
சயணிக்கு சாவில்லை. காத்தோட காத்தா இன்னமும் உயிரோடதான் உலவிக்கிட்டுத் திரியுறா.

நன்னனூர் ராஜா நன்னன் இருக்காரே... தப்புச் செஞ்சு யாராவது மாட்டுனா, உசுரை எடுத்துருவார். எதிரி நாட்டு ஆளுகளே அவர் பேரைச் சொன்னா நடுங்குவாக.
நன்னனூர் செல்வச் செழிப்பான நாடு. எங்கே பாத்தாலும் ஆறும் குளமுமா இருக்கும். எல்லாப் பக்கமும் பச்சை படர்ந்து கெடக்கும். நன்னனூர் ராஜாக்கள் குல மரமா, மாமரத்தை வெச்சிருந்தாக. குறிப்பா, அரண்மனையையொட்டி நதிக்கரையிலிருந்த பழைமையான மாமரத்தை சாமி மாதிரி கும்பிடுவார் ராஜா. போருக்குப் போனாலும் சரி, வீட்டுல நல்லது கெட்டது நடந்தாலும் சரி, அந்த மாமரத்தைத் தொட்டுக் கும்பிட்டுட்டுப் போனாத்தான் வௌங்கும். அந்த மாமரத்துல பழுத்த பழங்களைப் பறிச்சு பூஜையறையில வெச்சிருந்து பிரசாதம் மாதிரி எடுத்துச் சாப்பிடுவாக ராஜா வீட்டு ஆளுக. வேத்தாளுக யாரும் எடுத்து சாப்பிட்டா மரண தண்டனைதான்.
நன்னனூர் ராஜாவுக்குப் படைத் தளபதியா இருந்தவரு கோசர். வீராதி வீரர். அவருக்கு ஒத்தை மவ. பேரு சயணி. அழகின்னா அழகி பேரழகி. அப்பனுக்கு நிகரா கத்தி சண்டை, வாள் சண்டைன்னு யுத்தமும் பழகுனவ.
ஊர் உலகத்துல இல்லாத பேரழகியா இருந்த சயணியைக் கட்டிக்கிட்டுப்போக வரிசைகட்டி நின்னாக. கோசருக்கோ நாடறிஞ்ச ஒரு வீரனுக்குக் கட்டித் தரணும்கிறதுதான் கனவு. அப்படி யொரு மாவீரனைக் கண்டுபிடிச்சாரு கோசரு. பேரு மகிழன். பக்கத்து நாட்டு ராஜாவோட மெய்க்காவல் படைக்குத் தலைவன். அவனைக் கொண்டாந்து நிறுத்தினாரு கோசரு. திடங்கொண்ட தோளோட மன்மதன் மாதிரி வந்து நின்ன மகிழனைப் பாத்து மயங்கிப்போனா சயணி.

சாதி சனத்தையெல்லாம் கூட்டி, ராஜா முன்னிலை யில நிச்சயம் செஞ்சு கல்யாணத்துக்கு நாள் குறிச்சாக. சுத்தியிருக்கிற ஏழு நாட்டு ராஜாக்களையும் வெத்திலை பாக்கு வெச்சு கல்யாணத்துக்கு அழைச்சாரு கோசரு. தளபதி வீட்டுக் கல்யாணமாச்சே... கண்படும் இடமெல்லாம் தோரணமும் வாழை மரங்களும் கட்டி திருவிழா மாதிரி நடத்துனாக. நாஞ்சில் நாடு, கொங்கு நாடுன்னு போயி பெயர்பெற்ற சமையக்காரர்களைக் கொண்டாந்தாக. மக்கள் மனசும் வயிறும் குளிரக் குளிரச் சாப்பிட்டு வாழ்த்திட்டுப் போனாக. கல்யாணம் கோலாகலமா முடிஞ்சுச்சு. விருந்தெல் லாம் முடிஞ்சு மாப்பிள்ளையும் பொண்ணும் அவுக நாட்டுக்குக் கிளம்புனாக. வழியனுப்பி வைக்க யானையும் குதிரையும் அணிவகுத்து நிக்குது. கன்னுக் குட்டி மாதிரி அப்பன் ஆத்தாவையே சுத்தி வந்த சயணிக்கு, அவுகளை விட்டுட்டு புருஷன் வீட்டுக்குப் போறதுக்கு மனசேயில்லை. அழுத கண்ணீரு ஆறாப் பெருகுச்சு. `பொண்ணாப் பொறந்தா ரெண்டு வூட்டுப் பொறப்பாத்தான் வாழ்ந்தாகணும்’னு ஆத்தாக்காரி புத்தி சொன்னா. `நினைப்பு வந்தா குதிரையைப் பத்திக்கிட்டு வந்திரு தாயி’ன்னு உறவுக்காரவுகள்லாம் ஆறுதல் சொன்னாக. கோசரும் குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டு நின்னாரு. `மாமா... சயணி எங்க வீட்டு ராணி. அவ கண்ணுல துளித்தண்ணி வராம நாங்க பாத்துக்கிறோம். தைரியமா இருங்க’னு சொல்லிட்டு கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கிட்டு பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பினான் மகிழன்.
