மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

ஓவியங்கள்: கேஷவ்

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

ப்போது விழுப்புரத்தில் நான்காவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார் சுப்ரமணியம் என்று பூர்வாசிரமத்தில் பெயரிடப்பட்ட ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 69-வது பீடாதிபதியாக காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்து, சென்ற வருடம் பிப்ரவரி 28 அன்று முக்தி அடைந்த மடாதிபதி.

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

சுப்ரமணியத்தின் தந்தை மகாதேவ ஐயருக்கு ரயில்வேயில் பணி. அவருக்கு வைதீக விஷயங்களெல்லாம் அத்துப்படி. ஒருமுறை, மகாபெரியவா விழுப்புரத்துக்கு விஜயம் செய்திருந்தார். அவரை தரிசித்து ஆசிபெற ஊரே திரண்டு வந்திருந்தது. சுப்ரமணியத்தையும் அழைத்துக்கொண்டு அவரின் பெற்றோரும் பெரியவா தரிசனத்துக்குச் சென்றிருந்தார்கள்.

மகா பெரியவாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். மகனும் அப்படியே செய்தார். சுப்ரமணியத்தைப் பார்த்து லேசான புன்னகையோடு ஆசி வழங்கினார், மகாபெரியவா.

“உம் புள்ளையைக் கூட்டிண்டு ஒரு தடவை காஞ்சிபுரம் வாயேன்...” என்று மகாதேவ ஐயரிடம் கூறினார்.ஐயருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். ‘இவரை தரிசனம் பண்ண முடியாதா... இவர் கையாலே ஆசிர்வாதம் வாங்கமுடியாதா...’ என்று பலரும் ஏங்கித் தவிக்கும் நிலையில், தன்னிடம் இப்படி ஒரு கோரிக்கையை வைத்துவிட்டாரே என்று அளவற்ற சந்தோஷம்.

“கட்டாயம் வரேன் பெரியவா..” என்று உற்சாகமாக சொன்னார் மகாதேவ ஐயர்.

சிறுவன் சுப்ரமணியத்துக்கும் கட்டுக்கடங்காத ஆவல். “எப்போப்பா காஞ்சிபுரம் போறோம்” என்று அப்பாவை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். அந்த நாளும் வந்தது. குடும்பத்துடன் காஞ்சிபுரம் புறப்பட்டுப் போனார்கள்.

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

“வந்துட்டியா இங்கேயே?” என்று சுப்ரமணியத்தைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் மகா பெரியவா! ‘நிரந்தரமா இங்கேயே வந்துட்டியா’ என்பதுதான் அதற்கான அர்த்தம் என்பது சுப்ரமணியத்துக்கு தாமதமாகத்தான் புரிந்திருக்கிறது! பிறகு தன் அருகில் சுப்ரமணியத்தை அழைத்தார் மகா பெரியவா.

“ஏம்ப்பா சுப்ரமணியா... எனக்கு அடுத்து மடத்தோட பொறுப்புகளை நீயே கவனிச்சுக்கறியா?”

பெரியவா என்ன கேட்கிறார், அதற்கு தான் என்ன பதில் சொல்வது என்பது புரியாத வயது சுப்ரமண்யத்துக்கு பரிதாபமாக அப்பாவைப் பார்க்கிறார். சுப்ரமணியத்தின் மனநிலையைப் பார்த்து மனதுக்குள் சிரித்த பெரியவா, ‘என்ன சொல்றேள்?’ என்பது மாதிரி மகாதேவ ஐயரைப் பார்த்தார்.

“பெரியவா வாய்லேர்ந்து பெரிய வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு. இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை...” என்றார் தந்தை, நடுங்கும் குரலில்.

“இப்பவே பதில் சொல்லணும்கிறது அவசியமில்லை... கிணத்துக்குள்ள வாளியை விட்டா உடனேவா ஜலம் வந்துடறது? தாம்புக்கயித்தால வாளியை பக்குவமா தண்ணிக்குள்ள விட்டு, வாளி ரொம்பிடுத்துன்னு தெரிஞ்சப்புறம்தானே மேலே இழுக்கிறோம். அப்புறம்தானே ஜலம் நம்ம கைக்குக் கிடைக்கறது. ஒரு நாலஞ்சு மாசம் டைம் எடுத்துக்கோங்கோ. நானே ஒரு நாள் கூப்பிட்டுவிடறேன். என்ன பதிலா இருந்தாலும் அப்ப சொன்னா போதும். இப்ப நீங்க ஜாக்கிரதையா விழுப்புரம் பொறப்படுங்கோ...” என்று சொல்லி, பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார் மகா பெரியவா.

சொன்ன மாதிரியே நான்கைந்து மாதங் களுக்குப் பிறகு அழைப்பு வந்தது. குடும்பம் காஞ்சிபுரம் புறப்பட்டது.

சுப்ரமணியத்தைப் பார்த்துப் புன்னகைத்தபடியே தன் பார்வையை வீசினார் பெரியவா. ‘என்ன... மடத்துல சேர்ந்துடறியா?’ என்று கேட்காமல் கேட்டார்!

“பெரியவா வாக்கைத் தட்டப்படாது. எம் பையன் சுப்ரமணியத்தோட எதிர்காலம் இதுதான்னு உங்க வாய்லேர்ந்தே வந்து விழுந்துடுத்து. எம் பையனை மடத்துக்கே அனுப்பறதா மனப்பூர்வமா நாங்க முடிவு பண்ணிட்டோம்...” என்றார் மகாதேவ ஐயர்.

ஒரு விநாடி கண்மூடி யோசித்தார் மகா பெரியவா. பின்னர், பின்பக்கம் திரும்பிப் பார்த்தார். மடத்தின் சிப்பந்தி ஒருவர் பவ்யமாக வந்து நின்றார்.

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

“இந்தப் பையன் வேதம் கத்துக்கணும். இங்கிலீஷ் நன்னா கத்துக்கணும். திருவிடைமருதூர் பாட சாலைக்கு இவனைப் பத்திரமா அனுப்பி வை...” என்று உத்தரவாயிற்று.

அதன் பின்னால் பல ஊர்களுக்குச் சென்று வேதம் தொடர்பான படிப்புகளைப் படித்தார் சுப்ரமண்யம். ஆங்கில மொழி அறிவையும் வளர்த்துக் கொண்டார். தன்னுடைய 17-வது வயதில் திருவானைக்காவில் இருந்தார் இவர். அப்போது, இந்தியா முழுவதும் யாத்திரை செய்துவிட்டுத் திரும்பிய மகா பெரியவா, சுப்ரமணியத்தைத் திருவானைக்காவிலிருந்து காஞ்சிபுரம் வரச்சொல்லி தகவல் அனுப்பினார்.

`அது ஜெய வருஷம். சுப்ரமண்யம் என்கிற நான் அன்று முதல் ‘ஜெயேந்திரர்’ என்று பெரியவாளால் புதிய நாமகரணம் சூட்டப்பட்டேன். காஞ்சி மடத்திலுள்ள முக்தி மண்டபத்தில் இளைய சங்கராசார்யரா பதவியேத்துண்டேன். காவித் துணியும் தண்டமுமா முழுத் துறவியானேன். இறைத் தொண்டில் கிடைக்கக் கூடிய பிரியம் அலாதி...” என்று 2002-ல் வெளியிடப்பட்ட விகடன் பவழவிழா மலருக்கு அளித்திருந்த பிரத்தியேகப் பேட்டியில் கூறியிருந்தார் ஜெயேந்திரர்.

“நாட்டில் இந்து மதம் தழைத் தோங்க வேண்டும். கோயில்களில் பூஜைகள் தொடர்ந்து நடை பெற வேண்டும். உதவி என்று கேட்டு வரும் எவரையும் நாம் ஒதுக்கக்கூடாது... கல்விச் சாலைகள் வளர்க்கவேண்டும். தர்மம் நிலைபெறச் செய்யவேண்டும். இதற்கெல்லாம் நிறைய யாத்திரைகள் சென்று மடத்துக்கு வருமானம் பெருக்கவேண்டும்...” என்று மகா பெரியவா அறிவுரைகள் வழங்க, யாத்திரை புறப்பட்டார் புது பெரியவா என்று அழைக்கப்பட்ட ஜெயேந்திரர்.

அப்போது காஞ்சி மடத்துக்கும் கர்நாடகாவில் இருக்கும் சிருங்கேரி மடத்துக்கும் அபிப்பிராய பேதங்கள் இருந்து வந்தன. எத்தனையோ சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்க வில்லை. “என் காலத்துக்குள்ளே இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துடணும். மனுஷாளுக்குள்ள அபிப்பிராய பேதம் வரக்கூடாது. நீதான் முயற்சி பண்ணி ஒரு சமாதானத்தைக் கொண்டு வரணும்..” என்று ஜெயேந்திரரிடம் தெரிவித்திருந்தார் மகா பெரியவா.

நரசிம்மராவ் பிரதமராக இருந்த நேரம் அது. ராமஜென்ம பூமி பிரச்னை தீவிரமாக இருந்த காலகட்டம். இந்தப் பிரச்னைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும்படி நரசிம்மராவிடம் கேட்டுக்கொண்டார் ஜெயேந்திரர். அவரும் சம்மதித்து பெங்களூருவில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தினார்.

