
ஆதிசங்கரர் மீது எனக்கு அளவற்ற பிரமிப்பு எழுவதுண்டு. முப்பத்திரண்டு வயதிலேயே முக்தி அடைந்துவிட்டார். அதற்குள் எத்தனை எத்தனை சாதனைகள்!
பாரதம் முழுவதும் பயணித்து இந்து மதத்தை உயர்த்திப்பிடித்தவர்; தர்க்க வாதங்களால் வேற்றுமத ஆக்கிரமிப்புகளைத் தடுத்தவர்; புகழ் குன்றா பீடங்களை நிறுவியவர். இலக்கியத்துக்கும் அவர் அளித்த பங்கு மகத்தானது. அவர் அருளிய நூல்களில் பஜகோவிந்தம் எனக்கு மிகவும் பிடித்துப்போக முதல் காரணம், எம்.எஸ். அவர்கள். அவரது தேன் குரலில் கரைந்தபிறகுதான்... சம்ஸ்கிருதத்தில் குறைந்த ஞானமே கொண்ட எனக்கு, பஜகோவிந்தத்தின் பாடல்கள் பலவற்றை முழுமையாக உள்வாங்கித் திளைக்க முடிந்தது.
சுவாமி சின்மயானந்தா முதல் கவிஞர் கண்ணதாசன் வரை, பலர் பஜகோவிந்தத்தின் பெருமைகளை மிக அற்புதமாக எழுதியுள்ளார்கள். எனினும், அவற்றையும் மீறி எனக்குள் சில ஐயங்கள். அவற்றுக்கான விடைகளை அறிய முற்பட்டேன். தீர்வுகள் கிடைத்தன. தொடர்ந்து சித்தர்களின் அணுகுமுறை, ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேருரைகள், சிவானந்தரின் ‘பேரின்பம்’ ஆகியவையும் இந்தத் தொடர் உருவாகக் காரணமான உந்துசக்திகளாய் அமைந்தன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘மோக முத்கரா’ எனப்படும் பஜகோவிந்தப் பாடல்கள் ஆசையை அறுக்கச் சொல்கின்றன. அதில் வாதப் பிரதிவாதங்கள் இல்லை; மிக எளிமையாக, பொட்டில் அடித்தாற்போல் உண்மையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வாறான தகிக்கும் உண்மையை உணர்ந்த பின்னும், நம்மால் பலவற்றைத் துறக்கமுடியாமல் போகலாம். காரணம் மாயையின் வலைப்பின்னலே தவிர வேறில்லை. எனினும், வாழ்க்கையின் அடுத்த பக்குவ நிலைக்கு இந்தத் தொடர் நம்மை அழைத்துச் செல்லும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.
வாருங்கள்... திகைக்கலாம் திளைக்கலாம்!
படிப்பும் பட்டறிவும்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ரிஞ் கரணே

கருத்து: ‘முட்டாள் மனமே! வேறெதையும் நினைக்காமல், கோவிந்தனையே நினைத்துக்கொண்டிரு. அதுதான் உனக்கு நன்மை அளிக்கும். நீ படித்த இலக்கணப் படிப்பெல்லாம் இறக்கும் காலத்தில் உன் உதவிக்கு வராது.
இந்தப் பாடலை மேலோட்டமாக வாசிக்கும் போது, இது இரண்டு விஷயங் களை நமக்கு உணர்த்துவதாகத் தோன்றும்.
1. இறக்கும் காலத்தில், நீ படித்தது உன் உதவிக்கு வராது. எனவே படிப்பினால் பயனில்லை.
2. எப்போதும் கோவிந்தனையே நினைத்துக் கொண்டிரு. இறக்கும் காலத்தில், அந்த நாமம்தான் உதவிக்கு வரும்.
இதைப் படிக்கும்போது மனதில் சின்ன நெருடல் உண்டாகலாம். கல்வி என்பது முக்கியம் இல்லையா, படித்துவிட்டால், இறக்கும்போது இறைவனைச் சிந்திக்கத் தவறிவிடுவோமா என்ற கேள்விகள் எழலாம்.
இவற்றுக்கு விடைகாண வேண்டுமெனில், ராஜசேகர் மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.
படிப்பாளியான அவர் வைத்தியம் தெரிந்தவர்; மந்திரங்கள் அறிந்தவர். ஒருமுறை, நண்பர்களோடு சென்றுகொண்டிருந்தபோது எதிரில் நாகம் ஒன்று வந்தது. ராஜசேகர் குறிப்பிட்ட மந்திரத்தைக் கூறினார். உடனே, அந்த நாகம் ஒருமுறை அப்படியும் இப்படியுமாக வளைந்துநெளிந்து அலைபாய்ந் ததுடன், அந்த இடத்திலிருந்து அகன்றோடிவிட்டது. நண்பர்கள் ராஜசேகரின்மீது மேலும் மதிப்பு கொண்டார்கள்.
வேறொரு நாள்... தனது அறைக்குள் அரையிருட்டில் பாம்பு ஒன்றைக் கண்டார். இப்போதும் அதே மந்திரத்தைச் சொன்னார். உச்சரிப்பிலோ, வார்த்தைகளிலோ எந்தப் பிசகும் இல்லை. ஆனாலும் அந்தப் பாம்பு துள்ளவோ, துடிக்கவோ, அந்த இடத்தைவிட்டு நகரவோ இல்லை.
பிரச்னை எதில்? அவர் கற்ற கல்வியிலா?
இல்லை! காரணம், அது பாம்பே இல்லை என்பதுதான்.
அறையில் கிடந்தது ஒரு கயிறு. அதை அறியாததால், தேவையில்லாமல் மந்திரத்தை உச்சரித்தார். அப்போது அவருக்குத் தேவை கல்வியல்ல; ஒரு விளக்கு. அல்லது, `வெகுநேரம் அசையாமல் கிடக்கும் அந்த வஸ்து கயிறாகவும் இருக்கலாமே... ஆகவே, முதலில் அது என்ன என்பதை உறுதிசெய்து கொள்வோம்’ எனும் பட்டறிவுதான்.

