Published:Updated:

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

ஓவியம்: ம.செ

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

ஓவியம்: ம.செ

Published:Updated:
அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை
அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

`நாரணன் விளையாட்டையெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வால்மீகி பகவான்’ என்று ராமாயணத்தின் மேன்மையைப் புகழ்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

திருமகள் கேள்வனாகிய திருமால், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, தசரதன் பிள்ளையாகப் பிறந்தார். அப்போது அவரின் புகழ்பாட வந்த வேதம், வால்மீகி முனிவரின் வாயிலாக ராமாயணமாகப் பிறந்தது. ‘ஆரணம்’ என்றால் வேதம். ‘ஆரணக்கவிதை’ என்றால், வேதத்தையே கவிதையாகத் தொகுப்பது என்று பொருள்.

முதலில் வால்மீகி முனிவர் மற்றும் நாரதரின் உரையாடலாக ராமாயணம் தொடங்குகிறது. தவத்தில் சிறந்த வால்மீகியின் உள்ளத்தில், சில எண்ண அலைகள் எழுந்தனவாம். தன்னுடைய சந்தேகங்களைத் தீர்க்கவல்லார் யார் உளர் என வால்மீகி சிந்தனைவயப்பட்டிருந்தபோது, அவரைத் தேடி நாரதர் வந்தார்.

சிறந்த சிஷ்யனைத் தேடிக்கொண்டு குருநாதர் வருவதைப் பாரதத்தின் பெரும் இலக்கியமான ராமாயணத்தில் காணலாம். தன்னைத் தேடிவந்த நாரதருக்குத் தகுந்த உபசாரங்களைச் செய்த வால்மீகி, வினாக்களைத் தொடுத்தார். கேள்விகள் பதினாறு; அதற்குரிய பதில் ஒன்றேயொன்றுதான். அது `ராம’ எனும் இரண்டெழுத்து மட்டுமே!

ஆம்! வால்மீகியின் பதினாறு கேள்விகளுக்கு விடையாக  `ராம' எனும் நாராயணனின் பெருமை களை உரைத்தார் நாரதர். அவற்றை விவரித்து வால்மீகி மொழிந்த ராமாயணத்தின் தொகை 24,000. அதுசரி…  பதினாராயிரம்தானே வரவேண்டும். பின் எப்படி அது 24,000 ஆனது என்று கேட்கலாம். இதில்தான் தர்மத்தின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`எட்டினால் எட்டாதது எதுவுமில்லை’ என்பார், சுவாமி வேதாந்த தேசிகன். அதாவது, பகவானை நாம் அறிவதற்கு எட்டை அறிந்தால் போதுமானதாம். `ஏட்டு’ என்றால் புத்தகம்; புத்தகம் படித்தால் அறியலாம். ஆனால், `எட்டை அறிந்தால்’ என்கிறாரே... அதென்ன அறிவு?

அது எட்டெழுத்துடைய நாராயண மகா மந்திரம். இதற்கு அஷ்டாக்ஷரம் என்பது பெயர். இந்த எட்டுக்குள் எட்டாத விஷயமே இல்லையாம். எப்படி ஒரு சிறிய கையடக்கக் கண்ணாடி, பெரிய மலையைக்கூட தன்னுள்ளே பிரதிபலிக்கிறதோ, அதேபோன்று, எட்டெழுத்து எல்லாவற்றையும் காட்ட வல்லது.

`நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம்’ என்கிறார் திருமங்கையாழ்வார். அதனால், நாராயண மந்திரம் - எட்டெழுத்து; நாராயணன் குணங்களாக வால்மீகியின் வினாக்கள் பதினாறு. இரண்டும் சேர்ந்தால் இருபத்தி நான்கு. இதுவே வேதம் காட்டும் தத்துவம். இதுவே காயத்ரீ மகாமந்திரத்தின் மகத்துவம்.

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

மாபெரும் இதிகாசமாகிய ராமாயணத்தில், இதுபோன்ற பல எண்ணிக்கைகளின் தொடர்புகள் எண்ணிக்கையில்லாமல் நிறைந்துள்ளன. அதையெல்லாம் அறிவதற்கு மனிதனின் ஓர் ஆயுள் போதுமானதன்று. பரத்வாஜர் எனும் மகரிஷி, மீண்டும் மீண்டும் ஆயுள் விருத்தியை வேண்டினார். ஏனெனில், அவருக்கு வேதத்தை அத்யயனம் செய்ய ஆசை. 300 வருடங்கள் ஆயுளை அதிகரித்தும், கைமண் அளவுகூட அவரால் வேதத்தை கற்க முடியவில்லை. அதன்பின்னரே, வால்மீகியின் சீடராகச் சேர்ந்து ராமாயணத்தைக் கற்றாராம். அதன் மூலம் வேதம் முழுமையும் அறிந்த திருப்தி அவருக்கு உண்டானது என்பர் பெரியோர்.

