Published:Updated:

மூணுசாமி கோயிலிலே...

மூணுசாமி கோயிலிலே...

மூணுசாமி கோயிலிலே...
மூணுசாமி கோயிலிலே...
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துரையில் இருந்து தேனி செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கருமாத்தூர். மதுரை, உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம் எனப் பல ஊர்களிலும் மூணு சாமி கோயில் என்றால் வெகு பிரபலம்!  

ஒருகாலத்தில், வடக்கில் இருந்து சிவா, விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மூன்று தெய்வச் சக்திகளின் வடிவங்கள், கருமாத்தூரின் அழகில் மயங்கி, அங்கே குடியிருக்க ஆவல் கொண்டன. அங்கே ஏற்கெனவே அருளாட்சி செய்து வரும் பேய்க்காமன், இதைக் கண்டு கடும் கோபம் கொள்ள... இரண்டு தரப்புக்கும் விவாதங்கள் எழுந்தன. இவர்களில், சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களில் பிரம்மாவின் அம்சம் விருமன் என்பார்கள். இந்த விருமன் ஆறாம்பிலிக்கோட்டை எனும் பகுதிக்குச் சென்று தங்கிவிட, சிவனாரின் அம்சமான சிதம்பர ஐயன், விஷ்ணுவின் அம்சமான ஆங்காள ஐயன் ஆகியோர் அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள்.

அந்த இடத்தில் இருந்த பேச்சிதான் பாவம்; ஆடிப் போனாள். பேய்க்காமனிடம் பேச பயந்தது, விருமனின் தங்கை இவள். ஆக்ரோஷமாகக் காட்சி தரும் பேய்க்காமனிடம் எப்படிப் பேச முடியும்? எவர் பேச முன்வருவார்கள்? அண்ணனைத் தவிர, வேறு கதியேது எனப் புலம்பியவள், ஆறாம்பிலிக்கோட்டையில் இருக்கிற விருமனைச் சந்திக்கச் சென்றாள். அங்கே, அந்த ஊர்மக்கள் விருமனுக்குப் படையலிட்டு வழிபட்டு வருவதைக் கண்டாள். விவரத்தைச் சொல்லி, 'இதேபோல், தினமும் உனக்குப் படையல் போடுகிறேன், வா அங்கே!’ என்று அவனை அங்கே அழைத்து வந்தாள்.

மூணுசாமி கோயிலிலே...

இதையடுத்து பேய்க்காமனுக்கும் விருமனுக்கும் மிகப்பெரிய சண்டை நடைபெற... கருப்பசாமி கோயிலில் சமரசம் செய்யப்பட்டது. தொட்டப்ப நாயக்கனூரை ஒரு எல்லையாகவும், மதுரை மொட்டைக் கோபுரத்தை ஒரு எல்லையாகவும் வைத்து போட்டி நடத்துவது என முடிவானது. யார் முதலில் அந்த இடத்தை அடைகிறாரோ, அவரே ஜெயித்தவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பேய்க்காமனின் சூழ்ச்சியால், விருமனுக்கு நொண்டிக்குதிரை ஒன்று வழங்கப்பட்டது. ஆனால், வீரனும் சூரனுமான விருமன், தொட்டப்பநாயக்கனூர் எல்லையையும் மதுரை மொட்டைக் கோபுரத்தையும் முதலில் தொட்டு, வெற்றி பெற... ஊர்மக்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர். இதையடுத்து, பேச்சியம்மன் உட்பட மூன்று பேரும் கருமாத்தூர் பகுதியிலேயே அமர்ந்து, அருள்பாலிக்கத் துவங்கினார்கள்!

பேச்சியம்மனும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில், மாமிசப் படையலிட்டாள் அண்ணனுக்கு! ஆனால், தினமும் படையலிட சிரமப்பட்டவள், ஒரு சூழ்ச்சி செய்தாள். அருகில் உள்ள கிணற்றில் தன் மோதிரத்தைக் கழற்றிப் போட்டுவிட்டு, 'அண்ணா, மோதிரம் கிணற்றில் விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தாயேன்’ என்று சொல்ல... விருமன் கிணற்றில் இறங்கி னான். உடனே அவள், மிகப்பெரிய பாறையைக் கொண்டு கிணற்றை மூடினாள்.

மூணுசாமி கோயிலிலே...

'என்னை மன்னித்துவிடு. வருடத்துக்கு ஒரு முறை மட்டும் இனி உனக்குப் படையல் போடு கிறேன். அப்போது, சூல் கொண்ட ஆடும்மூன்று கிடாக்களும் தானமாக உனக்குத் தரேன்’ என்று சொல்லிக் கண்ணீர்விட... அன்று முதல் விருமன் முதலான மூன்று சாமிகளும் அங்கே அருள்புரிந்து வருகின்றனர் என்கிறது ஸ்தல வரலாறு. கருமாத்தூரில் உள்ள இந்தக் கோயிலை, மூணு சாமி கோயில் என்றே அழைக் கின்றனர். தற்போது, தனித்தனிக் கோயில்களாகப் பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர், ஊர்மக்கள்.

சிவ அம்சமான காசி கலியுக சிதம்பர ஐயன், ஸ்ரீபிரம்மாவின் அம்சமான விருமன் மற்றும் அவன் தங்கை பேச்சி, ஸ்ரீவிஷ்ணுவின் அம்சமான ஆங்காள ஐயன் ஆகிய மூவரும் தனித்தனிக் கோயிலில்தரிசனம் தருகின்றனர். மகாசிவராத்திரி நாளில், விமரிசையாக நடைபெறுகிறது மூணு சாமி கோயில் திருவிழா. சுமார் ஒன்றரை லட்சம்பேர் வரை கலந்துகொண்டு, கிடா வெட்டு, சேவல் காணிக்கை, பொங்கல் படையல் என அமர்க்களப்படுமாம்! இந்த நாளில், பொங்கல் வைத்து வழிபட, வாழ்வில் முன்னுக்கு வரச் செய்வார் மூணு சாமி எனப் போற்றுகின்றனர், மக்கள்!  ஆகாயம் - சிதம்பர ஐயன், பூமி - ஆங்காள ஐயன், தண்ணீர் - விருமன், காற்று - நல்ல குரும்பய்யன், நெருப்பு- கோட்டை மந்தைக் கருப்பு என பஞ்ச பூதங்களாக கடவுளர்கள் அருளும் இந்தக் கோயிலுக்கு வந்தால், எந்த காத்துக் கருப்பும் அண்டாது; செய்வினைகளில் இருந்து தப்பிவிடலாம் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், பக்தர்கள்!

எந்த உருவுமின்றி பீடமாக மட்டுமே காட்சி தரும் சிதம்பர ஐயன் கோயில், தனித்தனிச் சந்நிதிகளில் விருமன், பேச்சி ஆகியோர் அருள்புரியும் ஆலயம் மற்றும் கண்ணாயி, பூங்கனி சமேதராக ஆங்காள ஐயனும் காட்சி தரும் தலம் என மூன்று கோயில் களும் அற்புதமாக அமைந்துள்ளன. கிராம கோயில் களுக்கே உரிய பெரிய, பெரிய சிலை அமைப்புகளுடன் தீபம் ஏற்றுவதற்கான உயரிய கம்பங்களும் இடம் பெறுகின்றன. வெட்டவெளியில், சிறுதெய்வங்களுக் கான சந்நிதிகளும் உண்டு. ஆடி- கடைசி வெள்ளி யிலும் பிரமாண்டமாக நடைபெறுகிறது திருவிழா. கருங்கிடா, செங்கிடா மற்றும் பலநிறத்துக் கிடா என மூன்று கிடாக்களும் சூல் கொண்ட ஆடு ஒன்றும் விருமாண்டிக் கோயிலில் மட்டும் படையலிடப் படுகின்றன. மற்றபடி, மூணு சாமிக்கோயில்களிலும் விழாக்கள் ஒன்றாகவே நடைபெறும்.  

விருமனை கிணற்றில் புதைத்த இடத்தில், இன்றைக்கு மிகப்பெரிய விளக்குத்தூண் வைக்கப் பட்டுள்ளது. உச்சிகால பூஜையை விருமன் ஏற்றுக் கொண்ட அடையாளமாக, இந்த விளக்குத் தூண் லேசாக ஆடி, அசைந்துவிட்டு நிற்கும் எனச் சிலிர்ப்பும் வியப்புமாகச் சொல்கிறார்கள், ஊர்க்காரர்கள்!  

- ஆர்.கே.சஞ்சீவ்குமார்
படங்கள்: ச.லட்சுமிகாந்த்