திரெளபதியின் கதியை எடுத்துக்கொள்வோம். தருமர் அவளைப் பந்தயமாக வைத்து தோற்றுப் போனார். அவளை அவைக்கு இழுத்துவர வேண்டும் என்பது துரியோதனின் ஆணை. விஷயம் திரெளபதியிடம் சொல்லப்பட்டது. உடனே அவள், ‘‘தருமர் பந்தயத்தில் தம்மை இழந்த பிறகு என்னைப் பணயம் வைத்தாரா?’’ என்று கேட்டாள். `அப்படியானால் அது செல்லாது’ என்பதுதான் தர்க்கக் கல்வி அவளுக்குக் கற்றுக் கொடுத்தது. ஆனால், அதனால் பலன் என்ன?
பீஷ்மரும் துரோணரும் கற்காத கல்வியா? ஆனாலும் திரெளபதிக்கு அவையில் அநீதி இழைக்கப்பட்டபோது, அவர்களின் அந்தக் கல்வியறிவு உதவவில்லை. ‘கிருஷ்ணா காப்பாற்று’ என்ற திரெளபதியின் கதறல்தானே அவளைக் காப்பாற்றியது. அவளின் அடிமனதிலிருந்து எழுந்த சரணாகதி எண்ணமே அவளைக் காத்தது.
ஆகவேதான், படிப்பைவிட பட்டறிவு முக்கியம் என்பதை உணர்த்துகிறார் ஆதிசங்கரர். `யமன் வந்து நிற்கும்போது பாணினியின் சூத்திரங் களை ஒப்புவிக்கப்போகிறாயா என்று கேட்காமல் கேட்கிறார்' அவர் (பாடல் வரிகளில் வரும் `டுக்ரிஞ்’ என்ற பதம், புகழ்பெற்ற பாணினி என்பவரின் மொழி இலக்கணச் சூத்திரங்களைக் குறிப்பது).
அடுத்த கேள்வி - இறக்கும் நேரத்தில் இறைநாமமே துணை செய்யும் என்றே இருக்கட்டும்.
எனில், அந்திமக் காலத்தில் மட்டும் கடவுளைத் துதித்தால் போதாதா?
இக்கேள்வியை மேலோட்டமாக நோக்கினால் சரியான தர்க்கமாகவே படும். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் உண்மை புலப்படும்.
முதிய பருவத்தில்தான் இறப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இறக்கும்போது இறைவனின் எண்ணம் வருமா? ‘ஐயோ டாக்டர் என்னை எப்படியாவது காப்பாத்துங்க’ என்ற ஓலமோ, ‘எனக்குப் பிறகு என் துணையின் நிலை என்ன, மகளின் திருமணம் என்னவாகும், சொத்தை சரியாகப் பிரித்துக்கொள்வார்களா’ எனப்போன்ற கேள்விகள் மேலோங்கி நிற்காதா?
ஒருவன் தன் நான்கு மகன்களுக்கும் இறை நாமங்களையே பெயர்களாக வைத்தான். இறக்கும்போது ஒரு மகனின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும், தனக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பினான். அவனது இறுதிக் காலத்தில் நான்கு மகன்களும் சோகத்தோடு அவனது கட்டிலைச் சுற்றி நின்றார்கள். அப்போது அவன் ‘`அடடா... நான்குபேரும் இங்கு வந்துவிட்டீர்களே! நம் கடையை யார் கவனித்துக் கொள்வார்கள்’’ என்று கத்தினான். அத்துடன் அவன் உயிர் பிரிந்தது.
ஆக, நாம் நினைப்பது நினைத்தபடி நடப்பது இல்லை. மகாத்மா காந்தியின் இறுதி வார்த்தை ‘ராம்’ என்பதாக இருந்தது. எவ்வளவுபேருக்கு அவர்களின் இறுதி வார்த்தை இறைவனைக் குறித்ததாக அமைய வாய்ப்பிருக்கிறது? நம்மால் அதை அனுமானிக்க முடியாது. ஆகவேதான், முடிந்தபோதெல்லாம் இறைவனைத் துதிக்க வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.
- நினைப்போம்...
-ஜி.எஸ்.எஸ்.
ஓவியங்கள்: ஸ்யாம்
தலைமுடியுடன் தரிசனம்!

குடுமியான் மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், ‘சிகாநாதர்’ என்ற திருநாமம் பெற்றவர். அதேபோல், திருக்கண்ணபுரம் பெருமாளுக்கு ‘சௌரிராஜன்’ என்று திருப்பெயர். இருவருமே தலையில் நீண்ட சடையுடன் தன் அடியவர்களுக்கு காட்சி அளித்தமையால், இந்த சிறப்புப் பெயர்களைப் பெற்றிருக்கிறார்கள்!
- ஆர்.என்.கண்ணன், கும்பகோணம்-1