இந்த மகா காவியத்தை இயற்றும்போதே வால்மீகி இதற்குப் பல பெயர்கள் வைத்தார். ஒன்று – ஸ்ரீராமபிரானின் சரித்திரம். இரண்டு - மகா உத்தமியான சீதையின் உயர்ந்த சரித்திரம். மூன்றாவது – உலகத்தின் நன்மைக்காக ராவண வதம்... இப்படி பலவுண்டு. இவற்றில், `ராவண வதம்’ என்பதே மிக முக்கியமானது. ஏனெனில், அகில உலகமும் அவனால் பெருந்துன்பத்துக்கு ஆளானதன்றோ!

ஸ்ரீராமபிரான் நவமி திதியன்று பிறந்தார். காலங்களில் அது வசந்தம். `சைத்ர ஸ்ரீமாந்’ என்கிறார் வால்மீகி. ராமன் பிறந்ததால் அது `ஸ்ரீமாந்’ என்று பெயர் பெற்றதாம். அந்த மாதத்தில் புனர்வசு, நவமி  எனும் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தன. புனர்வசு நட்சத்திரத் துக்கு ஒரு பெருமை உண்டு. அதாவது இந்த நட்சத்திரம் எந்தக் கிழமை, திதியில் வந்தாலும் அதற்கு மரணயோகம் இல்லை!

இப்படிப் பல அபூர்வ விஷயங்கள், ராமனின் பிறந்த நேரத்தைக் குறித்து சொல்லப் படுகின்றன.

நாராயணன் ஏழு உலகங்களையும் ஆள்பவன். பதினான்கு லோகம் என்றாலும் ஏழு என்று வர்ணிப்பதே மரபு. அதன்படி, ஏழு காண்டங்களாக ராமாயணத்தைப் பிரித்தார் வால்மீகி.

அதுமட்டுமா? ஒவ்வொரு காண்டத்தின் பதினெட்டாவது சர்கத்திலும் ஒரு சூட்சுமத்தை மறைத்துவைத்தார் மகரிஷி.

இந்தப் பாரத தேசத்துக்கு வெற்றி எண்ணிக்கை பதினெட்டாகும். பதினெட்டு புராணங்கள், பாரதம் - பதினெட்டு பர்வங்கள், கீதை பதினெட்டு அத்தியாயங்கள். இன்னும்... பதினெண்கீழ் கணக்கு, பதினெண்மேல் கணக்கு என்று பல பதினெட்டு களைப் பாரததேசத்தின் சம்பந்தத்துடன் விவரித்துக்கொண்டே போகலாம்.

அதென்ன பதினெட்டுக்கு அவ்வளவு முக்கியத் துவம் என்றால்... `பதினெட்டு’ என்பதற்கு வெற்றி என்பது பொருள். `ஜயம்’ எனும் வாக்கியத்தையே எண்ணிக்கையில் பதினெட்டு என்கின்றனர். அதனால்தான் ராமாயணத்தின் ஒவ்வொரு பதினெட்டாம் சர்கத்திலும் `ராவணனை வெல்பவன் ராமன்’ என்பதை வால்மீகி அழகாகப் பேசுகிறார்.

முதலில் பாலகாண்டத்தின் பதினெட்டாம் சர்கம். இதில்தான் ராம அவதாரம் சொல்லப் படுகிறது. ராவணனைக் கொல்ல, தேவர்களின் வேண்டுகோளின்படி, கௌசலையின் குமாரனாக ராமன் பிறந்தான். `எனவே, இனி தொலைந்தான் ராவணன்’ என தேவர்களும் மனிதர்களும் மகிழ்ந்தனர்.

பின்னர் அயோத்யா காண்டம். இது மிக அற்புதமான காண்டம். இதில்தான் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படுகின்றன. `ராமபிரான் பாதுகையின் ப்ரபாவம் இதில்தான் தெரிகிறது' என்கிறார், சுவாமி தேசிகன்.

ராமன் காட்டுக்குச் சென்றால்தான் ராவண வதம் நடைபெறும். அதற்காக, பட்டாபிஷேகம் தடைப்படுதல் வேண்டும். அதை அயோத்யா காண்டம் பதினெட்டாம் சர்கத்தில் காணலாம். இங்குதான் கைகேயி இரண்டு வரங்களைத் தசரதனிடம் வினவுகிறாள். தான் கானகம் செல்லத் தயாராக இருப்பதாக ராமன் தெரிவிப்பதும் இங்குதான்.

ஆரண்ய காண்டம். ராமாயணம் முழுதும் வேதமயம் என்பதற்கு அத்தாட்சி இக்காண்டம். இதில் முக்கிய நிகழ்வாக, சூர்ப்பணகையின் மூக்கறுப்பு பதினெட்டாவது சர்கத்தில் வருகிறது. இவள் மட்டும் இல்லையென்றால் ராமாயணம் முழுமை அடைந்திருக்காதே! எனவே, இந்நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது.

