
ஓவியங்கள்: கேஷவ்
சென்னையில், 1969-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது ஷண்மத மாநாடு. மகா பெரியவா, தமது குரு காணிக்கையாக செய்து வந்த அரும்பணிகளில் மற்றொரு மைல்கல்லாகக் கருதப்பட்டது இந்த மாநாடு. ஸ்ரீஆதிசங்கரரின் நினைவு மங்காமல் ஒளிரவும், ஆன்மிக வாழ்வு வளம் பெற்று சமூகத்தில் அமைதி நிலவவும் மகா பெரியவா ஏற்பாடு செய்த மாநாடு இது.

ஒன்பது நாள்கள் நடைபெற்ற இந்த ஷண்மத மாநாட்டுக்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் பலர் வந்திருந்து, அரிய வகையில் சொற்பொழிவாற்றியிருக்கிறார்கள்.
***
‘பக்தன் எந்த உருவில் ஈச்வரனை சிரத்தையுடன் ஆராதிக்க ஆர்வம் கொள்கிறானோ, அவனுக்கு அந்த முறையிலேயே சலிக்காத சிரத்தையை நான் தருகிறேன் என்கிறான் கீதாசார்யன்.

ஸர்வ ஜகத்துக்கும் காரணம் ஸ்ரீகணபதி என்றும் அவர் மாயையைத் தாண்டி இருக்கிறவர் என்றும் போதிக்கிறது கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத்து. `ஸ்கந்த பெருமான் ஸாயுஜ்ய முக்தியை அளிப்பவர்’ என ராமாயணம் கூறுகிறது.
‘விஷ்ணுவின் பரமபதம் முக்தி மார்க்கத்தின் எல்லை’ என்கிறது கடோபநிஷத். ‘சூரியனே பிரம்ம ஸ்வரூபம். இவ்விதம் அறிந்தோன், ப்ரம்ம ஸ்வரூபமாகவே இருந்துகொண்டு, தனது அந்த நிலையை அறிந்து ப்ரம்ம ஸ்வரூபத்தை அடைகிறான்’ என்கிறது யஜுர் வேத ஆருணம்.
`முக்கண்ணனைப் பூஜிப்பது, மிருத்யுவிடமிருந்து மோட்சத்தை அளிக்கிறது’ என்கிறது ரிக் வேதம். `கன்யா குமரியை உபாசிப்பது, எல்லா ஆசைகளையும் உதறி எறிந்து மோட்ச நிலையைக் கொடுக்கக் கூடியது’ என்கிறது சாம வேதத்தின் சாமவிதான ப்ராமணம்.
இந்த மாநாடு தரப்போகும் அறு சமய பிரகாசத்துக்கு இந்த வேத ஒலிகளும் ராமாயண வசனமும் ஒளிமயமாக நிற்கின்றன. இந்த அறு சமய விளக்கங்கள்... நல் வாழ்வையும், ஆண்டவனிடத்தில் பேரன்பையும், முடிவாக உண்மையின் அனுபூதியையும் மக்களுக்குப் பொழிக என ஸ்ரீகாஞ்சி காமாட்சிதேவியை வேண்டுகின்றோம்’
- ஷண்மத மாநாட்டுக்கு மகா பெரியவா வழங்கிய ஆசிச் செய்தியின் சில பகுதிகள் மேலே குறிப்பிட்டவை. மகா பெரியவா, இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், பம்பாய் பல்கலைக்கழக துணைவேந்த ருமான கஜேந்திர கட்கர், ‘சமய ஒற்றுமை’யைப் பற்றிப் பேசியவர்களில் ஒருவர்.

“ஆன்மிக விஷயங்களில் நான் அதிகம் பற்றில் லாதவன். நான் ஒரு பக்திமான் அல்ல. இருப்பினும் இந்தப் பந்தலுக்குள் காஞ்சி முனிவரின் அருள் ஒலி எங்கும் படர்ந்திருப்பதை நான் உணர்கிறேன். அவர் இங்கு பிரசன்னமாய் இருப்பதுபோன்று, என்னையும் அறியாமல் ஒரு பேரின்ப உணர்வு என் உள்ளத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறது...” என்றார் கஜேந்திர கட்கர்.