முன்னதாக, காஞ்சிமடம் சார்பாக வெண்குடை ஒன்று தயாரித்து சிருங்கேரி மடத்துக்கு அனுப்பப் பட்டது - இரு தரப்பும் சமாதானமாக இருப்பதற்கு அடையாளமாக!

சிருங்கேரியில் கூட்டம் நடப்பதாக ஏற்பாடு. ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட மடாதிபதிகள் இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்தார்கள். முதல் நாள் சிருங்கேரி மடாதிபதியும் ஜெயேந்திரரும் தனியாக சந்தித்துப் பேசினார்கள். அப்புறம் அம்பாள் தரிசனம். சிருங்கேரி பெரியவா பிரசா தமும் கொடுக்க, சுமுகமான சூழல்.

காஞ்சிபுரம் திரும்பியதும், மகா பெரியவாவிடம் விவரம் சொல்லப்பட்டது. “என் காலத்துக்குள்ளே இது முடியுமாங்கற அச்சம் இருந்தது. அது இப்ப போயிடுத்து...” என்று மகிழ்ந்திருக்கிறார் மகா பெரியவா.

மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’

அதாவது பெரியவா இச்சா சக்தி. விரும்பினார். நான் கிரியா சக்தி. நிறைவேற்றினேன். மத்தபடி எல்லாம் பகவான் கையில்தான் இருக்கு...” என்று பவழ விழா மலர் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீஜெயேந்திரர்!

வாழ்க்கையிலும் சரி, சங்கீதத்திலும் சரி என் சரித்திரம் ‘குடிசை’யிலிருந்துதான் ஆரம்பமாச்சு... ஆண்டவன் அருளும், ரசிகர்களின் ஆதரவும் ஓரளவு ‘மாடி’க்கு உயர்த்திச்சு. ஆனா என் மனசு மட்டும், ஒவ்வொரு கலைஞனும், ‘கோபுரமா’ நினைச்சுப் பெருமைப்படத்தக்க ஒரு பெருமைக்காக ஏங்கித் தவிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கோபுர நிழல் என் மீது படாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்று சிலிர்ப்போடு  அந்தச் சம்பவத்தை ஆனந்த விகடனுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியின் போது நினைவுகூர்ந்தவர், இசை மேதை மறைந்த மதுரை சோமு. இவருக்கு இது நூற்றாண்டு வருடமும் கூட (1919-2019) ஒரு மே மாதம் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு நண்பர் மதுரைக்கு வந்து சோமுவை காஞ்சிபுரம் அழைத்துச் சென்றார். இவர் போன போது, புதுப் பெரியவர் பூஜை செய்துகொண்டிருந்தார். சோமு, மெய் உருகப் பாடினார். பாடி முடித்ததும் பெரிய சால்வை அவருக்குக் கிடைத்தது. ஒரு பெரிய சான்றிதழும், ‘கந்தர்வ கானமணி’ என்ற பட்டமும் மடத்தின் சார்பில் கொடுத்தார்கள்.

பின்னர், மகா பெரியவா தரிசனத்துக்குச்  சோமுவை அழைத்துப் போனார்கள்.

தென்னந்தோப்பில், கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி பண்டிதர் களுடன் பேசிக் கொண்டிருந்தார் மகாபெரியவா.

அங்கே பாடவேண்டும் என்கிற நீண்ட நாள் கனவுடன் நின்று கொண்டிருந்தார் சோமு.

“நன்னா லோகத்துக்கு பாடிண்டு க்ஷேமமா இரு...” என்று ஆசி வழங்கினார் மகா பெரியவா.

“ஒரு பதம் பாடு...” என்று உத்தரவும் பிறந்தது.

மதுரை சோமு பதம் பாடி விட்டுத் தொடர்ந்து ஒரு திருக்குறளும் பாடினார்.

“அன்னிக்கு எனக்கு ஜன்மம் சாபல்யம் அடைஞ்சுட்ட மாதிரி ஓர் உணர்ச்சி. தெய்வ சந்நிதானாத்துல பாடிட்டோம்கற மன நிறைவு. அந்த நிறைவோட அன்னிக்கு வண்ணாரப் பேட்டைல ராத்திரி 12 மணியிலிருந்து காலை 5 மணிவரை பாடினேன். அன்றைய பாட்டு ஏதோ தெய்விகப் பாட்டாவே எனக்குப் பட்டுது...” என்று சொல்லி பூரித்திருக்கிறார் மதுரை சோமு.

- வளரும்...

- வீயெஸ்வி

ஓவியங்கள்: கேஷவ்