கிஷ்கிந்தா காண்டம், ராமபிரானின் நட்பின் பெருமையைப் பேச வந்தது. நரன் அழைத்தால் வாராத வாநரம், நரனுடன் சேர்ந்த காண்டம் இது. சுக்ரீவனிடம் ராமபிரான் கொண்ட நட்பு வலிமையானது. கூடாநட்பு கேடாக முடியும் எனும் மூதுரைக்கு, ராவணனுடன் வாலி கொண்ட நட்பே சாட்சி. பதினேழாம் சர்கத்தில் வாலி வதம் செய்த ராமபிரான், பதினெட்டாம் சர்கத்தில் வாலியின் கேள்விக்கணைகளுக்குப் பதில் கூறி, அவனின் தவறை உணரவைக்கிறார். அற்புதமான விளக்கங்கள் அமைந்த சர்கம் இது.

சுந்தரகாண்டம். இதன் பெயரே அழகானது. விசேஷமானது. சீதையைத் தேடி வரும் அனுமன், அசோகவனத்தில் மரத்தின் மீது மறைந்திருக்கிறார். அப்போது, ராவணன் தூக்கக் கலக்கத்துடன் சீதையைக் காண வனத்துக்கு வருகிறான். இங்கே... பதினெட்டாவது சர்கத்தில்தான் முதன்முதலில் அனுமான் ராவணனை நன்றாகப் பார்க்கிறார். அப்போதே அவரின் நாடிநரம்புகள் முறுக்கேறுகின்றன. `இப்போதே இவனைக் கொல்லலாமா?’ என்றும் எண்ணுகிறார்!

யுத்த காண்டத்தின் பதினெட்டாவது சர்கம் ராமாயணத்தின் உயிர்நாடியான சரணாகதியின் மேன்மையை விளக்குவது. இதில்தான் மிகவுயர்ந்த விபீஷண சரணாகதி பேசப்படுகிறது. `கடற்கரையில் ராமன் செய்த சபதத்தின் ஒலி, இன்னமும் காற்றலைகளில் காதுகளில் ஒலிக்கிறது' என்கிறார் பராசரபட்டர் எனும் மகாத்மா.

ஏழாவதான உத்திர காண்டத்தில், 18-வது சர்கத்தில்தான் ராவணனின் முடிவுக்குக் காரண மான வேதவதீ எனும் பதிவ்ரதையின் சாபம் விளக்கப்படுகிறது!

இப்படி, ராமாயணத்தின் பதினெட்டு எனும் எண்ணிக்கையில் மற்றொரு விசேஷமும் உண்டு. அதாவது, எட்டும் ஒன்றும் சேர்ந்தால் ஒன்பதுதானே? அது நவமியில் பிறந்த ராமனைக் குறிக்கும் எண். மேலும் ஒன்பதினை கூட்டினாலும், சக்தி தரும் எண்ணாக அமையும். அதனால்தான் பகவத் ராமாநுஜர், தன் மாமாவான திருமலைநம்பிகளிடம் பதினெட்டு முறை ராமாயண அர்த்தங்களைக் கேட்டறிந்தார்.

நம் சிந்தையை மகிழ்விக்கும் ஸ்ரீராமநவமித் திருநாள் நெருங்குகிறது. அன்றைய தினத்தில், ஸ்ரீராமச்சந்திரனாகிய பௌர்ணமியின் பிரகாசம் எங்கும் விளங்க, அவரின் திருவருளால் உலகம் செழிக்க ஆத்மார்த்தமாய் வழிபடுவோம் ஸ்ரீராமனை; அவனருளால் அன்பும் அறமும் ஓங்கும்; வருங்காலம் சிறக்கும்!

-ஸ்ரீஅனந்தபத்மநாபாசார்யர்

ராமகிருஷ்ணர் சொன்ன கதை

அண்ணல் ராமனுக்கு ஆரணக் கவிதை

ரு கிராமத்தில் எறும்பு ஒன்று வசித்தது. அதற்கு மிகுந்த உடல்  வலிமை இருப்பதாக மற்ற எறும்புகள் வெகுவாகப் புகழ்ந்தன. நாளடைவில், அந்த எறும்புக்கு  பெரிய  நகரத்துக்குச்  சென்று  புகழ் தேட ஆசை வந்தது. ஒரு நாள், நகரச்  சந்தைக்குச் செல்லும் வண்டியில் தொற்றிக்கொண்டு சந்தையைச் சென்றடைந்தது. அங்கு, ஒரு காய்ந்த சருகின் மீது ஏறிய எறும்பு, தொபுக்கடீர்  என்று கீழே குதித்தது. இப்படி மீண்டும் மீண்டும் குதித்து, தன்னை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பியது.

ஆனால், எவருமே அதைக் கவனிக்கவில்லை. குதித்துக் குதித்துக்  களைத்துப்போன எறும்பு, பக்கத்தில் படுத்துக்கிடந்த நாயிடம் சென்று விரக்தியோடு பேசியது: “சே, என்ன ஊர் இது. பிறரின் அறிவையும் திறமையையும் மதிக்கும் புத்தி  இல்லையே. வந்து  பார்...  நான் இருக்கும் எறும்புப் புற்றில் என்னைப் பாராட்டாதவர்களே கிடையாது” என்று  கூறிவிட்டு, தனது சொந்த ஊருக்குத் திரும்பியது!

சுற்றியுள்ளவர்களின் கூற்றை வைத்து நம்மை எடைபோடக்கூடாது.

- ஆர்.சி. சம்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism