Published:Updated:

தெய்வத்துணை கொண்ட சுவாதி!

தெய்வத்துணை கொண்ட சுவாதி!
பிரீமியம் ஸ்டோரி
தெய்வத்துணை கொண்ட சுவாதி!

நட்சத்திர குணாதிசயங்கள்

தெய்வத்துணை கொண்ட சுவாதி!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
தெய்வத்துணை கொண்ட சுவாதி!
பிரீமியம் ஸ்டோரி
தெய்வத்துணை கொண்ட சுவாதி!

சுவாதி - ஜோதி என்று அழைக்கப்படுவதும் ராகு பகவானின் சக்தி வாய்ந்த இரண்டாவது நட்சத்திரமும் ஆகும். நாரத ஸ்ம்ஹிதை, நக்கீர சூத்திரம், கல்பதரு, உத்தர காலாமிர்தம், கேரளாச்சாரியம், புலிப்பாணி ஆகிய நூல்கள் இதன் பராக்கிரமங்களைப் பறைசாற்றுகின்றன.

`இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளல். பல நூல்களை விரும்பிக் கற்கும் அறிஞர். எதையும் நிதானமாக அணுகி புரிந்துகொள்பவராகவும் இருப்பீர்கள்’ என்கிறது நட்சத்திரமாலை. ‘வசீகரிக்கும் ஆற்றலும், உண்பதில் பிரியமும், தொடையில் மருவும் உள்ளவர், கடவுள் வழிபாட்டில் நாட்டம் கொண்டவர்’ என்கிறது ஜாதக அலங்காரம்.

பஞ்ச பூதங்களில் வாயு பகவான் பிறந்த நட்சத்திரம் இது. இதில் பிறந்த நீங்கள் வித்தியாச மானவர். உங்களை அறியாமலேயே உங்களை ஒரு தெய்விக சக்தி வழிநடத்தும். இரக்க குணமும், அறிவுக்கூர்மையும் பெற்றிருப்பீர்கள். ஒழுக்கம், உண்மை பேசுதல் உள்ளிட்ட நற்பண்புகளைக் கொண்டிருப்பீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறும் வரை அயராமல் உழைப்பீர்கள். துலாம் ராசியிலேயே அதிக ஒளி வாய்ந்த இளமையான நட்சத்திரமாக சுவாதி இருப்பதால், நீங்கள் இளகிய மனமும், அழகும், சுறுசுறுப்பு மிகுந்தவராகவும் திகழ்வீர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருக் கும் அரங்கத்தில், நீங்கள் மட்டும் பளிச்செனத் தெரிவீர்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற சொல்லுக்கேற்ப நீதி, நேர்மை உடையவர்களாக இருப்பீர்கள்.

தெய்வத்துணை கொண்ட சுவாதி!

யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும்,  உங்களுக் குச் சரியெனப்படுவதை மட்டும் செய்வீர்கள். செய்த தவறுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டீர்கள். அரிதாக சிலரைத்தான் உடன் வைத்துக்கொள்வீர்கள்.

எப்போதும் தூய்மையை விரும்புபவர் நீங்கள். சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத இயல்பும் உற்றார் உறவினர்களை மதிக்கும் குணமும் உங்களிடம் உண்டு. சங்கீதம், நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பீர்கள். ஒரு சிலர் மொத்த விற்பனையாளர்களாகவும், மார்க்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும், எழுத்தாளர் களாகவும் இருப்பீர்கள். உங்கள் தோற்றத்தை வைத்து உங்கள் வயதை கணிக்க முடியாது.

எது நல்லது, எது கெட்டது என்று உணர்ந்து அதன்படி செயல்படுவதில் வல்லவர்கள். மன வலிமையும், எளிமையான பேச்சும், பாகுபாடு பார்க்காமல் தர்மம் செய்யும்  மனமும்  உண்டு.

வித்தியாசமான அணுகுமுறையால் பிரச்னை களைத் தீர்ப்பீர்கள். எப்போதும் சுதந்திரமாக சுற்றித்திரிய விரும்பு வீர்கள். உங்கள் சுதந்திரத்தில் யாரேனும் தலையிட்டால் கோபப்படுவீர்கள். சகல சாஸ்திரங்களையும் கற்று வைத்திருப்பீர்கள். தொழிலாளிகளை எப்போதும் அன்பாக வழிநடத்து வீர்கள். உங்களில் பலர், கலைத் துறையைச் சார்ந்தவர்களாகவும், பேராசிரியர்களாகவும், கெமிக்கல் இன்ஜினீயர்களாகவும் இருப்பீர்கள். ஏரோனாட்டிக்ஸ், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் சிறந்து விளங்குவீர்கள்.

சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருந் தாலும், ‘கற்றது கைமண் அளவு’ என்று தன்னடக் கத்துடன் செயல்படுவீர்கள். நேருக்கு நேராக யாரையும் பகைத்துக் கொள்ளாத நீங்கள், பல தரப்பினருக்கும் நண்பர்களாக இருப்பீர்கள். எனினும், சில விஷயங்களில் நீங்கள் சொல்வதே சரி என்று பிடிவாதமாக இருப்பீர்கள். அதனால், குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் எழும்.

திருமணம் கொஞ்சம் தாமதமாகத்தான் அமையும். இந்த நட்சத்திரக்காரர்களில் பலர், அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. கணவன், மனைவி, பிள்ளைகள் என்று கட்டுக்கோப்புடன் வாழ்வீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வீர்கள். பெரியவர்களையும் தெய்வத்தையும் வணங்கும் பக்தியுடையவர்கள் நீங்கள். எந்த விஷயத்திலும் ஆத்திரமும் அவசரமும் கொள்ளாதிருந்தால் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் எளிதாக வெற்றியடையும். இரவில் வெளியூர் பயணங்கள் செல்வதென்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மத்திய வயதைத் தாண்டியதும் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் கோயிலாகப் பயணம் செய்ய விரும்புவீர்கள். 27 வயதிலிருந்து வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். 39, 41, 42, 50, 51 வயதுகளிலெல்லாம் எல்லா வகையான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

முதல் பாதம்
(ராகு + சுக்கிரன் + குரு)


முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி குரு. இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். நிறைய கனவு களைச் சுமந்துகொண்டு வாழ்வின் பயணத்தை நடத்துவார்கள். நாடாள்பவர், ஆன்மிகவாதி ஆகியோரின் நட்பையே அதிகம் விரும்புவார்கள்.

பலவகை வித்தைகளைக் கற்றுத் தெளிந்திருந் தாலும் தன்னடக்கத்துடன் இருப்பார்கள். பலர், சிறந்த மேடைப் பேச்சாளர்களாக இருப்பார்கள். சாந்த குணமுடையவர்கள், ஆதலால் உதவி கேட்டு வருவோரை உதாசீனப்படுத்தாமல் முடிந்ததைச் செய்வார்கள். வாக்குறுதியைக் காப்பதில் வல்லவர்கள். சிறு விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளாத தன்மானச் சிங்கங்கள். குழந்தைப் பருவத்தில் இவர்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கும்.

கல்வியில் கடைசி வரை பிரகாசிப்பார்கள். குடும்பத்தினரின் கோரிக்கைகளில் நியாயமான தைச் செய்துகொடுக்கும் அளவுக்குப் பாசம் வைத்திருப்பார்கள். பகட்டான வாழ்க்கை வாழ விரும்பமாட்டார்கள். மருத்துவம், ஆன்மிகம், சட்டம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். 42 வயதிலிருந்து எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்று நிம்மதியடைவார்கள்.

பரிகாரம்: காரைக்குடிக்கு மேற்கே அமைந்துள்ள கோவிலூரில் கோயில் கொண்டிருக்கும் நெல்லைநாயகி உடனுறை கொற்றவளீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; வளம் உண்டாகும்.

