
? விவாகரத்துப் பெற்ற என் மகளுக்கு மறுமணம் செய்து வைக்கலாமா?
- ராதா நாயர், பெங்களூரு
! தங்கள் மகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தோம். அவர் பிறந்த லக்னம் மகரம். 9-ம் வீடான கன்னியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன. இப்படி, ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் அமைவது, சந்நியாச யோகத்தைக் குறிப்பிடும்.
அவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ல் சனி அமர்ந்துள்ளார். உங்களின் மகள், கணவரின் மூலம் பல சிரமங்களை அனுபவித்ததற்கும் விவாகரத்து பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டதற்கும் இதுவே காரணம். தற்போது, தங்கள் மகளுக்குப் புதன் தசை நடைபெற்று வருகிறது. புதன், `பத்ர யோகம்’ என்ற யோகத்தைத் தரக்கூடிய நிலையிலுள்ளதால், புதன் தசை - ராகு புக்தி வரும்போது, மறுமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
? 12-ம் வகுப்புக்குச் செல்லவுள்ளான் என் மகன். ஆனால், படிப்பில் ஆர்வம் இல்லை. அத்துடன், நண்பர்களின் சேர்க்கையும் கவலையளிப்பதாக உள்ளது. என் மகன் மனம் திருந்தி படிப்பில் ஆர்வம் செலுத்துவானா?
- விருத்தாசலத்திலிருந்து ஒரு வாசகர்
! தங்கள் மகனின் ஜாதக அமைப்பு நன்றாகவே உள்ளது. 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் உள்ளனர். 8-ல் இருக்கும் கேது, தன் 7-ம் பார்வையால் தன, குடும்ப, வாக்கு ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தைப் பார்க்கிறார்.
அந்த இடத்தில் ராகுவும் இருக்கிறார். மேலும், தற்போது தங்கள் மகனுக்குக் கேது தசை நடக்கிறது. எனவேதான், தங்கள் மகன் படிப்பில் ஆர்வமில்லாதவராக இருக்கிறார். விநாயகர் வழிபாடு சிறந்த பரிகாரமாக அமையும்.
தங்கள் மகனின் ஜாதகத்தில் சந்திரன், சூரியன், சுக்கிரன், குரு ஆகியோர் 4-ம் இடத்தில் அமர்ந்துள்ளனர். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பது `அமாவாசை யோகம்’ எனும் யோகத்தைக் குறிப்பிடும். இது சிறப்பான அமைப்பு என்று சொல்லமுடியாது. எனவே, செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் உண்டாகும்.
? என் மகனுக்கு 32 வயது. `திருமணமே வேண்டாம்’ என்கிறார். அவருடைய மனம் மாறுமா, அவருக்குத் திருமண யோகம் உண்டா, பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? தங்களின் வழிகாட்டலை எதிர்பார்க்கிறேன்.
- ரங்கநாதன், திண்டிவனம்
! தங்கள் மகன், ரோகிணி நட்சத்திரம் 1-ம் பாதம் ரிஷபராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கிறார். லக்னத்துக்கு 7-ம் வீடான கும்பத்துக்கு அதிபதியான சனி, லக்னத்துக்கு 4-ல் உள்ளார். சனியும் சந்திரனும் 7-ம் பார்வையாக ஒருவரையொருவர் பார்க்கின்றனர்.
மேலும் அவரது ஜாதகத்தில் 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உள்ளனர். தற்போது அவருக்கு 8-ல் இருக்கும் ராகு தசை நடைபெறுகிறது. கல்யாணத் தடைக்கு இந்த அமைப்பே காரணமாகிறது. புதன், சுக்கிரன் 11-ல் உள்ள அமைப்பானது, `புனர்பூ யோகம்’ என்ற யோகத்தைக் குறிப்பிடுகிறது. லக்னத்துக்குக் குருவின் பார்வை இருப்பதால், நீண்ட ஆயுள் உண்டு. தற்போதைய கிரகநிலை மற்றும் தசாபுக்திகளின்படி அவருக்குக் குடும்பத்தில் பிரச்னை, குடும்பப் பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளன.
