கே, ஆவலோடு அவனை எதிர்நோக்கியிருப்பது பெண்ணல்ல; ஆபத்து நிறைந்த பெரும்பணி!

சிவமகுடம் - பாகம் 2 - 24

சுதாரித்துக்கொண்டவன், மனப்புரவியின் கற்பனைக்குக் கடிவாளம் போட்டபடி, சிவ துர்கத்தின் உள்ளே புகுந்தான். அந்தக் குகைக்குள் அவன் நுழைவது இது இரண்டாவது முறை.

வெளியே ஒருவிதமாக இளங்குமரனை மயக்கிய இயற்கை, குகைக்குள் வேறுவிதமாய் அவனை அலைக்கழித்தது. மலைச்சுவரையொட்டி, தனியாகத் திகழ்ந்த பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று சாய்ந்தும் இணைந்தும் திகழ்ந்ததால் உருவான குகை அது. ஆகவே உள்ளுக்குள ஆகாய வெளியையும் காண முடியும்; அதன் வழியே விண்ணை ரசிக்க முடியும். அவ்வகையில், இளங்குமரன் நுழைந்த வேளையிலும் பெரும் அற்புதத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது இயற்கை.

குகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கத் திருமேனிக்கும் பின்னால், குகையின் விதானப்பகுதியில் பாறைகள் விலகித் திகழ்ந்ததால் உண்டான இடைவெளி, மாலை வெயிலை உள்ளுக்குள் அனுமதித்துக்கொண்டிருந்தது.

செந்நிறமான அந்தக் கதிர்க் கிரணம் மிகச் சரியாக லிங்கத் திருமேனியின் உச்சியைத் தொட்டு விசேஷமாய் ஓர் ஒளிர்வை உண்டாக் கியது. அது, பளபளப்பாய்த் திகழ்ந்த லிங்கபாணத் தின் திருமுடியில் சிறு சூரியனையே சிருஷ்டித்து விட்டிருந்தது!

மனக்கண்ணில் எந்நாளும் பிறைசூடிய பெருமானையே தரிசித்துப் பழகிய இளங்குமரன், இந்தக் கதிர்சூடியக் கடவுளை தரிசித்த அந்தக் கணத்தில் மெய்ம்மறந்துபோனான். சிலநொடிப் பொழுதுகள்தான் நீடித்தது அந்த அற்புதக் காட்சி. எனினும், யுகம் யுகமாய் சிவத்தில் கலந்து நின்ற பரவசம் அந்த வீர இளைஞனுக்குள்.

காரண காரியம் தொட்டே அப்படியொரு தரிசனம் அவனுக்கு வாய்த்தது என்றே சொல்ல வேண்டும். இயற்கை கொஞ்சம் தாமதித்திருந் தாலோ, கிரணம் உட்புகுந்து ஒளிகூட்டுவதற்கு கணப்பொழுது காலம் தாழ்த்தியிருந்தாலோ, குகைக்குள் நுழைந்த இளங்குமரன் விறுவிறுவென முன்னேறியிருப்பான்; மறைவிடம் ஒன்றிலிருந்து வீசப்பட்ட குறுவாளுக்கு இலக்காகியுமிருப்பான்.

அவன் தலை தப்பித்தது சிவப் புண்ணியம்!

சட்டென்று சுதாரித்துக்கொண்ட இளங்குமரன், தானும் ஒரு மறைவிடத்துக்குத் தாவினான். தான், சிவதுர்க தீரத்தை அடையுமுன்பே எதிராளிகள் உள்ளே பிரவேசித்துவிட்டிருக்கிறார்கள் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. ஆனால், குறுவாள் வீச்சுக்குப் பிறகு எவ்வித அரவமும் இல்லையாதலால், உள்ளே இருப்பது எத்தனைபேர் என்று அவனால் கணிக்க முடியவில்லை.

எதிராளிகள் நான்கைந்துபேர் என்றால் சமாளித்துவிடலாம். ஆனால் கூடியிருப்பது பத்துபதினைந்துபேர் எனில் சிரமம்தான் என்ற முடிவு செய்தவன், சட்டென்று ஒரு தீர்மானத் துக்கு வந்தான். சற்றும் தாமதிக்காமல் தன் இடையில் தொங்கும் வளைகுழலை எடுத்து இதழில் பொருத்தி ஊதினான்.

அர்த்தசந்திர வடிவில் வளைந்து, முனைகளில் ஒன்று அகல விரிந்திருக்க, எதிர்முனை வளைந்து குறுகித் திகழ்ந்த அந்த விசேஷமான ஊதுகுழல், மிகப்பெரிதாக விநோதச் சத்தத்துடன் முழங்கியது. அதன் முழக்கம் குகைச் சுவர்களில் எதிரொலிக்க, சிவதுர்கமே பெரும் ஆவேச முழக்கம் எழுப்புவது போல் தோன்றியது. மறுகணம் ஆங்காங்கே விநோதச் சத்தங்கள்; சன்னமான பேச்சுக் குரல்கள். தொடர்ந்து திமுதிமுவென கூட்டமொன்று வெளியேறும் சத்தம்!

சிவமகுடம் - பாகம் 2 - 24

மிக அற்புதமாக பலித்துவிட்டது இளங் குமரனின் திட்டம். ஆம், அவன் எழுப்பியது சைன்னியத் துடிப்புக்கான அழைப்பு. அந்தக் குழல் ஊதப்பட்டு பதிலுக்கு ஏதேனும் திசையில் எதிர் முழக்கமும் ஒலித்தால், அதை ஊதுவோருக்கு அணுக்கமான படையணி அருகில் எங்கோ இருக்கிறது என்று அர்த்தம். சட்டென்று அந்தப் படை இந்த இடத்தை நெருங்கிவிடமுடியும் என்பது யதார்த்தம்.

இதை மனதில் வைத்தே வளைகுழலை ஊதி எதிராளிகளைக் குழப்பிவிட்டான் இளங் குமரன். இவன் ஊதவும் பதில் முழக்கத்தை   எதிர்பார்த்து ஏமாந்துபோனார்கள் எதிராளிகள். காரணம், குகை செய்த பேருதவி. வளைகுழல் முழக்கத்தைக் குகைச் சுவர்கள் மீண்டும் மீண்டும் எதிரொலித்ததால், வெளியேயிருந்து அணுக்க அடையாள முழக்கம் வந்ததா, இல்லையா என்பதை எதிராளிகளால் அனுமானிக்க இயலவில்லை.

அதனால் உண்டான குழப்பம், ஒருவேளை அணுக்கப்படை அருகிலிருந்து சடுதியில் வந்து தொலைந்தால் என்ன செய்வது என்ற பயம்... எல்லாமும் சேர்ந்து அவர்களை விரட்டிவிட்டது. அதேநேரம், அவர்களின் எண்ணிக்கையையும் இளங்குமரனுக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது.

நிம்மதிதான்! ஆனாலும் அச்சம் முழுவதுமாக அகலவில்லை. சிலகணப் பொழுதுகள் வெளியே காத்திருந்து, அணுக்கப்படை எதுவும் அருகில் இல்லை என்பதை அறிந்துகொண்டுவிட்டால், எதிராளிகள் கடும் சீற்றத்துடன் மீண்டும் உள்ளே பிரவேசிப்பார்கள் என்பதையும் இளங்குமரன் அறியாமலில்லை. ஆகவே, கிடைத்திருக்கும் சில கணப்பொழுது அவகாசத்துக்குள் அறிய வேண்டியதை அறிந்துவிடுவது என்று முடிவு செய்தான்.

மெள்ள நகரத் தொடங்கினான். எதிராளிகள் இருந்த மூல இடத்தை ஒருவாறு அனுமானித்து அடைந்தவன், அங்கே சிறு பாறையொன்றில் விரிக்கப்பட்டிருந்த விலங்குத்தோல் ஒன்றைக் கண்டான். வரையோலை போன்று பயன்படுத்தப் பட்டிருந்த அந்தத்  தோல் விரிப்பில் தென்பட்ட விவரங்களைக் கண்டவன்  அப்படியே திகைத்து நின்றான்.  அவன் சிந்தை அந்தத் திகைப்பிலிருந்து மீண்டபோது, எதிராளியின் இரும்புப்பிடியில் சிக்கிக்கொண்டிருந்தான்!

ஆம், அவன் எதிர்பார்த்ததுபோலவே எதிராளிகள் மீண்டும் உட்புகுந்துவிட்டிருந்தார்கள். ஒருவன் இவனைச் சிறைப்படுத்தியிருக்க, வேறு சிலர், லிங்கத் திருமேனியின் பின்புறமாகச் சென்று, எதையோ சுமந்து வந்தார்கள்.

அது... அந்தப் பெரும்பேழை!