பொறந்த வீட்டைவிட வசதியா இருந்துச்சு புகுந்த வீடு. லேசா சொணங்கி உக்காந்தாவே, என்னவோ ஏதோன்னு எல்லாரும் பதறிப்போனாக. சொக்குப்பொடிக்கு மயங்கின ஆளு மாதிரி அவளையே சுத்திச் சுத்தி வந்தான் புருஷங்காரன்.
ஒரே மாசத்துல மகராசி முழுகாம இருந்தா. மகிழனுக்கு சந்தோஷம் புடிபடலே. குடும்ப வாரிசை வயித்துல சுமந்துக்கிட்டிருந்தவளை ஈ, எறும்பு அண்டாமப் பாத்துக்கிட்டாக. ஊரெல்லாம் கூட்டி விருந்து வெச்சான் மகிழன். நாட்டுல இருக்கிற கோயிலுகளுக்கெல்லாம் கொடை குடுத்து அனுப்புனான்.
மக முழுகாம இருக்கிற செய்தியறிஞ்ச கோசர், வண்டி வண்டியா சீரு செனத்தியை கொண்டாந்து நிறைச்சுப்புட்டாரு. பழம் ஒரு வண்டியில, உடை ஒரு வண்டியிலன்னு வந்து குவியுது எல்லாம்.
எட்டாம் மாசம்... வளைகாப்பையே திருவிழா மாதிரி நடத்துனான் மகிழன். மரபுப்படி, வளைகாப்பு நடத்தினதும் பிரசவத்துக்கு பொறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். சயணியை அழைச்சுக்கிட்டுப் போக ரதம் தயாரா இருக்கு. மகிழனுக்கு சயணியை அனுப்ப மனசே வரலே. சயணிக்கும் புருஷனை விட்டுப் போக மனசில்லை. ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தைப் பாத்து ஒருத்தர் கலங்கிப்போய் நின்னாக.
கோசருதான் பேசுனாரு... `மாப்பிள்ளை... உங்க பொண்டாட்டியை எங்க வீட்டுலயேவா வெச்சுக்கப்போறோம்? ரெண்டே மாசம்... உங்க புள்ளையையும் பொண்டாட்டியையும் கொண்டு வந்து ஒப்படைச்சிருவோம். கலங்காதிய’னு சொல்லிட்டு மகளைக் கூட்டிக் கிட்டுக் கிளம்பினாரு. ஊரே வழியனுப்பி வைக்க, ரதமேறி பொறந்த வீட்டுக்கு வந்தா மகராசி.
நல்ல கோடை. ஆனாலும், வானம் பொய்க்காத பூமியில்லையா நன்னனூர் நாடு. வெயிலு கொஞ்சம், மழை கொஞ்சம்னு காலநிலையே நல்லாயிருக்கு. `மங்குனா மாங்கா, பொங்குனா புளி’ங்கிற சொலவடை கணக்கா, ஊரே மாம்பழ வாசனையா கெடக்கு. எல்லா மரங்கள்லயும் காய்ச்சுப் பழுத்துத் தொங்குது மாம்பழம். மந்தி, வௌவா, அணில்னு பெருங்கூட்டம் கூடி பழத்தைத் தின்னு தீக்குதுக.