33 வயதுக்குப் பிறகு அவருக்கு நல்ல காலம் அமையும். அவருடைய திருமண வாழ்க்கை நல்லபடி அமைய, வேதம் படித்த அந்தணர்களைக் கொண்டு வீட்டில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவேண்டும். அத்துடன், 12 அந்தணர்களுக்கு அன்னம், வஸ்திரம் கொடுத்து அவர்களின் ஆசியைப் பெறவேண்டும். இதன் மூலம் அவருக்குச் சிறப்பான வாழ்க்கையும் எதிர்காலமும் அமையும்.
? என் மகள், சமீபகாலமாக தன் கணவருடன் எப்போதும் சண்டை போட்டபடி இருக்கிறாள். அவளுடைய இந்தப் போக்குக்கு என்ன காரணம்?
- கணேசமூர்த்தி, தேனி
! தங்கள் மகளின் ஜன்ம லக்னம் மீனம். ராசியும் மீனம்தான். லக்னத்துக்கு 7-ம் வீடான கன்னிக்கு அதிபதி புதன், கேதுவுடன் சேர்ந்து 10-ம் இடத்தில் உள்ளார். எனவே, அவருக்குக் கணவரிடமிருந்து கிடைக்கவேண்டிய சுக சௌகர்யங்கள் கிடைக்க வில்லை என்றே கூறவேண்டும். இந்த ஏமாற்றமும் விரக்தியும்தான் பிரச்னைக்குக் காரணங்கள்.
லக்னத்துக்குக் குரு பார்வை உள்ளது. ஆகவே, நல்ல ஜாதகம்தான் என்பதில் சந்தேகமில்லை. மேலும் 11-ல் இருக்கும் சூரியனின் தசை நடப்பதால், விரைவில் பிரச்னைகள் முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தங்கள் மகளின் கணவரது ஜாதக அமைப்பின்படி, வெள்ளிக்கிழமைகளில் பார்வதிதேவியை வழிபடவேண்டும். அத்துடன், லட்சுமிதேவிக்கு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வர, விரைவில் நல்ல திருப்பம் ஏற்படும்.
? என் தம்பி சற்று மனநிலை சரியில்லா மல் இருக்கிறார். அவருடைய மனநிலை எப்போது சரியாகும், அவருக்குத் திருமண யோகம் உண்டா?
- அகமதாபாத்திலிருந்து ஒரு வாசகர்
! தங்கள் தம்பியின் லக்னம் மிதுனம். லக்னத்துக்கு 3-ல் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோர் உள்ளனர். சந்திரன் சனியின் சேர்க்கை பெற்று 6-ம் வீட்டில் உள்ளார். எனவே சித்த சுவாதீனம் இல்லாதவர்போல் காணப்படுகிறார்.
இந்த ஜாதகம் மந்த ஜாதகம். அவரைப் பொறுத்தவரை எதையும் கட்டாயப்படுத்திச் செய்யவைக்க முடியாது. அவருடைய போக்கிலேயே சென்று விட்டுப்பிடிப்பதுதான் நல்லது. தற்போது சுக்கிர தசை புதன் புக்தி 30.3.20 வரை உள்ளது. சுக்கிரன் சிம்மத்தில் உள்ளார். சிம்மம் சுக்கிரனுக்குப் பகை வீடு. எனவே, அவரை அடக்கிக் கட்டுப்படுத்த நினைக்கவேண்டாம். சுக்கிரனுக்கும் புதனுக்கும் ஹோமம் செய்து ப்ரீதி செய்துகொள்வதுடன், வீட்டில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாம். அதனால் நல்ல பலன் கிடைக்கும்.
- பதில்கள் தொடரும்...
- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com