Published:Updated:

இன்று சனி மகாபிரதோஷம்... பரிகாரம் செய்வது எப்படி? ஒரு வழிகாட்டுதல்!

இன்று சனி மகாபிரதோஷம்... பரிகாரம் செய்வது எப்படி? ஒரு வழிகாட்டுதல்!
இன்று சனி மகாபிரதோஷம்... பரிகாரம் செய்வது எப்படி? ஒரு வழிகாட்டுதல்!

சனிபகவானால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட நமக்குக் கிடைக்கும் அருமருந்து இந்த மகா பிரதோஷ நாள். 

ருவருக்கு அஷ்டமத்துச் சனி வந்துவிட்டால் பாடாய்ப் படுத்தும் என்பார்கள். அதற்காக யாரும் கவலைப்படவே தேவையில்லை. பிரதோஷ நாளில் குறிப்பாக, மகாபிரதோஷம் அன்று சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

இன்று சிவபெருமானின் அருளால் அற்புதமான பலன்களைப் பெற்றுத் தரும் சனி மகா பிரதோஷம். சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம்.

இன்று சனிக்கிழமை. கிழமை என்றால் உரிமை. சனிபகவானுக்கு உரியக் கிழமை. மேலும் திரயோதசி திதி. மாதம்தோறும் இரண்டு முறை திரயோதசி திதி வருகிறது. ஆனால், சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி, `மகா பிரதோஷம்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறது.

சனிபகவானால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட நமக்குக் கிடைக்கும் அருமருந்து இந்த மகா பிரதோஷ நாள்.  

பாற்கடலைக் கடைந்தபோது ஏற்பட்ட ஆலகால விஷத்தின் காரணமாகத் தேவர்களுக்குத் துயர் சூழ்ந்தபோது அவர்கள் மகாதேவனையே சரணடைந்தனர். அவர், தேவர்களை அழிக்க வந்த ஆலகால விஷத்தை ஒரு நாவல் பழம்போல சுருட்டித் தன் வாயில் இட்டுக்கொண்டார். ஆனால், அம்பிகையோ அதைச் சிவபெருமானின் கழுத்தோடு நிறுத்திவிட்டாள். அதன் காரணமாகவே  அவருக்கு, 'நீலகண்டன்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. `தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என்று சம்பந்தரும் பாடுகிறார். அப்படிப்பட்ட சிவபெருமானை, நாம் தீவினையால் துன்புறும்போது வணங்கி நற்பயன் பெற உகந்த நேரம் பிரதோஷம். பிரதோஷ காலத்தில் சிவன் சந்நிதியில் எல்லா தேவர்களும் ஒன்றுகூடி மகாதேவனைப் பிரார்த்திக்கிறார்கள். அந்த நேரத்தில் நாமும் அந்தக் குழாமோடு இணைந்துகொண்டால் நற்பயனே  சூழும். 

பிரதோஷத்துக்குச் சென்று வழிபடச் சிவன் கோயில் உகந்தது. அருகில் சிவன் ஆலயம் இல்லை என்றால், விநாயகர், முருகன் போன்ற ஆலயங்களில் சிவபெருமானை சிந்தையில் இருத்தி வழிபடலாம். பெருமாள் ஆலயத்துக்குச் சென்றும் இறைவனை வழிபடலாம். என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா?

அதை விளக்கும் வண்ணம் ஒரு சம்பவம் பண்டரிபுரத்தில் நடந்திருக்கிறது.

 பண்டரிபுரத்தில் மகான் `நரஹரி சோனார்' என்பவர் வாழ்ந்துவந்தார். தங்க நகைகள் செய்யும் ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர். நகை செய்வதில் அவருக்கு இணை அவரேதான். சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என்ற அளவுக்குச் சிவனை மட்டுமே வழிபடும் வீர சைவ மரபில் வந்தவர். ஆனால், வாழ்வதோ பண்டரிபுரம். அங்கே கோயில் கொண்டிருப்பவன் விட்டலன். எனவே, விட்டலனுக்கு விசேஷமான நாள்களில், பக்தர்கள் கோஷமிடும் `விட்டல’ நாமத்தைக் கேட்க மறுத்து அவர் வெளியூர் போய்விடுவார். அப்படியே இருக்க நேர்ந்தாலும் காதுகளை மூடிக்கொள்வார்.

அந்த ஊருக்கு ஒரு செல்வந்தர் வந்தார். அவருக்குப் பிள்ளைச் செல்வம் இல்லை. பண்டரிநாதனை வேண்டிக்கொண்டதும் அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தது. அதற்கு நன்றிக்கடனாகப் பண்டரிநாதனுக்குத் தங்க நகைகளால் அலங்கரிப்பதாக வேண்டிக்கொண்டார். தங்க நகைகள் செய்வதில் அங்கு சோனாரே புகழ்பெற்றவர். எனவே, அவரை நாடி பண்டரிநாதனுக்கு நகைகள் செய்து தரக் கேட்டார். சுத்த சைவரான அவரோ அதை மறுத்தார். செல்வந்தர் தொடர்ந்து வலியுறுத்தவே ஒரு நிபந்தனையோடு ஒப்புக்கொண்டார்.

தான் பாண்டுரங்கன் ஆலயத்துக்கு வராமலேயே தன் அனுபவ அறிவால் தேவையான நகைகளைச் செய்து தருவதாகச் சொன்னார். அதுபோலவே அவர் செய்து தந்திருந்த நகைகள் மிகவும் பொருத்தமாக இருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஆனால், ஓர் ஆபரணம் மட்டும் பொருந்தவில்லை. அது அரைஞாண் கயிறு. செல்வந்தர் மீண்டும் வந்து, அதை மட்டுமாவது  அளவெடுத்துச் செய்து தர வேண்டும் என்று வேண்டினார். 

அன்று திரயோதசி திதி, பிரதோஷ காலம் நெருங்குகிறது. `சிவ வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த நேரம் பார்த்து இவர் வேறு தொல்லை செய்கிறாரே' என்று தயங்கினார். எனவே, ஒரு உபாயம் சொன்னார். சிவனைத் தவிர வேறு தெய்வங்களைக் காண விரும்பாத அவர், தன் கண்ணைக் கட்டிக்கொண்டுதான் பாண்டுரங்கனின் ஆலயத்துக்குள் வருவேன் என்றும், அளவும் அப்படியே கையால் அளந்து எடுப்பேன் என்றும் சொன்னார். வேறுவழியின்றி அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

கோயிலுக்குச் சென்றதும் கண்ணைக் கட்டிக்கொண்டார். சிவனை வழிபட வேண்டிய பிரதோஷகாலம் தவறுகிறதே என்று வருந்தியபடியே பாண்டுரங்கனின் விக்கிரகத்தைத் தொட்டார். பாண்டுரங்கனின் இடுப்பை அளவெடுத்தார். அப்போது அவர் கரங்களில் புலித்தோல் தட்டுப் பட்டது. பாண்டுரங்கன் பட்டுப் பஞ்சகச்சம் உடுத்தி பீதாம்பரம் தரிப்பவன் அல்லவா என்று அவர் மனம் துணுக்குற்றது. கையை அப்படியே விக்ரகத்தின் கழுத்துக்குக் கொண்டு சென்றார்.  கைகளில் ருத்ராட்சமாலை தட்டுப்பட்டது. `என்ன இது... துளசிமாலை இருக்க வேண்டிய கழுத்தில் ருத்திராட்சமா...’  இன்னும் கைகளை வலதும் இடதுமாகத் தடவினார். என்ன அதிசயம் மானும் மழுவும் இருப்பதாக உணர்ந்தார். வியப்பின் உச்சியில் கைகளைத் தலைக்குக் கொண்டுசென்றால், சந்திர மௌலி தட்டுப்பட்டது. ஒரு கணம் துணுக்குற்றுத் தன் கண்கட்டை அவிழ்த்துப் பார்த்தார். அங்கே பாண்டுரங்கன் புன்னகையோடு நின்றிருந்தார்.

சரி, நமக்குத்தான் மனப் பிரமை. பிரதோஷகால நினைவிலேயே இருப்பதால் அப்படித் தோன்றுகிறது என்று எண்ணிக்கொண்டு மீண்டும் கண்களைக் கட்டிக்கொண்டு பாண்டுரங்கனைத் தொட்டார். உடனே அவர் கண்களுக்குள் இறைவன் சந்திரமௌலீஸ்வரராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். அதைக் கண்டதும் அவர் கண்களில் நீர் பெருகியது. இந்தப் பிரபஞ்சமே இறைவனின் வடிவாக இருக்க, பாண்டுரங்கனின் இந்த விக்கிரகத்தை நாம் அந்நியமாக எண்ணலாமா என்று கண்ணீர் மல்க இறைவனைத் தொழுதுகொண்டார். அதன் பின் அவருக்கு பாண்டுரங்கனும் பரமசிவனும் வேறு வேறு அல்ல என்ற உண்மை புரிந்தது. 

அதேபோல அருகில் இருக்கும் ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கு சென்று சிவனை நினைத்து வழிபடச் சகல வேண்டுதலும் நிறைவேறும். குறிப்பாக, மகா பிரதோஷம் சனிக்கிழமை நிகழ்வதால் சனிபகவானால் ஏற்படும் தீமைகள் நீங்கப்பெற இந்த வழிபாடு உகந்தது. அஷ்டமச் சனி மற்றும் அர்த்ராஷ்டம சனி, ஏழரைச் சனியால் அவதிப்படுபவர்கள் பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று முதலில் நந்தியை வழிபட்டுப் பின் சிவனைத் தரிசனம் செய்ய வேண்டும். கோளறுபதிகம் பாடி இறைவனைத் தொழ வேண்டும். இயன்றவர்கள் தயிர்சாதம்  நிவேதனம் செய்து விநியோகிக்கலாம். ஆனால், எல்லாவற்றையும்விடப் பிரதானம் பக்தியும் அவன் திருவடிகள் பணிவதுமே!  

அடுத்த கட்டுரைக்கு