சயணிக்கு மாம்பழம்னா கொள்ளைப் பிரியம். கோசருக்கும் அது தெரியும். விதவிதமா மாம்பழங்களை வாங்கிவந்து வீட்டுல குவிச்சுட்டாரு மனுஷன். பெருத்த வயிறு சயணிக்கு அழகைக் கூட்டியிருச்சு. முகம் பூரிப்புல மலர்ந்து கெடக்கு. தேவதை மாதிரி திரியுறா. இன்னும் இருபத்தைஞ்சு நாள்ல பிரசவம் நடக்கும்னு நாள் குறிச்சுச் சொல்லிட்டாரு ராஜ வைத்தியரு. உள்ளே கிடக்கிற உசுரு, எட்டி எட்டி உதைஞ்சு `நான் இருக்கேன்... நான் இருக்கேன்’னு சொல்லிக்கிட்டுக் கெடக்கு. ஒவ்வொரு முறை உதைக்கும்போதும் சிலிர்த்துப்போகுது உடம்பு.

ஒருநா, தோழிகள்லாம் சயணியைப் பாக்க வந்திருந்தாக. எல்லாப்பேரும் சேந்து சின்ன வயசுல செஞ்ச சேட்டைகளைப் பத்தியெல்லாம் பேசிச் சிரிச்சுக்கிட்டிருந்தாக. அதையெல்லாம் கேட்டு, திரும்பவும் தோழிகளோட சேந்து ஆத்துல குளிக்கணும்போல இருந்துச்சு சயணிக்கு. தோழிகள்கிட்ட கேட்டா... எல்லாப்பேரும் பதறிப்போனாக. நிறை மாசம். அதுவும் பிரசவத்துக்கு நாள் குறிச்சுட்டாரு வைத்தியரு. `இந்த நேரத்துல ஆத்துல குளிக்கிறதெல்லாம் நல்லதில்லை. அதுவும் தண்ணி கரைபுரண்டு ஓடுது. வேண்டாவே வேண்டாம்’னு தடுத்தாக எல்லாரும்.
அப்பங்காரன்கிட்டப் போய் நின்னா சயணி. அப்பனுக்கு மகளோட வார்த்தையைத் தட்ட முடியலே. ஆசைப்படுறாளே... `சரி... படியை விட்டு எறங்கக் கூடாது. பத்திரமா நின்னு குளிச்சுட்டு, உடனே வந்திடணும்’னு சொல்லி தோழிகளையும் கூட அனுப்பி வெச்சாரு.
சயணிக்கு சந்தோஷம் தாங்கலே. தோழிகளோட கிளம்புனா. தண்ணி அவ்வளவு குளுமையா இருக்கு. கவனமா படியில இறங்கி உக்காந்து தண்ணியில தலைமுழுகுனா சயணி. தோழிகள் கரையில உக்காந்து அவளையே பாத்துக்கிட்டிருந்தாக.
அப்போ தண்ணியில மிதந்து வருது ஒரு மாம்பழம். பாத்ததும் சயணிக்கு நா ஊறுது. அதை ஆசையா எடுத்தா. அந்தப் பழத்தோட வடிவத்தைப் பாத்ததும் தோழிகள்லாம் பதறிட்டாளுக. `அய்யோ... சயணி. அதை தண்ணியிலயே விட்டுடு. அது ராஜமரத்துல காய்ச்ச பழம். நாம சாப்பிடக் கூடாது. அப்படியே போட்டுடு’னு கத்தினாளுக. சயணிக்கு அதெல்லாம் காதுல இறங்கலே. ஆசையா கடிச்சு ருசிச்சுச் சாப்பிட்டா. இதுவரைக்கும் சாப்பிட்ட மாம்பழங்கள்லயே இணையில்லாத சுவையா இருந்துச்சு அது.
அந்தப்பக்கமா வந்த தோட்டத்து காவல்படை ஆளுக, சயணி மாம்பழம் சாப்பிட்டிருக்கிறதைப் பாத்து சுத்தி வளைச்சுட்டாக. ராஜகுலத்துக்கு மட்டுமே சொந்தமான மாமரத்துப் பழத்தை சாப்பிட்ட குற்றத்துக்காக அவளைக் கைது செஞ்சு அரண்மனைக்குக் கொண்டு போனாக. தோழிகள்லாம் பதறிப்போய் கோசர்கிட்ட தகவல் சொன்னாக. கோசர் அரண்மனைக்கு ஓடுனாரு. சயணியை ராஜா முன்னாடி நிறுத்துனாக.