“பெரியவர் காஞ்சிபுரத்தில்தானே இருக் கிறார்?”
“இல்லை. அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்...”
- பந்தலில் பேசிக் கொண்டார்கள்.
“என்ன, ‘காம்ப்’ மாறிவிட்டதா?”
“இல்லை. பெரியவா மாத்திரம் இன்று விடியற்காலை தன்னந்தனியாகப் புறப்பட்டு விட்டார். அரக்கோணம் ரோட்டில் போய்க் கொண்டிருக்கிறார். எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது...”
“அப்படியா? இந்த மாநாடு சரியாக நடக்கிறதா என்று நேரிலேயே பார்ப்பதற்காக, ஒருவேளை சென்னைக்கு வந்துகொண்டிருப்பாரோ?”
“சென்னை வருவதென்றால் அரக்கோணம் ரோட்டில் போவானேன்?”
பந்தலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிக் கொண்டிருந்தார்.
மறுநாள் வேறொருவர், தன் நண்பரிடம், “நேற்று பெரியவா அரக்கோணம் ரோட்டில் எட்டாவது மைலில் கோவிந்தகுடி என்ற கிராமத்துக்குச் சென்று, அங்கிருக்கும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியையும் ஆதிசங்கரரையும் தரிசித்துவிட்டு, நேற்றிரவே காஞ்சிபுரத்துக்கு திரும்பி வந்துவிட்டார்...” என்றார்.
ஒரு பக்கம் மாநாட்டில் அறிஞர்களின் அற்புதச் சொற்பொழிவு நடந்துகொண்டிருக்க, இன்னொருப் பக்கம்... காஞ்சி சர்வ தீர்த்தக் கரையில், மகா பெரியவா உலக நலனுக்காக மௌன விரதம் ஏற்று தவம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வந்திருந்தது.
“மூணு நாளா பெரியவா மௌனமா இருக் கிறாராமே?”
“ஆமாம்... புதுப் பெரியவாதான் மூணு கால பூஜையும் பண்றாராம். பெரியவா தீர்த்தக் கரையிலிருக்கும் தோட்டத்திலேயே உட்கார்ந்திருக் காராம். ஆத்மார்த்தமா ஏதோ பூஜை பண்றாராம். ‘தபஸ் காமாட்சி’யைப் போல், ஒத்த கால்ல நிற்கிறாராம். காஷ்ட மௌனமாம்...”

“என்ன திடீர்னு இப்படி?”
“தெரியலையே! அவர் மனசுல என்ன சங்கல்பம் பண்ணியிருக்காரோ? கோவிந்தகுடியிலே தட்சிணாமூர்த்தியை தரிசனம் பண்ணிவிட்டு வந்ததும் மௌனமாயிட்டார். எல்லா லோக ஷேமத்துக்காகத்தான் இருக்கும்...”
“இப்படி எத்தனை நாள் மௌனமா இருப்பார்ன்னு பேசிக்கறா?”
“பெரியவா விஷயத்துல யாராலையும் நிச்சயமா எதுவும் சொல்ல முடியாது. ஏதோ காரணத்துக் காக தபஸ் இருக்கார்ன்னு மட்டும் தெரியறது...”
திருவாசக மணி கே.எம்.பாலசுப்பிரமணியம், ‘சைவத்தின் சாரம்’ என்ற தலைப்பில் பேசும் போது, தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் அரிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
1947-ம் ஆண்டு ஒரு நாள் அதிகாலை திருவாசக மணியின் கனவில் ஒரு பெரியவர் வந்து பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிவிட்டுப் போனார். ஆனால், திருவாசகமணியின் நண்பர்களில் சிலர், ‘நமசிவாய’ என்பது ஸ்தூல மந்திரம். அதனால் உலக சுகங்கள்தான் கிடைக்கும். ‘சிவாய நம’ என்பதுதான் சூட்சும மந்திரம். அதனால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கும் என்று கூறிவிட்டார்கள்.
கனவில் மந்திரோபதேசம் பெற்றவரின் மனம் குழம்பிவிட்டது. சந்தேகம் தீர்த்துக்கொள்ள, காஞ்சிமடம் சென்று மகா பெரியவாவை தரிசனம் செய்தார். கனவில் தமக்கு அந்தணப் பெரியவர் அளித்த மந்திரோபதேசத்தையும் பிறரால் தம் மனத்தில் எழும்பியுள்ள சந்தேகப் புயல் பற்றியும் கூறினார். பஞ்சாட்சரத்தை தாம் எப்படி ஜபிக்கவேண்டும் என்று சுவாமிகளிடம் கேட்டார். மிக எளிதாக அதற்குப் பதில் கூறினார் மகா பெரியவா: “நம் நாயன்மார்கள் எப்படிக் கூறியிருக்கிறார்களோ அப்படியே நீங்களும் சொல்லுங்கள்.”
இந்த மாநாட்டின்போது, ஒரு ஞாயிறன்று காலை மகா பெரியவா நிகழ்த்திய பழைய சொற்பொழிவு ஒன்று ஒளிபரப்பப்பட்டபோது, பந்தலில் குழுமியிருந்த அனைவரையும் நெகிழ வைத்த அந்த நல்லுரையிலிருந்து சில துளிகள்...
“நம் மதம் புராதன மதம். பிற மதங்களைப் போல் இதற்குப் பிரசார பலமோ, பண வசதியோ இல்லாவிட்டாலும் எத்தனையோ சீர்கேடுகளுக்கு இடையே இது இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நம் மதத்துக்கு எத்தனை பகைவர்கள் இருந்தாலும் நாம் எத்தனை அநாசாரமாக நடந்து கொண்டாலும் நம் மதம் நிலைத்திருப்பதற்குக் காரணம், அதற்குப் போடப்பட்ட பலமான அஸ்திவாரம்தான். நம் மதப் பெரியவர்கள் செய்த தியாகத்தின் சக்தியும் அவர்களின் ஆசார அனுஷ்டான பலமும்தான் நம் மதத்தைக் காப்பாற்றி வருகின்றன. பிற மதங்களைப் போல் கூட்டம் சேர்ப்பது நம் நோக்கம் அல்ல. கூட்டம் சேர்த்துதான் ஆகவேண்டும் என்றால், நாம் குறுக்கு வழியில் செல்லவேண்டியிருக்கும். அத்தகைய குறுக்கு வழி தப்பானது. பிறரை நம் மதத்தில் சேர்ப்பதற்காகப் பிரசாரம் செய்யும்படி நம் சாஸ்திரங்கள் கூறவேயில்லை. ‘ஒருவன் வந்து கேட்டுக் கொண்டாலொழிய யாருக்கும் ஒரு தர்மத்தையும் சொல்லவேண்டாம்’ என்றே நம் தர்ம நூல்கள் கூறுகின்றன. எனவே, நமக்கு நாமே பிரசாரம் செய்துகொள்வது ஒன்றே வழி.
அதாவது, நம் மதக் கோட்பாடுகளையும் பண்டைய நெறிகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்மிடம் ஓரளவுக்கு தெய்வ பக்தியும் ஆசார அனுஷ்டாங்களும் இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு நாம ஜபமாவது இருக்கவேண்டும்.
வயதானால், குரு உபதேசத்தோடு அஷ்டாட்சர, பஞ்சாட்சர மந்திரம் வைத்துக்கொள்ளலாம். வேத அத்யயனத்துக்கு உரிமை பெற்றவர்கள், வேதம் ஓதவேண்டும். இப்படியொரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டால், நம் உள்ளங்கள் தூய்மையடையும். நம்மைத் திருத்திக்கொண்டால், பிறர் திருந்திவிடுவார்கள். ஆத்மநலனைப் பெறுவதில் நாம் தீவிரமாக முனைந்தால், உலகம் முழுவதும் தூய்மையடைந்துவிடும். ஏனெனில், நாம் வேறு பிறர் வேறு அல்ல..!’’
- வளரும்
- வீயெஸ்வி