இரண்டாம் பாதம்
(ராகு + சுக்கிரன் + மகர சனி)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சனி. இதில் பிறந்தவர்கள், எப்போதும் உண்மையே பேசுவார்கள். உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் மற்றவர்களைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பார்கள். புளிப்பு, துவர்ப்பு, காரம், வறுத்த, பொறித்த உணவை ஆர்வத்துடன் உண்பார்கள். எந்தச் செயலிலும் தெய்வ பலம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று எண்ணுவார்கள். பெற்றோரை இறுதி காலம் வரை சந்தோஷமாக வைத்திருப்பார்கள். சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கல்வி, நீதிமன்றம், மெரைன், கேட்டரிங், டூரிசம் போன்றவற்றில் மிளிர்வார்கள். மனசாட்சிக்குப் பயந்தவர்கள். சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் மனதுக்குள்ளேயே புழுங்கித் தவிப்பார்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவதில் வல்லவர்கள். சிலர், உத்தியோகம் பார்த்தாலும் பகுதி நேரமாக வியாபாரம் செய்வாகள். வாகன உதிரி பாகம், காட்டன் மில், பெட்ரோல் பங்க், ஓட்டல் போன்ற வியாபாரங்களைச் சொந்தமாக வைத்து நடத்துவார்கள். 35 வயது முதல் வாழ்வில் வளம் பெருகும்.

பரிகாரம்: அவிநாசியில் அருளும் ஸ்ரீபெருங் கருணை நாயகி - ஸ்ரீஅவிநாசியப்பரை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

மூன்றாம் பாதம்
(ராகு + சுக்கிரன் + கும்ப சனி)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சனிபகவான். இதில் பிறந்தவர்களின் சொல் ஒன்றாக இருக்க, செயல் வேறொன்றாக இருப்பதைக் கண்டு உடனிருப்பவர்களே திகைப்பார்கள். அறுசுவை உணவே அருகிலிருந்தாலும் பழைய சாதம், ஊறுகாயில் இவர்களுடைய மனம் லயிக்கும். காரமான நொறுக்குத் தீனியைக் கொரிப்பார்கள்.

வெகுளித்தனம் மிகுந்தவர். வில்வித்தை, குண்டு எறிதல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். வியாபாரத்தில் போட்டாபோட்டி இருப்பதுதான் இவர்களுக்குப் பிடிக்கும். வசதி வாய்ப்புகள் வந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைப்பார்கள். அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம்.

ஆகவே 27, 28 வயதிலேயே வசதி வாய்ப்பு கிட்டும். இளமை காலத்திலிருந்து உடனிருப்பவர்களை அதிகம் நேசிப்பார்கள். தக்க தருணத்தில் அவர்களுக்கு ஓர் அந்தஸ்தைப் பெற்றுத் தருவார்கள். கண் எரிச்சல், தூக்கமின்மை ஆகியவை அடிக்கடி ஏற்பட்டாலும், பிறகு ஒரு கட்டத்தில் முழுமையாக நீங்கிவிடும். 33 வயதில் இவர்களுடைய தரம் உயரும்.

பரிகாரம்: திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மை சமேத ஸ்ரீநெல்லையப்பரை வணங்கி வாருங்கள்.

நான்காம் பாதம்
(ராகு + சுக்கிரன் + குரு)


தில் பிறந்தவர்கள், சிவந்த கண்களும் பளபளக்கும் பற்களும் அகன்ற நெற்றியும் கொண்டிருப்பார்கள். தனக்குத் தோன்றியதைச் செய்வார்களே தவிர, மற்றவர்களின் கருத்தை ஏற்கவே மாட்டார்கள்.சுகபோக வாழ்க்கையில் அதிக நாட்டம் கொண்டவர்கள். எதிரிகளைக் கலங்கடிக்கச் செய்வார்கள்.