சிவமகுடம் - பாகம் 2 - 24

அதைக் கண்டதும் இளங்குமரனின் திகைப்பும் அதிர்ச்சியும் மேலும் அதிகரித்தன!

‘எனில், இந்த அற்புதத்தை அன்றே மீட்டெடுத் துச் செல்லவில்லையா பேரமைச்சரின் படை’ உள்ளுக்குள் ஆற்றாமையும் வேதனையுமாக  இரைந்த மனம், பெரும் கோபத்தை - பேராவேசத்தை வெளிப்படுத்தியது  அவனிடமிருந்து.

அதேநேரம், இயற்கையோடு இயைந்து மீண்டுமோர் அற்புதத்தை நிகழ்த்தத் தொடங்கி யிருந்தது, அந்தப் பிரமாண்ட பெருஞ்சிவம்!

இங்கே நிகழ்வுகள் இப்படியிருந்த வேளையில், மாமதுரையில் பாண்டியர் அவையில் விசாரணை ஆசனத்தில் அமர்ந்திருந்தார் பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியார்.

பேரமைச்சர் குலச்சிறையார் முதற்கொண்டு அவை உறுப்பினர்கள் யாவரும் பெரும் நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, பாண்டிய மாமன்னரின் பெருங் குரலே பிரதானமாக ஒலித்துக்கொண்டிருந்தது பேரவை மண்டபத்தில்.

‘‘எமக்கே தெரியாமல் சிறு படை ஒன்றைச் சமைத்திருக்கிறார் மகாராணியார் எனில், அதற்கு என்ன பொருள்..?’’

‘‘மாமன்னரின் சயன அறையிலும் சந்தடியின்றி உளவாளிகள் பிரவேசிக்கிறார்கள் எனில்... இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?’’

‘‘என் அனுமதியின்றி, எமது கவனத்துக்கே வராதபடி பேரமைச்சருக்கும் தளபதிகளுக்கும் தனிக் கட்டளைகள் அரசியாரிடமிருந்து பிறப்பிக்கப்படுகின்றன என்றால், அதற்குக் காரணங்கள் என்ன...?’’

கோபத்தில் கண்கள் சிவக்க அடுகடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டிருந்த மாமன்னர், நிறைவாக ஒரு வினாவை வீசினார்.அதைச் செவிமடுத்து, அந்தப் பாண்டிய பேரவை மட்டுமல்ல, எதற்கும் நிலைகுலைந்துவிடாத திடச் சித்தம் கொண்ட பேரமைச்சர் குலச்சிறையாரே ஒரு கணம் அதிர்ந்துதான் போனார்.

மாமன்னர் கேட்ட கேள்வி இதுதான்...

‘‘பேரரசியாரின் திட்டப்படி நடக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் காரணம் ஒன்றுதான். அது... உறையூரிலிருந்து வந்து சேர்ந்து, பஞ்ச பூதங்களும்கூட எமது அனுமதியின்றி பிரவேசிக்க அஞ்சும் மாமதுரைக் கோட்டைக்குள்ளும் பிரவேசித்து, சகலரையும் பேராளுமை புரிந்து கொண்டிருக்கும் அந்தச் சிவ மகுடம்தானே தேவியாரே?’’

அதுவரையிலும், தான் பதிலளிப்பதற்கு வாய்ப்பே கொடுக்காதபடி, அடுத்தடுத்து மாமன்னர் வீசிய கேள்விகளை எல்லாம் அமைதியாக மிகக் கவனத்துடன் செவிமடுத்துக்கொண்டிருந்த பாண்டிமாதேவியார், மாமன்னர் நிறைவாக இந்தக் கேள்வியைக் கேட்டதும் சீற்றத்துடன் ஆசனத்திலிருந்து எழுந்து இடியென முழங்கினார்...

‘‘மன்னிக்கவும் மாமன்னரே! இந்த மானியின் காய்நகர்த்தல் ஒவ்வொன்றும் சிவமகுடத்தைக் காப்பாற்ற அல்ல; தங்களின்  மணி மகுடத்தைக் காப்பாற்ற!’’

அந்த வீரமங்கையின் முழக்கத்தால் பாண்டியப் பேரவை பேரதிர்ச்சியில் உறைய, காலமோ அந்த இடத்தில் தொடங்கி, பாண்டிய தேசத்தின் தலையெழுத்தை மாற்றியெழுத முனைந்து விட்டிருந்தது!

- மகுடம் சூடுவோம்...