`ராஜகுலத்து மாமரத்துல காய்ச்ச மாம்பழத்தைச் சாப்பிட்டியா’னு கேட்டார் ராஜா. `தண்ணியில வந்த பழம் அது. எந்த மரத்துல காய்ச்சதுன்னு தெரியாது. ஆனா, அது இணையில்லாத ருசியோட இருந்துச்சு. அதனால சாப்பிட்டேன்’னு சொன்னா சயணி. `ராஜகுலத்தோட சொத்தை அனுமதியில்லாம அபகரிச்சதோட அவமதிச்ச குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கிறேன்’னு தீர்ப்புச் சொன்னார் ராஜா.
ராஜாவோட தீர்ப்பைக் கேட்டு மயங்கி விழுந்துட்டா சயணி. எல்லாப் பேரும் திகைச்சுப்போயிட்டாங்க. கோசர் கதறி அழுவுறாரு. சயணி முகத்துல தண்ணி தெளிச்சு, மயக்கம் தெளிவிச்சு சிறைக்குக் கொண்டு போயிட்டாக.
மகிழனுக்குத் தகவல் போச்சு. பதறிப்போய் ஓடியாந்தான். அரண்மனைக்கு ஓடிப்போய், மன்னனைச் சந்திச்சு `மாம்பழத்தைத் தின்ன குற்றத்துக்காக எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாத் தர்றோம். சயணியை விட்டுருங்க’னு கெஞ்சுனான் மகிழன். மன்னன் ஒப்புக்கலே. `தீர்ப்புன்னா தீர்ப்பு, தண்டனைன்னா தண்டனை'ன்னு சொல்லிட்டார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற கொலைக்களத்துல வெச்சு வவுத்துப்புள்ளக்காரிக்கு தண்டனையை நிறைவேத்திட் டாக. கொதிச்சுப்போனான் மகிழன். உடனே தன் படையைத் திரட்டிக்கிட்டு அரண்மனைக்குள்ள புகுந்தான். மன்னன் குலதெய்வமா கருதுன காவல் மாமரத்தை வெட்டி வீழ்த்தினான். மெய்க்காப்பாளர்களைக் கொன்னுட்டு மன்னனையும் கழுத்தறுத்துப்போட்டு, சயணி இல்லாத உலகத்துல வாழப் பிடிக்காம வாளால கழுத்தறுத்துக்கிட்டுச் செத்துப் போனான். மகளும் மருமகளும் செத்துப்போனதறிஞ்சு கோசரும் ஈட்டிய செருவிக்கிட்டுப் போய் சேந்துட்டாரு.
இந்த சம்பவத்துக்குப் பெறவு நன்னனூர் நாடே வறண்டு வெப்பக்காடா மாறிடுச்சு. மழை தண்ணியில்லை. எல்லா ஜனங்களும் வறட்சி யில வெந்து சாகுது. `வவுத்துப் புள்ளைக்காரியை அநியாயமா பழி வாங்குனதுதான் காரணம்’னு மக்களெல்லாம் பேசிக்கிட்டாக. பரிகாரமா, செத்துப்போன சயணிக்கு அவ விழுந்து கெடந்த மயானக் கொலைக்களத்துலேயே மண்ணெடுத்து சிலை வடிச்சு காவல் தெய்வமா வெச்சு கும்புட ஆரம்பிச்சாக. எல்லாரும் கையெடுத்து வணங்கின பிறகு, சயணி சாந்தமானா. நிலம் பச்சைபூக்கத் தொடங்குச்சு.
சயணிக்கு சாவில்லை. காத்தோட காத்தா இன்னமும் உயிரோடதான் உலவிக்கிட்டுத் திரியுறா. பொள்ளாச்சியிலேருந்து 15 கிலோமீட்டர் தொலைவுல இருக்கு ஆனைமலை. இப்போ போனாலும் அங்கே ஆங்காரமாப் படுத்திருக்குற சயணியைப் பாக்கலாம். இப்போ அவளை எல்லாரும் `மாசாணி மாசாணி'ன்னு கூப்பிடுறாக!
- வெ.நீலகண்டன்
படம் : சி.வெற்றிவேல்
ஓவியம் : ஸ்யாம்