மற்றவர்களுடைய ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து ஏங்குவார்கள். எளிதில் வசதி வாய்ப்புகளை அடையத் துடிப்பார்கள். மனைவி, பிள்ளைகளுக்காக அதிகம் சொத்து சேர்ப்பார்கள். கிடைத்ததெல்லாம் தெய்வ அருளால்தான் என்றெண்ணி கோயில்களுக்கு நன்கொடை வழங்குவார்கள். சொந்தபந்தங்களின் வருகையை அதிகம் விரும்புவர். புகழ் இவர்களைத் தேடி வரும். தங்களுடைய மனதை அடுத்தவர் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவார்கள். 27 வயது முதல் வாழ்வின் அஸ்திவாரம் தொடங்கும்.

பரிகாரம்: அரக்கோணம் அருகில் சோளிங்கரில் அருளும் ஸ்ரீநரசிம்மரை வணங்குதல் நலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுவாதி நட்சத்திரத்தில்...

அன்னதானம், கல்வி, ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றைக் கற்கத் தொடங்குதல், பெயர் சூட்டுதல், முடி களைதல், பூ முடித்தல், வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல், பயிரிடுதல், விதை விதைத்தல், புதிய ஆடை, ஆபரணம் அணிதல், ஆயுதப் பிரயோகம், மாங்கல்யம் செய்தல், தானியம் வாங்குதல், விவசாயம், சங்கீதம், விவாகம், சமுத்திர யாத்திரை ஆகிய செயல்களைத் தொடங்கினால் நன்மையும் வெற்றியும் நிச்சயம்.

பரிகார ஹோம மந்திரம்

வாயுர் நக்ஷத்ரமப்ப்யேதி நிஷ்ட்யாம்
திக்ம ச்ருங்கோ வ்ருஷபோரோருவாண: 
ஸமீரயன் புவனா மாதரிச்வா
அபத்வேஷாஹும்ஸி நுததாமராதி:
தந்நோ வாயுஸ்தது நிஷ்ட்யா ச்ருணோது 
நத் நக்ஷத்ரம் பூரிதா அஸ்து மஹ்யம்
தந்நோ தேவாஸோ அனுஜானந்து காமம்
யதாதரேம துரிதானி விச்வா

சுவாதி நட்சத்திரம்

நட்சத்திர தேவதை: மான் வாகனத்தில் வீற்றிருப்பவரும் புகை  நிற மேனி உடையவருமான வாயு பகவான்.

வடிவம்    : ஒளிரும் வைரம் போன்ற வடிவம்.

எழுத்துகள்    :  ரு, ரே, ரோ, த.

ஆளும் உறுப்புகள்:    தோள்பட்டை, சிறுநீரகம்.

பார்வை    : சமநோக்கு.

பாகை    : 186.40 - 200.00

நிறம்    : சிவப்பு.

இருப்பிடம்    :  பொட்டல் வெளி.

கணம்    :  தேவ கணம்.

குணம்    : மென்மை.

பறவை    : தேனீ.

மிருகம்    :  ஆண் எருமை.

மரம்    : பாலில்லாத மருத மரம்.

மலர்    :  தாமரை.

நாடி    :  வாம பார்சுவ நாடி.

பஞ்சபூதம்    :  நெருப்பு.

நைவேத்யம்    :  தயிர் சாதம்.

தெய்வம்    : ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

சொல்ல வேண்டிய மந்திரம்

உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |

ந்ருஸிம்ஹம் பீஷனம் பத்ரும் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||


அதிர்ஷ்ட எண்    : 4, 6, 8.

அதிர்ஷ்ட நிறங்கள்    : வெளிர்ப் பச்சை, கரு நீலம்.

அதிர்ஷ்ட திசை    : மேற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வெள்ளி, சனி.

அதிர்ஷ்ட ரத்தினம்    : நீலக் கல்.

அதிர்ஷ்ட உலோகம்    : வெள்ளி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: நரசிம்ம மூர்த்தி, சிருங்கேரி பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்தர், அழகியசிங்கர், பெரியாழ்வார், மாவீரன் அலெக்ஸாண்டர், கோபர் நிக்கஸ், சித்தரஞ்சன்தாஸ்.

- ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism